June 27, 2009

ஏரோபிளேன் பறக்குது பார் மேலே...

முன்பெல்லாம் வெளியே விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும் நான் ஓடிச் சென்று பொழிலனுக்கு விமானம் பறக்கும் போது காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் "பொழில் குட்டிமா வா ஒடியா ஒடியா ஃபிளைட் பார்க்கலாம்" என்று அவசரமாக சொல்லிக்கொண்டே அவனை தூக்கிக் கொண்டு வேக வேகமாக வருவேன்!


"அதோ ஏரோபிளேன் பறக்குது பாரேன் " என்று காட்டுவேன்! அவனும் அழகாக பார்ப்பான்... டாடா சொல்லுவான்.... பிளைட் எங்கே போச்சுனு கேட்டா வான் நோக்கிக் கைக்காட்டுவான்.... ஆனால் நான் அவனை அவசர கதியில் தூக்கிச்சென்றதால் அவன் மனதில் உண்டான எண்ணம் எனக்கு ஒரே சிரிப்பாகிவிட்டது....


ஃபிளைட் சத்தம் கேட்டதுமே பார்ப்பதில் ஆர்வம் காட்டிய பொழிலன் சில நாட்களாக அந்த சத்தம் தொலைவில் கேட்டதுமே அழுதுகொண்டே என் அருகில் வந்து என் காலைக் கட்டிக்கொண்டு வெளியே செல்ல வேண்டுமென வெளியே நோக்கிக் கை காட்டுவான்.... முதலில் நான் கூட சரி குழந்தை ஃபிளைட் பார்க்க இவ்ளோ ஆர்வமா இருக்கானுதான் நினைத்தேன்...


அவ்வ்வ்வ்... பின்னர் தான் எனக்கு புரிந்தது ஃபிளைட் வந்தால் அம்மாவிடம் ஓடி செல்ல வேண்டும் என்றும் பின்னர் வெளியில் ஓடிச் சென்று அதனைப் பார்க்க வேண்டும் என்றும் இதனை ஒரு கட்டாய செயல் போல் எண்ணிய அவனது புரிதல்... அதாவது என் அணுகுமுறையில் ஏற்பட்ட சிறு பிழை...


எனக்கு அப்போது சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் சிந்திக்கவும் செய்து இதனைப் புரிந்து கொண்டேன் :)))


இப்போது இருவரும் சேர்ந்து எந்த அவசரமும் இன்றி பொறுமையாகவே சென்று விமானத்திற்கு டாடா சொல்கிறோம்!

யாருக்குத் தெரியும் ஒருவேளை பொழிலன் ஒரு சிறந்த விமானியாகவோ, விண்வெளி வீரனாகவோ கூட வரலாம்!!! :)))

பொழிலனும் நானும் - 4


எனக்கும் பொழிலனுக்குமான உரையாடல்கள் இப்போது அதிகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகியிருக்கிறது!

நான் வெளியில் காணும் காட்சிகள் பற்றிய என்னுடைய எண்ணங்களை ஒரு தோழனிடம் கூறுவது போல் அவனிடம் கூறுகிறேன் :) அவனுக்குப் புரிகிறதோ இல்லையோ குழந்தைகளின் மூளை மிகவும் கூர்மையானது என்பதை நானறிவேன்!

அவனும் ஒவ்வொரு பொருளையும் காட்டி அம்மா அது அம்மா இது என்று கேட்டுக் கொண்டே வருகிறான்! நானும் விளக்கிக் கொண்டே வருகிறேன்!

இப்போது காலிங் பெல் அடித்தால் பயந்தது போய் வீட்டிற்கு தாத்தா அல்லது வேறு யாரோ வருகிறார்கள் என்பது புரிகிறது அவனுக்கு! நாங்கள் கதவைத் திறக்கும் முன்பாகவே அவன் வந்து தயாராக நிற்பான்....

பொருட்களின் பெயர்கள் நன்கு தெரிவதால் எப்போதும் நான் அதை அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறேன்!

நானும் பொழிலனும் உப்பு மூட்டை விளையாட ஆரம்பித்துவிட்டோம்! அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.... என் வயிற்றில் சுமந்த எங்கள் குழந்தையை இப்போது என் முதுகில் சுமப்பது மகிழ்ச்சியான அனுபவம்! :))

நான் எழுதுவதைப் போலவே அவனும் எழுத விரும்புகிறான்! ஆனால் அதையெல்லாம் பழக்கிவிடவில்லை.... பிஞ்சுக் கைகளை இப்போதே சிரமத்திற்கு உள்ளாக்க விருப்பம் இல்லை.
என்னைப் போலவே அவனும் தலைவாற விரும்புகிறான்! ஆனால் அவன் வாறிவிட வி்ரும்பும் தலைமுடி என்னுடையது அவ்வ்வ்வ்வ்.....

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பது சரிதான் போல....
நான் கட்டிலில் படுத்திருக்கும் போது என் மீது ஏறி நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அதன் மீது ஏறி நிற்க முயல்கிறான்!! பயமாகத் தான் இருக்கிறது அவனுக்கல்ல எனக்கு!

வளரும் பொழிலன்!

பொழிலன் குறும்பும், பேச்சும் அதிகரித்திருக்கும் நாட்கள் இவை!

சேட்டை செய்யும் போது நாம் கண்டித்தால் திருப்பி மிரட்டுகிறானே! சிரிப்பதா? அழுவதா? :))) நடக்க ஆரம்பித்துவிட்டதால் அதிகம் வெளியில் செல்லும் முயற்சிகள் நடந்தேறிய வண்ணமும் பல நேரங்களில் அதில் வெற்றியடைதலும் நடக்கிறது!

வெளியே போகாதே என்றால் உள்ளே வந்துவிடுவான்... ஆனால் மீண்டும் சிறிது நேரத்தில் வெளியில் செல்வான்... இப்படி இருந்த பொழில்குட்டி இப்போது சில நாட்களாக உள்ளே வா என்று பலவாறு கெஞ்சினாலும் கொஞ்சினாலும் வருவதில்லை.....

