August 31, 2009

எழும்பூர் இரயில் நிலையமும்.....

எழும்பூர் இரயில் நிலையமும், தி।நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களும் குறிப்பாக பொத்தேரி இவை என் வாழ்வின் இனிமை, மகிழ்ச்சி மட்டுமே பார்த்த இடங்கள்!

சின்ன வயதிலிருந்தே அடிக்கடி சென்னை வந்து பழகியிருந்தாலும் நான் என் மேல்நிலைப் படிப்பிற்காக சென்னையிலுள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன் அங்கு கேம்பஸ் இன்டெர்வியூ வாய்ப்புகள் அதிகம் என்பதால்! ஆனால் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த போது நான் வெளியே காட்ட விரும்பாத பயமும் பீதியும் ஒரு மாதிரியான உணர்வும் என்னை ஆக்கிரமிச்சது நிஜம்! ஆனால் அதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்!

அடிக்கடி சென்னை விஜயம் என்பதால் எனக்கு எப்போது எழும்பூர் இரயில் நிலையம், மலைக்கோட்டை விரைவு இரயில், திநகர் ஆகியவை மனதிற்குப் பிடித்தமானவை :)


கல்லூரி படிப்பு நல்லவிதமாக ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும் வார விடுமுறைகளை நாங்கள் வீணாக்குவதே இல்லை! ஒரு நாள் படிப்பு, ரெக்கார்ட், மெஸ் உணவு, அழகாகும் முயற்சிகள்(கி கி கி வெள்ளரிக்காய், தயிர், எண்ணெய் மற்றும் இன்னபிற பூசி 2மணி நேரம் குளிப்பது) ஆகியவை நடந்தேறும்.... அடுத்த நாள் காலை சுறுசுறுப்பாக எழுந்து குளித்து அழகாக ரெடியாகி(அவ்வ்வ் பார்ப்பவர்கள் பாவம்) மாடர்ன் சிம்பிளா ஜீன்ஸ்+குர்தா (அ) டீசர்ட் போட்டுக்கிட்டு கோயிலுக்கு போவோம் பிரகு மெஸ்ல அவசரகதியா உணவு முடிச்சிட்டு காலை 10மணி பீச் டிரெயின் தான் டார்கெட்...


நாங்கள் எங்கே ஊர் சுற்ற போனாலும் 10மணி டிரெயின் தான்.... நாங்க பெண்கள் மட்டும் சேர்ந்து போவதால லேடிஸ் பொட்டிக்குள்ள புகுந்துடுவோம்... உள்ளே போயி சிக்கிச்சின்னாபின்னமாகி கசங்கி பூச்சாண்டி மாதிரியே உருமாறி ( ஏற்கனவே அப்படித்தான்ற உண்மைலாம் இப்போ யோசிக்கப் படாது) நாங்க இறங்கும் இடம் திநகர் அல்லது எழும்பூர் அல்லது நுங்கம்பாக்கம்...

சென்னைல எங்கே போகனும்னாலும் இந்த மூன்று இடங்கள் போதும் இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் ரூட் பிடிச்சிடலாம் :)

ஸ்பென்ஸர் பிளாசா:
***********************

ஒரு வழியா எழும்பூர்ல இறங்கி ஆட்டோ பிடிச்சி 30ரூபாய் கொடுத்தா ஸ்பென்ஸர்ஸ் போலாம் வெயில் ரொம்ப இருந்தா அங்கே போய்ட்டா நல்லா சுற்றின மாதிரியும் இருக்கும் ஏசில இருந்தா மாதிரியும் இருக்கும்(எப்பூடி??) !

ஸ்பென்ஸர்ல தப்பித்தவறி கூட பெரிய கடைகளில் எதுவுமே வாங்கிடக் கூடாது..... போனோமா எல்லா பொருளையும் ரேட் கார்டோட பார்த்தோமானு இருக்கனும்.... அதுக்காக ஒண்ணுமே வாங்கலனா எப்பிடி அதுனால லைஃஸ்டைல்ல வேணும்னா ஏதோ ஒன்றிரண்டு வாங்கிக்கலாம்.... நான் பொதுவா புக், சாக்லேட், கிரீடிங் கார்ட் வாங்குவேன்! ஸ்பென்ஸர்ல கூட சீப்பா (அட ஸ்பென்ஸர்குள்ள அது தாங்க சீப்) துணிகள் வாங்க சில கடைகள் இருக்கு.... அது ரொம்ப உள்ளே போகனும்.... அங்கே 100ரூபாய்க்கு அழகான டாப்ஸ், 300ரூபாய்க்கு அழகழகான குர்தா, 350லிருந்து 700ரூபாய் வரை அழகான முழு நீள ஃபேஷன் ஸ்கெர்ட் கிடைக்கும்.... அட நெசமாதாங்க... ஆனா தரம் ரொம்ப நல்லா இருக்கும்!

