March 31, 2009

பொழிலனும் நானும்... பகுதி - 1

பல நேரங்களில் பொழிலனும் நானும் இருக்கும் தருணங்கள் எனக்கு நானும் குழந்தையாகவே இருப்பதாகத் தோன்றும். நான் அவன் தாயாகவும், சில நேரங்களில் அவன் சேயாகவும் மாறிவிடுகிறேன் என்று கூட கூறலாம்! :) சில நேரங்களில் அவனிடம் என்னையும், என் கணவரையும் காண்கிறேன்! :)

அவனுடைய சேட்டைகள் எல்லாமே அர்த்தமுள்ளதாகவும், அறிவுத் தாகத்திற்கானதாகவுமே எனக்குத் தோன்றுகிறது. அந்த பிடிவாத குணம் கூட சரியாகிவிட்டது :) ஆனால் அவனுக்கு உணவூட்டும் தருணங்கள் தான் பலவிதங்களில் நடைபெறும்.

************

அவனை ஊஞ்சலில் அமர வைத்து தான் முதன் முதலில் உணவூட்ட ஆரம்பித்தேன்.
அதிலும் நான் ஏதாவது பாட வேண்டும். அதிகம் "விநாயகனே வினை தீர்ப்பவனே" தான் பாடுவேன். பாவம் குழந்தை மனசு நான் பாடுறதையும் கேக்கும்.

***********

அடுத்ததாக கீழே ஓரிடத்தில் சமத்தாக அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்!அப்போது "தோசை அம்மா தோசை" பாடல் உதவியது! சில நாட்களுக்குப் பிறகு "ஜானி ஜானி யெஸ் பாப்பா" உதவியது!

***********

பிறகு அங்கும் இங்கும் தவழ்ந்து கொண்டே உண்ண ஆரம்பித்தார்! அப்போது அவருடைய விளையாட்டு சாமான்கள் அவரை உண்ண வைக்க உதவின. அவற்றை சுற்றிலும் போட்டுவிட்டால் சார் அந்த சாமான்களின் வட்டத்திற்குள்ளேயே இடுப்பார். ஆனால் அதுவும் சில நாட்களுக்கு தான் உதவியது.

**********

அடுத்து அவர் விளையாட்டு சாமான்களின் உலகம் கிச்சன் பாத்திரங்கள் வரை நீண்டது!
அதனால் எப்போதும் தட்டு (அ) டம்ளர் ஒன்றை அவர் கையில் கொடுத்துவிட்டு ஊட்டிவிடுவேன்! அதை போட்டு தட்டிக் கொண்டே அந்த ஒலியின் மகிழ்ச்சியில் சாப்பாடு இறங்கிவிடும்!

**********

அடுத்து அவருக்குத் தனியாக உண்ணப் பிடிக்கவில்லை... அதனால் நான் உண்ணும் போது "அம்மா ஆ!" என்று குழந்தை வரும். நானும் அப்படியே அவருக்காக கேரட் சாதம், பருப்பு சாதம் என்று உண்ண ஆரம்பித்தேன் :) ஆனால் இதில் என்ன கலாட்டா என்றால் நான் சட்னி தொட்டு இட்லி உண்ணுவதைப் பார்த்துவிட்டார். அதிலிருந்து அவருக்கு சட்னி தொடாமல் கொடுத்தால் வாங்கமாட்டார். இட்லியில் சட்னி உள்ளதா என்று பார்க்கத் தெரியாததால் நான் சட்னி தொடுவது போல பாவ்லா செய்து ஊட்டிவிடுவேன்.