அவனுக்கு இப்போது ஒன்றரை வயதில் ஒரு தோழன் வேறு அதனால் அவனுடன் வெளியில் விளையாட மிகுந்த ஆர்வம் காட்டுகிறான்!!! கடவுளே இப்போதேவா???? மகிழ்ச்சிதான் ஆனாலும் சிறு குழந்தையாயிற்றே தத்தி தத்தி நடக்கையில் எப்படி தனியே நடக்கவிடுவது??? அதனால் ஹி ஹி ஹி நானும் சேர்ந்து விளையாடப் போகிறேன் :)))

என்னை எங்கும் தனியே செல்லவிடுவதில்லை.... அவனும் உடன் வர வேண்டுமாம்.... இப்போதே என்ன பொறுப்பு தாய் மீது!!!!??? :)))) (அவன் அம்மாவுடன் இருக்க வேண்டும் தானும் டாடா போகவேண்டும் என்று அழுவதே உண்மை)

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை என் இடுப்பில் இருக்கும் நேரம் பிறரைப் பார்த்து புன்னைகைக்கும் வரை புரிந்து வைத்துள்ளான்.... ஆனால் அவனை ஆசையோடு யாரும் தூக்கினால் என்னை இறுகப் பிடித்து கொள்கிறான்! வீட்டிற்கு புதிய பெண்கள் யாரும் வந்தால் என் பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறான்!

ஆனால் ஆண்கள் என்றால் மிகவும் ஒட்டிக் கொள்கிறான் அதிலும் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியமாக சேர்ந்து கொள்கிறான்! :)))
இனம் இனத்தோடு தான் சேருமோ??? :)

June 23, 2009

தூர்தர்ஷன்

இந்த தூர்தர்ஷன் என்னும் சேனல் இப்போது தடமின்றி அழிந்து வரும் நிலையில் இதன் சேவைகளைப் பற்றி நினைவு கூறவே இந்த பதிவு!


ஒரு காலத்தில் தெருவுக்கு ஒரு தொலைக்காட்சி இருந்த காலத்தில் கொடிக் கட்டிப் பறந்த இந்த சேனல் வழங்கிய நிகழ்ச்சிகள் அற்புதமானவை! பயனுள்ளவை!


இந்த அறிவியல் வளர்ச்சியினால் கண்டறிந்த வானொலி, இயந்திர மகிழுந்து, விமானம், தொலைபேசி போன்றவை பிறந்த கதைகளை தொடராக ஒளிபரப்பினர்! இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி!



இதிகாச, புராண கதைகளையும் நல்ல தரத்துடன் ஒளிபரப்பினர்! அறிவியல் நிகழ்ச்சிகள், நம் நாட்டின் முதுகெலும்பான விவசாய நிகழ்ச்சிகள், பேராசிரியர் நன்னன் அவர்களின் தமிழ் நிகழ்ச்சி என ஒரு கலக்கு கலக்கிய இந்த சேனல் இப்போது அடையாளம் இன்றி போய்விட்டது! :(


இந்திய வரலாறு பற்றிய தொடர்கள் மகான்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்கள் என பயன்களை அள்ளி அள்ளி வழங்கியது! இன்று இந்த தனியார் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர், ஆட்டம், பாட்டங்களுக்கு இடையே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது :(


ஷோபனா ரவியை யாரும் இன்னும் மறந்திருக்கமாட்டீர்கள்... அவர் செய்தி வாசிக்கும் போது நான் மிக சிறு பெண்... இன்னும் அவர் முகம் நினைவிருக்கிறது!


அன்று தூர்தர்ஷன் வழங்கிய நிகழ்ச்சிகளின் தரத்திற்கும், பயன்களுக்கும் ஈடாக, சமுதாய சிந்தனையுள்ள நிகழ்ச்சிகள் போல் இன்று எந்த சேனலும் நிகழ்ச்சிகள் வழங்குவதில்லை என்பது என் கருத்து!

விஜய் அவார்ட்ஸ் - என் பார்வையில்

இந்த வருடத்திய விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது....

சில நிறைகளும் சில குறைகளும் கலந்து வெற்றிகரமாக 27விருதுகளை திரைத் துறை கலைஞர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தது!


விழா மேடையின் சிறப்பு இது வரை இந்தியாவில் செய்யாதது! நம் தமிழ்(???) தொலைக்காட்சியில் முதலில் முயன்றிருப்பது நமக்குப் பெருமையே!

ஆனால் விருதுகளில் தான் கொஞ்சம் ஏமாற்றம் :( கமல் சாருக்கு நிறைய வி்ருதுகள்! அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கவே விருது! அவரோ வளர்ந்த சிகரம்! அவருக்கு அத்துணை விருதுகளைக் கொடுப்பதற்கு பதில் அதனைப் பிரித்து மற்ற கலைஞர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.....

சாந்தனு என்ன நடித்தார் என்று அவருக்கு விருது??? பாக்கியராஜ்க்கு விஜய் டிவி செய்யும் நன்றி போல!! யாருக்குத் தெரியும்?

ஏ.ஆர்.ரஹ்மான் வரவில்லை... அதற்காக அவரை தேடிச் சென்று விருது கொடுப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்! அவர் என்ன உடல்நிலைக் காரணமாகவா வரவில்லை? இல்லையே!

அஞ்சாதே குருவி மனதில் உள்ளதை அதே உணர்ச்சியுடன் பேசினார்! :)
சூர்யாவும் சினேகாவும் நல்ல தேர்வு!

எல்லாம் நல்ல விஷயங்களே.... ஆனால் இந்த சிவப்பு கம்பள பகுதியில் இந்த திவ்யதர்ஷினியின் தங்கிலீஷ் தொல்லை தாங்க முடியல.... வர எல்லார்கிட்டயும் வேறு அவங்க மேக்கப் முடிந்து ரெடியாக எவ்வளவு நேரம் ஆச்சுனு நாட்டுக்கும் திரைத் துறை முன்னேற்றத்திற்கும் தேவையான அதிமுக்கிய கேள்விகளை கேட்டு குடைச்சல் குடுத்துச்சு!

என்னங்க கேள்வி அது? சுண்ணாம்பு பூசி, பெயிண்ட் அடிச்சு, வார்னிஷ் பண்ணி, அதுவும் சிலர் உடையப் போட்டதற்குப் பின்னாடி அதை தைத்து... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..... எவ்வளவு வேலை?

ஆனாலும் சிலர் அழகாவே வந்திருந்தாங்க.... நம்ம ஜோதிகா சூர்யாவும், சூர்யாவும் தான் ஹைலைட் போங்க... வெண்ணிற உடைல தேவதையும் கந்தர்வனும் மாதிரி என்ன பொருத்தம்!!!! அப்புறம் நம்ம சினேகா! பிறகு பார்வதி அவங்க அடுத்தபடியா அழகா வந்திருந்தாங்க... பின் கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதியினர் பரவாயில்லை! அவ்வளவுதான் வேறு யாரையும் சொல்ல முடியாது :( வயதில் மூத்தவர்கள் அனைவரும் மரியாதைக்குரிய வகையில் வந்திருந்தனர்!

