December 20, 2011

அம்மா உன் வயிற்றுக்குள்ள potty , flush tank கிடையாதா?

பொழிலனுக்கும் எனக்கும் நடந்த சில உரையாடல்கள்:


பொழில்: 
அம்மா நான் குழந்தையா இருந்தப்போ எப்படிமா பெரியவனா               ஆகினேன்?

நான்:
நீ சமத்தா நல்லா சாப்பிட்டியா... அதான் பெரிய பையன் ஆகிட்ட!!

பொழில்: (பெருமையுடன்)
ஆமாமா, நான் நல்லா சாப்பிட்டதும் நம்ம தூங்கிட்டோமா அப்புறமா நீ எழுந்து பார்த்தா நான் பெரிய பையன் ஆகிட்டேன் ஒரே மேஜிக் ஆகிடுச்சு!!

நான்:
ஆமாம் குட்டிமா! நீ இன்னும் நல்லா சாப்பிட்டீனா இன்னும் பெரிய பையன் ஆகி அப்பா மாதிரி பெரியவங்களா ஆகிடலாம்!

பொழில் : அம்மா நான் உன் வயிற்றில இருந்தப்போ எப்படி "பூப்" போனேன்?

நான்: (அவ்வ்வ் எப்படி பதில் சொல்ல அவன் அப்பாவைப் பார்த்துக்கொண்டே)

நீ அப்படியே என் வயிற்றுக்குள்ளேயே போய்ட்ட....

பொழில்:
யக்.. அம்மா உன் வயிற்றுக்குள்ள potty , flush tank கிடையாதா?

நான்: இல்லமா அதெல்லாம் அங்கே இருக்காது...

பொழில்: இல்ல இருக்கனும்.... ம்ம்ம்ம்...

நான்: இடம் பத்தாது தங்கம்...

பொழில்: இல்ல வேணும்...

நான்:
சரி அடுத்த பாப்பா அம்மாக்கு வரும் போது நீ potty வாங்கிட்டு வந்து அம்மா வயிற்றுக்குள்ள வெச்சிடு....

பொழில்: ஒகே மா... (பெருமையோடு)

பொழில்: அம்மா நான் இப்போ big man மாதிரி பேசிட்டேன்!!! நான் வளர்ந்து பெரிய பையன் ஆகி பெரிய man ஆகிட்டேன்... அதான் அப்படி பேசிட்டேன்!!! ( மிகுந்த பெருமையுடன்)

August 10, 2011

பொழிலனின் பிஞ்சுக் கைவண்ணம் - 2

August 3, 2011

பொழிலனின் பிஞ்சுக் கைவண்ணம் - 1

ஓவிய‌ம் வ‌ரைவ‌திலும், ஓவிய‌ங்க‌ளுக்கு வ‌ர்ண‌ம் தீட்டுவ‌திலும் ஆர்வ‌ம் மிகுந்த‌ பொழில்குட்டி சிறிய‌ பொருட்க‌ளை வ‌ரைய‌த் துவ‌ங்கினான்.... இப்ப‌டியாக‌ பொழிலன் முதன் முதலாக வரைந்த முகம் :)


இது எல்மோ என்னும் கார்ட்டூன் முகம்....
பொழிலனின் கதை நேரம்!!(ஒளி/ஒலி வடிவில்)

அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!

பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில் சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!

குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!

அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....

ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...

இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...

ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...

மார்கண்டேயனா குழந்தைகளின் நற்குணத்துக்கு எமனா?

தற்போது புதிதாக வெளிவந்துள்ள திரைப்படம் மார்கண்டேயனில் முதல் காட்சி,


" தன்னை சோறுபோட்டு அழைத்துவந்தவரின் மன உளைச்சலுக்குக் காரணமான ஒருவனை அந்த பத்து வயதோ அதை ஒட்டியோ உள்ள சிறுவன் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டுகிறான்... அதே வயதை ஒத்த சிறுவர்கள் பலரும் இப்படி அரிவாள், கத்தி என்று பயங்கர ஆயுதங்களுடன் அவனை துரத்துவார்கள், ஆனால் இவன் வெட்டி வீழ்த்திவிடுவான்"


இந்தக் காட்சி தேவையா? இதை எப்படி திரைப்பட தணிக்கைக் குழு அனுமதித்தது.... இதைக் காணும் சிறுவர்களின் நிலை என்ன? அவர்கள் மனதில் நஞ்சினை விதைப்பது போலாகாதா? இத்திரைப்படத்தினை தடை செய்தே ஆக வேண்டும்... அல்லது இம்மாதிரியான காட்சியையாவது நீக்க வேண்டும்....


இதனைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

March 24, 2011

மழலைச் செல்வம் பொழில‌ன்

மழலைத் தமிழ் பேசிக்கொண்டிருந்த பொழில்குட்டி தற்போது மழலையில் ஆங்கிலம் பேசத் துவங்கியுள்ளான்.... :))) தற்போது எங்களுக்கு அவனுடைய மழலைத் தமிழும் ஆங்கிலமும் கேட்பதற்கு இனிமையாகவும் சில சமயம் சில சொற்கள் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருக்கின்றது....


அவனுடை மழலைத் தமிழ் தற்போது தெளிவாகியுள்ளது... அதனால் நாங்கள் அவனிடம் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியிருக்கிறோம்... ஏனெனில் அவனுக்குப் பள்ளி துவங்குவதற்கு முன்பாக அவன் சரியான ஆங்கிலத்தில் ஓரளவிற்குப் பேச வேண்டியுள்ளது.... அவனது தேவைகளை அவன் ஆசிரியையிடம் தெரிவிக்கவாவது.... பின் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிட்டால் அமெரிக்க வழக்கில் ஆங்கிலம் பேசத் தொடங்கிவிடுவான்.... தற்போதே தொலைக்காட்சியின் பயனாக சில வார்த்தைகள் இவர்களின் மொழி பேசும் வழக்கிலேயே வருகின்றது....அவனுக்கு இந்த ஊரின் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறோம்...


 இப்போதெல்லாம் அவன் அவனுடைய அப்பாவோடு தொடர்ந்து இருப்பதால் இருவரும் நன்கு நெருங்கிவிட்டார்கள்....நாள்தோறும் மாலை அவன் அப்பா வீடு திரும்பும் போதே அன்றைய நிகழ்வுகளின் பட்டியலோடு தயாராக இருப்பான்... நானும் அவனும் பகலில் எங்கெல்லாம் சென்றோம்... யாரை சந்தித்தோம்... என்ன விளையாடினோம் என பட்டியல் ஒரு நிகழ்வினையும் தவரவிடாது இருக்கும்.....வெளியில் சென்றால் அம்மம்மா!!! அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு இந்த 24மணி நேரம் போதவே போதாது....வீட்டில் இருந்தாலும் சரி கேள்விகளுக்கு மட்டும் நேரம் காலம் என்பது கிடையாது... கேள்விக்கு பதில் கூறும் போது அதிலிருந்து இன்னொரு கேள்வி பிறக்கும்,.... நானே இன்றும் அப்படித்தான்.... பின் நான் பெற்ற குழந்தை எப்படி இருப்பான்...

ம‌க்க‌ள் மெய்தீண்ட‌ல் உட‌ற்கின்ப‌ம் ம‌ற்ற‌வ‌ர்

சொற்கேட்ட‌ல் இன்ப‌ம் செவிக்கு

இந்த‌ குற‌ள் தான் என் நினைவிற்கு வ‌ருகிற‌து :))) 
அவ‌னுக்கு இங்கு உள்ள‌ உண‌வுப் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ம் பிடிக்க‌வில்லை..... ந‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளான‌ இட்லி,ப‌ருப்பு, இர‌ச‌ம், கீரை, அசைவ உணவு தான் பிடித்திருக்கிற‌து..... ம‌ற்ற‌ப‌டி ஆசிய‌நாடுக‌ளின் அசைவ உண‌வுக‌ளை விரும்பி சாப்பிடுகிறான்.... ஆனால் இவ‌ன் ப‌ள்ளிக்குச் சென்றால் அங்கே அமெரிக்க‌ சிற்றுண்டி வ‌கைக‌ள் தான் குழ‌ன்தைக‌ளுக்குத் த‌ருகிறார்க‌ள்.... நாம் கொடுத்த‌னுப்ப‌க் கூடாது.... அத‌ற்கு தான் இவ‌னை எப்ப‌டிப் ப‌ழ‌க்குவ‌து என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்....

தாமதமான வாழ்த்தும் மன்னிப்பும்!!!

ம‌களிர் தினத்தினை ஒட்டி எழுத வேண்டிய பதிவு மிக மிக தாமதமாக எழுதுவதற்கு முதலில் மன்னித்துவிடுங்கள்....

மகளிர் தினத்திற்கு எப்படி வாழ்த்து சொல்வது என்று தெரியவில்லை.... எதற்காக வாழ்த்த வேண்டும் என்றும் தெரியவில்லை.... பெண் குழந்தையாகப் பிறந்து பெண்ணா என்ற கேள்வி இன்றி இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு வாழ்த்துவதா? அதற்கு பெற்றவர்களுக்கு நன்றி உரித்தாகட்டும்....


