சந்தனமுல்லை அவர்களின் இந்தப் பதிவின் தாக்கம் தான் எனது பதிவு!
அதனால் அவருக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன் :)
அப்புறம் அந்த அப்பாவிகள் யாருனு முதலில் சொல்லிடுறேன்....
அப்பா, கணவர்!!!
இப்போ நான் சொல்லப் போறது ஒவ்வொரு உணவையும் நான் முதன் முதலாக செய்தப்போ ஏற்பட்ட அனுபவம் பத்திதான்...
சாம்பார்:
நான் எட்டாம் வகுப்பு முடித்த விடுமுறைல தான் முதன் முதலில் ஒரு புத்தகத்தைப் பார்த்து நானே சாம்பார் வைக்கிறேன் யாரும் உள்ளே சமையலறைப் பக்கமே வரக் கூடாதுனு சொல்லிட்டு புத்தகமும் கையுமா கிச்சன் உள்ளே போனவதான்...
அப்பாடா ஒரு வழியா புத்தகத்தை புரட்டி பொருட்களை எடுத்தா அளவு எல்லாம் புரியல... சரி தோராயமா போடுவோம்னு எல்லாத்தையும் ஒரு கை அள்ளிக்கிட்டேன்... வெந்தயம், உளுந்து, சீரகம் இத்தியாதிகள தான் சொல்றேன்!
ஒரு வழியா புத்தகமுறைப்படி எல்லாம் செய்து முடித்து ரொம்ப களைப்பா வந்து உட்கார்ந்தாச்சு.... அப்பா மதிய உணவுக்காக வந்து சாப்பிட உட்கார்ந்தா அய்யோ பாவம் அவுங்க முகம் போன விதமே சரியில்ல... ஆனாலும் பெத்த பொண்ணாச்சே... சரியில்லனு சொல்ல மனசு வரல... எப்படியோ சாப்பிட்டு கிளம்பிட்டாங்க...
அடுத்ததா நாங்க எல்லாரும் சாப்பிடும் போது தான் அய்யோ! சீ... உவ்வே அப்படி ஒரு கசப்பு... வெந்தயத்திற்கு குறைவில்லாமல் போட்டுவிட்டேன் போல :( பிறகு என்ன செய்ய தியாகி அப்பாவைத் தவிர நாங்கள் யாரும் மருந்துக்குக் கூட அந்த சாம்பாரை தொடவில்லை!
சாம்பார்னா அது எங்க அம்மா வைக்கும் சாம்பார் தான் அந்த சுவைக்கு ஈடான சாம்பார் வேறு எங்கேயும் சாப்பிட்டதில்லை நான்!
இட்லி:
அடக்கொடுமையே கல்யாணம் பண்ணினா கிரைண்டர்ல மாவு ஆட்டனுமானு இருந்துச்சு... பாவம் பொழிலன் அப்பா... மனைவிக்கு கிரைண்டர் போடத் தெரியாது என்னும் அதிர்ச்சி செய்தி அவங்களுக்கு தெரியாது! :)
எனக்கு அப்போ கிரைண்டர் மூடிய எப்படி திறக்கனும்னு கூட தெரியாது :(
கிரைண்டர் போட கற்றுக் கொள்ள மட்டும் ஏனோ ஆர்வம் இருந்ததில்லை :(
நான் என்ன செய்வேன்.... அத்தையிடம் கேட்க பயம்... திருமணமான புதிது தானே அதனால்... அம்மாவிடன் கேட்டால் திட்டு நிச்சயம்... என்ன செய்ய அம்மாவிடமே கேட்டேன்... எப்படி கிரைண்டர் திறந்து அதை பயன்படுத்துவதுனு... ஆனாலும் ஊற வைக்கும் அளவு மட்டும் பிடி படல...
கொடுமைங்க.... உளுந்து ஆட்டுறது ஒரு கலை... அது எனககு சுத்தமா தெரியாது... ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி போனில் கேட்டதை வைச்சு என்னமோ வெள்ளையா அரைச்சு வெச்சு இட்லி சுட்டா, அய்யோ இட்லிய காணோம் இட்லி தட்டுல... இட்லி கலர்ல சின்ன சின்ன தட்டையான ஒன்னுதான் வந்துச்சு...