நடனங்கள் படு மோசம்.... :((( மற்றபடி விழா சிறப்பாகவே இருந்தது!
கலைஞர்களுக்கு நல்ல ஊக்குவிப்பு இத்தகைய விழாக்கள்!

பின் குறிப்பு: விழாவுல போட்ட சாப்பாடு பற்றி ஒரு செய்தியும் இல்லை... ஒரு வேளை சாப்பாடே போடலியோ??? ஹும் :(

June 21, 2009

வாழ்த்துகள் அப்பா!



அனைத்து தந்தைமார்களுக்கும் எனது இனிய தந்தையர் தின வாழ்த்துகளையும் வணக்கங்களையும் கூறிக் கொள்கிறேன்! :)

அப்பாவைப் பற்றி என்னவெல்லாம் எழுதுவது என்று யோசித்து யோசித்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை! ஏனென்றால் எல்லா பெண்களுக்குமே "அப்பா" என்பவர் ஒரு ஹீரோவாக, ரோல் மாடலாக, ஏன் உலகத்திலேயே சிறந்தவராதான் இருப்பாங்க! எப்படி சொல்றதுனு தெரியல.... என்னைப் பொறுத்தவரை என் அப்பாவைப் பற்றிக் கூற வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது! இது சற்று மிகையாகத் தோன்றினாலும் உண்மை!

என் அப்பாவின் வாழ்க்கை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த புத்தகம்! இது என் கருத்து ஆனால் இதனையே என் அப்பாவை அறிந்த பலர் கூறிக் கேட்டிருக்கிறேன்! எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளாத அட்சயப் பாத்திரமாய் அன்பு பொழியும் திருக்குறள் காட்டும் வழி வாழும் ஒரு மெழுகுவர்த்தி மனிதர்! நீங்களும் பழகிப் பாருங்கள் நான் சொல்வது புரியும் :)

அதோ அந்தப் படத்தில் இருப்பது போன்றுதான் நான் இன்றும் என் தந்தை கை பிடித்து நடப்பேன்! என் மகனும் அவ்வாறே அவன் தந்தைக் கை பிடித்து நடக்கும் நாளுக்காக அந்த அழகைக் காண மனம் ஏங்குகிறது...... சரி ரூட் மாறுது!

நான் இன்று இவ்வளவு தன்னம்பிக்கையோட, துணிச்சலோட, எதோ கொஞ்சூண்டு அறிவாளியா, ஈரமான மனசோட, ஏதோ கொஞ்சூண்டு நல்லவளா இருக்கேனா அதுக்கு என் அப்பாதான் காரணம்!
என் அப்பா எனக்கு அளித்த சுதந்திரம் அவர் இரத்தம் இரண்டுமே இவையாவையும் எனக்கு அளித்தது! கி கி கி! பார்க்கக் கூட எங்க அப்பா மாதிரிதான் நான்! அரை சொட்டை டோப்பா, ஒட்டு மீசை வெச்சு பார்த்தா!!!! :)))

ஆனால் சோகம் என்னனா நான் முதுநிலைல தங்க மெடல் வாங்கினப்போ என் அப்பா தான் அதை வாங்கனும்னு நினைச்சேன்... அவங்களுக்கு வர முடியல சரி அவங்க இடத்துல நான் வைத்துப் பார்க்கும் இன்னொருவர் என் கணவர்... சரி அவங்களயாவது கூப்பிட்டு வாங்க சொல்லலாம்னு பார்த்தா நான் தான் வந்து வாங்கனுமாம் நான் வரலைனாதான் அவங்க வாங்கலாமாம் :( நாம தான் காலைல ரிகர்சல் அப்பவே பிரசண்ட் கொடுத்தாச்சே என்ன செய்ய!
நான் தான் போயி வாங்கினேன்! ஆனால் அதுலயும் ஒரு மகிழ்ச்சி என்னனா பொழிலன் என் வயிற்றில் 5மாத சிசு அப்போது! அவன் தான் வாங்கினதா நினைச்சுக்கிட்டேன்! :)

இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியும் என் அப்பா எனக்கு தந்தது! நல்ல வாழ்க்கை, கல்வி, வேலை, நல்ல பெயர், கணவர்னு எல்லாமே எனக்கு அப்பா கொடுத்த அருமையான பரிசுகள்!

பெற்றோர் இல்லாமல், உறவினர் ஆதரவும் இன்றி கண் தெரியாத சூழ்நிலையிலும் தன்னந்தனியாக சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் தானும் படித்து பிறர் படிக்கவும் உதவி செய்து பட்டப்படிப்பை முடித்து கிடைத்த வங்கி வேலையையும் ஆதரவில்லாதப் பெண்ணுக்கு விட்டுக் கொடுத்து, கஷ்டப்பட்டு போராடி வாழ்க்கையில் இன்று உயரிய நிலையில் இருக்கும் என் அப்பா எங்களை எந்த சிரமும் கொடுக்காமல் மிக மகிழ்ச்சியாக வளர்த்து ஆளாக்கினார்! இன்றும் பொதுசேவை என்று தூக்கத்தினையும் கூட தியாகம் செய்து பிறருக்கு ஓடி உதவும் ஒரு மாமனிதர் அவர்! நான் அவரோட பொண்ணுனு சொல்லிக்கிறத விட ஒரு சிறந்த பெருமை என்ன இருக்க முடியும்?

எனக்கு திருமணம்னு சொல்லி ஒரு அழகான குருவிக்கூட்டுல என்னையும் இணைச்சு வெச்சாங்க எங்க அப்பா! என்னை எப்பவுமே மகிழ்ச்சியா வைத்துக் கொள்ளும் என் அப்பாவுக்கு நான் அம்மா மாதிரி!

இப்படி எப்பவுமே என்னை நெஞ்சில் சுமக்கும் அப்பாவைப் பற்றி முழுமையாலாம் எழுத முடியல!

இப்படிப்பட்ட பல அப்பாக்கள் இருக்காங்க... எல்லா அப்பாக்களுக்குமே என் வாழ்த்துகள்! :)))

June 13, 2009

என்ன கலாச்சார சீரழிவு இது?

இந்த மிஸ்।சென்னை சென்னை மேன் போட்டி ரவுசு தாங்க முடியல... இதெல்லாம் தேவையா.... அப்படியே இம்மாதிரி போட்டி நடந்தாலும் இது சென்னை அழகி(??!!) மற்றும் அழகனை(??!!) தேர்ந்தெடுக்கும் போட்டிதானே??

இதற்கு எதற்கு ஆங்கிலம்? எதற்கு ஆடை குறைப்பு அலங்காரம், அதிலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பேசும் அரைகுறை ஆங்கிலத்திற்கும் தமி"லு"க்கும்... :( சே! என்னத்த சொல்ல....