**********

போகப் போக நான் பாவ்லா செய்வதைக் கண்டுபிடித்துவிட்டார். அதனால் நான் சட்னியை தனியே கிண்ணத்தில் எடுத்து அவர் கண்ணுக்குப் படாமல் என் பின்னே ஒளித்து வைத்துக் கொண்டு அவருக்கு இட்லி/தோசை ஊட்டி விடுவேன். அவர் வேறு பக்கம் கவனிக்கும் சமயம் ஒரு பெரிய இட்லி பீசை எடுத்து எனக்கு பின்னால் இருக்கும் சட்னியில் பரபரப்பாகத் தொட்டு லபக்னு முழுங்கிடுவேன்! :)

**********

இப்போது புதிய முறையை செய்கிறேன்! இட்லி/தோசையை சிறு துண்டுகளாக பிய்த்து ஒரு குட்டித் தட்டில் தனியாக போட்டு அவருக்குக் கொடுத்துவிட்டு எனக்கு தனியாக வைத்துக் கொள்கிறேன். இது அவனே தனியாக உண்ண பழக்கம் வருவதுடன், அவன் கைகளுக்கு நல்ல பயிற்சி! :) இதனால் அவன் கவனம் சட்னியின் மீது போவதில்லை. இரு கைகளாலும் உணவினை எடுத்து பிய்த்து, பிசைந்து அவன் வாயில் சிறிதும் கீழே அதிகமும் போட்டு விளையாடுவதைக் காண இன்பமாக உள்ளது! :)

இதைத்தான் வள்ளுவர்

"அமிழ்தினும் இனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"

அப்படினு சொல்லிருக்காரு :) அவன் தட்டுல இருக்க மீதி இட்லிய நான் தானே சாப்பிடுறேன்! :)
***************************************************

சிங்கமும், எலியும் எப்படி நண்பர்களானாங்க.?

ஒரு ஊரில் ஒரு பெரிய காடு இருந்துச்சாம்... அந்த காட்டுல நிறையா பிராணிகள் இருந்தாங்களா... அவங்களுக்கெல்லாம் சிங்கம் தான் ராஜாவா இருந்தது!

ஒரு நாள் அந்த சிங்கராஜா அதோட குகைவீட்டு வாசலுல சாப்பிட்டுட்டு படுத்து தூங்கிக்கிட்டு இருந்ததா! நல்ல "கர்ர்ர்ர்ர்....கர்ர்ர்ர்ர்"னு குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருந்துச்சு.
அப்போ அந்த வழியா ஒரு எலி ஜாலியா "லா...ல ல லா...... லா.... ல... ல...லா..."னு பாடிக்கிட்டே குட்டி குட்டி பாறைகள் மேல எல்லாம் சருக்கி விளையாடிக்கிட்டே வந்தது!

அப்படி வரும் போது அந்த சிங்கம் உடம்பையும் பாறைனு நினைத்து சரியா கவனிக்காம அது மேல ஏறி சருக்கி விளையாடுச்சு! "ஹையா இந்த பாறை ரொம்ப நல்லா இருக்கேனு சொல்லிக்கிட்டே சிங்கம் முகத்துக்கிட்ட வந்ததா? அவ்ளோதான்... அது சிங்கத்த பாத்துருச்சு :) உடனே " ஆ... ஐயோ... சிங்கராஜா!" அப்படினுட்டே ஓட பார்த்துச்சா... ஆனால் அதுக்குள்ள சிங்கராஜா முழிச்சுருச்சு :( " யாரது நான் தூங்கும் போது என்னை எழுப்பி தொல்லை பண்ணினது"னு கேட்டுக்கிட்டே திரும்பி பாத்துச்சா... அங்க அந்த எலி பாவம் போல நின்னுக்கிட்டு இருந்துச்சு... " ம்ம்ம்... சிங்க ராஜா... என்னை மன்னிச்சுடுங்க!" அப்படினு எலி சொன்னுச்சு..

அதுக்கு அந்த சிங்கம் " என்ன... நீயா என்னை எழுப்பின... இப்ப உன்னை என்ன பண்றேனு பாரு..." அப்படினு சொல்லி அந்த எலிய கையாள புடிச்சு வாய்க்குள்ள போட போச்சா...
அப்போ அந்த எலி " ராஜா! ராஜா! நான் சொல்றத கேளுங்க... ப்ளீஸ்... நான் தெரியாம இப்படி பண்ணிட்டேன்... இனிமே பண்ணவே மாட்டேன்... நீங்க என்னை விடுவிச்சீங்கனா அதுக்கு பதிலா நான் என்னைக்காவது நீங்க இந்த மாதிரி ஆபத்துல இருக்கும் போது நான் கண்டிப்பா உதவி செய்யுறேன்" அப்படினு சொன்னுச்சு. அதுக்கு சிங்கம் என்ன சொன்னுச்சுனு தெரியுமா?