பாவம் புது மாப்பிள்ளை.... ஒண்ணுமே சொல்லலை... என் அப்பா வழியில் ஒரு தியாகி எனக்கு கிடைத்த மகிழ்ச்சி... ஆனால் மனசு கேட்கலை... பாவமா இருந்துச்சு அவங்கள பார்க்க...
சரினு கொஞ்சம் மாற்தல் பண்ணினா அடக் கடவுளே அதுவே தேவலை... இது லட்டை விட மோசம்... ம்ம்ம் இதையும் ஒரு அப்பாவி சாப்பிட்டாங்க :)))
அப்புறம் ஒரு வழியா என் அத்தை மாவுக்கு ஊறவைப்பதிலிருந்து ஆட்டுவது வரை நேரில் பார்த்து பின் தான் முழுமையாக் கத்துக்கிட்டேன்! :)
என் அத்தை மாதிரி இந்த உலகத்துல யாராலயும் இட்லி சுட முடியாதுங்க... அப்படி ஒரு மல்லிகைப் பூ மாதிரி வெள்ளைப் பூக்கள் தான் அவை... அவங்க அரைச்ச மாவே ஐஸ் கிரீம் மாதிரி இருக்குனு நான் எப்பவும் சொல்லுவேன் என் அத்தைகிட்ட.... அப்படி ஒரு இட்லி சாப்பிட்டு வளர்ந்த பொழிலன் அப்பா என் முதல் இட்லியையும் சாப்பிட்டத நினைச்சா அவங்களுக்கு ஒரு சிலையே வைத்துப் பாராட்டலாம்! :)
மீன் வறுவல்:
இப்போ மீன் குழம்பு, கறிக்குழம்பு, சிக்கன் மட்டன் அது இதுனு சமைச்சு விதம் விதமா கலக்குற நான் முதன் முதலில் செய்த மீன் வறுவல்...
நான் சைவக் குடும்பத்திலிருந்து வந்ததால் இது பற்றி தெரியாது... என்னை யாரும் அசைவம் சமைக்கனும்னு கட்டாயப் படுத்தவும் இல்லை... நானாவே தான் செய்து பார்ப்போமேனு முயற்சில இறங்கினேன்....
மீன் வறுவல்னா உருளை வறுவல் போலனு நினைச்சு மீன் வாங்கி மீன்காரரே அதை வெட்டி சுத்தம் செய்து கொடுக்க நான் மேலும் கழுவிட்டு அதை அப்படியே வாணலியில் எண்ணெய் விட்டு தாளிச்சு, உப்பு மசாலா போட்ட மீனை வாணலியில் போட்டு கிண்டி கிளறி, பிய்ச்சு பிசறி...
இது என்ன பார்த்தா அத்தை வறுத்த மீன் மாதிரி இல்லையேனு யோசிச்சு சரி நமக்கு தான் ஒரு அப்பாவி இருக்காங்களே வந்ததும் கேப்போம்னு கேட்டா... என் மீன் வறுவலைப் பார்த்து அதிர்ச்சில அவங்க மயங்கி விழாதது தான் குறை! :))))
இது தாங்க என்னால் மறக்கவே முடியாத படு மோசமான முதல் மூன்று வகை சமையல் அனுபவம்!
இதைப் படிச்சுட்டு யாரும் எங்க வீட்டுக்கு வர பயப்பட வேண்டாம்... இப்போ நல்லாவே அசைவம் சமைப்பேங்க.... அழகான இட்லிகளும் சுடுவேன்! பொழிலனுக்குனே வேறு தனியே பல வகை சத்து உணவுகளை தயாரிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது ;) பொழிலன் அப்பாக்கிட்ட சமையலில் நல்ல பெயரே வாங்கிட்டேனா பார்த்துக்கங்களேன்... :)))) அதே போல பொழிலன் அப்பாவுக்கு பிடித்ததை செய்து தருவதும் மன நிறைவு அளிக்கும் விஷயம்! :)
ஆனால் சமையலில் நளபாகம் தான் சிறந்ததுனு சொல்ற நம்ம நாட்டில் மட்டுமில்லை, வெளிநாடுகளில் கூட சமையல் எப்படி பெண்கள் வசம் வந்தது என்று தெரியவில்லை....