கண்ணைக் கூசும் அளவிற்கு கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது.... இது போதாதுனு இப்போலாம் எங்கேனாலும் சரி மாடர்ன் மாடர்ன் அப்படினு நிறைய பேர் செய்யும் லொள்ளு தாங்கமுடியலப்பா.... எதுனாலும் மகிழ்ச்சிய வெளிப்படுத்த கட்டிப்பிடிக்கிறது.... சீ சீ.... வருங்காலம் எப்படி இருக்குமோ பயமாத்தான் இருக்கு! :(

இந்த போட்டில ஆங்கிலம் சரியா பேசலனு போட்டிலருந்து நீக்குறாங்கலாம்.... என்ன கொடுமை இது? தமிழ் நாட்டுத் தலைநகர அழகிக்கும் அழகனுக்கும் தமிழ் தானே கண்டிப்பா தெரிஞ்சிருக்கனும்... அடச்சே நான் தான் லூசு... அவங்க பாதி பேர் தமிழ்நாடே கிடையாது... கேரளா, கர்நாடகா மாநிலத்தினர்...

சரி யாராக இருந்தால் என்ன? உண்மையான அழகு என்பது அகத்தின் அழகு! அதுக்கு இங்கே போட்டியில இடமே இல்லப்பா....

ஆண் பெண் எல்லாரும் நல்லா மொக்கை போடுறாங்களா? ஒழுங்கா அதிக செலவு இல்லாம குறைந்தா ஆடைகள் போட்டு பணத்தை மிச்சப்படுத்துறாங்களா? அடுத்த ஆண்/பெண்ணை தொட்டு பேசி இன்னபிற எல்லாம் கேமரா முன்னாடியே சரியா செய்யுறாங்களா? மிக சரியா தமி"லை"யே கொலை பண்ணுறாங்களா? ஆங்கிலம் அப்படினு நினைச்சு நல்லா உளறுறாங்களா? இது தான் போட்டி!!!!! :(((((

கலாச்சாரத்தை சீரழித்து நம் தமிழ்நாட்டுப் பெருமைய கேவலப்படுத்தனும்னே அலையுறாங்களா என்ன?

இவ்வளவும் நான் போட்டியின் விளம்பரத்தைப் பார்த்தும் பல விமர்சனங்களைப் படித்தும் பின் என் மனதிற்கு பட்டதை எழுதினேன்!

இந்த நிகழ்ச்சிய பார்த்திராத எனக்கே இவ்வளவு கோபம்னா பார்ப்பவர்கள் நிலைமை பாவம் தான்!

என் பயணங்களில்........



நான் பிறந்தது முதலே தொடர்வண்டியில் பயணங்கள் பல செய்திருந்தாலும் ஒவ்வொரு பயணமும் எனக்கு அழகானதாகவும் மகிழ்ச்சியானதாகவுமே இருக்கிறது இன்று வரை....

இந்த இரயில் பயணம் பிடிக்காதவர்கள் என்று வெகு சிலர் தான் இருக்கமுடியும்.... பலருக்கும் பிடிக்கும் இந்த இரயில் எனக்கும் பிடிக்கும்னு சொல்வதை விட வாழ்க்கைத் தத்துவங்கள் பலவற்றை இரயில் சொல்வதாகவே எனக்கும் தோன்றும் அளவிற்கு நான் அதனோடு இணைந்தே இருக்கிறேன் அப்படினு கூட சொல்லலாம்!

அந்த தடக் தடக் அப்படினு ஏற்ற இறக்கத்தோட வரும் சத்தம் ரொம்ப அழகான சங்கீதமாவே எனக்கு தோணுது! வாழ்க்கையும் இப்படி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒன்றாவே இருந்தாலும் நம் பயணப் போக்கில் எந்த் மாறுதலும் இல்லாம நாம போகனும்னு இரயில் உணர்த்துவதாவே என் மனசுக்கு தோணுது!

நம் உறவுகள், நண்பர்கள், பொறுப்புகள், கடமைகள், சந்தோஷம், சோகம் அப்படினு பல பெட்டிகளை நம் கூடவே அழைத்துச் செல்கிறோம் நம் வாழ்க்கை என்னும் பயணத்தில்!

ம்ம்ம்... என்ன ஒரே தத்துவ மொக்கைனு நீங்க கேட்பது புரியுது! :)
சும்மாதேன்.... பதிவு தேத்தலாம்னு!

நான் எவ்வளவு முறை இரயில் பயணம் செய்தாலும் பொழில்குட்டியோட இந்த இரண்டாவது இரயில் பயணம் எனக்கும் அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியானதாகவும் எனக்கு சவாலானதாகவும் இருந்தது! :))))

பின்னே என்னங்க ஊருக்கு போகும் போது குட்டிமா நல்லா தூங்கிட்டாரு! 7மணி நேர பயணத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரே குதூகல ஆட்டம் கொஞ்சம் அழுகை! பின் தூங்க ஆரம்பித்தவன் ஊருக்கு போயிதான் எழுந்தான்! ஆனால் திரும்பி வரப்போ..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... வழக்கமா வீட்டில் விலையாடுவது போலவே 12மணி வரை விளையாட்டு! அதிலும் அவனுக்கு ஒரு தோழி வேறு கிடைத்தாச்சு விளையாட்டு துணைக்கு!!!!

சாப்பிடாம, தூங்காம... அவ்வ்வ் என்னையும் தூங்க விடாம விளையாடினான்... :)) எனக்கு இதை பார்க்கும் போது விளையாட்டுகள் பல நிறைந்த என்னுடைய குழந்தைப் பருவ இரயில் பயண நினைவுகள் தான் மனசுல ஓடுச்சு! :))))

அவனுக்கும் இரயில் பயணம் பிடித்தமானதாக இருப்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்!
எனக்கு பிடித்தமான இரயில் படமும் இரயில் நிலையப்படமும் கூகுள் உதவியால் உங்களுக்காக மேலே! :))

June 4, 2009

கேள்விகளும் பதிலகளும் - என்னைப் பற்றி என்ன சொல்ல

தம்பி கார்த்திக்கும், தோழி வித்யாவும் என்னை இந்த பதிவு எழுத சொல்லி ரொம்ப கெஞ்சி அழுது புரண்டு கேட்டதுனால நான் பி்ட்டு பிட்டா அள்ளிவிடுறேன்... ஹி ஹி ஹி! சும்மா சொன்னேன்... என்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பிய தோழிக்கும், தம்பிக்கும் நன்றிகள் பல!

இங்கே இனி வரப் போறது எல்லாம் நெசம்தானுங்க....