"ஹா!ஹா!ஹா!ஹா! நீ ஒரு குட்டி எலி! நீ போயி எனக்கு உதவி செய்யப் போறீயா... நல்லா சிரிப்பு வருத்! சரி பரவால பொழைச்சு போ... இனிமே இப்படி பண்ணாதே" அப்படினு சொல்லி அந்த எலிய விட்டுருச்சா... எலி உடனே ஹப்பாடா... தப்பிச்சோம்னு ஓடியே போய்டுச்சு... :)

அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாள் அந்த காட்டுக்கு வேட்டைக்காரவங்களாம் அந்த சிங்க ராஜாவ புடிச்சிக்கிட்டு போக வந்தாங்களா... அப்போ அவங்க அங்க தரைல ஒரு பெரி..ய.... வலைய விரிச்சு வைச்சு அந்த சிங்கம் வரதுக்காக காத்துக்கிட்டு இருந்தங்களா... அப்போ அந்த சிங்கராஜாவும் அந்த வழியா வந்துச்சு... :) வந்து சரியா அந்த வலைல மாட்டிக்கிச்சு... அச்சுச்சோ... பாவம்ல... உடனே அந்த வேட்டைக்காரன்க சாப்பிட்டுட்டு வந்து இந்த சிங்கத்த தூக்கிக்கிட்டு போகலாம்னு சொல்லிட்டு அவங்க எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க.

அந்த சிங்கம் இல்ல... அது... பயங்கரமா அழுதுச்சு... "என்னை யாராவது வந்து காப்பாத்துங்கலேன்" அப்படினு கத்துச்சு. அப்போ அந்த வழியா அந்த எலி இல்ல எலி அது வந்துச்சு... அது சிங்கம் வலைல மாட்டிக்கிட்டு அழுவுறத பாத்துட்டு " ஆ! சிங்க ராஜா! நீங்களா?" அப்படினுட்டு வேகமா ஓடி வந்துச்சு... வந்து " நீங்க கவலைப் பாடாதீங்க ராஜா! நான் உங்கள இந்த வலைல இருந்து வெளிய கூட்டிட்டு வரேன் " அப்படினு சொல்லி வேகமா அந்த வலை முழுசையும் கடிச்சே பிய்த்து சிங்க ராஜாவ காப்பாத்திடுச்சு! :)

அப்போ அந்த சிங்கராஜா சொன்னுச்சு " என்னை மன்னிச்சுக்கோ எலி, நான் உன்னை கேவலமா சிறு பிராணிதானேனு நினைச்சுட்டேன்... ஆனால் நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்துருக்கே! நான் யாரையும் இனி உருவத்த வைச்சு தவறா எண்ணமாட்டேன் " அப்படினுச்சு!
உடனே ரெண்டு பேரும் ரொம்ப ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க! :)

நீதி:

சிறு துறும்பானாலும் பல் குத்த உதவும்

இதை குழந்தைக்கு 1வயதில் அதற்குப் புரியும்படி கூறினால் புரியும். பழமொழிகளை இப்படியே கதைகள் மூலம் பழக்கப்படுத்திவிடலாம் :)

March 29, 2009

வழக்கொழிந்த சொற்கள்

கார்த்திக் அவர்களின் " வழக்கொழிந்த சொற்கள் " என்ற தொடர்பதிவில் என்னை அழைத்திருந்தார். அவர் அழைத்து இரண்டு மாதங்களுக்குப் பின் நான் எழுதும் பதிவு. சில சூழ்நிலைக் காரணங்களால் தாமதமாகிவிட்டது.

