January 25, 2009

குழந்தைகளை கவனிக்க இந்தியாவில் யாருமே இல்லையா?

முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டு பொருட்கள் கிடைத்தன. மரப்பொம்மைகள் வாயில் வைத்தால் தீங்கு விளைவிக்காது. கூர்நுனிகள் இல்லாததால் குழந்தைகளை காயப்படுத்தாது. ஆனால் அந்த பட்டியல் மிகவும் சிறியது தான். நடைவண்டி, மரப்பாச்சி பொம்மைகள், சொப்பு போன்றவை தான் குழந்தைகளுக்கு விளையாட கிடைத்திருக்கும்.

மரத்திற்கும் காகிதத்திற்கும் மாற்றாக வந்த ப்ளாஸ்டிக் குழந்தைகளுக்கான பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் யாவும் ப்ளாஸ்டிக்கில் வர ஆரம்பித்தன. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு?

இப்போது பெரும்பாலான பொம்மைகள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. 3 வயதுக்கு மேல் என்று அட்டைப்பெட்டியில் குறிப்பு இருந்தாலும், எல்லா வயது குழந்தைகளும் தான் அதை வைத்து விளையாடுகின்றனர். மிகச் சிறிய குழந்தைகள் எதையும் வாயில் வைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் இவ்வகை பொம்மைகள் அவர்களுக்கு கட்டாயம் தீங்கு விளைவிக்கும். அதில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் கெடு விளைவிக்கலாம் என்பது ஒரு புறம், அதில் இருக்கும் சின்ன சின்ன பாகங்களும் குழந்தைகளுக்கு கட்டாயம் கேடு விளைவிக்கலாம்.

பொழிலனுக்கு இப்போது எல்லாவற்றையும் வாயில் வைக்க வேண்டும். அவன் சட்டையில் தொங்கும் நாடா, அவன் ஊஞ்சலின் கயிறு, ரிமோட், பொம்மைகள், என் கை என எதுவும் விதிவிலக்கல்ல. சரி, அவன் கடித்து விளையாட ஏதேனும் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைக்கு சென்றேன்

*** முதலில் கிடைத்தது 'தேன் நிப்பிள்'. வாயில் வைக்கும் ரப்பர். இது மிகச்சிறிதாக இருப்பதால் ஏனோ அவனை கவரவில்லை

*** அடுத்து Johnson & Johnson Baby Kit உடன் வரும் Teether Set. இவை கடிப்பதற்கு ஏதுவாகவும், நச்சுத்தன்மை இல்லாதவையாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

*** அப்புறம் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட Water Teethers. ஏதோ ஒரு திரவம் அடைக்கப்பட்ட காய்கறி/பழம் வகைகளை போல வடிவமைக்கப்பட்ட பொம்மைகள். அவை மிருதுவாகவும் கடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் போல. ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம். வாங்கவில்லை.

*** வேறு Brand தயாரிப்புகள் இருக்கிறதா என்றால் FunSkool தயாரிப்புகளை காட்டினார்கள். FunSkool நிறுவணம் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட பொம்மைகளை தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திற்கேற்ப வெவ்வேறு பொம்மைகள். விளையாட்டு வழி கல்விக்கு பயன்படும் அழகழகான பொம்மைகள். இந்திய பொம்மைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், குழந்தைகளுக்குக்கான பொம்மைகள் என்றால் கட்டாயம் எனது வாக்கு FunSkool நிறுவணத்திற்கு தான்.

*** FunSkool பொம்மைகள் அருமையானவை என்றாலும் அவை எல்லோராலும் வாங்கப்படுவதில்லை. ஏனென்றால் விலை அதிகம். கடைக்காரரிடம் கேட்டபோதும் அவர் இதே காரணத்தை தான் சொன்னார். நான் சீனப்பொம்மைகளில் இருக்கும் நச்சுத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அதெல்லாம் சொன்னாலும் இந்த பொம்மைகள் விற்பனையாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அந்த செய்திகள் எல்லாம் சீன வியாபாரத்தை குறைப்பதற்காக சொல்லப்படுவது என்றும் சொன்னார்.

***விலை மலிவு என்பதால் சீன பொம்மைகளை வாங்கிறோம். ஆனால் அந்த நச்சுத்தன்மை குறித்த கருத்துகள் உண்மையா இல்லையா என்று ஏன் ஆராய்வதில்லை. குறைந்தபட்சம் FunSkool பொம்மைகளில் இது Non-Toxic என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சீன பொம்மைகளில் அது கூட இல்லையே.