பெண்களின் பிரச்சனைகள அலசவும், ஆராயவும், அதில் சிக்கிக்கொள்ளவும் பின் வெளிவரவும் திறமை இருப்பதாலா? அதற்கு கடவுளுக்கு நன்றி!!!


இதைப் பற்றி பொதுவில் பேசும் உரிமை இருப்பதாலா? அதற்கு இந்திய பேச்சுரிமை, எழுத்துரிமை சட்டத்திற்கு நன்றி உரித்தாகும்.... அதையும் கடந்து பெண்கள் வாய் திறக்க முடியாதவாறு இன்றும் அடக்கி ஆளும் ஒரு சில ஆண்கள் இருக்கும் இந்த சமுதாயத்தில் எனக்கு கிடைத்திருக்கும் தனிப்பட்ட உரிமைக்கு என் கணவருக்கு நன்றி உரித்தாகட்டும்....


அம்மாடி... போதும்.... பின்னே வேறு என்ன சொல்வது.... இன்றும் ஒரு புறம் வாய் திறவாத பெண்கள்... ஒரு புறம் வாய் திறக்க இயலாத பெண்கள்.... ஒரு புறம் திறந்த வாய் மூடாத பெண்கள்!!!!

(சரி இதில் நான் எந்த வகை? ஏய் மனசாட்சி வாயை மூடு )


பெண்க‌ளின் அசுர‌ வேக வ‌ள‌ர்ச்சியைப் ப‌ற்றி நான் எழுதிதான் நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ வேண்டும் என்றில்லை.... இது அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே.... அத‌னால் எப்போது முன்னேறிக் கொண்டே இருக்கும் ந‌ம‌க்கும் என்றும் என்றென்றும் என‌து வாழ்த்துக்க‌ள்!!!!

பின்குறிப்பு:

அமெரிக்கா வ‌ந்து மூன்று மாத‌ங்க‌ளுக்குப் பிற‌கு வீடு தேடி குடி வ‌ந்து வீட்டினை ஒழுங்கு ப‌டுத்தி அப்ப‌ப்பா... ப‌ல‌ வேலைக‌ளுக்கு ந‌டுவில் அனானி ஒருவ‌ரின் வேண்டுகோளுக்கிண‌ங்க‌ இந்த‌ப் ப‌திவு ஒரு அவ‌ச‌ர‌ ப‌திவு...  அத‌னாலேயே ச‌ரியான‌ நேர‌த்தில் வாழ்த்த‌ இய‌லாம‌ல் போன‌து அத‌ற்கு ம‌ன்னிக்க‌வும்.... எப்போதுமே ந‌ம‌க்கு ந‌ம் வாழ்த்துக்க‌ள்.....

ப‌திவும் அங்கு தொட்டு இங்கு தொட்டு ஒருவாறாக‌ எழுதியிருக்கிறேன்.... :( நிறைய‌ எழுத‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.... ஆனால் நேர‌ம் போத‌வில்லை.... :((
த‌ய‌வுசெய்து என்னை ம‌ன்னிக்கவும்..... அடுத்த‌ ப‌திவு நிச்ச‌ய‌ம் சுவார‌சிய‌ ப‌திவாக‌ இருக்கும்....February 27, 2011

நேய‌ர் விருப்ப‌ம்

அனானி பெண் ஒருவ‌ர் என‌க்கு அனுப்பியிருந்த‌ பின்னூட்ட‌த்தில் நான் பொழில‌னோடு க‌ழிக்கும் நாட்க‌ளில் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளை என் ப‌திவுக‌ளுக்கு ஒதுக்க‌ வேண்டும் என்று விரும்பிக் கேட்டிருந்தார்.... அவருக்கு என் நன்றிகள் பல!!!


இதே போல் நான் எழுத‌ வேண்டும் என்று விரும்பி கேட்டிருந்த‌ என்னுடைய‌ ப‌திவ‌ர் வ‌ட்ட‌ம் ம‌ற்றும் ப‌திவ‌ர் வ‌ட்ட‌ம் அல்லாத‌ தோழிக‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள் ப‌ல‌!!!!

அவ‌ர‌து விருப்ப‌த்திற்கு ஏற்ப‌ அவ‌ர் கேட்டிருந்த‌ ம‌க‌ளிர் தின‌ ப‌திவிற்கு நான் ஒரு தொட‌ர் ச‌ங்கிலிப் ப‌திவு எழுதித்தொட‌ங்குகிறேன்.... நான் ர‌சிக்கும் சில‌ ப‌திவ‌ர்க‌ள் அதைத் தொட‌ங்க‌ நான் அழைக்க‌லாம் என்று இருக்கிறேன்....


