Showing posts with label பொழிலன் / குழந்தைகளின் உலகம். Show all posts
Showing posts with label பொழிலன் / குழந்தைகளின் உலகம். Show all posts

May 30, 2009

கொட்டும் பனி அருவியில் குட்டிப் பொழிலன்



பொழிலனின் முதல் மே மாதம்... அவனை இந்த வயதிற்கேற்றவாறு எங்காவதுக் கூட்டிச் செல்லலாம் என்று இந்த கொட்டும் பனி அருவி கண்காட்சிக்கு அழைத்து சென்றோம்!

எனக்கோ குட்டிமாவிற்கு குளுராமல் அவன் மகிழும் விதமாக அனைத்தும் அமையவேண்டுமே என்று ஒரே யோசனை... ஒரு வழியாக கண்காட்சியகத்திற்கு வந்தாச்சு... பொழிலன் போன்ற அதி முக்கிய நபர்களுக்கு மட்டும் நுழைவு இலவசம் :))))) 4அடிக்கு மேல் வளர்ந்த குழந்தைகளுக்கு நுழைவு சீட்டு கண்டிப்பாக வேண்டுமாம்... நான் அதைவிட ஒன்றரை அடி தான் கூட... ஆனால் விடலயே :(((( (மனசாட்சி: அடங்கு அடங்கு!)

ஒரு வழியா உள்ளே நுழைந்தா ஆஹா! என்னா குளுமை என்னா குளுமை!
தரையெல்லாம் பனிக்கட்டி, சுவரும் பனி.... ரொம்ப அருமை!
ஆங்காங்கே சில இடங்களில் பனி அருவி உள்ளது... அதிலிருந்து பனி மழை போல்... முடியல பொழிலனுக்கு ஒரே கொண்டாட்டம்... பனி அவன் தலையில் படாம மறைத்து ஒரு சில சாரல் துளிகளை மட்டுமே அவனிடம் போக அனுமதித்தேன்... இவனுக்கு ஒரே கொண்டாட்டம்... அப்படி ஒரு சிரிப்பு...

அங்கே ஆட்டமும் பாட்டமும் என ஒரு நடனக் குழு குதித்துக் கொண்டும் ஒலி பெருக்கி அலறிக் கொண்டும் இருந்தமையால் கொஞ்சம் செவிக்குத் தொல்லை!

அடுத்ததாக பேய் குகை! பெயரக் கேட்டாலே சும்மா டெர்ரரா இருக்கா?
அந்த குகையில் விசேஷம் என்னனா இருட்டான அவ்வப்போது எரிந்து எரிந்து அணையும் விளக்குகளுடன், ஒரு குரல் " ஹெல்லோ பேயீயீயீ" என்று கேட்கும்... பின் சிறிது தூரம் சென்றதும் மற்றொரு குரல் கத்தும் கொலவெறியோட... நம்ம பயந்து கத்துறது இல்லனு அவங்களே கத்திக்கிறாங்க போல :))) ஏன்னா முதலில் எனக்கு சிரிப்பா தான் இருந்தது! :))))

இந்த குகை அங்கங்கே வளைந்து வளைந்து செல்லும்... ஒரு வளைவில் தான் ஒரு பயங்கரம் (அ) நகைச்சுவை! பொழிலன் ஒரு தைரியசாலி... ஒரு குட்டி மனிதன் பேய் வேடம் போட்டு ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்க நான் திரும்பியதும் அதைப் பார்த்து கொஞ்சம் பயந்தேன்... பொழிலன் அதைக் கண்டுகொள்ளவில்லை... ஆனால் அது திடீர்னு கையை தூக்கி ஆட்டுச்சு பாருங்க...

"ஆஆஆஆ அம்மா அம்மா!" இது நான்.... "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி!" இது பொழிலன்! அவனுக்கோ பேயைப் பார்த்து ஒரே சிரிப்பு... எனக்கோ பயம்...
அந்த பேய் வேடம் வெளியே வெளிச்சத்தில் சிரிப்பாக இருந்தாலும் உள்ளே கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு!

பிறகு வெளியே வந்து டோராவின் புதிர் வீட்டிற்கு சென்று வந்தோம்... வெளியே வந்தால் அதே பேய் மனிதன்... நாங்களும் சென்று பேசினோம் ஆனாலும் கை குலுக்க கொஞ்சம் பயம்... அது கையை புகைப்படத்தில் பாருங்களேன்.... பொழிலன் தான் அதோடு மறுபடியும் சிரித்து அது கையைப் பிடித்து நகங்களைத் தடவிப் பார்த்து மீண்டும் சிரிப்பு! :))) இளம் கன்று பயம் அறியாது!

ஒரு வழியாக பொழிலனுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணங்களாவே இருந்தது இன்று! :)))))