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் அப்பா வ‌ழி ஆச்சியின் பெய‌ர் சுப்புல‌ட்சுமி... அத‌னால் என‌க்கும் அவ‌ர் நினைவாக‌ சுப்புல‌க்ஷ்மி :) என்னை சுபா என்று எல்லோரும் அழைப்ப‌ர்! ஏனா எங்க‌ள் குடும்ப‌த்தில் மொத்த‌ம் ஐவ‌ர் இதே பெய‌ரில் :)

சுப்புலக்ஷ்மி என்றாலும் சுபா என்றாலும் மிகவும் பிடிக்கும்... ஒரு டிஸ்கி... என் பெயர் ரொம்ப அழகா இருப்பதா நான் உணர்வது என் கணவ்ர் என் பெயரைச் சொல்லி அழைக்கும் போது தான்!

2।கடைசியாக அழுதது எப்பொழுது?

என்னை யாராவ‌து கோவ‌மாக‌வோ அல்ல‌து கிண்ட‌லாக‌வோ ஏதாவ‌து சொல்லிவிட்டால் உட‌னே அழுகை வ‌ரும் :(ரொம்ப‌ சென்சிடிவ் டைப் நான்... யாராவ‌து அழுவ‌தைப் பார்த்தாலே என‌க்கும் க‌ண்ணீர் வ‌ழியும்!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ப‌ர‌வால‌ பிடிக்கும்னு சொல்ல‌லாம்...

4।பிடித்த மதிய உணவு என்ன?

சாம்பார் சாத‌ம்/வ‌த்த‌ல் குழ‌ம்பு சாத‌ம் + த‌யிர் சாத‌ம் + அப்ப‌ள‌ம்ரொம்ப‌ பிடிக்கும்... காய், கீரையும் ரொம்ப‌ புடிக்கும் ஆனால் காய் ம‌ற்றும் கீரை த‌விர‌ அனைத்தும் அள‌வு குறைவாக‌ இருக்க‌னும்!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ரொம்ப‌ எளிதில் ந‌ட்பாவ‌தாக‌ எல்லாரும் சொல்லிருக்காங்க‌ :)நான் எல்லாரிட‌மும் ந‌ல்லா பேசுவேன், பின் அவ‌ர்க‌ள் குண‌ம் அறிந்து தான் ந‌ட்பு வைத்தல் எல்லாம்...

6।கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

க‌ட‌ல் தான் எப்ப‌வும் என் சாய்ஸ்... க‌ட‌ல் மீது தீராக் காத‌ல் என‌க்கு!!! :)))
ஆனால் குளியலறையில் சில்லென்ற கொட்டும் நீரில் வெகு நேரம் குளிப்பது தான் மிக மிக பிடிக்கும்...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவ‌ர் முக‌ பாவ‌னை, க‌ண்க‌ள், சிகையலங்காரம்,உடைய‌ல‌ங்கார‌ம்... ந‌ன்கு சிரித்து பேசினால் அவ‌ர் வாயையும் பார்ப்பேன் :))

8। உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என் கிட்ட‌ பிடிக்காத‌து ச‌ட்டுனு வ‌ரும் சுரீர் கோவ‌ம்...:( எல்லாரிடமும் வைக்கும் அதிக அன்பு!

பிடித்த‌து அந்த‌ கோவ‌த்தையும் உட‌னே த‌ணித்துவிடுவேன் சிறிது நேரத்தில்... அதோடு நான் அதிக அன்பு வைத்துள்ள சிலர் மீது மட்டும் தான் கோவத்தைக் காட்டுவேன்... பொழிலன் மீது மட்டும் அதிக அன்பு இருந்தாலும் கோவத்தைக் காட்டுவதில்லை! :)
எல்லாரிடமும் வைக்கும் அதிக அன்பு பிடிக்கவும் செய்யும்... இது தான் என்னுடைய பிளஸும் மைனஸும் :)

9।உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த‌ விஷ‌ய‌ம் அமைதியாப் பேசுற‌து, அழ‌கா சிரிப்ப‌து, த‌மிழார்வ‌ம்,சில‌ விஷ‌ய‌ங்க‌ளில் குழ‌ந்தைத் த‌ன‌ம், அழகா பாடுவ‌து, என் மீது அவங்களுக்குத் தெரியாமலே இருக்கும் பொஸெஸிவ், எங்கள் அன்பு, என் மீதுள்ள பாசம், பொறுமையா பொருட்களைக் கையாள்வது,இந்த இளம் வயதிலேயே உற‌வுக‌ளை மதித்து நேசிக்கிற‌து, அவ‌ங்க‌ த‌ங்கைய நேசிக்கிற‌து( இது பொதுவான‌து தான் ஆனால் என்னைப் போல் அண்ண‌ன் இல்லாத‌வ‌ர்க‌ளுக்கு இது பார்க்கும் போது மகிழ்ச்சி) இப்படி பிடித்த‌துனு நிறை‌......................................ய‌ சொல்ல‌லாம்! ஒரு ப‌திவு ப‌த்தாது :( முக்கிய‌மா அவ‌ங்க‌ அவ‌ங்க‌ளாவே இருப்ப‌து ரொம்ப பிடிக்கும்!

பிடிக்காத‌து அவ‌ங்க‌ கோவ‌ம் :( வேறு எதுவும் இல்லை :)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் க‌ண‌வ‌ர்! அவ‌ங்க‌ அமெரிக்காவில் நான் இங்கே...

11।இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நீல‌ நிற‌ சுடிதார்

12।என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நிறைய‌... இப்போது ஓடிக் கொண்டிருப்ப‌து... "உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது..." ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் :)

13।வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு! கருமையான எழுத்துகள் எனக்குப் பிடிக்கும் அதிகம் புத்தகம் வாசிப்பதாலும் கருமையில் தான் எழுத்துகள் அழகா இருப்பதாக எண்ணுவதாலும்...

14.பிடித்த மணம்?

மல்லிகை, எங்கள் பொழிலனின் வாய் மணம், பொழிலன் தலை முடி வாசனை, மழையில் நனையும் மண் வாசனை, பச்சிளம் சிசு வாசனை, பசுஞ்சாணம் தெளித்த வாசல் வாசனை மற்றும் இன்ன பிற :)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீஷூ- காரணம்: அதிசயிக்க வைக்கும் ஆக்டிவிடிஸ் அறிவாளி!

ஜோதி- காரணம் : ஒரு நண்பரைப் பற்றி அறியலாம் என்று தான்...

16। உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

கார்த்திக்கின் பெரும்பாலான பதிவுகள் மிக பிடிக்கும்... இன்னதென்று சொல்ல முடியாது...

