May 30, 2009

கொட்டும் பனி அருவியில் குட்டிப் பொழிலன்பொழிலனின் முதல் மே மாதம்... அவனை இந்த வயதிற்கேற்றவாறு எங்காவதுக் கூட்டிச் செல்லலாம் என்று இந்த கொட்டும் பனி அருவி கண்காட்சிக்கு அழைத்து சென்றோம்!

எனக்கோ குட்டிமாவிற்கு குளுராமல் அவன் மகிழும் விதமாக அனைத்தும் அமையவேண்டுமே என்று ஒரே யோசனை... ஒரு வழியாக கண்காட்சியகத்திற்கு வந்தாச்சு... பொழிலன் போன்ற அதி முக்கிய நபர்களுக்கு மட்டும் நுழைவு இலவசம் :))))) 4அடிக்கு மேல் வளர்ந்த குழந்தைகளுக்கு நுழைவு சீட்டு கண்டிப்பாக வேண்டுமாம்... நான் அதைவிட ஒன்றரை அடி தான் கூட... ஆனால் விடலயே :(((( (மனசாட்சி: அடங்கு அடங்கு!)

ஒரு வழியா உள்ளே நுழைந்தா ஆஹா! என்னா குளுமை என்னா குளுமை!
தரையெல்லாம் பனிக்கட்டி, சுவரும் பனி.... ரொம்ப அருமை!
ஆங்காங்கே சில இடங்களில் பனி அருவி உள்ளது... அதிலிருந்து பனி மழை போல்... முடியல பொழிலனுக்கு ஒரே கொண்டாட்டம்... பனி அவன் தலையில் படாம மறைத்து ஒரு சில சாரல் துளிகளை மட்டுமே அவனிடம் போக அனுமதித்தேன்... இவனுக்கு ஒரே கொண்டாட்டம்... அப்படி ஒரு சிரிப்பு...

அங்கே ஆட்டமும் பாட்டமும் என ஒரு நடனக் குழு குதித்துக் கொண்டும் ஒலி பெருக்கி அலறிக் கொண்டும் இருந்தமையால் கொஞ்சம் செவிக்குத் தொல்லை!

அடுத்ததாக பேய் குகை! பெயரக் கேட்டாலே சும்மா டெர்ரரா இருக்கா?
அந்த குகையில் விசேஷம் என்னனா இருட்டான அவ்வப்போது எரிந்து எரிந்து அணையும் விளக்குகளுடன், ஒரு குரல் " ஹெல்லோ பேயீயீயீ" என்று கேட்கும்... பின் சிறிது தூரம் சென்றதும் மற்றொரு குரல் கத்தும் கொலவெறியோட... நம்ம பயந்து கத்துறது இல்லனு அவங்களே கத்திக்கிறாங்க போல :))) ஏன்னா முதலில் எனக்கு சிரிப்பா தான் இருந்தது! :))))

இந்த குகை அங்கங்கே வளைந்து வளைந்து செல்லும்... ஒரு வளைவில் தான் ஒரு பயங்கரம் (அ) நகைச்சுவை! பொழிலன் ஒரு தைரியசாலி... ஒரு குட்டி மனிதன் பேய் வேடம் போட்டு ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்க நான் திரும்பியதும் அதைப் பார்த்து கொஞ்சம் பயந்தேன்... பொழிலன் அதைக் கண்டுகொள்ளவில்லை... ஆனால் அது திடீர்னு கையை தூக்கி ஆட்டுச்சு பாருங்க...

"ஆஆஆஆ அம்மா அம்மா!" இது நான்.... "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி!" இது பொழிலன்! அவனுக்கோ பேயைப் பார்த்து ஒரே சிரிப்பு... எனக்கோ பயம்...
அந்த பேய் வேடம் வெளியே வெளிச்சத்தில் சிரிப்பாக இருந்தாலும் உள்ளே கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு!

பிறகு வெளியே வந்து டோராவின் புதிர் வீட்டிற்கு சென்று வந்தோம்... வெளியே வந்தால் அதே பேய் மனிதன்... நாங்களும் சென்று பேசினோம் ஆனாலும் கை குலுக்க கொஞ்சம் பயம்... அது கையை புகைப்படத்தில் பாருங்களேன்.... பொழிலன் தான் அதோடு மறுபடியும் சிரித்து அது கையைப் பிடித்து நகங்களைத் தடவிப் பார்த்து மீண்டும் சிரிப்பு! :))) இளம் கன்று பயம் அறியாது!

ஒரு வழியாக பொழிலனுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணங்களாவே இருந்தது இன்று! :)))))

May 28, 2009

குழந்தையின் நிறமும் அறிவியல் உண்மைகளும்

கருவில் வளரும் குழந்தை நல்ல சிவந்த நிறமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக நாம் பொதுவாக குங்குமப் பூ உண்ணத் துவங்குகிறோம்!

ஆனால் நான் சில மாதங்களுக்கு முன் மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டறிந்த உண்மைகளை உங்களுக்காக கூறுகிறேன்...

குழந்தையின் நிறம் பற்றிய மருத்துவ ரீதியான விளக்கம்:

* குங்குமப்பூ கருவின் நிறத்தை தீர்மானிப்பதோ அல்லது அதில் மாற்றங்கள் செய்வதோ இல்லை; குங்குமப் பூ இரும்புச் சத்து நிறைந்தது அதனால் கர்ப்பகாலத்தில் இதனை எடுத்துக் கொள்வது நல்லது

*திராட்சை, நாவல் போன்ற பழங்களும் குழந்தையின் நிறத்தில் பங்கெடுப்பது இல்லை

*கேரட் குழந்தையின் நிறத்தை மேம்படுத்தும்

*குழந்தை கருப்பாக பிறந்துவிடுமோ என்று தாய்மார்கள் சிலர் இரும்புசத்து மாத்திரை உட்கொள்வதில்லை; இதுவும் தவறான கருத்து!

ஆகையினால் தாய்மார்களே இரும்புசத்து அதிகம் சேர்த்துக் கொண்டு உங்களையும் குழந்தையையும் ஆரோக்கியமாக பராமரித்துக் கொள்ளுங்கள்! :)

May 26, 2009

மே மாதமும் இன்றைய குழந்தைகளும் நேற்றைய நானும்

இந்த மே மாதம் என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான்!
பெரியவர்களானதும் தான் ஸ்ஸ்ஸ் அப்பா இந்த வெயில் தொல்லை தாங்கலீயே அப்படினு அக்கடானு ஒரு இடத்துலயே அடைந்து கிடப்பது எல்லாம் துவங்கிவிடும்!

