Showing posts with label அன்னையர் தின ஸ்பெஷல் மொக்கை. Show all posts
Showing posts with label அன்னையர் தின ஸ்பெஷல் மொக்கை. Show all posts

May 8, 2009

அம்மா.... உனக்கான எனது வணக்கங்களுடன்...




அம்மா உனக்காக உன் மகளாக நான் என்ன செய்யப் போகிறேன்?

நீ என்னை எந்த நிலையில் பெற்று வளர்த்தாய் என தெரியும்... அது உடல் ரீதியாக உனக்கு எத்துணை சிரமமானதானாலும் அது பாராமல் என்னை ஆளாக்கினாய்!

முதன் முதலில் நீ எப்போது என்னை பள்ளிக்கு அழைத்து சென்றாய் என் நினைவில்லை... ஆனால் நீ பள்ளிக்கு உணவு எடுத்து வருவாய் நான் சூடாக உண்ண வேண்டுமென!

ஒவ்வொரு வருடமும் நான் வகுப்பில் முதன்மை பெற்றதால் வருடந்தோறும் பரிசு பெற்றிருக்கிறேன்! ஆனால் மகிழ்ச்சி உன்னில் கண்டேன்! நீ பெற்ற பரிசைப் போல எல்லோரிடமும் சொல்லிப் பெருமைப் பட்டாய்!

முதன் முதலில் இனி எனக்கும் புடவை வாங்க வேண்டும் என அப்பாவிடம் நீ கூறி அதுவும் ஒரு பட்டுப் புடவையாக வாங்கினாய்... உன் மகள் அணியும் முதல் புடவை பட்டாக இருக்க வேண்டுமென!

நான் முதன் முதலில் புடவை அணிந்து வெளியே சென்ற போது பயம் கலந்த பெருமிதத்தை உன்னில் கண்டேன்!

அப்பா தான் எனக்கு முதலில் பிடிக்கும் என எத்துணை முறை கூறியிருப்பேன்? ஆனால் முதன் முதலில் உன்னை நம் வீட்டைப் பிரிந்து விடுதிக்கு செல்கையில் விட்டேனே கண்ணீர்... அதில் நீ இருக்கக் கண்டேனம்மா!

தொட்டதற்கெல்லாம் உன்னை கடவுளிடம் வேண்ட சொல்லி கூறுவேனே... நீயும் எப்போதும் எனக்கான வேண்டுதல்களுடன் இருப்பாய்!

மணமுடிக்க நிச்சயித்த போதிருந்தே பம்பரம் போல் சுழன்றாயே! திருமணத்தன்று பாதபூஜை செய்கையில் உன் காலின் பருத்த வீக்கம் கண்டு அதிர்ந்தே போனேன்!

மாங்கல்யம் ஏற்கும் அந்த நொடியில் கூட சந்தோஷம் ஒரு புறம், இப்படியெல்லாம் எனக்காக உழைத்த உன்னைவிட்டு பிரிந்துசெல்கிறேனே என்ற துயரம் ஒரு புறம் என கண்ணீர் சிந்தினேனே!

இரு சிசேரியன் கண்ட நீ... உடல் வலுவே இல்லாத போதும் எங்களைப் பெற்றாய்! ஆனால் இன்று எனக்கு சிசேரியன் என்றதும் தேம்பி தேம்பி அழுதாயே! ஏனம்மா?

உன்னை விட தெம்பான நான் நீ கண்ட வலியைக் காண மாட்டேனா? ஆனால் உன் தாயன்பு.. என் வலி பொறுக்காமல் புலம்பியதே!

உன் விடாத முதுகு வலியிலும் என்னைத் தூக்கிப் பணிவிடை செய்தாயே நான் கால் பிரச்சனையில் சுருண்ட போது!

இன்றும் கூட உன் முதுகு வலியையும் பாராது என் மகனையும் சுமக்கிறாயே! சுமந்து நடந்து சோறூட்டுகிறாயே! நீ வாழ்க!

உன் பேரனுடன் கொஞ்சுகையில் என் குழந்தையாய் நீ!

உன்னுடன் சண்டையிடுகையில் உன் தோழியாய் நான்!