அப்புறம் ஃபுட் கோர்ட் போயி அரைவயித்துக்கு ஏதாவது போட்டுகிட்டு லம்பா காசைக் கொடுத்துட்டு நடையகட்ட வேண்டியதுதான்...

அபிராமி மெகா மால்:
************************

இங்கே போகனும்னா நுங்கம்பாக்கம்ல இறங்கி பஸ் கிடைக்கும் இல்லனா நல்லா பேரம் பேசினா 40ரூபாய் இல்லனா 50ரூபாய் கொடுத்தா ஆட்டோல போயிடலாம் ! அது அழகான இடம் நல்லா பொழுதை போக்கலாம்... ஸ்பென்ஸரைவிட இங்கே ஃபேன்ஸி பொருட்கள் விலை சற்று குறைவு... அப்பிடி இப்படி சுற்றிக் கொண்டே இருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு தான் வருவோம்.... இங்கே தியேட்டரும் இருப்பதால் படம் பார்க்கலாம்.... நாங்க இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை கஜினி இங்கே பார்த்தோம்.... வெளியே வந்தால் கொஞ்சம் டீசென்டான திநகர்....

இஸ் ஃபன்னி சென்டர்:
*************************

அண்ணாநகர், நுங்கம்பாக்கம்ல இருந்து ஷேர் ஆட்டோ, அல்லது நுங்கம்பாக்கம்ல இருந்து 30ரூபாய் ஆட்டோக்கு அழுதா இங்கே வந்துடலாம்! ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஆனால் ஸ்பென்ஸர் மேரி பிரவுன் உணவைவிட இங்கே இருக்கும் மேரி பிரவுன் எனக்கு மிகவும் பிடிக்கும்.... ஏனா இங்கே நல்லா பொறுமையா கவனிப்பாங்க... அமைதியான அழகான இடம்.... இங்கே எனக்கு பிடித்தது சீஸ் பர்கரும், பீட்ஸாவும், சமோசா மற்றும் கட்லெட்டும்! ரொம்ப சூடாவும் சுவையாவும் இருக்கும்!

இங்கே எப்போ போனாலும் யாராவது சினிமா விஐபி பார்க்கலாம்.... நான் பிருந்தா மாஸ்டர், குஷ்பூ மற்றும் குடும்பத்தாரை இங்கே தான் பார்த்தேன்...

இங்கே காஃபிடே மிக பிரபலம்.... பல கிளைகள் இருந்தாலும் இந்த கிளை மிக பிரபலம்! எனக்கும் காஃபிக்கும் வெகு தூரம் அதுனால் இந்த பக்கம் ஒதுங்கினது இல்ல....

இது நம்ம ஏரியா:
*******************

ஹி ஹி அதாங்க திநகர்! இதைப்பற்றி உங்களுக்கு சொல்லனுமா என்ன?

சரவணா ஸ்டோர் போயி சுற்றிப்பார்த்துட்டு, சென்னை சில்க்ஸ்ல, குமரன்ல, போத்தீஸ்ல ஏதாவது ஒரு கடைல டிரெஸ் எடுத்துட்டு, அப்புறம் இரயிவேஸ்டேஷன் பக்கத்துலயே ஒரு வளையல் கடை இருக்கு அங்கே போனா எல்லாவிதமான ஃபேன்ஸீ பொருட்களும் கி்டைக்கும்... அங்கே போயி காதுக்கு வளையல், காதுக்கு செயின்(கி கி கி) எல்லாம் வாங்குவோம்!
ஆங் அப்புறம் என் கணவர் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கு பின் என்னை அழைத்துச் சென்ற முதல் இடமும் இது தான்! அங்கே தான் எனக்கு விலையுயர்ந்த அழகான பரிசும் கொடுத்தார்! சோ சென்டிமென்டலாவும் எனக்குப் பிடித்த இடம்!