ஆனால் சிறு பிள்ளை பருவத்தில் வெயிலாவது ஒன்னாவது... இப்படி ஒரு அருமையான நேரம் மீண்டும் கிடைக்க எவ்வலவு நாள் காத்திருக்க வேண்டும் என்று எந்த கவலையும் இன்றி, பசி, உறக்கம் கூட இன்றி எப்படியெல்லாம் விளையாடி இருப்போம் நாம்!

இப்போ ஏன் இந்த மொக்கைனு நீங்க கேட்க வருவது புரியுது... என்ன செய்ய நாள்தோறும் வீதியெங்கும் சிதறி ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும் போது மனதிற்குள் இந்த கொசுவர்த்தி சுருளும் ஒரு பெருமூச்சும் (சத்தியமா பொறாமை இல்லீங்கோ) வந்து போகிறது!

முதலில் எல்லாம் தேர்வு அட்டவணை வந்ததுமே படிப்பதற்கு அட்டவணை போடுவதோடு, பல புதிய விளையாட்டுகளையும் எழுதி வைத்துக் கொள்வோம்... விடுமுறை நாளை எதிர் நோக்கி :)

பொதுவாக ஓடிப் பிடித்து விளையாடுவது, ஐஸ் பாய்ஸ், கண்ணாமூச்சி, நாடு பிடித்தல், ஓடும் போட்டி, நொண்டி, முயல் ஓட்டப் போட்டி என்று பல விளையாட்டுகள் வெளியில் சென்று விளையாடுவோம்! அப்பா அப்போதெல்லாம் எவ்வளவு விழுப்புண்கள், வீரத் தழும்புகள் :))))) இப்போ நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!

இந்த வெயில்ல நாம ஆடுறத பார்த்து அம்மாஸ் எல்லாம் கவலை பட்டு கேரம், செஸ், பல்லாங்குழினு வாங்கிக் குடுத்து எங்க எல்லாரையும் மதியம் மட்டும் ரொம்ப சிரமப் பட்டு வீட்டுக்குள்ள அடைச்சாங்க! அப்பவும் அடங்குவோமா? ம்ஹும்...

சமையலறைல கண்ணுல கையில சிக்கினதையும், வெளியில் இருக்கும் செடி, பாதம் கொட்டை எல்லாத்தையும் பொறுக்கி சோறு சமைக்கிறேன் பேர்வழினு வீட்டையே மண், செடி குப்பையாக்கு சமைச்சு வெச்சிருப்போம்... அப்பா அலுவலகம் முடிந்து வந்ததும் அதை குடுக்குறதுல ஒரு மகிழ்ச்சி எனக்கும் அப்பாவுக்கும்! :)

மறுபடியும் வெளியே தான் ஆட்டம்... இப்படியா போயிக்கிட்டிருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு மாற்றம்... படிப்பு சுமையும் வயதும் ஏற துவங்கியாச்சு... :((( இப்படியெல்லாம் விளையாட அதிக நேரம் கிடைப்பது இல்லை மே மாதத்தில் கூட... இந்தி வகுப்பு, நடன வகுப்பு, யோகா அப்படி இப்படினு நாட்களை நிரப்பிடுவோம்! அப்படியே நேரம் கிடைச்சாலும் முன்ன மாதிரி ஓடி விளையாட கூச்சமா இருக்கும் அதுனால பூப்பந்து ஆட்டம் தான் விளையாடுவோம்... பதின்ம வயது பெண்(குழந்தைகள்) எல்லாரும் சேர்ந்து இரவு 8மணிக்கு விளையாட வருவோம் ஒரு 9மணி வரைக்கும் விளையாடுவோம்...

இப்படியா போகும் மே மாதங்களில் பெரும்பாலும் இந்த சுற்றுலாவும் இருக்கும் நான் 9வது வகுப்பு வரும் வரை... அதுவும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே அமையும் :)))) அதன் பிறகு சுற்றுலா கனவிற்கும் பள்ளி ஆப்படித்தது மே மாதத்தில் கூட :(((

கல்லூரி நாட்களில் எப்படி தான் மே மாதம் போனதோ தெரியலை! ஆனால் முதுநிலை கல்வி படிக்கிறப்போ சென்னைல கல்லூரி விடுதில நல்லா விளையாடுவோம்... எங்கள் விடுதியில் எல்லாருமே பெண்கள் எங்களுக்குனு தனி மைதானம், பூப்பந்தாட்ட ஆடுகளம், கிரிக்கெட் ஆடுகளம்(யாருக்கும் ஒழுங்கா விளையாடத் தெரியாதுன்ற உண்மைய எப்படி உங்க கிட்ட சொல்றது!), மேசைப் பந்து, கால் பந்து, கூடைப் பந்து என்று எல்லாவற்றிற்கும் தனி ஆடுகளம்... அதனால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!

அதிலும் இந்த பூப்பந்தும், கூடைப் பந்தும் மிகவும் பிடித்தமானது பெண்களுக்கு.... இந்த பூப்பந்தாட்ட வலை இருக்கே அதில் விளையாட்டோடு நிறைய செல்பேசி காதல் கதைகளும், திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டோரின் ஜொள்ளு மொக்கைகளும் நிரம்பியிருக்கும்! :)))))

அங்கே தான் மீண்டும் எங்கள் குழந்தைப் பருவ விளையாட்டுகள் அரங்கேறின... :)))) அத்துணை விளையாட்டுகளையும் விளையாடினோம் கண்ணாமூச்சி தவிர!

ஆனால் அங்கே மே மாதத்தில் விளையாட முடியாது... கல்லூரி நாட்களில் தான் விளையாடுவோம்.... ஆக இந்த மே மாத கும்மி 9வது வகுப்போடு போனது... பின்னர் கொஞ்சம் 10ம் வகுப்பு முடிந்த மே மாதம் தலை தூக்கினாலும் பழைய நிலைக்கு வரவில்லை நாங்கள் :(

கல்லூரி விடுதியில் ஓரளவு பழைய மாதிரி விளையாடினாலும் குழந்தைப் பருவத்தில் விளையாடின முழுமையான நிறைவு போல அது இல்லை :(

பின்னர் வேலை, திருமணம், குழந்தை என்று வாழ்க்கை மாறிவிட்டது!
இனி பொழிலனின் மே மாதங்களை தான் அழகாக்க வேண்டும்!!! :)))

(ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா... இதச் சொல்லவா இவ்வளவு பெரிய மொக்கைனு நீங்க புலம்புறது கேக்குது... என்ன செய்ய ஏதோ தோணுச்சு எழுதிட்டேன் அவ்வ்வ்வ் யாரும் அடிக்காதீங்க என்னிய)

பின்குறிப்பு:
என் மனசாட்சி:
அப்பா இந்த கொசுக்கடி தொல்லை தாங்க முடியல எல்லாருக்கும்! அடங்கவே மாட்டியா?