ஒரு வருத்தம், எத்தனை கடைகளில் தேடினாலும் குழந்தைகளுக்கான பொருட்களிலோ, பொம்மைகளிலோ இந்திய தயாரிப்புகள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. (அல்லது எனக்கு தெரியவில்லை). Wipro BabySoft பால் குடிக்கும் சீசாக்கள், டயாப்பர்கள் தயாரிக்கிறார்கள். ஆனால் அவை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. மேலும் மற்றவைகளை விட சற்று விலையும் அதிகம்.

மற்றபடி குழந்தைகளுக்கான தயாரிப்புகளை தரும் இந்திய நிறுவணம் ஏதேனும் உள்ளதா??? தெரிந்தால் சொல்லுங்களேன்

January 14, 2009

பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!

இல்லத்தில், ஊரில், நாட்டில் பொங்கலோடு மகிழ்ச்சியும், அன்பும், செல்வமும் பெருக அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
பால் கொடுத்து மக்களைக் காத்து நிற்கும் தாயாம் பசுக்கள் மற்றும் உழுதுண்டு வாழ வழி செய்யும் காளைகளுக்கு நன்றி கூறி வணங்குவோம்!
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்!

January 3, 2009

ஜானி ஜானி யெஸ் பாப்பாவும்... சாப்பாட்டு ராமிகளும் :)

நேற்று பொழிலனின் பாப்பாப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடைப் பார்த்துக்கொண்டிருந்த போது இந்த "ஜானி ஜானி யெஸ் பாப்பா" பாடல் என் கல்லூரி கலாட்டாக்களை நினைவூட்டியது...... அதனால் தான் உடனடியாக மொக்கையைத் துவங்கிவிட்டேன் :)


நான் கணிப்பொறி அறிவியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை "ஜாவா" விரிவுரையாளர் என்றும் இல்லாத அதிசயமாக வகுப்பிற்கு வரவில்லை.... அவ்வளவுதான் எங்கள் கூட்டணி மக்கள் அனைவரும் சேட்டைக் காட்டத் துவங்கிவிட்டோம்!


கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் எங்கள் கூட்டணியைச் சேர்ந்த
"சேட்டை சுந்தரி" ( சுந்தரியின் அடங்காத சேட்டை காரணமாக இப்பெயர்)
தனது அழகிய கர கர குரலில் பாட ஆரம்பித்தாள்.... ஏதேதோ பாடி கடைசியில் இந்த ஜானி ஜானி பாட்டைப் பாடியதும் நாங்கள் எல்லோரும் குதூகலமாகிவிட்டோம்! இருக்காதா பின்னே? குழந்தைகள் தானே!

பின் எல்லாரும் சேர்ந்து அப்பாடலைப் பாட அந்நேரம் பார்த்து விரிவுரையாளர் உள்ளே நுழைய அவ்வளவு தான்.... போச்சுடா நல்லா வாங்கப் போகிறோம் என்று அனைவரும் பம்ம அவரோ சிரிக்கிறார் :) பதிலுக்கு நாங்களும் அசடு வழிய... அவரோ பாட்டு சூப்பர் என்ன ஆச்சு எல்லாருக்கும் ரைம்ஸ் பாட்டெல்லாம் ஒலிக்குது என்று கூறியவாரே அனைவருக்கும் "ஜாவா"-லிருந்து ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டு இதற்கு சரியான பதிலை தன்னிடம் கூறுபவர் மட்டுமே உட்கார வேண்டும் மற்ற அனைவரும் நிற்க வேண்டுமெனக் கூறிவிட்டார்! அப்புறம் என்ன... அந்தப் பாட வேளை முழுவதும் நின்று கொண்டே பிழைப்பு ஓடியது! :)


இப்படிதான் முதலாமாண்டில் ஒரு நாள் கணிதத்துறைப் பாட வேளையில் எங்கள் தோழி ஒருத்தி எங்கள் அனைவருக்குமாய் சேர்த்து எடுத்து வந்த புலி சாதக் கட்டைக் காட்ட எங்களுக்கு நாவில் எச்சில் ஊறிவிட்டது!

உடனே பசியும் வர என்ன செய்வதென்று மாப்பிள்ளை பென்ச் அணியினர் கலந்தாலோசித்தனர் :) பின் எல்லாரும் அடுத்தப் பாட வேளையில் அதை உண்பதென சபதம் எடுத்துக் கொண்டோம்!