நுங்கம்பாக்கம்:
****************

இதுவும் என்னால் மறக்க முடியாத இரயிவே நிலையம்.... பின்னே என்னங்க காலைல 6மணி இரயிலைப் பிடித்து 7மணிக்கு நுங்கம்பாக்கம் வந்திறங்கி அங்கே இருக்கும் ஒரு பிளாட்பாரக் கடையில் சூடான சுவையான இட்லி, வடை சாப்பிட்டுவிட்டு பரபரப்பா வெளியே போயி பிடிட்ஜ தாண்டினதும் ஷேர் ஆட்டோ பிடித்து ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்படி எங்கே அவசரமா போவோம் தெரியுமா.... ஜப்பனீஸ் மொழி கற்றுக் கொள்ள வகுப்பிற்கு தான்!
அதுக்காக நான் ஜப்பானீஸ் மொழில பேசுவேனானுலாம் கேட்கப்படாது! அது பரம இரகசியம்! :)

இதுதான் எங்களோட ஃபேவரிட் ஊற் சுற்றும் இடங்கள்! :)

இது இல்லாமல் நான் சென்று மகிழ்ந்த அழகான எனக்கும் பிடித்தமான இடங்கள் பெசண்ட் நகர் வழியே நாங்க போன முருகன் இட்லி கடை, பிட்ஸா ஹட், மேரி பிரவுன், சரவண பவன், மெரினா பீச், திநகர், அண்ணா நகர் முழுவதும், சத்யம் தியேட்டர் (இது மட்டும் போனதில்ல) , மாயாஜால், மைலாப்பூர் கோயில், தாம்பரம் கோயில், நுங்கம்பாக்கம் இட்லி கடை, தாம்பரம் வஸந்தபவன் இப்படிப் பல இடங்கள்.... (என்ன ஒரே ஹோட்டல்களாக இருக்கேனு என் சாப்பாட்டு விஷயத்தை பற்றிலாம் யோசிக்கப்பிடாது ஆமாம் சொல்லிட்டேன்) !

அப்புறம் எங்கள் கல்லூரியை சுற்றி இருக்கும் கடைகளுக்கு போவோம்... ஜூஸ் குடிப்போம்....

இப்படியாக எழும்பூர் இரயில் நிலையமும் அங்கு தொடங்கிய என் சென்னைக் காதலும் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது! இப்படி என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான தருணங்களை அதிகம் பார்த்த சென்னையின் பிறந்தநாளுக்கு என்னுடைய காலம் தாழ்ந்த வாழ்த்தும், நன்றி கூர்ந்து பதிவிட இந்த மொக்கை பதிவும்! :)

சென்னை வாழ்க!மெரினா பீச் வாழ்க!

August 27, 2009

கலக்கல் பொழிலன்!

பொழில் குட்டி வர வர ரொம்ப செல்ல கலாட்டா பண்றான்.... சேட்டை பண்றது அவன் தான் ஆனால் அடி மட்டும் எங்களுக்கு :( அவ்வ்வ்வ்வ் அடிப்பது வேறும் யாரும் இல்லை பொழிலன் தான்.... ஒரு அடிக்கு இரண்டு மூன்று கிள்ளுகள், பிராண்டல்கள் இலவசம்! :)

************************************************

கஷ்ஷ்ஷ்டப்பட்டு வளர்த்த கூந்தல் எல்லாம் பொழிலன் கையில சிக்கி சின்னாபின்னமாகி அல்லோலப்படுது! இதுல வேற பொழிலன் அப்பா டயலாக் ஒரு சமயம் என் முடிய பார்த்திட்டு " பரவால நீ முடி நிறைய தான் வெச்சிருக்கே நம்ம குழந்தை பிறந்ததும் புடிச்சு இழுத்து விளையாட " அவ்வ்வ்வ் அவன் இழுத்தா விளையாடுறான்? நோ நோ........ பிய்த்துல விளையாடுறான்....

அன்று ஒரு நாள் இப்படித் தான் நான் இட்லி சாப்பிட்டுக்கிட்டே தொலைக்காட்சி பார்த்துட்டு இருந்தேன்... அப்போ இங்கே அங்கே நடமாடிக்கொண்டு இருந்த நம்ம சார் அதாங்க மிஸ்டர்.பொழிலன் நேரா என் கிட்ட வந்து என் இட்லி தட்டைப் பிடித்து இழுக்க நான் இழுக்க ஒரு வழியா நான் வெற்றி எனக்கு.... ஆனால் அதற்குள்ளே டிவில ஒரு எண்ணெய் விளம்பரம் அதுல இரண்டு வடை காமிச்சாங்க...

வடை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேனு நான் டிவியில வடைய பார்க்கத் திரும்பினா என் தட்டு பொழிலன் கையில.... என் இட்லி தரைல.... உடனே வடைய காட்டுவதற்கு முன்னாடியே நான் பொழிலன் பக்கம் திரும்ப என் இட்லி தரைல.... அதுக்குள்ள வடையும் போச்சு :( அய்யோ வடை போச்சே அதோட இட்லியும் போச்சே!

