Showing posts with label குழந்தைகளின் உலகம். Show all posts
Showing posts with label குழந்தைகளின் உலகம். Show all posts

July 2, 2013

ஐந்தாம் அகவையில் பொழிலன்!!


மன்னிக்கவும் மக்களே.... காலம் கடந்து ஒரு பதிவு!

குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள்!  இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய வளர்ச்சி சற்று நிதானித்துப் பார்த்தால் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது!


எத்தனை எத்தனை கெள்விகள், எத்தனை விதமான கற்பனைகள், உருவகங்கள், திறமைகள், பழக்கவழக்கங்க்கள்.. அம்மம்மா!!

ஆனால் இந்த கவனம் ஈர்க்க பொது இடங்களில் அவன் செய்யும் நாடகங்கள் " முடியலடா சாமி" !

பெண் பிள்ளைகள் தான் இன்றைக்கு அம்மாவுக்கு உதவுவார்கள் என்றில்லை... பொழிலன் எனக்கு சமையல் வேலைக்கு அவன் பிஞ்சுக் கரங்களால் முடிந்தவரை உதவுவான்... அதுவும் நான் கேட்காமலே...

அழகாக படம் வரையும் திறன் உள்ள அவனுக்கு நானே இப்பொழுது டிராயிங் டீச்சர்!!! ( அவ்வ்வ்வ் அப்டின்னு என்னங்க சத்தம்?)

ஆனா அவன் பாட்டும் கத்துக்க விரும்புறான்!! அதுக்காக நானே பாட்டு டீச்சர்லாம் ஆக முடியாது... எனக்கு கொஞ்சம் சமுதாய அக்கறை உண்டு... அதுனால இப்போதைக்கு நடனம் மற்றும் ஸ்கேடிங் மட்டும், பாட்டுலாம் விஜயதசமிக்கு பார்த்துக்கலாம்னு இருக்கோம்!

வாயாடும் பொழிலனின் கேள்விகள்  சில ....


அம்மா நீ சாமி ஒண்ணுதான்னு சொல்ற பின்ன ஏன் விரிய சாமி படங்கள் வெச்சிருக்க... அப்போ அந்த ஒரு சாமிக்கு அம்மா சாமி அப்பா சாமிலாம் வேண்டாமா?

ஸ்கூல்ல மேம் எதுக்கு தமிழ் இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க? அப்போ மேம்க்கு இங்கலீஷ் தெரியாதா?

அம்மா அந்த அத்தை டம்மிக்குள்ள பேபி இருக்குனு சொன்னியீ ஆனா அவங்க டம்மி ஏன் குட்டியா இருக்கு? 
 
யோகா கிளாஸ்ல தொப்பை குறைய யோகா செய்ய வந்தவங்கள பார்த்து அம்மா இந்த அத்தைக்கும் பேபி இருக்கா டம்மிக்குள்ள   அவங்க  டம்மி பெருசா  இருக்கே?

அம்மா ஈ கொசுலாம் எப்படி குளிக்கும்? அதற்கு நான் அவையெல்லாம் குளிக்காது அதுனால தான் கிருமிகளைப் பரப்புது!
உடனே அவன் அப்போ கிருமிஎல்லாம்  குளிக்காதா?


அவ்வ்வ்வ்......

February 3, 2009

குழந்தை வளர்ப்பும்... பெற்றோர் பொறுப்பும்...!

இந்த பதிவினை குழந்தைகளின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் செயல்கள் பற்றிய பதிவாகவும்,
அவர்கள் எதிர்காலம் பற்றிய பதிவாகவும் நினைத்துக் கொண்டு நான் துவங்குகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரே பையன், ஒரே பெண் என்று செல்லம் அதிகமாகக் கொடுத்தே வளர்க்கிறார்கள். செல்லம் கொடுப்பது தவறல்ல; ஆனால் அதோடு பொறுப்பு, தன்னிச்சையாக தன் காரியங்களை செய்து கொள்ளுதல், பிறருக்குக் கேட்காமலேயே சென்று உதவுதல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுத்தருவதோடு சிறு சிறு வீட்டு வேலை முதல் சமையல், துணி துவத்தல் என அனைத்து வேலைகளையும் செய்யப் பழக்குதல் அவசியம்.