இதைத் தொடர் பதிவாக்கலாமா?

( மனசாட்சி: நீ எழுதுனதெல்லாம் ஒரு பதிவுனு இதுல தொடர் வேறயா?)

இன்றைய குழந்தைகள் அனிமேஷன் உலகம், கார்ட்டூன் படங்கள், வீடியோ கேம் என்று வீட்டிற்குள்ளேயே அதிகம் முடங்கியிருப்பதாக தகவல் :( எல்லாக் குழந்தைகளையும் கூறவில்லை ஆனால் பெரும்பான்மையான குழந்தைகள்????

நம் அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்வதன் மூலமும், படிப்பதன் மூலமும் பழைய நினைவுகள் மீண்டு நம் குழந்தைகளுக்கும் அப்படி விளையாடும் வாய்ப்பு கொடுப்போம் அல்லவா! அதற்காக தான் :)

இந்த மே மாத கொசுவர்த்தி சுருளைத் தொடர நான் அழைப்பது சில நட்சத்திர பதிவர்களைதான்!

*சித்திரக்கூடத்து சந்தனமுல்லை

*வானவில் வீதியில் வசிக்கும் கார்த்திக்

*எண்ணச் சிதறல்களை எழுத்துக்களாக்கும் வித்யா

எப்பவுமே உருப்படியாவே பதிவு எழுதிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்... அதனால என் புண்ணியத்துல ஒரு மொக்கை பதிவு! அதையும் உருப்படியா எழுதி கலக்கிடுவாங்கல... :))))

May 23, 2009

கர்ப்பிணிகளே.. பேசுங்க! பேசுங்க! பேசிக்கிட்டே இருங்க!கர்ப்பிணி தாய்மார்களே இது முழுக்க முழுக்க உங்களுக்கான வேண்டுகோள்!
என் அனுபவம் பற்றிய பதிவும் கூட! :)

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும் திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல் அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்।

பிறர் குரலும், மற்ற சத்தங்களும் ஓரளவு கேட்டாலும் தாயின் குரல் நன்றாகக் கேட்கும், விரைவில் தாயின் குரல் குழந்தைக்குப் பரிச்சயமாகிவிடும்!
அதனால் நீங்கள் 5வது மாதம் முதலே உங்கள் குழந்தையிடம் கொஞ்சிப் பேசுவது, சிரிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது, பாடல் கேட்பது, குழந்தையை அழைப்பது போன்றவற்றை செய்து பாருங்கள்! பலன் தெரியும்!

அதோடு நிறைய நல்ல கதை புத்தகங்கள் படிக்கலாம்; ஆனால் சில பெண்கள் குழந்தையைப் பெரிய புத்திசாலி ஆக்கவேண்டும் என்று கர்ப்பம் தரித்தது முதலே பாடங்கள் வகை பிரித்து படிக்கின்றனர்; குறள், தமிழ் ஆங்கில எழுத்துகள், எண்கள், வாய்பாடு, பொது அறிவு போன்றவற்றை மனப்பாடம் செய்கின்றனர்; இது மிக மிக மிகக் கொடுமையான குற்றம்!

வயிற்றிலேயே குழந்தைக்கு ஏட்டுக்கல்வி தேவையா? :( அதன் மன நிலை பாதிக்கப்படாதா? நான் இப்படிப்பட்ட தாய்மார்களை பார்த்து தான் இதைக் கூறுகிறேன்

இரவும் கூட கண்விழித்து கால அட்டவணை போட்டு அதன் படி படிக்கிறார்களாம்; என்ன கொடுமை இது! :(

இப்படி வளரும் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் புத்திசாலியாக இருந்தாலும் வளரும் போது மன நிலை பாதிக்கப்பட்டு, தன் சுய வேலைகளைச் செய்யத் தெரியாமல் படிப்பு மட்டுமே உலகம் என்று வாழ்ந்து இறுதியில் அதிலும் அடையாளம் இன்றி போகின்றனர்!

நமக்கு இது தேவை இல்லை; நான் கூறுவது ஆரோக்கியமான புத்தகங்கள் சில உங்களை வருத்தாமல் மன அமைதியுடன் படிக்கலாம்; நகைச்சுவை கேட்டு சிரிக்கலாம், தியானம் செய்யலாம், கதைகள் படித்து வாய்வழியே சத்தமாகக் குழந்தைக்குக் கூறலாம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் தற்போது என்று விளக்கிக் கொண்டே உங்கள் வேலைகளைச் செய்யலாம்;

நிச்சயம் உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதைக் கேட்கும், பிறந்த பின் உங்களை எளிதில் மிக விரைவில் அடையாளம் காணும், வயிற்றில் இருக்கும் போது நீங்கள் கூறிய விஷயங்களை நேரில் காணும் போது அதற்கு அந்த நினைவு நிச்சயம் வரும் அதானால் எளிதில் புரிந்து கொள்ளும்!

உதாரணமாக வானம் எப்படி இருக்கும் என்று கருவில் இருக்கும் போது தாய் விளக்கியிருந்தால் வானத்தை குழந்தை விரைவில் அடையாளம் காணும்!

இத்தனை விஷயங்களையும் என் அனுபவத்தை வைத்து தான் கூறுகிறேன்! என் அனுபவங்களைக் கேளுங்களேன்.....

* பொழிலன் வயிற்றில் இருக்கும் போது கரு ஆணா பெண்ணா என்று தெரியாது ஆகையால் பொதுவாக "செல்லக்குட்டி" என்று அழைப்பேன்
அவன் பிறந்து மருத்துவமனையில் இருந்து கூட வரவில்லை, அதற்குள் நான் படுக்கையிலிருந்து செல்லக்குட்டி என்று அழைத்தால் கண்ணைக் கூட திறக்காத என் பொழிலன் நான் இருக்கும் திசையில் என் குரல் கேட்ட பக்கம் நோக்கி தலையைத் திருப்புவான்! :)

*நான் அவனுக்கு காகம் தண்ணீர் அருந்திய கதையும், முயல்/ஆமை கதையும் அடிக்கடி கூறுவேன் கர்ப்பகாலத்தில்... அதனால் அந்த இரு கதைகளும் எப்போதும் தனி விருப்பக் கதைகளாகவே இருக்கின்றன அவனுக்கு!