தோணித்துறை - படகித்துறை (பார்த்திபன் கனவு)

கழனி - விளைநிலம் (பார்த்திபன் கனவு)

மனையாள் - மனைவி (திரைபடப் பாடல் மூலம்- "நல்ல மனையாளின் இன்பம் ஒரு கோடி")

பாரியாள் - மனைவி (பள்ளிப் பருவத்தில் படித்த வரலாற்று நூல் பெயர் சரியாக நினைவில்லை)

கழுதை - அழகிய பெண் (வரலாற்று நூல்)

குழவி - குழந்தை (என் அம்மா கூறியது)

தானி - ஆட்டோ (என் அம்மா கூறியது)

ஆழிப்பேரலை - சுனாமி (என் அம்மா கூறியது மற்றும் நாயன்மார் வரலாற்றில் அப்பர்
பெருமான் கதையிலும் வரும்)

கருங்குழல் - கருமையான கூந்தல் (வரலாற்று நூல்)

சூளுரைத்தல் - சபதம் ஏற்றல்/பிரமாணம் ஏற்றல்

உப்பரிகை - பால்கனி

பேருவகை - பெரும் மகிழ்ச்சி

அகவை - வயது

கோ - அரசன்

எனக்குத் தெரிந்த, நினைவில் உள்ள சொற்களை மட்டும் எழுதியுள்ளேன். எனக்கும் நேரம் கிடைக்கும் போது மேலும் பல சொற்களை அறிந்து கூறுகிறேன். தமிழில் சொற்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது! :) நன்றி கார்த்திக்!

March 27, 2009

அம்மா அப்பா கதை - குழந்தைகளுக்காக

சிறு குழந்தைகளுக்கும் புரியும் வகையில் கதை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது! ஆனால் பொழிலன் விஷயத்தில் இந்த முயற்சி பலனளிப்பதாக நான் உணர்ந்ததால் மற்ற குழந்தைகளுக்காகவும் இங்கே கதை சொல்ல வந்துவிட்டேன் :)

ஒரு ஊரில் ஒரு பெரிய மலை இருந்ததாம். அந்த மலை முழுவதும் ஒரே பனியா அழகா இருக்குமாம். அங்கே ஒரு அழகான அம்மாவும், அப்பாவும் இருந்தாங்க! அவங்களுக்கு இரண்டு தம்பி பாப்பா இருந்தாங்களா... பெரிய தம்பி பாப்பா பேரு பிள்ளையார் சாமி, குட்டி தம்பி பேரு முருகா சாமி! அவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா, அம்மா மாதிரியே அறிவாளிகளாவும், அழகானவங்களாவும் இருந்தாங்க!

அப்போ ஒரு நாள் அவங்க எல்லாரையும் பார்க்க நாரதர் மாமா வந்தாரு! அவர் எப்படி வருவாரு?..."நாராயணா...நாராயணா" அப்படினு சொல்லிட்டே வருவாரு. அன்னைக்கும் அப்படிதான் வந்தாரு. அவர் வந்ததும் அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வணக்கம் சொல்லிட்டு அவர் கையில வைத்திருந்த ஒரு அழகான மாம்பழத்தை அப்பா கையில குடுத்தாரு... உடனே பிள்ளையார் சாமியும், முருகா சாமியும் ஓடி வந்து நாரதர் மாமாக்கு வணக்கம் சொல்லிட்டு அப்பாக்கிட்ட அந்த பழத்தை அவங்க ரெண்டு பேருக்கும் தரனும்னு வேண்டிக்கிட்டாங்க...

அப்போ நாரதர் மாமா என்ன சொன்னாரு தெரியுமா? " இது ஒரு புதுமையான பழம்.. இதை யாரும் பங்கிட்டு சாப்பிட முடியாது, யாராவது ஒருவர் தான் சாப்பிட முடியும்" அப்படினு சொன்னாரு! உடனே அந்த அப்பா என்ன பண்றதுனு யோசிச்சப்போ அம்மா சொன்னாங்க " ரெண்டு பசங்களுக்கும் ஒரு போட்டி வைத்து அதுல யாரு வெற்றியடையுறாங்களோ அவங்களுக்கு இந்த அதிசய பழத்தை குடுக்கலாம்". அப்பாவும் உடனே இது ரொம்ப நல்ல ஏற்பாடுனு இதுக்கு ஒத்துக்கிட்டார்.