***********************************************

இப்போது எல்லாரையும் உம்பா என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறான்.... பின்ன நாங்க அவனை பல செல்லப் பெயர்களில் கொஞ்சும் போது அவன் எல்லாருக்கும் ஒரு செல்லபெயர் வைத்திருக்கிறான்! :)

உம்பா உக்கார்(உட்காரு), உம்பா வேணாம் உம்பா, உம்பா இயா பா ( மியாவ்கு பால்) , உம்பா பாட்டில், அய்யா பாஆஆஆ ( பாய் சொல்கிறான்) , உம்பா தா தா தா இவையெல்லாம் அவன் இப்போது தொடர்ச்சியாக பேசும் வரிகள்!

என்னை அம்மானும், உம்பானும் கூப்பிடுவது போலவே எல்லாரையும் அந்தந்த உறவு முறை அல்லது உம்பா என்று அழைக்கிறான்.... :)

***********************************************

எந்த எந்த பொருளை எதற்காக எப்படி பயன்படுத்தனும்னு நல்லாவே தெரியுது! சீப்பினை எடுத்த தலை வாறுவது போல செய்கிறான், கரண்டி,ஸ்பூன் எடுத்தால் கூடவே கிண்ணம் எடுத்துக் கொண்டு ஏதோ சாப்பிடுவது போல செய்கிறான்! புத்தகங்களைப் பார்த்தால் ஒன்றை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக ஏதோ படிக்கிறான்.... புத்தகம் தலைகீழாக இருந்தாலும் குழந்தை பொறுப்பாக படிக்கும் அவன் படிப்பது என்னனு அவனுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும்! :)

பொறுப்பான பிள்ளை துடைப்பத்தை பார்த்தாலே எடுத்து வீடு பெருக்குகிறான்... அதை தூக்க முடியாமல் தூக்கி பெருக்குவது கொள்ளை அழகு! ஆனால் அவன் அதில் பாதி உயரம் தான்!

காலையில் நான் கிச்சனில் அமர்ந்து காய்கள் வெட்டிக் கொண்டிருந்தால் என்னுடன் வந்து உட்கார்ந்து கொண்டு நான் வெட்டும் காயெல்லாம் எடுத்து தூக்கி வீசிக் கொண்டிருப்பான்!

***********************************************

அவனுக்கு என்ன சாப்பிடக் கொடுத்தாலும் மியாவ்கும், காகாவிற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்பான் அவன் மழலையில்.... இயா தா... (மியாவ்கு தா)!

வர வர ஒழுங்காக சாப்பிடுவது இல்லை.... சாப்பாட்டினை தானே உண்ண வேண்டும் என்று கிண்ணத்தோடு வாங்கிக் கொள்வான்... பின் அதனை கீழே சிந்தி மேலே சிந்தி கடைசியில் வயிற்றுக்குள் ஒன்றும் போகாது :(

*********************************************

ஆனால் எல்லாவற்றிற்கும் அழுது, கத்தி, அடம் பிடித்து சாதிக்கும் குணத்தை எப்படி மாற்றுவது? இன்னும் வளர்ந்த பின்பு இப்படி செய்தால் தகாது அதனால் இந்தக் கால குழந்தைகளின் பிடிவாதத்தை மாற்றும் சிறந்த வழி அறிந்தோர் கூறுங்கள்! நாங்கள் அனைவரும் பலவாறு முயற்ச்சித்து வெற்றிகரமாக தோல்வியடைந்தோம்! :(

************************************************

ஆனால் அவனுடனான தருணங்கள் இன்பத்திற்கு குறைவில்லாத இரசனைகள் நிறைந்த தருணங்கள்! அவன் மீதான என் இரசனைகளுக்கு வயதே ஆகாது (பொழிலனுக்கே வயதானாலும்) ! :) அவனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் ஆனால் அப்புறம் இடம் இருக்காது மற்றும் படிப்பவர்களின் பொறுமை கருதி இதோடு இன்று நிறுத்திக் கொள்கிறேன்!

*************************************************

இரத்தக் கண்ணீரே வந்துவிடும் போல

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித் தாளில் படித்த செய்தி... இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே தாயால் துணியில் கட்டி பையில் போடப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு கடைசியில் துணிப் பையிலேயே.... அய்யோ சொல்லவே கண் கலங்குது.... இரண்டு பிஞ்சும் படைத்த கடவுளிடமே போய்ட்டாங்க.... பாவம் தாய் வயிற்றில் இருக்கப்போ இந்த உலகத்தைப் பற்றி எப்படியெல்லாம் நினைத்திருக்கும் இரு பிஞ்சுகளும்...