எனக்கு எத்துணை கதைகள் சொல்லியிருக்கிறாய்! அந்த அளவுக்கதைகளை எந்தத் தாயும் இதுவரை கூறியிருக்கமாட்டாள்!

நீ பாடும் குழந்தை பாடல்கள் யாவும் இன்னும் என் காதில் ஒலிக்கிறது!

"கை வீசம்மா கை வீசு" எனக்கு பலூன் சட்டை போட்டுவிட்டு பாடினாய்!

உனக்கான கனவுகளை எங்களோடு இணைத்துவிட்டு... எங்கள் வாழ்வில் உன் கனவினைக் காண்கிறாய்!

நீ தாயாகிய தெய்வம்... மிகவும் உடல் நிலை தளர்ந்த நீ விரைவில் ஊட்டம் பெற இறைவனை வேண்டுகிறேன்!

இந்த அன்னையர் தினத்திற்கு உன்னை வாழ்த்த வயதில்லை ஆதலின் வணங்குகிறேன்!

உனக்காக வேண்டுதல்களுடன் எப்போதும் நான்!

உனக்காக மட்டுமன்றி உலகில் அன்னையாய் பிறந்த அனைவருக்காகவுமே வேண்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! தாய்மைக்குத் தலை வணங்குகிறேன்!

May 3, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(ஆபரேஷன் தியேட்டரில்) - 2

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

இந்தப் பதிவின் தொடர்ச்சி...

நான் வலியோடு ஒரு பக்கம், வயிற்றில் குழந்தையின் விளையாட்டினை ரசித்தல் ஒரு பக்கம், குழந்தை பார்க்க எப்படி இருக்கும் குண்டாவா இல்லை நார்மலாவா மல்லிகை/ரோஜாப்பூ நிறம் எவ்வளவு முடி என்றெல்லாம் எண்ணிக்கொண்டே இரவு வரை ஒப்பேற்றிவிட்டேன்.

நான் இரவில் செமயா சாப்பிட்டேன்... பின்னே அடுத்த 3நாட்களுக்கு நோ சாப்பாடு.. :( குழந்தை இருக்கையில் பசி தெரியாது என அப்போ உணரல.. :) ஆப்பிள் ஜூஸ், தோசை, இட்லி, பால் என செமயா தள்ளினேன் உள்ளே! இரவில் மானிட்டர் வைத்து குழந்தையின் அசைவைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். :) எனக்கோ தூக்கமே வரல... கணவரை எதிர்பார்த்து டைம் பார்த்துக்கிட்டே இருந்தேன்! :)

ஸ்ஸ்ஸ்... அப்பாடா! விடிந்தாச்சு... :) இன்று முதல் இனி வருடம் தோறும் இன்னாள் தான் பொன்னாளே எந்தன் வாழ்வில் :) இன்று என் குழந்தையின் பிறந்த நாள்! ஆணோ பெண்ணோ... நாங்கள் 'ப' வரிசையில் ஆண்/பெண் பெயர்களை யோசித்துக் கொண்டிருந்தோம் தூய தமிழில் :) நான் குழந்தைக்குத் தேவையானதை தனியே எடுத்து வைத்திருந்தேன் சில நாட்களுக்கு முன்பே... அது இப்போது தயாராக இருந்தது :)

கணவருடன் வெகு நேரம் பேசிப் பேசி மதியம் குளித்து முடித்து ஃபிரெஷாக தயாராகலாம் தியேட்டருக்கு என்று எண்ணிக் கொண்டிருந்தால் மதியமே வந்து என்னை மயக்கமருந்த்து டாக்டரிடம் ஊசி போடலாமா என சோதனை செய்ய அழைத்துச் சென்றனர்.