வித்யாவின் அனைத்து யதார்த்தமான, நச் பதிவுகளும் பிடிக்கும்.... உதாரணம் "ஏதாவது செய்யனும் பாஸ்", நிவா"ரணம்" போன்றவை....

17। பிடித்த விளையாட்டு?

முதலில் கூடைப் பந்து, பூப்பந்து இப்போது பொழிலனோடு விளையாடும் அனைத்து விளையாட்டுகளும்!

18।கண்ணாடி அணிபவரா?

இல்லை...

19।எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நல்ல கதை, உருக்கமான ஆனால் தோற்காத காதல், திகில், நகைச்சுவைபோன்ற அம்சங்கள் நிறைந்த படங்கள் பிடிக்கும்!
முக்கியமாக பெண்களை இழிவு படுத்தும் அல்லது இம்சிக்கும் காட்சிகள் இருந்தால் அறவே பிடிக்காது!

20।கடைசியாகப் பார்த்த படம்?

படம் பார்ப்பதில் அத்துணை ஆர்வம் இல்லை.... தியேட்டரில் பார்க்கத் தான்பிடிக்கும்! :) கடைசியாக வீட்டில் பார்த்தது பில்லா என நினைவு!

21।பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம், இளவேனிற்காலம்... :)

22। இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

குழந்தைகளுக்கான கதைகள், லூயி பிரெய்லியின் வாழ்க்கை வரலாறு பற்றியபுத்தகம்....

23।உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

வாரம் ஒரு முறை அல்லது இரு முறை... பொழிலன் , சில சமயம் பூக்கள்!தற்போது பொழில் குட்டி!

24।உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பொழிலனின் சிரிப்பு,அவன் குரல், மெல்லிய இசை, பறவைகள் சத்தம், நாய்க் குட்டி சத்தம்,மழலைகள் குரல் இப்படி நிறைய பிடிக்கும்!

சத்தமாக பேசுவது எனக்கு பிடிக்காது... ஆனால் நானே சத்தமாக பேசுவதாக என் கணவரிடம் திட்டுவாங்குவேன் :) பின் இந்த சுவற்றில், பேப்பரில், தரையில் நகத்தால் தேய்ப்பது பிடிக்காது!
வாகனங்களின் ஹார்ன் சத்தம் சுத்தமாகப் பிடிக்காது!

25।வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி, மும்பை, டேராடூன், மிசோரி என வட இந்திய இடங்கள் தான்!

26।உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய பேசுவேன், ரொம்ப அழகா கோலம் போடுவேன், நல்லா வரைவேன்,அப்புறம் எவ்வளவு பெரிய புத்தகம் ஆனாலும் ஒரு இரவில் படிக்கும் பழக்கம் உண்டு... பொன்னியின்செல்வன் முதல் 3 பகுதிகள் விரிவான தொகுப்பு தலையணை அளவு இருக்கும் அதை மட்டும் இரு இரவுகள் எடுத்து முடித்தேன்! பொழிலன் பிறந்த பின் அவ்வாறு செய்ய இயலவில்லை...

இதெல்லாம் விட ஒரு தனித் திறமை என்னனா யாரையும் பேச விடாம நான் மட்டும் பேசனும்னா ரொம்ப நல்லா செய்வேன! :)))

27।உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கணவன் மனைவி பேச்சுக்கு இடையே விளையாட்டாக கூட இன்னொருவர் மூக்கை நுழைப்பது, சொன்ன சொல் தவறுவது, நட்பிலும் உறவிலும் நம்பிக்கை துரோகம், இந்த பக்கம் ஒரு மாதிரி பேசிட்டு அந்த பக்கம் போயி மாற்றிப் பேசுவது இப்படி நிறைய.... இதையெல்லாம் நான் நண்பர்கள் வட்டாரத்திலேயே அனுபவித்து இருக்கிறேன் :( யாராக இருந்தாலும் சரி இந்த குணங்கள் எனக்கு பிடிக்காது!

28।உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம் தான்! என் கிட்ட யாராவது கோவப் பட்டா ஏத்துக்க முடியாது ஆனால் நான் நல்லா கோவப் படுவேன்... இப்போதான் குறைச்சிக்கிட்டே இருக்கேன்!

29।உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல், கேரளா,டேராடூன்,டெல்லி!
பின் பனி நிறைந்த எல்லா இடங்களும்....

३०எப்படி இருக்கணும்னு ஆசை?

எல்லாருக்கும் உண்மையானவளா, அன்பானவளா, நல்லவளா, கடவுளுக்கும் உண்மையானவளா இருக்கனும்....

३१)கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

அப்படி எதுவுமே இல்லை... அவங்களிடம் சொல்லாம எதுவுமே செய்யமாட்டேன்...
அதுவுமில்லாம என்னோட ஒவ்வொரு அசைவினிலேயும் அவங்களும் இருக்கனும்னுரொம்ப ஆசைப் படுவேன்...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை சரவணபவன் முழு சாப்பாடு மாதிரி! இனிப்பு, கசப்புனு எல்லாம் நிறைந்தது! மொத்தத்தில் கடவுள் அளித்த ஒரு சுவையான விருந்து! :))))

June 2, 2009

திருமணச் சடங்குகள் தமிழில் நடந்தால் என்ன?




இந்த உலகத்தில் எந்த மதத்தினரானாலும் திருமணத்தின் போது பல உறுதிமொழிகளுடன் தான் தன் வாழ்க்கைத் துணையைக் கைபிடிக்கின்றனர்!

அப்படிபட்ட திருமணத்தில் நிகழ்த்தப் ப்டும் உறுதிமொழிகள் அதுவும் குறிப்பாக நம் இந்து மத முறைப்படி நிகழும் திருமணங்களில் சொல்லப்படும் உறுதிமொழிகள் மிக அதிகம்.... ஆனால் இவை யாவும் வட மொழியிலேயே சொல்லப்படுகின்றன!

அதிலும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு என்னவென்றால் இந்த வடமொழியில் ஏற்கப்படும் உறுதிமொழியில் ஒரு கணவன் மட்டுமே கூற வேண்டிய உறுதிமொழி அந்த ஐயர் வாய் வழியாக சொல்லிக் கேட்டுப் பின் அந்த மாப்பிள்ளைக் கூற வேண்டி உள்ளது...

இதன் பொருள் முழுமையாகத் தெரிந்த ஆண் நிச்சயம் இதை ஏற்கமாட்டார்....... "எனக்கு எழுதிக் கொடுங்கள் நான் வேண்டுமானால் வாசிக்கிறேன், அவள் எனக்கு தான் மனைவி ஆகப் போகிறாள் ஆதலால் தாங்கள் இதைக் கூறுவது சரியல்ல" என்றே கூறுவார்!