எப்படி இப்படியெல்லாம் செய்ய மனம் வருது பெற்ற தாய்க்கே? இரத்தக் கண்ணீரே வருகிறது :(

நேற்றும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விஷயம் இது போலத் தான் அசுத்த நீர் ஓடு சாக்கடையில் வீசப்பட்டக் குழந்தை.... கடவுளே குழந்தையை வேண்டம்னு முடிவு பண்ணவங்க.... அதுங்க உயிர்வாழவே முடியாதபடி ஏன் சாக்கடைகளிலும், கண்ட இடங்களிலும் வீசுறாங்க? தொட்டில் குழந்தை திட்டம், தொண்டு நிறுவனம், ஆசிரமம் இப்படி எங்கேயாவது விடலாமே?

இல்லையென்றால் குழந்தை இல்லாத எத்துணையோ பேர் குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருக்க அவர்களிடம் கொடுக்கலாம்.... அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இப்படி?

சுய விருப்பம் இல்லாமல் நிச்சயம் கருத்தரிக்க முடியாது... தெரிந்தே கொலை செய்யும் இந்த பெண்களை என்ன செய்வது?

ஒரு ஆணிடம் ஏமாந்தவர்கள், பெண் குழந்தை என்றால் மறுக்கும் கணவன் குடும்பத்தாருக்கு பயந்தவர்கள், தகாத காதல் மற்றும் கள்ள உறவினால் கருத்தரித்தவர்கள் இப்படி பலர் இந்த வரிசையில் பிஞ்சுகளை பலியாக்கிவிட்டுச் செல்கிறார்கள் :(

இதயெல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.... அந்தப் பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஓர் உணர்வு நம்மை ஆக்கிரமிக்கிறது :(

நம்மால் ஆன உதவிகளை இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யவேண்டும்...
முடிந்தால் தத்து எடுத்து வளர்ப்போம் அல்லது அவர்களை வளர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவோம்!
இது என் பல வருடக் கனவு....

ஆனால் இப்படி தொண்டு நிறுவனம் இருக்கும் தைரியத்தில் தான் இந்த கல் நெஞ்சம் படைத்தவர்கள் குழந்தைகளை இப்படி வீசுகிறார்கள்!

தாயன்புக்கு ஏங்கி உறவுகள் இன்றி வாழும் அந்தக் குழந்தைகள் மனதில் எத்தகைய காயம் உருவாகும் :( என்ன தான் நாம் உதவினாலும் தாய் தரும் அன்புக்கு ஈடாகுமா? என்று மாறுமோ இந்த நிலை!

மெளனம்


மெளனமான என் இரவொன்றில்


எனக்கான உன் நினைவுகள்


காற்றின் வழி செல்கையிலே


அது உன்னை அடைந்ததோ


அல்லது பொழுது விடிந்ததோ!


காற்றோடு பயணித்தாலும் அது


காற்றினும் விரைவாக வருகையில்


என் மனமோ மெளனமாக


உன் மனதின் வசமாக


உன் நினைவுகளோ


நம் நினைவுகளாய்


என்னை வந்தடைய


இது காதலோ நட்போ


இரண்டும் கடந்த உறவோ


என் மனதைக் கேட்டேன்


மெளனமான என் மனதோடு


உரையாடும் உன் மனம்


சொன்னது என்னிடம்


இது நமக்கான..............





August 19, 2009

முன்னேறும் இந்தியத் திருநாட்டின் அதிர்ச்சியான மறுபக்கம்

நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சந்தேகத்துடன் கூறுவேன்.... ஒரு புறம் முன்னேறும் காட்சிகள் பல அரங்கேறிக் கொண்டிருந்தாலும் நம் தாய் நாட்டின் மறுபக்கம் :(

நம் அம்மா பார்ப்பதற்கு அழகாக பட்டாடை, நகையெல்லாம் உடுத்திக் கொண்டு அழகுக்கு அழகு சேர்த்து படாடோபமாக இருந்தால் அவர் மகிழ்ச்சியாக வளமாக வாழ்கிறார் என்று கூறிவிடலாமா? அவர் மனதிலும் எந்தக் குறைகளன்றி உண்ண உணவிலும் எந்தக் குறையுமின்றி நோய் ஏதுமின்றி இருந்தால் மட்டுமே அவர் மகிழ்ச்சியாக அவளமோடு வாழ்கிறார் என்று கூறுவோம்....