இந்த காலத்தில் ஆண்(அ)பெண் எந்த குழந்தையானாலும் எல்லா வேலைகளையும் செய்யப் பழகியிருத்தல் மிகவும் அவசியம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

நான் என் வயதையொத்த, என்னுடன் பழகிய, என்னுடன் படித்த என்று பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இன்னமும் அம்மா தான் தலை வாரி விட்டு உணவு ஊட்டிவிட்டு என அனைத்துமே அம்மா தான் செய்ய வேண்டும். தன் பெண்ணிற்கு பொறுப்பினை ஊட்டாமல் உணவு ஊட்டும் தாய் அங்கு அவரை அறியாமலேயே அவர் பெண்ணின் எதிர்காலத்தினை பாதிக்கும்படி செய்கிறார்.

இவ்வளவு ஏன் திருமணம் ஆன பிறகும் கூட பல பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்!
பெண்கள் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தினையே தாங்கி நிற்கும் தூண்கள்; குடும்பத்தினர் அனவருக்கும் தாயாக இருந்து தேவையானதை செய்யும் மிகப் பெரிய பொறுப்பு பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உள்ளது. ஆனால் தன் காரியங்களை செய்யவே தாயை எதிர்பார்க்கும் பெண் எப்படி வெளி உலகையும் சமாளித்து ஒரு குடும்பத்தினை தாங்கி நிற்கும் தூணாவள்.


ஆணுக்கும் இதே தான். தன் காரியங்களை தானே செய்து கொள்ள பெற்றோர் குழந்தை பருவம் முதலே பழக்கி விட வேண்டும். குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அம்மாவை எதிர்பார்க்காமல் பள்ளி செல்லும் பருவம் முதல் சிறிது சிறிதாக தன்னிச்சையாக தன் வேலைகளை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து செல்ல மகன் என்று ஷூ பாலிஷ் செய்வது, டை அணிவிப்பதில் இருந்து தலை வாரி ஷூ மாட்டிவிடுவது வரை அம்மாவே எல்லாம் செய்தால் அந்த மகனுக்கு பொறுப்பு என்பது வராமலே போய்விடும்.

குழந்தைகளை இளம் வயது முதலே பொறுப்புள்ளவர்களாக இருக்கப் பழக்கிவிடுவது பெற்றோர்களின் முதற்கடமை. இன்றும் 2வயது மகனுக்கு வெளியில் வைத்து இடுப்பில் தூக்கிக் கொண்டே சாப்பாடு ஊட்டும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு.


குழந்தைப் பருவத்திலேயே தன் விளையாட்டு சாமான்களைப் பொறுப்புடன் அதன் இடத்தில் அடுக்கி வைப்பது, தன் துணிகளை தானே மடிக்கக் கற்றுத் தருவது, முக்கியமாக 1வயது முதலே குழந்தைகள் தானே தன் கையால் உணவு உண்ணப் பழக்கிவிடுவது, தானே குளிப்பது, உடையணிந்து கொள்வது முதல் , ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பாக பழகுதல், மரியாதை என அனைத்தையும் சிறு வயதிலேயே பழக்கிவிடுவது நல்லது. வீட்டுப்பாடங்கள் மற்றும் வரைபடங்கள் கூட அவர்கள் தன்னிச்சையாக செய்ய வேண்டும்.

பேரண்ஸ் கிளப் வலைப்பூவில் எப்படி குழந்தைகளை மாண்டிசோரி கல்வி மூலம் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று எண்ணுகிறேன் :)

அதுமட்டுமல்லாமல் நடைமுறையிலும் இதனை சந்தனமுல்லை+பப்பு கூட்டணி நிகழ்த்திக் காட்டுகின்றனர்.


" ஓடி விளையாடு பாப்பா!...." என்னும் பாடல் வரிகள் சிறந்த குழந்தைகளை உருவாக்க உருவானவை என்றே எண்ணுகிறேன்!
குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டார்களானால் சிறந்த வீடும், ஊரும், நாடும் உருவாகும்.:)

January 25, 2009

குழந்தைகளை கவனிக்க இந்தியாவில் யாருமே இல்லையா?

முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டு பொருட்கள் கிடைத்தன. மரப்பொம்மைகள் வாயில் வைத்தால் தீங்கு விளைவிக்காது. கூர்நுனிகள் இல்லாததால் குழந்தைகளை காயப்படுத்தாது. ஆனால் அந்த பட்டியல் மிகவும் சிறியது தான். நடைவண்டி, மரப்பாச்சி பொம்மைகள், சொப்பு போன்றவை தான் குழந்தைகளுக்கு விளையாட கிடைத்திருக்கும்.

