February 10, 2009

அழகு பொழிலனும் அழகு சேட்டையும்

பொழில் குட்டியின் சேட்டை வர வர அதிகமாகிக் கொண்டே வருகிறது!

வீட்டில் உள்ள எல்லா பொருளும் அவருடைய விளையாட்டு சாமான்கள் தான் :)
அதிலும் நாங்கள் உபயோகப் படுத்தும் மொபைல், ரிமோட், தண்ணீர் பாட்டில், டம்ளர், தட்டு இந்த பொருட்களின் மேல் தான் அதிக கவனம்!

அந்த ரிமோட் நம் ஐயா கையில் படும் பாடு இருக்கிறதே! அவராகவே எதாவது பட்டனை அழுத்தி விளைவு டிவியில் தெரியும் :) இப்போது ரிமோட் உடைந்தே விட்டது. அவருடைய மேளம் அடிக்கும் யானை பொம்மையையும் உடைத்தாகிவிட்டது.


அவனுடைய பாய் தான் அவனுக்கு சரியான பொழுது போக்கு!
அதைப் பிறாண்டி ஒவ்வொரு குச்சியாகப் பிய்த்துப் போடுவதை ஒரு தலையாய கடமையாக ஆற்று ஆற்றுனு ஆற்றிக்கொண்டிருப்பார்! :) அவங்க அப்பாவும் சித்தப்பாவும் இவருக்கு பாய் பிறாண்டினே பெயர் வைத்தாயிற்று! :)

இப்போது அத்தை, தாத்தா, பாப்பா எல்லாம் சொல்ல வருவதால் எப்போதும் அவற்றையே சொல்லிக் கொண்டிருப்பார் :)

அவர் கையில இருக்க எதையும் நாங்க வாங்கிடவே கூடாது... அவ்வளவு தான் போச்சு!
ஒரே கூச்சல்...ஆர்ப்பாட்டம் தான் :( இந்த பிடிவாத குணத்தை எப்படி சரி செய்வதுனே தெரியல.

குளிக்கிறதுனா கொள்ளை பிரியம்... அந்த குட்டி பாப்பா குளத்துல உக்கார வெச்சா ஒரே குஷி தான் சாருக்கு! :) கைய, கால உள்ள ஆட்டிகிட்டே ஜாலியா குளிப்பாரு! :)

அவர் சிரிப்பு இருக்கே அப்பப்பா.... அந்த சிரிப்புக்கே எத்தன தடவ வேணும்னாலும் பொழிலனுக்கு அம்மாவா பிறக்கலாம்! அந்த கன்னக் குழி அழகுக்கே எல்லாரும் மயங்கிடுவாங்க :) ஆனால் வீட்டிற்கு வரும் கடைக்காரர், கேஸ் காரர், தண்ணீர் காரர் எல்லாரையும் பார்த்து சிரிக்குது இந்த குட்டி! :)

ஒவ்வொரு முறை அவர் அம்மா என்றழைத்து என்னிடம் வரும்போதும் எனக்கு மனதில் ஏற்படு உணர்வு மகிழ்ச்சியின் உச்சகட்ட்மாகவே இருக்கிறது! இப்போதெல்லாம் இரவில் என் மீது கால் போட்டு தான் உறங்குகிறார்! :) சிறு வயதில் நான் செய்ததுதான் நினைவிற்கு வருகிறது.:)

எப்படியோ எங்கள் வாழ்க்கையின் பொருள் தினம் தினம் நன்கு புலப்படுகிறது :) கொஞ்சம் பயமும் வருகிறது :( எங்களை நம்பி கடவுள் ஒப்படைத்த எங்கள் ஜீவனை நல்லபடியாக வளர்க்க வேண்டும். எங்களுக்குப் பூரண நம்பிக்கை உள்ளது! :)

February 3, 2009

குழந்தை வளர்ப்பும்... பெற்றோர் பொறுப்பும்...!