பின் நம் தாய் நாட்டினைப் பற்றி மட்டும் ஏன் அப்படி முன்னேறிய பக்கத்தை மட்டும் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறோம் என்று தெரியவில்லை!

இதன் மறுபக்கம்.... இன்னும் குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை அல்லது வரதட்சனைக் கொடுமை செய்வதாக பொய் புகார் அளித்து கணவர் குடும்பத்தைப் பழிவாங்குதல், நோய்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லமாட்டேன் குறைவாக இருக்கிறது... இப்படி எத்தணையோ நிகழ்கிறது நம்மை சுற்றி!

படித்த மேல் தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தினரை மட்டும் பார்த்து, "இல்லை இப்படியெல்லாம் இப்போது நடப்பதே இல்லை" என்று கூறிவிட முடியாது! நான் கூறும் நிகழ்வுகளை படித்துவிட்டு சொல்லுங்கள்...

நிகழ்வு 1

அன்று ஒரு நாள் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு கிராமத்தின் குழந்தைகள் அனைவருமே பொன்னுக்குவீங்கி என்னும் ஒரு வித அம்மை தொற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்... ஆனால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் பலருக்கும் நகரத்திலேயே உருவாக நிலையில் கிராம மக்களைப் பற்றி என்ன சொல்வது... நகரத்தில் தங்க நகை அணிவித்து இந்த நோயைக் குணப்படுத்துவதாக எண்ணி மருத்துவ ஆலோசனை பெறாமல் அது தானாகவே சரியாகிவிடும்... இதை நானே பல இடங்களில் நேரில் பார்த்திருக்கிறேன்...

அது கிராமம் அல்லவா அதனால் தான் மக்கள் ஒரு படி மேலே போய் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த நோய் வந்தால் உடனடியாக தங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கத்தினாலான திருமாங்கல்யத்தைப் போடுகிறார்கள்.... இது கேட்பதற்கே கேவலமாக இருக்கிறது...

அங்கு ஓடு அசுத்தமான சாக்கடை நீரே இதற்கு காரணம்... சுகாதார நிலையத்திற்குச் சென்று நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் இப்படி நடப்பதும் நம் இந்தியாவில் தான்! :(

நிகழ்வு 2

சாலைகளில் அழகான விளக்குகள் அமைத்து, சாலையோரச் சுவர்களில் அழகான படங்கள் வரைவது மிகவும் நல்ல விஷயம் தான்! ஆனால் அதற்காக செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை குடிசைமாற்று வாரியத்திற்கு ஒதுக்கி இன்னும் சென்னை "மா"நகரின் பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களுக்கு இருப்பிடம் ஏற்படுத்தித் தரலாமே?

அவர்கள் இருப்பிடத்தைவிட்டு மீண்டும் பிளாட்பாரத்திற்கு வந்தால் (அப்படியும் நடக்கிறது ) கடுமையான தண்டனைகளை விதிக்கலாம்!

அண்ணா நகரில் டவர் பூங்காவிற்கு அருகில் செல்லும் தெருவில் கூட நான் இத்தகைய பிளாட்பாரவாசிகளைப் பார்த்திருக்கிறேன்!

நிகழ்வு 3

நம் நாட்டில் செய்வதற்கு ஆயிரம் வேலை இருக்கிறது... சுய தொழில் இருக்கிறது... பின் ஏன் வேலைவெட்டியில்லாதவர்களும் , போலிச் சாமியார்களும் (இதுவும் ஒரு சுய தொழிலோ? ) , பேயோட்டும் மந்திரவாதிகளும் என்று தெரியவில்லை.... பின் எப்படி நாடு சுத்தமாக அழகாக மாறும்?

சோம்பேறித் தனத்தை மறைக்க சாமியார் வேடம் ஒரு வழியா? அதிலும் கருப்பசாமி தன் காலில் விழுந்து கெஞ்சியதாம் தன் மகள் உடம்பில் வசிக்க அதனால் தானும் ஒத்துக் கொண்டாராம்.... இப்படி கூறும் ஒரு மனிதர் தன்னை காளி அன்னை என்றும் கூறிக் கொள்கிறார்.... தகவல் உபயம் விஜய் டிவிக்கு நன்றி!