*நான் பாடல், ஆடல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டு அவற்றை ரசிப்பதோடு "பாப்பா நீயும் பிறந்து வளர்ந்து இப்படி அழகா பாடனும், ஆடனும்"னு சொல்லுவேன்... அதுவும் இப்போதே செய்யத் துவங்கிவிட்டான்!
நின்று கொண்டு ஒரு கையால் யாரையாவது பிடித்துக்கொண்டு இன்னொரு கை, தலை, உடல், இடுப்பு என ஒவ்வொன்றையும் தனியே அசைத்து அழகாக ஆடுவான்; நான் முதலில் ஆடிக்காட்டுவேன் அதைப் பார்த்து அவனே செய்யத் துவங்கிவிட்டான்!

*பாடல்களும் அவனுக்கு எப்போதும் பிடித்தமானவை, ஏதாவது பாடல் பாடினாலே அழுகை நின்று சமத்தாகிவிடுவான்... இது பற்றி என்னுடைய பழைய பதிவுகளில் காணலாம்!

*நான் அவன் அம்மா என்று வயிற்றில் இருக்கும் போது பல முறை கூறியிருக்கிறேன் அதனால் தானோ என்னவோ அவன் முதல் மாதத்திலேயே அம்மா என்று அழுவான்! இதையும் பதிவிட்டிருக்கிறேன்!

*அவன் வயிற்றில் இருக்கும் போது வெகுநேரம் அசையாமல் இருந்தால் "பாப்பா செல்லகுட்டி என்ன பண்றே எழுந்துக்கோ அம்மா கூட பேசுடா" என்று கூறிக்கொண்டே இருந்தால் போதும் விரைவில் அசைய ஆரம்பித்துவிடுவான்!

*அதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களிலும், அதிகம் சிரிக்கும் தருணங்களிலும் பாப்பா உள்ளே செம குதியாட்டம் போடும்! :))))

இவை என்னுடைய அனுபவங்கள்!

பொதுவாக குழந்தை பிறக்கும் போது எல்லாவற்றையும் மறந்துவிடும், ஆனால் மீண்டும் அதே குரல், அதே பேச்சு, செய்திகளைக் கேட்கும் போது அனைத்தும் நினைவிற்கு வந்துவிடும்!

வளைகாப்பு கூட வளையல் சத்தம் குழந்தையை மகிழ்விக்கும் என்பதற்காகவே செய்யப்படுகிறது! :)))

அதனால் நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்! விபரீதமான முயற்சிகளில் இறங்காமல் நல்ல முறையில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!

கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையைப் பொறுத்தே குழந்தையின் மன வளர்ச்சி அமையும்!

அதனால் உங்கள் கர்ப்பகாலம் நல்ல முறையில் அமைய இறைவனை வேண்டிக்கொண்டு பயனுள்ள மொக்கையை முடிகிறேன்! :)May 22, 2009

பொழிலனும் நானும்- 3 - அம்மா! அதோ! அந்தோ!

இப்போது பொழில் குட்டிக்கு நன்றாக பொருட்களையும் உறவுகளையும் அடையாளம் காணத் தெரிகிறது :))

தம்பி ball எங்கேனு கேட்டா அவனுடை காத்தைடைக்கும் பந்துகளைக் காட்டி "அம்மா அதோ அந்தோ"னு பதில் கூறுவான்... அந்த பிஞ்சுக் கைகள் அவற்றை சுட்டிக் காட்டியபடி இருக்கும் அழகே தனி அழகு! :)

காகா, மாடு, பஸ், கார், பைக் இவற்றைப் பார்த்தாலே நான் எதுவும் கேட்காவிட்டாலும் கூட "அம்மா அம்மா அதோ அந்தோ!"னு எனக்கு காட்டுவான்! நான் அவனுக்குக் காட்டிய காலம் போயி என் பிள்ளை எனக்குக் காட்டுகிறான்! :)

நாங்கள் எங்கு சென்றாலும் பார்க்கும் அத்தனை பற்றியும் அவனுக்குக் கூறிக் கொண்டே வருவேன்... அதனால் இப்போது அவனும் ஓரளவிற்கு அனைத்தையும் அடையாளம் காண்கிறான் :)

எதிர் வீட்டில் ஒரு குட்டி பாப்பா... அவளை என் அம்மா தூக்கக்கூடாதாம் பொழிலனை மட்டும் தான் தூக்க வேண்டுமாம்... அவளை அம்மா தூக்கினாலே "ஆச்ச்ச்ச்ச்சிசிசி வா வா"னு ஒரே மிரட்டல் கலந்த அழுகை! :)

அவனுடைய விளையாட்டு பொம்மைகளுக்கு பெயர் வைத்திருக்கிறேன்... அந்த பெயர் பொம்மை எங்கே என்றால் அதனையும் அழகாக அவன் பாணியில் காட்டுவான் :)

நிலா எங்கே என்றால் மேலே பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது அவன் மேலே பார்க்கும் திசையில் நிலா இல்லையென்றால் "அம்மா ம்ம்ம்"னு மேலே கை காட்டி சிணுங்குகிறான்... இன்னும் பெரியவனானால் "அழாதேடா கண்ணு நீ நிலாவுக்கே போயி பார்த்துட்டு வா பெரியவனானதும்"னு சொல்லிடுவேன் :)

என்னுடைய பொருட்களை யார் தொட்டாலும் எனக்குப் பிடிக்காது அப்படியே அனாவசியமாக என்னைத் தொட்டு பேசுவதும் எனக்குப் பிடிக்காது... "தாயைப் போல் பிள்ளை" என்பது பொழிலனுக்கு நன்கு பொருந்துகிறது இந்த விஷயத்தில்! யாராவது கொஞ்சி பேசினால் பதில் சிரிப்பு, அரைகுறை பேச்சு, என்று எல்லாமும் உண்டு ஆனால் அவனைத் தொடாத வரை... அவனைத் தொட்டாலோ போச்சு... ஏய் ஆ ஆ! னு மிரட்டிடுவான்!