அவரோ என் கால் வலியினால் ஊசி போட ஒத்துழைக்க முடியாது அதனால் மயக்கம் அளித்துவிடலாம் என்றார். அய்யோ என் பல நாள் கனவு என் குழந்தை பிறக்கும் போதே குரலைக் கேட்கனும்; நான் தான் முதலில் குழந்தையைப் பார்க்கனும்! அதுக்கே ஆப்படிச்சா எப்படி? வலி என்னங்க வலி என் குட்டித் தங்கத்துக்கு முன்னாடி... அதுனால டாக்டர் கிட்ட நான் தலை கால் எல்லாம் மடக்கி ஒத்துழைக்க முயற்சிக்கிறேன் தயவு செய்து என்னை தூங்க வெச்சுடாதீங்கனு கெஞ்சினேன்... அவரும் ஒத்துக்கிட்டார்.

ஆனால் பிறகு என் அறைக்கு என்னை கொண்டு செல்லவில்லை... :( நேரே லேபர் ரூம் தான்! அங்கு எனக்கு மேக்கப் நடந்தது... அதாங்க தலை பின்னி குல்லாய் போட்டு, ரொம்ப காத்தோட்டமா ஆவிங்க போடுற மாதிரி ஒரு டிரஸ்... இது இப்போ வேண்டாம் நான் தியேட்டர்கிட்ட போயி இதை போட்டுக்கிறேனு சொன்னா கேக்குறாங்களா? ம்கும்... நான் குளிக்கவே இல்ல பிளீஸ் குளிக்கவிடுங்களேனு சொன்னா ம்கும்... 4.45கு கட்டிங் டைம்(வயிற்ற அப்போதான் ஒபன் பண்ண சொல்லி அப்பா ஆர்டர்) அது தான் நல்ல நேரம் மாலைல... ஆனால் நான் 3மணிக்கே ரெடி...

இப்போ மாட்டு ஊசி, யூரின் பேக்னு பல ஆயுதங்களோட அந்த சிஸ்டர் பத்ரகாளி மாதிரி வந்து நின்னுச்சு! முதுகில ஊசி போட்டதுக்கு அப்புறம் இந்த யூரின் பேக் வைங்களேனு சொன்னேன் கேக்கலயே :( அய்யோ......... அம்மாஆஆஆஆஆஆஆஆ... இப்படி தான் அலறினேன் அதை வைக்க :( அடுத்து கையில மாட்டு ஊசி டிரிப்ஸ் போட... மறுபடியும் ரிப்பீட்டே... அய்யோ......... அம்மாஆஆஆஆஆஆஆஆ... ஸ்ஸ்ஸ்ஸ்... இப்போ அம்மா, கணவர்னு மாறி மாறி வந்து என்னை பாத்துக்கிட்டாங்க. என் காமெடி கோலத்தைப் பார்த்து என் கணவருக்கு கொஞ்சம் பீதி, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் பயம்... ஆனால் குட்டிமா வரப் போற நேரம் நெருங்குதுனு நிறைய சந்தோஷம் எங்களுக்கு.. :)

அப்பாடா ஒரு வழியா என்னைத் தூக்கி ஸ்டெட்சர்ல போட்டாச்சு... எனக்கு வலியும் தாங்க முடியல.. சிரிப்பையும் அடக்க முடியல... எல்லாரும் இப்ப என்னைய சீரியஸா லுக் விடுவாங்களே.. அதை நினைச்சு தான் சிரிப்பு.. :) அதே மாதிரி எல்லாரும் கியூல நின்னு பை சொல்லிட்டு பின்னாடியே வந்தாங்க. அதுக்குள்ள இந்த லிஃட்ல வேற செம கும்பல் :( நாங்க தான் கியூல முதல் வண்டி ஆனால் ஒரு தள்ளுவண்டியோட ஒரு சிஸ்டர் முந்த பாத்தாங்க என்னோட சிஸ்டர் சொல்லியும் கேக்காம... நானே சொல்லிட்டேன்.." என் அவசரம் புரியாம முந்தாதீங்க நாங்க பாப்பாவ பார்க்க போறோம்னு" :)

ஒரு வழியா தியேட்டர் முதல் வாயில் தாண்டி போயாச்சு... உள்ளயும் போயாச்சு.. ஆஹா! என்ன அழகு... எல்லாமே வெள்ளை... :) ஒரே சுத்தம் :)அங்க போயி மெதுவா தியேட்டர் பெட்டில் என்னைப் போட்டாங்க... அது அவ்வளவு மிருதுவா இல்ல... :( அப்புறம் சுய புராணம் கேட்டாங்க! இப்போ முதுகுல ஊசி போடுற டர்ன்...