இதெல்லாம் ஒரு பிழைப்பா? அதிலும் கருப்புசாமி வந்ததும் அப்பெண் மது குடிக்கிறார், பீடி, சுருட்டு புகைக்கிறார், கஞ்சா அடிக்கிறார்... சீ இதெல்லாம் கேவலமாக இல்லை.... தெய்வத்தை, பெண்மையை, நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் இவர்களை விடுத்து எப்போது பார்த்தாலும் இந்த ஐடி பெண்கள் அட்டகாசம் செய்கின்றனர், ஐடி மக்கள் குடிக்கின்றனர், அப்படி செய்றாங்க, இப்படி போறாங்க, இவங்களால கலாச்சாரம் கெடுது அது இது என்று ஐடி மக்களை குறை கூறுவதே பொறாமை பிடித்த பல மக்களின் வேலையாகப் போயிற்று!

இதில் உச்சக்கட்டக் கொடுமை என்னவென்றால் அந்த பெண் சட்டத்தினால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா அடிப்பதைக் கூட வெளிபடையாகக் கூறுகிறார், "நீங்கள் தவறுனா நினைச்சாலும் பரவால எனக்கும் அது தவறுனு தெரியும் ஆனா கருப்புதான் கஞ்சா அடிக்கிறார் "
என்று வேறு நாக்கூசாமல் சொல்கிறார்...

ஏங்க இப்படி தெய்வம் மனிதனுக்குள்ள வந்து எல்லா காரியங்களும் செய்தா நமக்கு எதுக்கு படிப்பு, வேலை? எல்லாத்தையும் தெய்வம் பார்த்துக் கொள்ளாதா? கடவுள் வழிதான் காட்டுவார் நாம தான் அதை கடவுள் கொடுத்த மூளையை வைத்து நல்லவிதமா நமக்கும் பிறருக்கும் பயன்படும் விதமா அமைத்து வாழ்க்கையை உயர்த்திக்கனும்.... அதை விட்டுட்டு , எல்லாருக்கு எப்போதும் நன்மை செய்யக் கூடிய கடவுள் மேல் பழிபோட்டு இப்படி தீய காரியங்கள் செய்யலாமா?

இந்த நிகழ்வுகளையெல்லாம் படித்த பிறகு என்ன தோன்றுகிறது நமக்கு.... நம் நாட்டில் மாற வேண்டியது பல உள்ளன... மக்களுக்காக மக்கள் செய்ய வேண்டிய கடமைகள் தாராளம்.... அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளும் அதற்கு நம் ஒத்துழைப்பும் ஏராளம் தேவை... நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துவிட்டு ஆகா இந்தியா எங்கோ போகிறது என்று பேசி பெருமைக் கொள்வதில் தவறில்லை ஆனால் இன்னும் நல்லவிதமாக முன்னேற நம் கடமைகளை இனியாவது செம்மையாக ஆற்றுவோம்...

சுதந்திர தினத்தன்று மட்டும் நாட்டுப்பற்று வந்து என்ன பயன்? நாட்டுப்பற்றினை நாள்தோறும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்! முயற்சிப்போமே!






August 13, 2009

கிருஷ்ண ஜெயந்தியும் எங்கள் குட்டிக் கண்ணனும்
















இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு எங்கள் குட்டிக் கண்ணன் என் புகுந்தவீட்டிலும் சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு என் பிறந்த வீட்டிலும் இருந்தான்!

புகைப்படங்களை பார்த்து நீங்களே சென்ற வருட கண்ணனையும் இந்த வருட கண்ணனையும் கண்டுபிடியுங்கள்! :)

பொழிலனின் கிருஷ்ணலீலை எங்களைக் கட்டிப்போட்டுவிட்டது! :)

August 9, 2009

பப்புவின் கதையும் பொழிலனும்!

சந்தனமுல்லை தன் மகள் பப்புவின் கதையை அவள் குரலிலேயே பதிவு செய்து நமக்காக சித்திரக்கூடத்தில் பதித்திருந்தார்! நான் பொழிலனை பப்புவின் கதையை கேட்க வைத்தேன்!

பொழிலன் கதை கேட்டுக் கொண்டே பப்புவிற்கு ஏதேதோ அவன் மழலை மொழியில் பதில் சொல்கிறான் :) கேட்பதற்கு இனிமையாக இருந்தது!

ஸ்பீக்கர் அருகே போய் அமர்ந்து கொண்டு பப்புவின் கதையைக் கேட்டான்! :)

நன்றி பப்பு! நன்றி முல்லை! பொழிலனுக்கு மழலைக் குரலில் கதை சொன்னதற்காக..... :)

August 5, 2009

தாய்ப்பால் வார பதிவு!



பாலூட்டும் அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கு இந்த உலகத்தாய்ப்பால் வாரதிற்கான எனது வாழ்த்துகள்!