அதே போல அவனுடைய பாட்டில், பொம்மை அனைத்தையும் புதிய நபர் யாராவது தொட்டால் கோபம் வருகிறது அவனுக்கு... உடனே அதனை அவர்களிடம் இருந்து வாங்கிவிடுவான்!

இது நல்ல பழக்கம் என்றே நினைக்கிறேன்... தன்னையும், தன் உடைமைகளையும் புதியவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் நல்ல பழக்கம் தானே! :)

அவனுக்கு பேச்சு, நடை, பொருட்களின் பெயர், நடனம், ரைம்ஸ் பாடுதல் என நிறைய கற்றுக் கொடுத்து நன்றாக நேரம் செல்கிறது! அவனுக்காக நான் செலவிடும் அன்பும், நேரமும் கணக்கில்லாதவையாகவே இருக்கவேண்டும் என்பது என் பிறவி ஆசை! :)

May 17, 2009

பொழிலனும் நானும் -பகுதி 2


பொழில்குட்டி நியூஸ் போட்டு ரொம்ப நாளாச்சுல; அதான் இன்னைக்கு பொழில்குட்டி பற்றி இனிமையான மொக்கை! :)

பொழிலன் சேட்டைகள்:

பொழில்குட்டி இப்போ நல்லாவே நிற்க, பிடித்துக் கொண்டே நடக்கிறான்; அதானால் அவனை கையில் பிடிக்கவே முடிவதில்லை! "குட்டிமா இங்கே வா"னு கூப்பிட்டாலும் திரும்பி ஒரு ராஜ பார்வை பார்த்துட்டு மறுபடியும் "கடமையே (சேட்டை(அ)விளையாட்டு) கண்கண்ட தெய்வம்" னு தொடருவான்!

ஆனால் சாப்பிட வைக்க ரொம்ப பொறுமைதான் வேணும்! ஸ்ஸ்ஸ் அப்பா! ஒரு வழியா அவனுக்கு ஊட்டி முடிச்சா எதோ பெரிய விருந்து சாப்பாடே நான் சாப்பிட்ட மாதிரி தி்ருப்தி!

ஆனால் சேட்டைகள்தான் கலக்கல் போங்க! அவனுக்குத் தெரியாம ஒளிச்சு வெச்சுருக்க செருப்ப தேடி(அவருக்குத் தெரியாத இடமா?) கொண்டு வந்து சோபாவுல வெச்சு அது மேல துவைச்ச துணிய போட்டு.... அவ்வ்வ்வ் :( துக்கத்துலயும் சிரிப்புதான் வந்தது! :)

செல்ஃபோன் ரிங் சௌண்ட் வந்தா கூட டான்ஸ் தான்!

பொழில்குட்டி தூங்கும் நேரம்:

இப்போலாம் இரவு 12மணி வரை ஆட்டம் போடுறான்! எனக்கு தூக்கம் சொக்கும்... கண்ணு தூங்கலாம் வா டயலாக்... வேலைக்கே ஆவாது :(

கொஞ்சிக்கிட்டே கதை சொல்றது... கதை சொல்லி சொல்லி எனக்குதான் தூக்கம் வரும்... கதை முடிந்ததும் மறுபடியும் ஃபிரெஷ்ஷா எழுந்து உட்காருவானே பார்க்கனும்... அவ்வ்வ்வ்...

பாட்டு பாடலாம்னா ஐயோ இராத்திரி நேரம் அமைதியா ஊரு சனமெல்லாம் உறங்குது... இப்போ போயி நான் பாடினா டெர்ரரா இருக்காது?!! அப்புறம் விஜய்டிவில "நள்ளிரவில் பேயின் பாடல் கேட்டது, நடந்தது என்ன? சுழியத்திற்குள் வாருங்கள்" அப்படினு நம்மள வெச்சு ஒரு எபிசோட் தேத்திடுவாங்க! ஹி ஹி ஹி!

பேச்சாளர் பொழிலனுங்கோ :

இப்போ நிறையா பேசுகிறான்! ஏதோ புதிய புரியாத வார்த்தைகளும் வருது;

அது, இது, அங்கு, அஃகு(???), இங்கு, வா, தா, நேனா(வேணாம்), ஊஊ(நான் கையில் வைத்திருக்கும் பொருளை), காகா இதெல்லாம் சொல்றான்!

உறவுகளை ஓரளவிற்கு சொல்லக் கத்துகிட்டான்! :) தாத்தா தான் எப்பவுமே வாயில வருது... அப்புறம் அய்யா... இந்த இரண்டையும் வெச்சு அதுவே ஒரு பாட்டு பாடும்... ஏற்கனவே போன பதிவுல சொன்ன மாதிரி ஆட்டம் பாட்டம் தனி பதிவில்! :)

அம்மா என்பதை ஒரு நாளைக்கு 100முறையாவது சொல்லிக் கூப்பிடுறான்...:))))) பின்ன ஒரு தடவை கூப்பிடவே "அம்மா ம்மா ம்மா மம்மா"னு தொடர்ந்து பல தடவை சொல்லுவான் :) காதுல தேன் தான் பாயும் எனக்கு! :))))))))

இப்படி என்னைக் கூப்பிட்டுக்கிட்டே சமையலறைக்குள்ளே வந்தா போச்சு... பிறகு நானே கூப்பிட்டாலும் சார் வர மாட்டாரு... ஏனா அங்க தான் நிறைய விளையாட்டு சாமான் இருக்கு! கிரைண்டர், பாத்திரம் எல்லாமே தான்... அப்புறம் பெரிய மெக்கானிக் இஞ்சினியரா வேற ஆயிட்டாரு! கார், பஸ் (பொம்மை தாங்க) எல்லாம் பார்ட் பார்ட்டா கழட்டி போட்டுருவாரு!

பின்ன ஆராய்ச்சி பண்ணிதானே பலவற்றக் கத்துக்கமுடியும! :)

மாலை நேர பொழிலன் :

இப்போலாம் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்க சிறார் பூங்காவிற்கு அடிக்கடி பொழில்குட்டி போயிட்டு வரார்! அங்கு அவனுக்கு மிகவும் பிடித்தது மான்கள் மற்றும் குட்டி டோரா டோரா...