முல்லை கூறுவது போல் ஒரு காலத்தில் பெண்கள் சமையலறைப் பக்கம் தான் இருப்பர் என்று படித்திருக்கிறேன் :( இன்றும் பல வயதான பெண்களை அப்படி பார்க்கலாம்.... இது மாற வேண்டிய ஒன்றுதான்.....
பின்குறிப்பு:
அப்பாடா ஒரு வழியா இன்னைக்கு ஒரு மொக்கைப் பதிவு தேத்தியாச்சு...
வணக்கம்
2 weeks ago
18 comments:
மொக்கைக்கு ஒரு அப்பாவி வேனுமா? ம்ம்ம்ம்ம்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் (இருபாலரும்) திருமணத்திற்குப் பின்பே குடும்ப பொறுப்புள்ளவராகிறார்கள்....
உங்கள் அநுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
//
மொக்கைக்கு ஒரு அப்பாவி வேனுமா? ம்ம்ம்ம்ம்
//
:))
//
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் (இருபாலரும்) திருமணத்திற்குப் பின்பே குடும்ப பொறுப்புள்ளவராகிறார்கள்....
//
அய்யோ பொறுப்பெல்லாம் உண்டு... நான் விடுதியில் இருந்து நேரே திருமண வாழ்வில் நுழைந்தவள்...
பொறுப்பில்லாம இருவர் மட்டும் தனியே குடும்பம் நடத்த முடியுமாங்க?
சமைக்கத் தெரியும் தவிர இட்லி மாவெல்லாம் அரைக்க தெரியாது அப்போது :(
நன்றி ஞானசேகரன் மற்ற்ய்ன் ஐந்தினை அவர்களுக்கு! :)
//ஆனால் சமையலில் நளபாகம் தான் சிறந்ததுனு சொல்ற நம்ம நாட்டில் மட்டுமில்லை, வெளிநாடுகளில் கூட சமையல் எப்படி பெண்கள் வசம் வந்தது என்று தெரியவில்லை....//
நல்ல கேள்வி!
நல்ல வத்தி ஆகாயநதி. ஜூனியர் பிறந்து நான் வேலையை விட்டே பிறகே சமைக்க ஆரம்பித்தேன்:)
நன்றி சென்ஷி! :)
@வித்யா....
அப்படியா!!!!
பரவாயில்லை. எங்கள் வீட்டில் நான் 7வது படிக்கும் போதே ஆட்டுரலில் அரைப்பது எப்படி, 10 வது படிக்கும்போது சாம்பார் வைப்பது எப்படி என சொல்லி கொடுத்துவிட்டார்கள். அதனால் நீங்கள் சொன்ன கொடுமையான அனுபவங்கள் என் கல்யாணத்திற்கு பிறகு வரவில்லை. நான் தான் என் மனைவிக்கு ட்ரைனெர். ஊருக்கு போய்ட்டுவந்து ஒரு புது டிஸ் பதிவு போடுறேன்,
நான் திருமணத்திற்குப் பிறகு தான் சமைக்க ஆரம்பித்திருந்தாலும் இந்த மாதிரி அனுபவங்கள் குறைவு. பாவம் அப்பாவிகள்!!!!!
ஹா..ஹா. சூப்பர்ப்பா இருக்குங்க இந்த பதிவு. :)))))
நீங்களும் முன்னால் வெஜ்ஜியா?? சேம் பின்ச். :)
பொழிலன் அப்பா பட்ட பாடு புரியுது. ஆனால் அவர் எதோ சமைக்கிறேன்.. குருமா, ரூம் புல்லா மணக்குதுன்னு கதை வுடுறார்.. அவர் சமையலை சாப்பிடிருக்கீங்களா?