தாய்ப்பால் என்பது இறைவன் அளித்த வரம் நமக்கு! அதனை வீணாக்காமல் குழந்தைக்கு அளித்து நமக்கும் நம் குழந்தைக்குமான அன்யோன்யத்தை அதிகரிப்பதோடு நம் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்பிற்கும் ஆதாரம் அளிப்போம்!


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்......

August 3, 2009

பொழிலனும் சேட்டைகளும்!

பொழிலன் வளர வளர சேட்டைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.... கூடவே அவன் மீதான என் ரசனைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது!

இப்போதெல்லாம் அதிகம் கோவமும் பிடிவாதமும் பொழிலனின் ஆயுதங்கள்! ஒரே கத்தல்தான்..... அவன் வாயருகே நம் காது இருந்தால் போச்சு... தலை சுற்றி கொஞ்ச நேரம் காதில் "ஒய்ங்" என்ற ரீங்காரம் கேட்கும் :(

ஆனால் எங்கள் பிள்ளை அதிபுத்திசாலி.... ஹி ஹி ஹி எல்லா அம்மாவுமே இப்படித் தான் சொல்வாங்க.... ஆனால் அடுத்து நான் சொல்லப் போவதை கேளுங்கள் பின்பு நீங்களே அப்படி சொல்வீங்க!

வெளியே பூனை நடமாட்டம் கண்டதுமே "இயா வா இயா வா" என்று அழைத்து எங்களிடம் ஃபிரிட்ஜைக் காட்டுவான்.... எதற்கென்றால் என் அத்தை எப்போதும் பூனைகளுக்காக ஃபிரிட்ஜில் மீன்கள் வைத்திருப்பார்.... அதை எடுத்து பூனைக்கு போடுவதை பார்த்த பொழிலன் அன்று முதல் பூனைகளைக் கண்டால் எங்களுக்கு ஆர்டர் போடுகிறான் மேற்கண்டவாறு.... பின்பு அதற்கு பால் ஊற்ற வேண்டும்... அதற்கு "அம்மா பா இயா வா அம்மா பா" என்று என்னிடம் பூனைக்கு பால் ஊற்றும்படி கேட்பான்!

இயா வா என்பது மியாவ் வா என்பதின் மழலை திரிபு! :)

இந்த அம்மா என்பது சில சமயங்களில் அம்மா அப்பா இருவரையும் இணைத்து "அம்பா"" என்று வரும்.... அம்பாவும் நான் தான்! :)

டப்பாக்களை திறக்கக் கற்றுக் கொண்டுவிட்டான்.... அதனால் கையில் கிடைக்கும் டப்பா, தண்ணீர் பாட்டில் எல்லாவற்றையும் திறந்து மூடுவது ஒரு விளையாட்டு அவனுக்கு!

பால் கலக்குவதைப் பார்த்தால் அவனும் கலக்க வேண்டும்... அடுத்த வினாடி அவன் அலறல் கேட்கும் முன் அவன் கையில் ஒரு காலி டம்ளர் மற்றும் ஸ்பூன்! :)

எல்லாவற்றையும் அவனே தன்னிச்சையாக செய்யவிரும்புகிறான்! இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளதெனினும் இன்னும் அவன் வளர வேண்டும்!
தலை அவனே வாரிக்கொள்வதாக நினைத்து அவனது குட்டி சீப்பினை வைத்து முடியைக் கலைத்துக் கொள்வான்! இது போல் சின்ன சின்ன விஷயங்கள் அவனுக்கு சில மாதங்களில் நன்கு பழகிவிடும் என்று நினைக்கிறேன்! நான் எம்பிராய்டரி போடுவதைப் பார்த்து அவனும் கேட்பதால் அவன் தூங்கும் போது அதனை செய்கிறேன்!

ஆனால் சிக்கலான சமாளிக்க முடியாத விஷயம் அவனுக்காக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட உணவினை விட நாங்கள் உண்பதை பிடிவாதமாகக் கேட்பது தான்! தரவில்லை என்றால் அழுகை வேறு! :(

மற்றபடி அலமாரித் துணிகளை அவன் களைப்பதும் நான் அடுக்குவதும், செய்திதாளை அவன் கிழிப்பதும் நான் குப்பைப் பொறுக்குவதும் இனிமையான அனுபவங்கள்! :)

அவனுடைய நான்கு பற்கள் தெரியும் படி அவன் சிரிக்கும் அந்த அழகான சிரிப்பில் தான் என் உயிர் இருக்கும் கூட்டின் முகவரி தெரிகிறது! :)

கடவுளும், காதலும் காதலின் நகலாய் அமையும் குழந்தையின் சிரிப்பில் தான் தெளிவாகத் தெரிகிறது!