குட்டி டோரா டோராவில் அவனை உட்கார வைச்சு சுத்திக்கிட்டே நான் மெதுவா நடந்தேன்... அந்த மெதுவான வேகத்தில தான் அவன பிடிச்சுட்டே சுத்தினேன்... ஒரே குஷி தான் குட்டிமாவுக்கு!:)))))

தினமும் மாலை நேரத்துல காத்துவாங்க போவாரு! கோடைகாலம்ல அதுனால இந்த ஏற்பாடு :)

சில சமயம் அவரே பைக் எடுத்துக்கிட்டு போவாரு! நீங்களே பாருங்களேன் மேலே இருக்க போட்டோல.... :)

சிரி இன்னக்கு இந்த மொக்கை போதும்... சம்மர் டைம்ல எல்லாரும் உங்க உடல்நிலைய குளிர்ச்சியா வைத்து பார்த்துக்கோங்க :)


May 13, 2009

பெண் எப்போது அழகாகிறாள்? தெய்வமாகிறாள்?

இப்போது தான் அன்னையர் தினம் முடிந்திருக்கிறது... அதாவது அந்த ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமே... மற்றபடி என்றென்றும் அன்னையருக்கு அன்னையர் தினமே... :)

சரி மேட்டருக்கு வருவோம்। ஒரு பெண் இந்த உலக நாடக மேடையில் எந்த கதாப்பாத்திரத்தில் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்? மகள், சகோதரி, மனைவி, மருமகள், அண்ணி, அத்தை,அம்மா, சித்தி, பெரியம்மா, பாட்டிம்மா என்று விதவிதமான பாத்திரங்களை ஏற்றாலும் தாயும், தாரமுமே பொதுவாக அதிகம் பேசப்படுகிறது.

அதிகம் பேசப்படாத உறவுப் பாத்திரங்களிலும் ஒரு பெண் அழகாகவே ஜொலிக்கிறாள்! நம் அம்மாக்கள் வலைப்பூவில் அண்ணன் குழந்தையை தன் குழந்தைப் போல் பேணும் பாசமிகு அம்மாவான அத்தையைப் பார்த்தோம்.

இப்படி நமக்குள்ளே நம்மிடையே நாமே பல பாத்திரங்களிலும் பலவிதமாக பெண் என்பவள் அதிசயப் பிறவி என்றே நிரூபித்து வருகிறோம்... இது பல ஆண்களுக்கு தற்பெருமை பதிவாக, பெண்ணியப் பதிவாகக் கூடத் தோன்றலாம்! :) ஆனால் அதற்காக அல்ல... இது பெண்களைப் பற்றிய அலசல், பெண்ணின் பெருமையை பெண்ணே உணர வழி செய்யும் பதிவு; அவ்வளவுதான்! :)

தாயாக:

இந்த பாத்திரம் உலகிலேயே சிறந்த பெண்ணுக்கு பிறவியின் பயன்
அடைய வைத்த பாத்திரம்.

இதில் ஒரு ஆணின் உதவி இருந்தாலும் முழுக்க முழுக்க கர்ப்பகால வேதனை, வலி, பிரசவ வலி, அதன் பிறகு வரும் உபாதைகள் என அனைத்துமே ஒரு பெண்தான் ஏற்கிறாள்.

அதைவிட ஒரு தாயின் வாழ்வும், செயல்களும் வருணிக்க வார்த்தைகளற்றது! குழந்தை உண்டானதிலிருந்து உணவு, உறக்கம் தொலைத்து பின் எங்கே மீள்வது இந்த குழந்தை என்னும் இன்பக் கடலில் மூழ்கி உருகி உருகி குழந்தை மீது பாசமழை பொழியும் ஒரு தாய் என்பவள் எப்படிப்பட்ட கதாப்பாத்திரம் என்பதை சொல்லி விளக்க வரிகளே இல்லை!

வாய் வழி கூறாமலே உணர்வுகளைப் புரிதல் என்பது தாய்மையிலும் உண்மையான காதலிலும் மட்டுமே சாத்தியம்!

ஆனாலும் தாய் என்பவள் தன்னுள் உருவாகிய தன் இரத்தம் கொண்டு உருவான குழந்தையிடம் பாசம் வைத்தல் என்பது ஒரு பெரிய அதிசயமோ அல்லது அந்தக் குழந்தைக்காக விட்டுக்கொடுக்கும் விஷயங்கள் ஒரு தியாகமோ அல்ல!

தாய்மையை தியாகம் என்று சொல்லி தாய்மையின் மதிப்பைக் குறைக்க விரும்பவில்லை! இது அவள் கடமை, உரிமை! அவள் இரத்தம் அவள் கொடுத்த உயிர் அவள் அதைப் பேணுகிறாள்! பாசம் காட்டி, பரிவுடன் வளர்க்கிறாள்!

அது ஒரு தவம்! ஒரு ஆனந்தப் பரவச நிலை! தன் குழந்தையே தன் உலகம் என்று வாழும் தாய் அந்தக் குழந்தையின் வாழ்வில் ஒரு அழகான தெய்வமாகவே இருக்கிறாள்!

ஒரு தாயாக பெண் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்! வாழும் தெய்வமாகிறாள்!
******************************
ஆனால் மனைவி, மருமகள், மாமியார், அண்ணி போன்ற உறவு ஏற்கும் பெண்???????

மனையாளாக:

இந்த உறவு ஏற்றதுமே மருமகள், அண்ணி, அத்தை, சித்தி போன்ற உறவுகளையும் அதாவது தன் இரத்த சம்பந்தம் இல்லாத உறவுகளையும் சேர்த்து மனதில் சுமக்க ஆரம்பிக்கிறாள்.

அன்பு என்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டு புதிய வாழ்க்கையை புதிய இடத்தில் புதியவர்களுடன் துவங்கும் போது இருக்கும் மனநிலை வெகு விரைவில் மாறி அவள் புகுந்தவீட்டிற்காக எதையும் செய்யும் மனநிலைக்கு வந்துவிடுகிறாள்! அப்பெண்ணை என்னவென்று சொல்வது?

தனக்கு மாங்கல்யம் சூட்டியதால் மட்டுமே அந்த கணவனுடன் வாழ வேண்டும் என்று எண்ணாமல் அவனோடு மனதளவில் ஒன்றி, அன்பு காட்டி, மாமன் மாமியையும் தன் பெற்றோர் போல எண்ணி, அங்குள்ள அத்துணை உறவுகளையும் தன் உறவாக எண்ணி எப்படியெல்லாம் அன்போடும் பாசத்தோடும் கவனிக்கிறாள்!