ஒரு வழியா பாடுபட்டு திரும்பி ஊசிப் போட்டா... இந்த மம்மி படத்துல வண்டு உடம்புக்குள்ள ஊறுமே அப்படி ஒரு ஊறல் உடம்பெல்லாம்... உடம்பெல்லாம் கூசுது... :) ஊசி போட்ட இடம் மட்டும் வலிக்குது :(
அப்புறம் ஒன்னுமே தெரியல... தொட்டுப் பார்த்துக் கேட்டாங்க... தொடு உணர்ச்சி இருக்குனு சொன்னேன் கில்லி வலிக்குதானு கேட்டாங்க.." நோ பட் கில்லுறது தெரியுது லேசா"னு சொன்னேன். இடுப்பை மெதுவா தூக்கி அந்த சிசேரியன் பேட் போட்டு அது மேல படுக்க வைச்சாங்க :)

"எல்லாம் ஓகே டாக்டர் நீங்க ஓகேயா?" இது ஒரு நர்ஸ். திரும்பி பார்த்தா டாக்டர் கிரீன் கவுன்ல... அவங்க தோடு சூப்பர். நான் அதையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.. கண்ணை கட்டிவிட்டுட்டாங்க... நீங்க வயிற்றை பார்க்கக் கூடாதுனு டயலாக் வேறு! :( அப்புறம் மூச்சுவிட ஆக்ஸிஜன், ஆடோமேடிக் பல்ஸ் செக்கிங்னு என்னை டெர்ரர் மாதிரி படுக்கவெச்சாச்சு!
ஆபரேஷன் அப்போ பாதியில எழுந்து நானே பண்றேனு சொல்லுறதுக்கு இது என்ன சமையலா? ஆனாலும் கை இரண்டையும் கட்டிபோட்டாங்க ஒரு கிளிப் மாதிரி இருந்தது உணர்வுக்கு!

ஆஹா! பதிவு ரொம்ம்ம்ப பெருசா ஆயிடுச்சே... ஓகே குட்டிமாவ நாளைக்குப் பார்க்கலாம்! :):)

May 1, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

இந்த உலகத்தில் பெண் பிறவி எடுத்துவிட்டாலே அப்பிறவி முழுமையடைவது தாய்மையில் தான்!
தாய்மை என்பது ஒரு உணர்வு. அது வார்த்தைகளில் முழுமையாக அடங்காது. மனதிற்குள் பொங்கும் பாச வெள்ளம், உயிர் துடிப்பு, பிறவிப் பயன் இப்படி எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத ஒரு உணர்வு!

அம்மா நான் தாயான போதுதான் உன்னை அதிகம் உணர்ந்தேன்!

எந்த தாய்க்குமே தான் தாயான அந்த நிமிடங்களை வாழ்க்கையில மறக்கவே முடியாது. வாழ்க்கையில அப்படி ஒரு வலியை வேறு எதிலும் அனுபவிக்க முடியாது; அப்படி ஒரு மகிழ்ச்சியையும் வேறு எதிலும் அனுபவிக்க முடியாது! தாய்மை அடையுற அந்த நிமிடம் ஒரு ஆழ்நிலை தியானம் மாதிரி பரவசம் தரும்.

என்னுடைய அந்த பரவச நிலையை தான் நான் உங்களோட பகிர்ந்துக்கவும் அதை இங்கு பதிவு செய்யவும் போறேன்.