அடுத்த வகுப்பிற்கு "மேக்கப் பஞ்சு" தான் வரும் சமாளித்துவிடலாம் என்று தைரியம் தான்! "மேக்கப் பஞ்சு" ஒரு கணிதத்துறைப் பேராசிரியர்.... வயதானவர்..... ஆனால் தன்னை அலங்கரித்திற்கும் விதமோ வயதுப் பெண்கள் தோற்றார்கள்... இதில் காதில் பஞ்சு வேறு! :) இப்போது புரிந்திருக்குமே பெயர்க் காரணம் :)


எடுத்த சபதம் முடிப்போம் நாங்கள் என்று அனைவரும் பேசி வைத்தத் திட்டத்தின் படி பஞ்சு வகுப்பைத் தொடங்க நாங்கள் அனைவரும் கவனமாக வகுப்பைக் கவனித்துக் கொண்டே உண்ணத் தயாரானோம் :) சில மாணவிகள் பென்ச் அடியில் உட்கார்ந்து கொண்டு எங்களுக்கு சோற்று உருண்டைகளைத் தர நாங்கள் மேலே உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம்! சற்று நேரத்தில் உணவின் மணம் வீச... அவ்வளவு தான்... "பஞ்சு" காதில் தானே பஞ்சு.... மூக்கு மோப்பம் பிடித்துவிட்டது!

அவர் "யாரது வகுப்பிலேயே உண்பது" என்று கேட்க நாங்கள் உடனே அவசரமாக வாயை மூட கீழே இருந்தவர்கள் பொட்டலங்களை மூடிவிட்டு நன்கு ஒளிந்து கொண்டனர்! ஆனால் பஞ்சு விடவில்லை.... மோப்பம் பிடித்து எங்கள் இடத்திற்கு வந்துவிட்டார்.... உடனே நாங்கள் அனைவரும் எச்சில் கையை மறைத்துக் கொண்டே எழுந்து நின்றோம்.... :) அவர் உடனே ஆரம்பித்துவிட்டார்.... வர வர நாங்கள் சேட்டை அதிகமாக செய்கிறோம் ஆனால் வகுப்பிலேயே நன்கு படிக்கும் மாணவிகளும் நாங்கள் தான் அதனால் எங்களை ஒன்றும் திட்டுவதற்கில்லை என்று புலம்பிக் கொண்டே எங்களை கை கழுவ அனுப்பி வைத்தார்! :) எப்படியோ எடுத்த சபதம் முடித்த வீரர் குலப் பெண்கள் நாங்கள்!

ஆனால் நான் இந்த சேட்டையை சென்னையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது முதுநிலை இறுதியாண்டில் கூட விடவில்லை.... அங்கும் மேசைக்கடியில் ரொட்டி, பழங்கள் எல்லாம் விடுதியில் இருந்து எடுத்து வந்து காலையில் சாப்பிடாமல் வீட்டிலிருந்து அவசரமாக வரும் மாணவ மாணவிகளுக்கு தருவேன் :)

நான் எனது கல்லூரி வளாகத்திலேயே பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் கல்லூரி செமஸ்டர் விடுமுறை முடிந்து அனைவரும் கல்லூரிக்கு வரும் இறுதியாண்டின் முதல் நாளன்றே இதே முறையில் தான் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினேன் :)

இவ்வளவு ஏன்? எங்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவின் போது என் வயிற்றில் பொழிலன் :) நான் முதல் மாணவியாக தங்கப் பதக்கம் வாங்குவதால் காலை சீக்கிரமாகவே விழா ஒத்திகைக்குச் செல்ல வேண்டும்... அதனால் சரியாக உண்ணவில்லை :( அங்கு சென்று பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பிரித்து வாயில் அவ்வப்போது தள்ளிக் கொண்டே இருந்தேன்.... பின்னே பாப்பா பசியில் என்னை உதைக்கிறதல்லவா?
அப்போது திடீரென்று ஒத்திகையில் என் முறை வர கையில் இருந்த பாக்கெட்டை வைக்கத் தவறி எடுத்துக் கொண்டு மேடைக்கருகில் செல்ல உடனே துப்பட்டாவில் சுற்றி கையில் பிடித்துக் கொண்டே சென்றேன் :)

இப்படியாக எங்கள் சேட்டை அலுவலகத்திலும் தொடர்ந்தது!
நண்பர் ஒருவர் " அக்கா திருநெல்வேலி அல்வா சாப்பிட மாடிக்குப் போகலாம்" என்றதும் நான் அதெல்லாம் வேண்டாம் கொண்டா இப்படி என்று வாங்கி அனைவரையும் அலுவலகக் கேமரா பார்வைக்கு எட்டாத இடத்தில் அமரச் சொல்லி எங்கள் குழுவிற்கும் எனக்கும் பகிர்ந்து எல்லாரும் அவ்விடத்திலேயே சாப்பிட்டோம் :)

இப்படி இன்னும் நிறைய சேட்டைகள்! எல்லாவற்றையும் எழுதினால் அவ்வளவுதான்! இப்பவே படு மொக்கையாகி விட்டது :) அதனால் "போதும் அடங்கு ஆகாயநதி" என்று நீங்கள் கூறும் முன்பாகவே முடிக்கிறேன் :)