மரத்திற்கும் காகிதத்திற்கும் மாற்றாக வந்த ப்ளாஸ்டிக் குழந்தைகளுக்கான பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் யாவும் ப்ளாஸ்டிக்கில் வர ஆரம்பித்தன. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு?

இப்போது பெரும்பாலான பொம்மைகள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. 3 வயதுக்கு மேல் என்று அட்டைப்பெட்டியில் குறிப்பு இருந்தாலும், எல்லா வயது குழந்தைகளும் தான் அதை வைத்து விளையாடுகின்றனர். மிகச் சிறிய குழந்தைகள் எதையும் வாயில் வைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் இவ்வகை பொம்மைகள் அவர்களுக்கு கட்டாயம் தீங்கு விளைவிக்கும். அதில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் கெடு விளைவிக்கலாம் என்பது ஒரு புறம், அதில் இருக்கும் சின்ன சின்ன பாகங்களும் குழந்தைகளுக்கு கட்டாயம் கேடு விளைவிக்கலாம்.

பொழிலனுக்கு இப்போது எல்லாவற்றையும் வாயில் வைக்க வேண்டும். அவன் சட்டையில் தொங்கும் நாடா, அவன் ஊஞ்சலின் கயிறு, ரிமோட், பொம்மைகள், என் கை என எதுவும் விதிவிலக்கல்ல. சரி, அவன் கடித்து விளையாட ஏதேனும் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைக்கு சென்றேன்

*** முதலில் கிடைத்தது 'தேன் நிப்பிள்'. வாயில் வைக்கும் ரப்பர். இது மிகச்சிறிதாக இருப்பதால் ஏனோ அவனை கவரவில்லை

*** அடுத்து Johnson & Johnson Baby Kit உடன் வரும் Teether Set. இவை கடிப்பதற்கு ஏதுவாகவும், நச்சுத்தன்மை இல்லாதவையாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

*** அப்புறம் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட Water Teethers. ஏதோ ஒரு திரவம் அடைக்கப்பட்ட காய்கறி/பழம் வகைகளை போல வடிவமைக்கப்பட்ட பொம்மைகள். அவை மிருதுவாகவும் கடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் போல. ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம். வாங்கவில்லை.

*** வேறு Brand தயாரிப்புகள் இருக்கிறதா என்றால் FunSkool தயாரிப்புகளை காட்டினார்கள். FunSkool நிறுவணம் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட பொம்மைகளை தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திற்கேற்ப வெவ்வேறு பொம்மைகள். விளையாட்டு வழி கல்விக்கு பயன்படும் அழகழகான பொம்மைகள். இந்திய பொம்மைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், குழந்தைகளுக்குக்கான பொம்மைகள் என்றால் கட்டாயம் எனது வாக்கு FunSkool நிறுவணத்திற்கு தான்.

*** FunSkool பொம்மைகள் அருமையானவை என்றாலும் அவை எல்லோராலும் வாங்கப்படுவதில்லை. ஏனென்றால் விலை அதிகம். கடைக்காரரிடம் கேட்டபோதும் அவர் இதே காரணத்தை தான் சொன்னார். நான் சீனப்பொம்மைகளில் இருக்கும் நச்சுத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அதெல்லாம் சொன்னாலும் இந்த பொம்மைகள் விற்பனையாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அந்த செய்திகள் எல்லாம் சீன வியாபாரத்தை குறைப்பதற்காக சொல்லப்படுவது என்றும் சொன்னார்.

***விலை மலிவு என்பதால் சீன பொம்மைகளை வாங்கிறோம். ஆனால் அந்த நச்சுத்தன்மை குறித்த கருத்துகள் உண்மையா இல்லையா என்று ஏன் ஆராய்வதில்லை. குறைந்தபட்சம் FunSkool பொம்மைகளில் இது Non-Toxic என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சீன பொம்மைகளில் அது கூட இல்லையே.


ஒரு வருத்தம், எத்தனை கடைகளில் தேடினாலும் குழந்தைகளுக்கான பொருட்களிலோ, பொம்மைகளிலோ இந்திய தயாரிப்புகள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. (அல்லது எனக்கு தெரியவில்லை). Wipro BabySoft பால் குடிக்கும் சீசாக்கள், டயாப்பர்கள் தயாரிக்கிறார்கள். ஆனால் அவை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. மேலும் மற்றவைகளை விட சற்று விலையும் அதிகம்.

மற்றபடி குழந்தைகளுக்கான தயாரிப்புகளை தரும் இந்திய நிறுவணம் ஏதேனும் உள்ளதா??? தெரிந்தால் சொல்லுங்களேன்