அந்தக் குடும்பத்தின் உணவு, உடை, நடைமுறைப் பழக்கவழக்கங்களுக்கு அவள் தன்னையே மாற்றிக்கொள்கிறாள்! தன் கணவன் விருப்பத்திற்கேற்பவே முடிந்தவரை அனைத்தையும் செய்கிறாள்!

இப்படி எல்லா விதத்திலும் பிறருக்காகவே வாழும் அவள் அங்கு தான் தாய்மையும் அடைகிறாள்! அவள் தாய்மை அடைந்து கணவனிடம் குழந்தையைக் கொடுக்கும் போது இருக்கும் பெருமிதம் ஒரு மனைவியாக முழுமையாக சாதித்துவிட்டதையேக் காட்டுகிறது! "அவள் அந்தக் குடும்பத்திற்கு வாரிசை சுமந்து பெற்றுத் தரும் கருவறை கொண்ட கோயில்! வம்ச விளக்கைச் சுடர் விடச் செய்யும் தீபம்! ஆதலால்..." என்னும் வரிகளை ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

ஒரு மனைவியே தாயாகவும் மாறிக் கணவனைப் பார்த்துக்கொள்கிறாள்; ஒரு மருமகள் மாமனார் மாமியரின் இறுதிக் காலங்களில் ஒரு தாய் குழ்ந்தைகளைப் பார்ப்பது போல அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள்; அண்ணி என்பவள் தாய்க்கு அடுத்த தாயுறவு! அண்ணியும் ஒரு தாய் போலவே நடந்துகொள்கிறாள்!

குழ்ந்தைக்காக தன் கேரியரைத் தியாகம் செய்யும் தாய் சிறந்தவள் என்றால் மாமனார், மாமியாரைக் கவனிப்பதற்காகவே கேரியரைத் தியாகம் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள்! அவர்களை எப்படிப் புகழ்வது? மனைவி என்னும் உறவு ஏற்றதற்காக இத்துணை செய்யும் பெண்ணும் அழகானவள் தானே! :)

இந்த மனைவி என்னும் உறவு கூட தாயைப்போல ஈடு இணையில்லாத உறவு! ஒரு மனைவியால் ஒரு தாயாகவும் அன்புகாட்ட முடியும்! மனைவியும் ஒரு வாழும் தெய்வமே!

என்னைப் பொறுத்த வரை இந்த இரு உறவுகளில்தான் பெண் மிகவும் அழகாக, பரிபூரண அம்சங்களுடன் ஜொலிக்கிறாள்!

தாய், தாரம் என்னும் இரு வேறு தலைசிறந்த உறவுகளுக்கு ஈடு இணை இல்லை என்றே கூறலாம்! பெண் சிறந்தவளாக மூலதனம் அன்பு! அதை இவர்கள் இருவரும் அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்!

அன்பு செய் வாழும் வரை!
அன்பு செய் பிறர் வாழுவதற்கும்!
அன்பு செய் தன்னலம் இன்றி!
அன்பு செய் எதிர்ப்பார்ப்பின்றி!

இப்படி அன்பினை அள்ளி அள்ளி வழங்கும் அன்பு சுரபி பெண் என்பதை பெண்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! அன்பினால் ஒரு சிறந்த சமுதாயத்தையே உருவாக்கும் ஆற்றல் படைத்த சக்தி பெண்!

"அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
என்பதற்கு சிறந்த உதாரணம் பெண்!

பெண்மையைப் போற்றுவோம்!
பெண்மையை வணங்குவோம்!
பெண்மையை வாழ்த்துவோம்!

மக்கள்ஸ் இது வரைக்கும் பொறுமையோடு படித்துவந்த உங்கள் நல்ல மனசுக்கு நன்றி! உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் கூறலாம்! :)

டிஸ்கி:
இந்த இரு உறவுகளிலும் சரி வர தன்னை ஈடுபடுத்தாதப் பெண்களும் இருக்கிறார்கள்! அவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை :(

May 9, 2009

பிரசவத்திற்கு பின்!

"பிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்"


என்ற எனது பதிவு அம்மாக்கள் வலைப்பூவில் உள்ளது!
இதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு!

பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது;ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்...

நார்மல் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* குழந்தை பிறந்ததும் சில மணி நேரங்களில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு உடல் தெம்பு இருக்கும்;

* ஆனால் சிலருக்கு சில குறைபாடுகள் காரணமாக உடல் வ்லுவின்றி எழுந்திருக்க முடியாது, அதனால் பரவாயில்லை உங்களுக்கு முடியும் போது எழுந்து கொள்ளலாம்;

* நீங்கள் முக்கியமாக படுத்திருக்கும் போது உங்கள் கால்களை ஒடுக்கி வைத்தே உறங்க வேண்டும்;

*டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் நன்கு வேகமாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக; :)

* நன்கு நடைபயிற்சி செய்தல் அவசியம்; அப்போது தான் எடை பழையபடி வரும்; வயிறும் குறையும்;

*இப்போது நீங்கள் பெல்ட் (அ) காட்டன் துணி கொண்டு உங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ளுங்கள்; இது உங்கள் வயிற்றை பழைய அளவிற்கு இறுக்க உதவும்;

*இப்போது நீங்கள் வயிற்றைக் குறைப்பதற்காக உங்கள் மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

* உணவுக் கட்டுப்பாடு கூடவே கூடாது

*பத்திய உணவு என்று சமைத்துக் கொடுப்பார்கள்; தயவு செய்து சுவை பிடித்தாலும் பிடிக்காவிடினும் அதனை உண்ணுவதே சிறந்தது உங்கள் உடல் நிலைக்கும் உங்கள் குட்டிப் பாப்பாவுக்கும்;

சிசேரியன் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

* நீங்கள் மூன்று நாட்களில் நடக்கத் துவங்கலாம்

*நீங்கள் டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் மெதுவாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக; :)

* ஒவ்வொரு முறை குளித்தப் பின்பும் தையல் போட்ட இடத்துல் நீர் இல்லாமல் பார்த்து ஒற்றி எடுக்க வேண்டும்; துடைக்கக் கூடாது அவ்விடத்தில்;

* உங்களுக்கு அதிகம் பத்திய உணவு தேவை இல்லை; ஆனால் காரம் மற்றும் புளிப்பு, ஒவ்வாமை குணம் உள்ள உணவு கூடவே கூடாது;

* நீங்கள் உங்கள் வயிற்றை மருத்தவர் ஆலோசனைப் படி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பெல்ட் அல்லது துணி மூலம் கட்டலாம்। ஆயினும் முழுமையாக வயிறு ஒட்டுமா என உறுதியளிக்க இயலாது :(