இந்த பதிவினை குழந்தைகளின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் செயல்கள் பற்றிய பதிவாகவும்,
அவர்கள் எதிர்காலம் பற்றிய பதிவாகவும் நினைத்துக் கொண்டு நான் துவங்குகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரே பையன், ஒரே பெண் என்று செல்லம் அதிகமாகக் கொடுத்தே வளர்க்கிறார்கள். செல்லம் கொடுப்பது தவறல்ல; ஆனால் அதோடு பொறுப்பு, தன்னிச்சையாக தன் காரியங்களை செய்து கொள்ளுதல், பிறருக்குக் கேட்காமலேயே சென்று உதவுதல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுத்தருவதோடு சிறு சிறு வீட்டு வேலை முதல் சமையல், துணி துவத்தல் என அனைத்து வேலைகளையும் செய்யப் பழக்குதல் அவசியம்.

இந்த காலத்தில் ஆண்(அ)பெண் எந்த குழந்தையானாலும் எல்லா வேலைகளையும் செய்யப் பழகியிருத்தல் மிகவும் அவசியம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

நான் என் வயதையொத்த, என்னுடன் பழகிய, என்னுடன் படித்த என்று பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இன்னமும் அம்மா தான் தலை வாரி விட்டு உணவு ஊட்டிவிட்டு என அனைத்துமே அம்மா தான் செய்ய வேண்டும். தன் பெண்ணிற்கு பொறுப்பினை ஊட்டாமல் உணவு ஊட்டும் தாய் அங்கு அவரை அறியாமலேயே அவர் பெண்ணின் எதிர்காலத்தினை பாதிக்கும்படி செய்கிறார்.

இவ்வளவு ஏன் திருமணம் ஆன பிறகும் கூட பல பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்!
பெண்கள் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தினையே தாங்கி நிற்கும் தூண்கள்; குடும்பத்தினர் அனவருக்கும் தாயாக இருந்து தேவையானதை செய்யும் மிகப் பெரிய பொறுப்பு பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உள்ளது. ஆனால் தன் காரியங்களை செய்யவே தாயை எதிர்பார்க்கும் பெண் எப்படி வெளி உலகையும் சமாளித்து ஒரு குடும்பத்தினை தாங்கி நிற்கும் தூணாவள்.


ஆணுக்கும் இதே தான். தன் காரியங்களை தானே செய்து கொள்ள பெற்றோர் குழந்தை பருவம் முதலே பழக்கி விட வேண்டும். குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அம்மாவை எதிர்பார்க்காமல் பள்ளி செல்லும் பருவம் முதல் சிறிது சிறிதாக தன்னிச்சையாக தன் வேலைகளை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து செல்ல மகன் என்று ஷூ பாலிஷ் செய்வது, டை அணிவிப்பதில் இருந்து தலை வாரி ஷூ மாட்டிவிடுவது வரை அம்மாவே எல்லாம் செய்தால் அந்த மகனுக்கு பொறுப்பு என்பது வராமலே போய்விடும்.

குழந்தைகளை இளம் வயது முதலே பொறுப்புள்ளவர்களாக இருக்கப் பழக்கிவிடுவது பெற்றோர்களின் முதற்கடமை. இன்றும் 2வயது மகனுக்கு வெளியில் வைத்து இடுப்பில் தூக்கிக் கொண்டே சாப்பாடு ஊட்டும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு.


குழந்தைப் பருவத்திலேயே தன் விளையாட்டு சாமான்களைப் பொறுப்புடன் அதன் இடத்தில் அடுக்கி வைப்பது, தன் துணிகளை தானே மடிக்கக் கற்றுத் தருவது, முக்கியமாக 1வயது முதலே குழந்தைகள் தானே தன் கையால் உணவு உண்ணப் பழக்கிவிடுவது, தானே குளிப்பது, உடையணிந்து கொள்வது முதல் , ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பாக பழகுதல், மரியாதை என அனைத்தையும் சிறு வயதிலேயே பழக்கிவிடுவது நல்லது. வீட்டுப்பாடங்கள் மற்றும் வரைபடங்கள் கூட அவர்கள் தன்னிச்சையாக செய்ய வேண்டும்.

பேரண்ஸ் கிளப் வலைப்பூவில் எப்படி குழந்தைகளை மாண்டிசோரி கல்வி மூலம் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று எண்ணுகிறேன் :)

அதுமட்டுமல்லாமல் நடைமுறையிலும் இதனை சந்தனமுல்லை+பப்பு கூட்டணி நிகழ்த்திக் காட்டுகின்றனர்.