பொழில‌ன் ப‌ள்ளிக்குச் செல்ல‌த் துவ‌ங்கிவிட்டால் பின் நான் ப‌ழைய‌ப‌டி நிறைய‌ ப‌திவுக‌ள் எழுத‌லாம் என்று இருக்கிறேன்.... (மீண்டும் கொலைவெறிப் ப‌திவுகளா... மொக்கையா என்று புல‌ம்புவ‌து கேட்கிற‌து :)))) என்ன‌ செய்ய‌ ர‌சிகைக‌ளின் வேண்டுகோள்....)


என்ன‌ செய்ய‌ பொழில்குட்டியின் முக்கிய‌மான‌ நாட்க‌ள் இவை.... அவ‌ர் இப்பொழுது ப‌ல‌ ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள் ம‌ற்றும் சில‌ கெட்ட‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள் என‌ இர‌ண்டையும் க‌ற்றுவ‌ருகிறார்... கோவ‌ப்ப‌டுவ‌து, க‌த்துவது, அழுவது போன்ற‌ கெட்ட‌ப் ப‌ழ‌க்க‌ங்க‌ள் தான் அவை.... அத‌ற்காக‌ தான் நான் அவ‌ரோடு நேர‌ம் செல‌விட‌ வேண்டியுள்ள‌து நான் அவ‌ரைக் க‌வ‌னிக்காம‌ல் ச‌மைக்க‌ ம‌ட்டும் தான் என‌க்கு என‌க்கு அவ‌ரிட‌ம் இருந்து அனும‌தி.... ம‌ற்ற‌ப‌டி நான் அவ‌ரோடுதான் இருக்க‌ வேண்டும்.... இது பொழில்குட்டியின் க‌ட்ட‌ளை! :))
பொழிலன் பெயர் ஓர் அலசல்

பொழிலன் அமெரிக்கா வந்து 3மாதங்கள் ஆகிவிட்டன..... அவன் இன்னும் சில நாட்களில் பள்ளிக்குச் செல்லப்போகிறான்.... ஆனால் என்னுடைய கவலை அவனுடைய பெயர் இந்த மக்கள் வாயில் நுழையுமா என்பதுதான்!!???

இங்கே மெக்சிகன் மக்கள் நம் தமிழ் மக்களை விட அழகாக இவன் பெயரை சொல்கிறார்கள்!!!


நம் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே தமிழ் சரியாக தெரியவில்லை என்றுதான் தோன்றுகிறது :(
இந்த "ழ"கரம் படும்பாடு இருக்கிறதே....


ஆனால் இந்த அமெரிக்க மக்களுக்கு இந்த பெயர் ஓரளவுக்கு வருகிறது.... சிலர் அழகாகவே சொல்கிறார்கள்.... ஆனால் பலருக்கு வரவில்லை.... இந்நிலையில் பள்ளியில் இவன் பெயரை கொலை செய்யாமல் இருக்க ஒரு துணைப்பெயரும் தேவைப்படுகிறது.... ஆனால் எங்களுக்கு துணைப்பெயரும் ஓர் தமிழ் பெயராக இருக்கவேண்டும் என ஆசை.... அந்த பெயர் இவர்கள் வாயில் எளிதாக நுழைவதாகவும் இருக்க வேண்டும்....


என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம்.... ந‌ம் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு த‌மிழ் பெய‌ர்க‌ளை த‌விர்த்து அனைத்து மொழி பெய‌ர்க‌ளும் தெளிவாக‌ உச்ச‌ரிக்க‌ வ‌ருகிற‌தே? அது எப்ப‌டி? இது ந‌ம் த‌மிழின் வீழ்ச்சியா?

January 5, 2011

பனிமலையில் பொழில்குட்டியும் பனிமழையும் புத்தாண்டும்!!!

2011ம் ஆண்டு வ‌ருட‌ப்பிற‌ப்பு எங்க‌ளுக்கு " " என்னும் அழ‌கான‌ இட‌த்தில் ம‌கிழ்ச்சியுட‌ன் தொட‌ங்கிய‌து!இவ்விட‌த்தை போல‌வே அழ‌காக‌ அமைதியாக‌ இவ்வ‌ருட‌மும் அனைவ‌ருக்கும் அமைய‌ வேண்டுமென‌ வேண்டிக்கொள்கிறேன்!

அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக‌ள்!

"என்ன நல்லா கட்டிபோட்டிருக்கு என் கிட்ட வராதேனு சொன்னேன்!" ‍இப்படித்தான் பொழிலன் முகத்தில் விழுந்த பனிமழையிடம் பேசிக் கொண்டிருந்தான்!