அப்பாவே ஒரு போட்டியும் வைத்தார். அது என்ன தெரியுமா? ரெண்டு பேரும் இந்த உலகத்தை சுத்தி வரனும்... யாரு முதலில் சுத்தி வந்து அப்பா, அம்மாகிட்ட வராங்களோ அவங்களுக்கு அந்த பழம் கிடைக்கும். உடனே முருகா சாமி தன்னோட நண்பன் மயில கூட்டிகிட்டு இந்த உலகத்தை சுத்தி வர கிளம்பிட்டாரு!

ஆனால் இந்த பிள்ளையார் சாமி என்ன பண்ணாரு தெரியுமா? அவரோட நண்பன் எலிய கூட்டிகிட்டு அவங்க அப்பா, அம்மாவையே சுத்தி வந்தாரு! உடனே அப்பா கேட்டாரு " ஏன்பா உலகத்தை சுத்தாம எங்களை சுத்தி வர" அப்படினு... அதுக்கு பிள்ளையார் சாமி என்ன சொன்னாரு தெரியுமா! " அவங்க அவங்க அம்மாவும், அப்பாவும் தான் எல்லா பிள்ளைகளுக்குமே உலகம்... அதுனால தான் நான் என் அம்மா, அப்பாவை சுத்தி வந்தேன்! இப்போ நான் இந்த உலகத்தை சுத்தியாச்சு... நான் தானே முதலில் வந்து ஜெயிச்சேன்... அதுனல இந்த பழத்தை எனக்கே தரனும் " அப்படினு சொன்னார்.

அவர் சொல்றது சரிதானு எல்லாருமே சொன்னாங்களா... அதுனால அவர் தான் போட்டில வெற்றியடைந்து மாம்பழத்தை பரிசா வாங்கினாரு! :)

பின் குறிப்பு:

கதையைக் கூறிய பின் குட்டீஸ் அழுது ஆர்ப்பாட்டம் செய்து உங்களை அடிக்கவோ... கடிக்கவோ வந்தால் "மொக்கைக் கதை கூறும் சங்கம்" பொறுப்பாகாது.... :)அந்த சங்க உறுப்பினரான நானும் பொறுப்பாளி அல்ல!

March 10, 2009

குட்டீஸ் ஸ்பெஷல்‍‍‍-அம்மாக்களை சமாளிப்பது எப்படி - பொழிலன்

எங்க அம்மா என்னோட ரொம்ப பிஸி அப்படினு சீனப்
போட்டுக்கிட்டு வலைப்பூ ப‌க்க‌ம் வ‌ராம‌ ஒரே சேட்டை
இங்க‌ வீட்டுல‌.... நானும் ரொம்ப‌ நாளா யோசிச்சு அம்மாவ‌ ச‌மாளிக்க‌
ப‌ல ஐடியாக்க‌ள‌ க‌ண்டுபுடிச்சிட்டேன்....

எப்போ பார்த்தாலும் ச‌மைக்கிறது, காய் அரியுற‌து, எழுதுற‌து, எதையாவ‌து
ப‌டிக்கிறதுனு எந்த சேட்டையாவது பண்ணிக்கிட்டு என் கூட ஒரு இடத்துல
உட்காருவதில்ல. இந்த‌ சேட்டையெல்லாம் போதாதுனு என்ன‌ அங்க‌ போக‌த‌,
இங்க உட்காராத‌, அதை நோண்டாத‌, இதை எடுக்காத‌னு வேற‌...
எதையாவ‌து நோண்டி பிச்சு ஆராய்ச்சி ப‌ண்ண‌ விடுறாங்க‌ளா...

இந்த‌ சேட்டைக்கெல்லாம் ஒரு முடிவு க‌ட்டிட்டேன்....
எப்ப‌டீனா?!! :)
அம்மா எங்க‌யாவ‌து எழுந்து போனா உட‌னே அம்மானு அழுது சீன‌ப் போட்டா
ந‌ம்ம‌க் கூட‌யே இருப்பாங்க‌ :)

இல்ல‌னா அவ‌ங்க‌ எங்க‌ போனாலும் பின்னாடியே போக‌னும்
அவ‌ங்க‌ கால புடிச்சிக்கிட்டே சுத்தினா உட‌னே ஆகா புள்ளை ந‌ம்ம‌ளையே

சுத்தி வ‌ருதேனு அவ‌ங்க‌ வேலையெல்லாம் போட்டுட்டு ந‌ம்ப கூட ஒழுங்கா
விளையாடுவாங்க!