எனக்கு முழுமையாக மந்திரத்தின் பொருள் தெரியாது என்றாலும் ஏதோ ஒரு வலைப்பூவில் படித்த நியாபகத்தை வைத்துக் கூறுகிறேன்....

"இன்று முதல் .... ஆகிய நான் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு சாட்சியாக கைப்பிடிக்கப் போகும் பெண்ணின் வாழ்வில் நிகழும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் காரணமாக இருப்பதோடு நானும் அவளோடு இணைந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வேன்.... என்னோடு சரி பாதியாக இணையும் அவளுக்கு என் மனம்,உடல், உடைமை என அனைத்திலும் உரிமை கொடுத்து, அவளுக்குக் கணவனாகவும், தோழனாகவும், தாய் மற்றும் தந்தையாகவும் இருந்து அவளைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்! "

இப்படி தான் வரும் அந்த உருதி மொழி.... நான் கூறியதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.... நான் தான் முழுமையாக என்ன இருந்தது என்று மறந்துவிட்டேனே :( ஆனால் இன்னும் சில ஆழ்ந்த அன்பிற்கான வரிகளும் உண்டு.... இதையெல்லாமா அவர் வாய்வழி கேட்டுக் கூறுவது?

இப்படியே பெண்ணுக்கும் உறுதிமொழி இருக்கும்! பின் இதை எதற்காக ஐயர் வாய்வழி கேட்டுக் கூற வேண்டும்? நம்மிடம் தமிழில்/ வடமொழியில் எழுதிக் கொடுத்தால் நாமே கூறுவோமே!

இந்த திருமண முறை மாறவேண்டும்.... அனைத்தும் தமிழில் கூறி நிகழ வேண்டும்.... இன்று பல திருமணங்கள் அவ்வாறு நிகழத் தொடங்கிவிட்டன... ஆனால் நான் சடங்குகள் இன்றி திருமணம் நடக்க வேண்டும் என்று கூறவில்லை.... மந்திரங்கள் தமிழில் ஓதப் பட வேண்டும் அதுவும் பெண்/மாப்பிள்ளையால் மட்டுமே ஓதப் படவேண்டும்!


திருமணத்தில் வைக்கப் படும் சடங்குகளுக்கும் அழகான அர்த்தங்கள் உண்டு அதனால் பகுத்தறிவு பேசுகிறேன் என்று அதையெல்லாம் நான் வேண்டாம் என்று கூற மாட்டேன்... எந்த ஒரு பகுத்தறிவுவாதியும் வாழைமரம், அக்னி குண்டம், அரிசிக் கலசம், நீரக் கலசம், தேங்காய், பழங்கள் என்று திருமணத்தில் வைக்கப் படும் பொருட்களின் காரணம் தெரிந்தால் அதையெல்லாம் வேண்டாம் என்று கூறவே மாட்டார்!

துணிகளைக் கட்டி அக்னி வலம், மங்கல நாண் என னைத்திற்கும் காரணங்கள் உண்டு!

அதனால் இந்த மந்திரங்கள் தமிழில் நம் வாயாலேயே சொல்லப்படனும் என்பது தான் என் கருத்து!

அதிலும் கிறித்துவத் திருமணங்களிலும் நான் பார்த்த வரை பாதிரியார் தமிழில்/ஆங்கிலத்தில் நம் ஐயர் கூறும் அதே வரிகளை சில சிறிய மாற்றங்களுடன் கூறுவார்! இதுவும் தவறுதான் :( அந்த மாப்பிள்ளை/ பெண்ணே நேரடியாக சொல்வது சாலச் சிறந்தது!

இப்போது சில திருமணங்கள் புதுமையாக நிகழ்த்தப்படுவதும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்... வழக்கமாக திருமணங்களில் வைக்கப்படும் பொருட்கள் புத்தகங்களாக மாறியிருப்பதும் நல்ல விஷயமே! புத்தகமும் காலத்தால் அழியாதக் கருத்துகள் நிறைந்திருக்கும் ஒரு மங்கலமான பொருளே! :)

வேண்டுகோள்:

யாராவது இந்த திருமணச் சடங்கு பற்றி விரிவாக எழுதியிருக்கும் அந்த வலைப்பூவின் தொடுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் நம் எல்லாருக்கும் நான் கூறுவது தெளிவாகப் புரியும்! :)

ஒரு சமையல் கில்லாடியும் சில அப்பாவிகளும்

சந்தனமுல்லை அவர்களின் இந்தப் பதிவின் தாக்கம் தான் எனது பதிவு!
அதனால் அவருக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன் :)

அப்புறம் அந்த அப்பாவிகள் யாருனு முதலில் சொல்லிடுறேன்....
அப்பா, கணவர்!!!

இப்போ நான் சொல்லப் போறது ஒவ்வொரு உணவையும் நான் முதன் முதலாக செய்தப்போ ஏற்பட்ட அனுபவம் பத்திதான்...

சாம்பார்:

நான் எட்டாம் வகுப்பு முடித்த விடுமுறைல தான் முதன் முதலில் ஒரு புத்தகத்தைப் பார்த்து நானே சாம்பார் வைக்கிறேன் யாரும் உள்ளே சமையலறைப் பக்கமே வரக் கூடாதுனு சொல்லிட்டு புத்தகமும் கையுமா கிச்சன் உள்ளே போனவதான்...

அப்பாடா ஒரு வழியா புத்தகத்தை புரட்டி பொருட்களை எடுத்தா அளவு எல்லாம் புரியல... சரி தோராயமா போடுவோம்னு எல்லாத்தையும் ஒரு கை அள்ளிக்கிட்டேன்... வெந்தயம், உளுந்து, சீரகம் இத்தியாதிகள தான் சொல்றேன்!
ஒரு வழியா புத்தகமுறைப்படி எல்லாம் செய்து முடித்து ரொம்ப களைப்பா வந்து உட்கார்ந்தாச்சு.... அப்பா மதிய உணவுக்காக வந்து சாப்பிட உட்கார்ந்தா அய்யோ பாவம் அவுங்க முகம் போன விதமே சரியில்ல... ஆனாலும் பெத்த பொண்ணாச்சே... சரியில்லனு சொல்ல மனசு வரல... எப்படியோ சாப்பிட்டு கிளம்பிட்டாங்க...

அடுத்ததா நாங்க எல்லாரும் சாப்பிடும் போது தான் அய்யோ! சீ... உவ்வே அப்படி ஒரு கசப்பு... வெந்தயத்திற்கு குறைவில்லாமல் போட்டுவிட்டேன் போல :( பிறகு என்ன செய்ய தியாகி அப்பாவைத் தவிர நாங்கள் யாரும் மருந்துக்குக் கூட அந்த சாம்பாரை தொடவில்லை!