//
ஹா..ஹா. சூப்பர்ப்பா இருக்குங்க இந்த பதிவு. :)))))
நீங்களும் முன்னால் வெஜ்ஜியா?? சேம் பின்ச். :)
//
நன்றி கார்த்திக்! திருமணம் ஆனதும் சுவைத்தால் தானே சமைக்கத் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நல்லா சாப்பிட்டேன்... நல்லா சமைக்கவும் ஆரம்பிச்சாச்சு.... ஆனால் இப்போது மீன் தவிர வேறு அசைவம் உண்பதில்லை நான் :)))
//
ஆனால் அவர் எதோ சமைக்கிறேன்.. குருமா, ரூம் புல்லா மணக்குதுன்னு கதை வுடுறார்.. அவர் சமையலை சாப்பிடிருக்கீங்களா?
//
என் கணவராயிற்றே என்ன செய்தாலும் எனக்கு நன்றாகத் தானே தெரியும் :)))
ஒரு முறை அவங்க சாம்பாரும் ஒரு முறை வெஜிடபிள் உப்புமாவும் சாப்பிட்டிருக்கிறேன் சூப்பர்... :))
நான் இல்லாத போது தான் சார் சமைக்கிறதெல்லாம் :)
//சாம்பார்னா அது எங்க அம்மா வைக்கும் சாம்பார் தான் அந்த சுவைக்கு ஈடான சாம்பார் வேறு எங்கேயும் சாப்பிட்டதில்லை நான்!//
அம்மாவுக்கு ஐஸ் வச்சாச்சு...
//என் அத்தை மாதிரி இந்த உலகத்துல யாராலயும் இட்லி சுட முடியாதுங்க... அப்படி ஒரு மல்லிகைப் பூ மாதிரி வெள்ளைப் பூக்கள் தான் அவை... அவங்க அரைச்ச மாவே ஐஸ் கிரீம் மாதிரி இருக்குனு நான் எப்பவும் சொல்லுவேன் என் அத்தைகிட்ட...//
அம்மாவுக்கு மட்டும் ஐஸ் வச்சா அத்தை கோச்சிக்கப் போறாங்கன்னு அத்தைக்கும் ஒரு ஐஸ்..
//அப்படி ஒரு இட்லி சாப்பிட்டு வளர்ந்த பொழிலன் அப்பா என் முதல் இட்லியையும் சாப்பிட்டத நினைச்சா அவங்களுக்கு ஒரு சிலையே வைத்துப் பாராட்டலாம்! :)//
அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் வச்சா போதுமா, அதான் பொழிலன் அப்பாவுக்கும் :-).
இது சமையல் கில்லாடி பதிவா!! அல்லது ஐஸ் கில்லாடி பதிவா??
//நான் சைவக் குடும்பத்திலிருந்து வந்ததால் இது பற்றி தெரியாது//
உங்க வீட்டிலேயும் இதே கதை தானா?
//மீன் வறுவல்னா உருளை வறுவல் போலனு நினைச்சு மீன் வாங்கி மீன்காரரே அதை வெட்டி சுத்தம் செய்து கொடுக்க நான் மேலும் கழுவிட்டு அதை அப்படியே வாணலியில் எண்ணெய் விட்டு தாளிச்சு, உப்பு மசாலா போட்ட மீனை வாணலியில் போட்டு கிண்டி கிளறி, பிய்ச்சு பிசறி...//
அதை அப்படியே “மீன் பொறியல்”ன்னு சொல்லி பரிமாறிட வேண்டியது தானே ;-).
//இதைப் படிச்சுட்டு யாரும் எங்க வீட்டுக்கு வர பயப்பட வேண்டாம்... இப்போ நல்லாவே அசைவம் சமைப்பேங்க.... //
இந்த வரியை என் தங்கமணிய படிக்கச் சொல்லணும்.
KVR அவர்களே ஏங்க இந்த கொலவெறி உங்களுக்கு...
நோ அரசியல் :)
எப்படினாலும் எனக்கு அத்தை சுட்ட இட்டிலியும் அம்மா வைக்கும் சாம்பாரும் கிடைக்கும் :)))
//
உங்க வீட்டிலேயும் இதே கதை தானா?
//
அது அப்போ... இப்போ தான் எல்லாத்தையும் நல்லாவே சமைப்பேன் சாப்பிடுவேனே :)
உங்களுக்குள்ள ஏதோ ஒரு கவலை இருக்கமாதிரி தெரியுதே!!!:))
Post a Comment