ஆனா ந‌ம்ம‌ளோட விளையாட‌ வ‌ன்தாலும் சும்மா இருப்ப‌ங்க‌ளா கீரைய‌ நோண்டிகிட்டே
இருப்பாங்க‌.... அதை எப்ப‌டி அவ‌ங்க‌ நோண்ட‌லாம்? நான் உட‌னே போயி அம்மாக்கு
உத‌வி செய்யுறேனு எல்லா கீரையும் எடுத்து பிச்சு வாயில‌ போட்டுக்குவேன்!
இப்போ என் கூட‌ விளையாடாம‌ அந்த சேட்டையும் செய்ய‌மாட்டாங்க‌ளே!:)


ஆனால் இப்ப‌டி ந‌ம்ம‌க் கூட‌யே அவ‌ங்க‌ள‌ வெச்சி பாத்துக்கிற‌துல‌யும் ஒரு சிக்க‌ல் இருக்குபா! ஆமாம் நம்ம‌ள‌ எதையும் நோண்ட‌ எடுத்து உடைத்து ஆராய்ச்சி ப‌ண்ணி
அறிவ‌ வ‌ள்ர்க்க‌வுட‌மாட்டாங்க‌ளே :( ஆங்... ஒரு ஐடியா! நைசா அவ‌ங்க‌ பாக்காத‌ப்போ
ந‌ம்ம ஆராய்ச்சிக்கு தேவையான‌ சாமான்க‌ள‌ எடுத்துக்க‌னும்.அப்புற‌ம் அவ‌ங்க‌ அத‌ வாங்க‌ வ‌ருவாங்க‌ ஜாக்கிர‌தை! நாம‌ அத குடுக்க‌வே கூடாது... மீறி வாங்கினா ந‌ல்லா செம‌ க‌த்து க‌த்தி அழுக‌னும்.. தாயுள்ள‌ம் அழுதா தாங்காதே! உட‌னே ந‌ம‌க்கே குடுத்துடுவாங்க‌!

அப்புற‌ம் ஒளிந்து விளையாடுற‌து! :)இதுல‌ நாம‌ எதுக்க‌டில‌யாவ‌து போயி புகுந்துக்க‌னும்; அவ‌ங்க‌ க‌ண்டுபுடிக்கிறேனு சேட்டையெல்லாம் விட்டுட்டு ந‌ம்மக்கிட்ட
வ‌ந்துடுவாங்க‌! எப்ப‌டி ஐடியா?

எப்ப பாத்தாலும் சின்ன‌ப்புள்ள‌த் த‌ன‌மா என்னோட விளையாட்டு சாமான‌ எடுத்து அவ‌ங்க‌ விளையாடுற‌து... பின்ன‌ என்ன‌ எப்ப‌ பாத்தாலும் த‌ட்டு,ட‌ம்ள‌ர்,ரிமோட்,செல்போன், டைரி,பேனானு கையில‌ வெச்சி விளையாடுவாங்க‌... அத‌ என்கிட்ட‌ குடுத்தா நான் எவ்வ‌ள‌வு அழ‌கா விளையாடுவேன்! த‌ரைல‌ தாள‌ம் போட்டு ஒரு பெரிய‌ மியூஸிக் டைர‌க்ட‌ர் ஆகிடுவேன்ல‌... உட‌மாட்டாங்க‌ளே செல்போன் உடையும் ரிமோட் உடையும்னு வாங்கி வெச்சிக்குவாங்க‌!ம்ம்ம்... :( இதுக்குதான் என்ன‌ ப‌ண்ற‌‌துனு தெரிய‌ல.நான் கொஞ்சம் ஐடியாஸ் குடுத்தேன்ல... இதுக்கு நீங்க‌ளும் கொஞ்ச‌ம் ஐடியா குடுங்க‌!