" ஓடி விளையாடு பாப்பா!...." என்னும் பாடல் வரிகள் சிறந்த குழந்தைகளை உருவாக்க உருவானவை என்றே எண்ணுகிறேன்!
குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டார்களானால் சிறந்த வீடும், ஊரும், நாடும் உருவாகும்.:)

அம்மாக்கள் கவனத்திற்கு....

நானும் ஒரு குழந்தைக்குத் தாய் என்னும் முறையில் நான் இது நாள் வரை குழப்பத்திலேயே செய்து வந்த சில பழக்கங்களுக்கு சரியான தீர்வு கிடைத்துவிட்டது :)

நான் கூறுவது குழந்தைகள் பராமரிப்புப் பற்றியது. பொழிலன் பிறந்ததும் பெரியவர்கள் ஒவ்வொருவரும் பொதுவான சில பழக்கங்கள் மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கவழக்கங்களை குழந்தைக்கு செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் தற்கால மருத்துவர்கள் கூற்றையே அதிகம் நம்புவேன். அக்கால தட்பவெப்ப நிலை, உணவுப் பழக்கங்கள் எல்லாம் இப்போதையவற்றை விட மாறுபட்டவை.
அதனாலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அதுவும் நல்லாதாய் போனது.
மருத்துவர்கள் சில பழக்கங்களை ஆதரித்தாலும் பல பழக்கங்கள் தேவையற்றவை ஆபத்தானவை என்றே கூறுகிறார்கள். அதன் படி நான் கற்றுக்கொண்டவற்றை உங்களுக்கும் கூறுகிறேன்.
வருமுன் காப்பதும், எச்சரிக்கையும் குழந்தைகள் விஷயத்தில் அதிகம் தேவை.

* குழந்தைகள் கண்களில் எண்ணை விடுதல் கூடாது. இன்னமும் பலர் அவ்வாறு செய்வதை
நேரிலேயே கண்டிருக்கிறேன்.

* வாயினுள் கைவிட்டு சளி எடுத்தல் தவறான சுகாதாரமற்ற செயல்

* குளித்தபின் காதுகளை குழந்தைகளுக்கென்றே விற்கப்படும் தரமான காது துடைப்பான்
கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். காதினையும் மூக்கையும் ஊதிவிடுதல் நல்லதல்ல.

* 3,4 மாதத்தில் திட உணவு தருதல் கூடாது; பால் போதாது என்று எண்ணினால் தாய்மார்கள்
உணவின் அளவினை அதிகப்படுத்தினாலே போதும். போதிய அளவு தாய்பால் கிடைக்கும்.

* முடிந்தவரை பிஸ்கட்டுகளை தவிர்க்க வேண்டும்.

* 6 மாதம் வரை கிரைப் வாட்டர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு மேலும்
தேவைப்பட்டால் மட்டுமே தரலாம்(அ) மருத்துவரின் ஆலோசனைப்படி தரலாம்;
நாள்தோறும் கொடுக்கவேண்டியதில்லை.

* விரல் சப்புவதை குழந்தை தானே மறந்துவிடும், அதற்காக நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க
தேவையில்லை, அதைத் தடுக்கும் போதுதான் அதிகமாகிறது. அதற்கு பதில் டீதர் போன்ற
பொருட்களை அவர்கள் கையில் கொடுக்கலாம்(அ) வேறு விளையாட்டுகளில் அவர்கள்
கவனத்தை மாற்றலாம்.

* வாரம் 1முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டலாம்.

* குழந்தைக்கு மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் 3நாட்கள் வரை காத்திருக்கலாம். அதற்கு
மேலும் போகவில்லயெனில் வெது நீர் கொடுத்துப் பார்க்கலாம் பின் மருத்துவரை அணுகலாம்.
அதை விடுத்து சோப்புவிடுதல், வெற்றிலைக் காம்பு விடுதல் போன்ற தவறான செயல்களை
தவிர்க்க வேண்டும்.

* குழந்தைக்கு தாயின் அரவனைப்பு அதிகம் தேவை, ஆதலால் முடிந்தவரை உங்கள்
கைக்குழந்தையை நீங்களே பார்த்துக்கொள்வது அவசியம்.

* 2 வயது வரை தொலைக்காட்சி காண்பிப்பது கூடவே கூடாது.


இந்த விஷயங்களில் தாய்மார்களான நாம் கவனமாக இருப்பது நலம்.

February 2, 2009

நான் ரொம்ப.... பிஸி.... - பொழிலன்