சாம்பார்னா அது எங்க அம்மா வைக்கும் சாம்பார் தான் அந்த சுவைக்கு ஈடான சாம்பார் வேறு எங்கேயும் சாப்பிட்டதில்லை நான்!

இட்லி:

அடக்கொடுமையே கல்யாணம் பண்ணினா கிரைண்டர்ல மாவு ஆட்டனுமானு இருந்துச்சு... பாவம் பொழிலன் அப்பா... மனைவிக்கு கிரைண்டர் போடத் தெரியாது என்னும் அதிர்ச்சி செய்தி அவங்களுக்கு தெரியாது! :)

எனக்கு அப்போ கிரைண்டர் மூடிய எப்படி திறக்கனும்னு கூட தெரியாது :(
கிரைண்டர் போட கற்றுக் கொள்ள மட்டும் ஏனோ ஆர்வம் இருந்ததில்லை :(

நான் என்ன செய்வேன்.... அத்தையிடம் கேட்க பயம்... திருமணமான புதிது தானே அதனால்... அம்மாவிடன் கேட்டால் திட்டு நிச்சயம்... என்ன செய்ய அம்மாவிடமே கேட்டேன்... எப்படி கிரைண்டர் திறந்து அதை பயன்படுத்துவதுனு... ஆனாலும் ஊற வைக்கும் அளவு மட்டும் பிடி படல...

கொடுமைங்க.... உளுந்து ஆட்டுறது ஒரு கலை... அது எனககு சுத்தமா தெரியாது... ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி போனில் கேட்டதை வைச்சு என்னமோ வெள்ளையா அரைச்சு வெச்சு இட்லி சுட்டா, அய்யோ இட்லிய காணோம் இட்லி தட்டுல... இட்லி கலர்ல சின்ன சின்ன தட்டையான ஒன்னுதான் வந்துச்சு...

பாவம் புது மாப்பிள்ளை.... ஒண்ணுமே சொல்லலை... என் அப்பா வழியில் ஒரு தியாகி எனக்கு கிடைத்த மகிழ்ச்சி... ஆனால் மனசு கேட்கலை... பாவமா இருந்துச்சு அவங்கள பார்க்க...

சரினு கொஞ்சம் மாற்தல் பண்ணினா அடக் கடவுளே அதுவே தேவலை... இது லட்டை விட மோசம்... ம்ம்ம் இதையும் ஒரு அப்பாவி சாப்பிட்டாங்க :)))

அப்புறம் ஒரு வழியா என் அத்தை மாவுக்கு ஊறவைப்பதிலிருந்து ஆட்டுவது வரை நேரில் பார்த்து பின் தான் முழுமையாக் கத்துக்கிட்டேன்! :)

என் அத்தை மாதிரி இந்த உலகத்துல யாராலயும் இட்லி சுட முடியாதுங்க... அப்படி ஒரு மல்லிகைப் பூ மாதிரி வெள்ளைப் பூக்கள் தான் அவை... அவங்க அரைச்ச மாவே ஐஸ் கிரீம் மாதிரி இருக்குனு நான் எப்பவும் சொல்லுவேன் என் அத்தைகிட்ட.... அப்படி ஒரு இட்லி சாப்பிட்டு வளர்ந்த பொழிலன் அப்பா என் முதல் இட்லியையும் சாப்பிட்டத நினைச்சா அவங்களுக்கு ஒரு சிலையே வைத்துப் பாராட்டலாம்! :)

மீன் வறுவல்:

இப்போ மீன் குழம்பு, கறிக்குழம்பு, சிக்கன் மட்டன் அது இதுனு சமைச்சு விதம் விதமா கலக்குற நான் முதன் முதலில் செய்த மீன் வறுவல்...

நான் சைவக் குடும்பத்திலிருந்து வந்ததால் இது பற்றி தெரியாது... என்னை யாரும் அசைவம் சமைக்கனும்னு கட்டாயப் படுத்தவும் இல்லை... நானாவே தான் செய்து பார்ப்போமேனு முயற்சில இறங்கினேன்....

மீன் வறுவல்னா உருளை வறுவல் போலனு நினைச்சு மீன் வாங்கி மீன்காரரே அதை வெட்டி சுத்தம் செய்து கொடுக்க நான் மேலும் கழுவிட்டு அதை அப்படியே வாணலியில் எண்ணெய் விட்டு தாளிச்சு, உப்பு மசாலா போட்ட மீனை வாணலியில் போட்டு கிண்டி கிளறி, பிய்ச்சு பிசறி...

இது என்ன பார்த்தா அத்தை வறுத்த மீன் மாதிரி இல்லையேனு யோசிச்சு சரி நமக்கு தான் ஒரு அப்பாவி இருக்காங்களே வந்ததும் கேப்போம்னு கேட்டா... என் மீன் வறுவலைப் பார்த்து அதிர்ச்சில அவங்க மயங்கி விழாதது தான் குறை! :))))

இது தாங்க என்னால் மறக்கவே முடியாத படு மோசமான முதல் மூன்று வகை சமையல் அனுபவம்!

இதைப் படிச்சுட்டு யாரும் எங்க வீட்டுக்கு வர பயப்பட வேண்டாம்... இப்போ நல்லாவே அசைவம் சமைப்பேங்க.... அழகான இட்லிகளும் சுடுவேன்! பொழிலனுக்குனே வேறு தனியே பல வகை சத்து உணவுகளை தயாரிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது ;) பொழிலன் அப்பாக்கிட்ட சமையலில் நல்ல பெயரே வாங்கிட்டேனா பார்த்துக்கங்களேன்... :)))) அதே போல பொழிலன் அப்பாவுக்கு பிடித்ததை செய்து தருவதும் மன நிறைவு அளிக்கும் விஷயம்! :)

ஆனால் சமையலில் நளபாகம் தான் சிறந்ததுனு சொல்ற நம்ம நாட்டில் மட்டுமில்லை, வெளிநாடுகளில் கூட சமையல் எப்படி பெண்கள் வசம் வந்தது என்று தெரியவில்லை....

முல்லை கூறுவது போல் ஒரு காலத்தில் பெண்கள் சமையலறைப் பக்கம் தான் இருப்பர் என்று படித்திருக்கிறேன் :( இன்றும் பல வயதான பெண்களை அப்படி பார்க்கலாம்.... இது மாற வேண்டிய ஒன்றுதான்.....

பின்குறிப்பு:

அப்பாடா ஒரு வழியா இன்னைக்கு ஒரு மொக்கைப் பதிவு தேத்தியாச்சு...