ஜூலை மாதம் 8ம் தேதி காலை எழுந்திருக்கும் போதே காலை கீழே ஊன முடியாத அளவுக்கு காலும் இடுப்பும் பயங்கர வலி. இது என்னுடைய 7வது மாதத்திலிருந்தே வருவதானாலும் அன்னைக்கு கொஞ்சம் கடுமையாவே இருந்தது. ஆனாலும் அந்த வலியோட சமாளிச்சு 13ம் தேதி வரை ஓட்டிட்டேன். ஆனால் 13ம் தேதி இரவு என்னால மறக்கவே முடியாது. அன்னைக்கு தூங்கபோகலாம்னு கட்டிலுக்கு போனேன் ஆனால் என்னால் கட்டிலில் சாயக் கூட முடியவில்லை. என்ன செய்தா எப்படி அட்ஜஸ்ட் பண்ணினா படுக்கலாம்னு எவ்வளவோ முயன்றேன். வயிறு வேறு மிகப் பெரிதா இருந்தது. நான் சிரமப் படுவதைப் பார்த்துட்டு என் அப்பாவும் அம்மாவும் என்னை கைத்தாங்காலாகப் பிடித்துப் படுக்கவைத்தனர்.

ஆனால் என்னால் வலியைப் பொறுத்துக்கவே முடியலை. என் அம்மாவிற்கும் நாங்கள் இருவரும் சிசேரியன் என்பதால் இந்த வலி பற்றி அவருக்கு தெரியவில்லை. நான் படித்தவரை எனக்கு வலி வந்த இடம் மட்டும் பிரசவ வலி வரும் இடங்களில் ஒன்றாக இருக்கவில்லை. என் அம்மா உடனே என் அத்தைக்கு போன் பண்ணி இது பற்றி கேட்டா அவங்களுக்கும் இது புரியல. ஒரு வழியா ஆஸ்பிடல் போலாம்னு கார்ல ஏறப்போனா என்னால தான் ஒரு அடி கூட வைக்கமுடியலையே. கடவுளே குழந்தைக்காகவாவது நான் கீழே விழாமல் கார்ல ஏறிடனும்னு வேண்டிக்கிட்டே 30னிமிடங்கள் போராடி 5அடி எடுத்து வைத்து கார் கிட்ட போயி எப்படியோ பாடுபட்டு என்னை அப்பா, அம்மா, தங்கை, சித்தி எல்லாரும் காருக்குள் உட்கார வைச்சாங்க. அந்த நேரத்துல என் கணவரை ரொம்ப மிஸ் பண்ணினேன்.
நான் வளைகாப்பு முடிந்து திருச்சி வந்திருந்தேன். அவங்க சென்னைல.

ஆஸ்பிடல் போனப்போ நள்ளிரவு 12ஐ தாண்டியாச்சு. அங்க லேபர் வார்டுல ஒரே டெர்ரர்... எல்லா சிஸ்டர்களும் இரத்த கறை படிந்த கவுன் மாட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்காங்க; உள் அறைல ஒரு பெண் ஐயோ அம்மானு அலறும் குரல் வேறு... அடிவயிற்றப் போட்டுப் பிசையிது; பயம் கவ்விக்கிச்சு :(
வலியோட துவக்கத்தையே தாங்கிக்க முடியலையே கிளைமேக்ஸை எப்படி தாங்கிக்கிறதுனு என் பாப்பாகிட்ட பேச ஆரம்பிச்சுட்டேன்... "பாப்பா எப்படியாவது சீக்கிரம் வந்துடுடா என்னால ரொம்ப நேரம் வலி பொறுக்க முடியாது உன்னைப் பார்த்துட்டேன அப்புறம் எந்த வலினாலும் தாங்கிக்குவேன்" அப்படினு பேசிக்கிட்டு இருந்தேன். இப்பவும் கணவர் நியாபகம் வேறு. நல்ல வேளை அவங்க இங்க இல்லைனு. பின்ன, பயந்துருப்பாங்கல.

அதுக்குள்ள உள்ள இருந்த பெண் " ஐயோ டாக்டர் இப்படி இழுத்து இழுத்து குத்துறீங்களேனு " கத்தி இன்னும் டெர்ரர் ஆக்குச்சு :( ஒரு வழியா குட்டிபாப்பா வந்துருச்சு... எனக்கு இல்லைங்க அவங்களுக்கு :)

அப்புறம் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து என்னை பரிசோதனை பண்ணிட்டு குழந்தை வர இன்னும் நிறைய டைம் இருக்கே தலை இப்போ செட் ஆகிருச்சு பட் குழந்தை இன்னும் கொஞ்ச நாள் உள்ளயே இருக்கட்டும்; உங்க வலி என்னனு நாளைக்கு ஆர்த்தோகிட்ட கேப்போம்" அப்படினு சொல்லிட்டு போயிட்டாங்க. :( எனக்கோ ஆகா இப்போ பாப்பாவ பார்க்க முடியாதா என்றாகிவிட்டது.

ஒரு வழியா ஆர்த்தோ வந்து என்னை பரிசோதனை பண்ணிட்டு "இது ஆர்த்தோ ப்ராப்ளம் இல்ல; இவங்களுக்கு கொஞ்சம் கிரிடிகலா லேபர் பெயின் வந்துருக்கு; இது கொஞ்சம் ரேரா சிலருக்கு தான் இப்படி வரும்... பெயின் கில்லர் கொடுத்து வலிய குறைக்கலாம் ஆனால் அது குழந்தைக்கு நல்லதல்ல அதுனால நீங்க முடிவு பண்ணிக்கோங்க" அப்படினு பிரசவ டாக்டர்கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு.

ஒரு ஸ்கேன் எடுத்து குழந்தை வளர்ச்சி முழுமையாகிடுச்சானு பார்த்துட்டு டெலிவரி பத்தி முடிவு பண்ணலாம்னு சொன்னாங்க. அதோட விட்டா பரவாலங்க; ஆனால் இந்த வலி எதுனாலனு பார்க்கனும்னு ஒரு எக்ஸ்-ரே வேறு எடுக்க சொன்னாங்க.

நானோ ஸ்கேன் ரூம் போறப்போ ஜாலியா போனேன். எல்லாம் ஸ்டெட்சர்ல வைத்துதான் கொண்டு போனாங்க.... ஆனாலும் குட்டிமாவ பார்க்கபோறோம் ஸ்கேன்லனு எனக்கு ஒரே கொண்டாட்டம். ஸ்கேன் ரிப்போர்ட்ல குட்டிமாவுக்கு தண்ணீர் போதது அதுனால குட்டிமா சீக்கிரம் உலகத்தைப் பார்த்தாகனும்னு வந்துருச்சு. அடுத்து இந்த எக்ஸ்-ரே... ஐயோ நான் அழுத அழுகை... எனக்கு என்னனாலும் பரவால நடக்கமுடியாமலே போனாலும் பரவால தயவுசெய்து இந்த எக்ஸ்-ரே மட்டும் வேண்டாம் அது என் பாப்பாவுக்கு பிரச்சனை ஆகிடக் கூடாதுனு அழுதுகிட்டே போனேன்... ஆனால் டாக்டர் 9மாதத்தில் இது குழந்தையை பாதிக்காது பயப்படவேண்டாம்னு சொன்னாலும் பெத்துக்க போற மனசு கேக்குதா. :(

ஒரு வழியா அதையும் முடிச்சு பார்த்தா இது லேபர் பெயின் தான் இடுப்பு எலும்புகள் பிளவுபட்டு இருக்கு... காலோட சேரும் இடத்துல :( இதுக்கு சிகிச்சையும் இல்லை... தானாகவே சேர்ந்தா தான் உண்டு... சில பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் அது தாய்மைக்கு நல்லதல்லவாம். ஆர்த்தோ வந்து இவுங்களால நார்மல் டெலிவெரிக்கு சப்போர்ட் பண்ண முடியாது அப்படியே பண்ணினாலும் அதுக்குப் பிறகு நடக்கவே முடியாதுனு சொல்லிட்டாரு :( அப்புறம் என்ன சிசேரியன் தான். முதலில் வயிற்றைத் தடவிப் பார்த்து அழுதேன். அப்புறம் ஓகே ஆகிட்டேன். பின்ன பாப்பா வந்துடும்ல; அந்த சந்தோஷம் தான். :) :) :)

அப்பாடா இன்னைக்கு இந்த மொக்கை போதும்... நாளைக்கு நோ மொக்கை ஏனா பொழில்குட்டி வெளிய வந்துடுவாரு :) :) :)

ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதா??? நாளைக்கு ஃபிரெஷ் ஆகிடும் :)