*நீங்கள் மல்லாந்துப் ப்டுத்தவாக்கில் எழுந்திருக்கக் கூடாது; குப்புற படுப்பதும் கூடாது;

* அதிக எடை தூக்குதல், வேகமாக நடத்தல், அதிக அளவு வேலை செய்தல் கூடவே கூடாது 8மாதங்களுக்கு;

*சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்;

பொதுவாக இரு வகையினரும் செய்ய வேண்டியது:

* குளிர் பானங்கள், செயற்கை உணவுப் பொருள், கடை உணவு, குளிர்ந்த நீர், அதிக காரம், அதிக புளிப்பு, சிக்கன் மற்றும் அதிக சூடு தரும் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்;

*ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்காமல் விரைவில் உலர்த்திடுங்கள்;

*உங்கள் உடல் சூடு குழந்தைக்குக் கண்டிப்பாக அவசியம் ஆதலால் குழந்தை உங்கள் அருகாமையிலேயே இருக்க வேண்டும்; உங்களுடன் உங்கள் அருகிலேயே தூங்க வேண்டும்;

* அதிகம் தண்னீர் மற்றும் பால், மீன், கீரை, பச்சைக்காய்கறிகள், திராட்சை,
பலா, மா தவிர்த்து அனைத்து விதமான பழங்கள் போன்றவற்றை அத்தியாவசிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்;

*பால் குறையும் சமயம் ரஸ்க், பிரட், பீன்ஸ், கோதுமை உணவு, ஓட்ஸ் கஞ்சி, பால், தண்ணீர், மீன், தயிர் சாதம் போன்றவை உடனடியாகப் பால் சுரக்க உதவும்;

* கஸ்தூரி மஞ்சள் வயிற்றில் உள்ள கோடுகளை நீக்க உதவும்; ஆனால் சிசேரியன் செய்தவர்கள் வெளிப்புற புண் ஆறியது இதனை உபயோகிக்கலாம்;

*குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை கர்ப்பம் தரித்தல் கூடவே கூடாது; சிலர் பால் கொடுக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்று தவறாக நினைக்கிறார்கள்; அப்படியெல்லாம் இல்லை, எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம் :(

*குழந்தை வெகு நேரம் பால் குடிக்காமல் இருந்தால் சேர்ந்திருக்கும் பாலை எடுத்துவிடுவது நல்லது;

* அதிக இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்;

* முக்கியமானது என்னவென்றால் இப்போது உங்கள் குழந்தை மட்டுமல்ல நீங்களும் புதிதாகப் பிறந்திருக்கிறீர்கள்; ஆதலால் உங்கள் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவு மூலம் வலு சேர்க்க வேண்டும்;

*அதிக அளவு காய்கறி சூப், மட்டன் சூப், ஈரல், முட்டை, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்;

இப்படியெல்லாம் நம்மை நாமே பார்த்துக்கொண்டால் வயதானாலும் தெம்புடன் இருக்கலாம்; பிரசவத்திற்கு பின் உடல் நிலையை கவனிக்கவில்லை எனில் பிற்காலத்தில் பாதிப்பு.

இதில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்; இதில் தாய்மார்களுக்கான குறிப்புகள் மட்டுமே கொடுத்துள்ளேன்!

வாய்ப்பிற்கு நன்றி முல்லை மற்றும் வீணாவிற்கு! :)

அன்னையர் தின வாழ்த்துகள்!


"செல்வத்துள் செல்வம் மக்கட்செல்வம்"
அச்செல்வத்தினை அடையப் பெற்ற, பிறவிப் பலன் எய்திய
அன்னையருக்கும், வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருக்கும் தெய்வத்திற்கு ஒப்பான அன்னையருக்கும், மனைவியாக இருந்து ஒரு தாயாகவும் மாறி கணவனைப் பார்த்துக்கொள்ளும் அன்னையருக்கும், மாமியாரானாலும் ஒரு தாயாகவே மருமகளுக்கு/மருமகனுக்கு இருக்கும் அன்னையருக்கும், இன்னும் அக்காவாக, அண்ணியாக, தங்கையாக, மகளாக உறவு ஏற்றிருந்தாலும் தாய்க்கு ஒப்பாக அன்பு செய்யும் அனைத்து தாயுள்ளங்களுக்கும் என்னுடைய "அன்னையர் தின வாழ்த்துகள்!" எங்கள் மூவரின் சார்பாகவும் :)


அன்பு செய்வீர்! என்றும்! எப்போதும்! எங்கும்! எல்லோரிடமும்! அன்பு செய்வீர்!

May 8, 2009

அம்மா.... உனக்கான எனது வணக்கங்களுடன்...
அம்மா உனக்காக உன் மகளாக நான் என்ன செய்யப் போகிறேன்?

நீ என்னை எந்த நிலையில் பெற்று வளர்த்தாய் என தெரியும்... அது உடல் ரீதியாக உனக்கு எத்துணை சிரமமானதானாலும் அது பாராமல் என்னை ஆளாக்கினாய்!

முதன் முதலில் நீ எப்போது என்னை பள்ளிக்கு அழைத்து சென்றாய் என் நினைவில்லை... ஆனால் நீ பள்ளிக்கு உணவு எடுத்து வருவாய் நான் சூடாக உண்ண வேண்டுமென!

ஒவ்வொரு வருடமும் நான் வகுப்பில் முதன்மை பெற்றதால் வருடந்தோறும் பரிசு பெற்றிருக்கிறேன்! ஆனால் மகிழ்ச்சி உன்னில் கண்டேன்! நீ பெற்ற பரிசைப் போல எல்லோரிடமும் சொல்லிப் பெருமைப் பட்டாய்!

முதன் முதலில் இனி எனக்கும் புடவை வாங்க வேண்டும் என அப்பாவிடம் நீ கூறி அதுவும் ஒரு பட்டுப் புடவையாக வாங்கினாய்... உன் மகள் அணியும் முதல் புடவை பட்டாக இருக்க வேண்டுமென!

நான் முதன் முதலில் புடவை அணிந்து வெளியே சென்ற போது பயம் கலந்த பெருமிதத்தை உன்னில் கண்டேன்!

அப்பா தான் எனக்கு முதலில் பிடிக்கும் என எத்துணை முறை கூறியிருப்பேன்? ஆனால் முதன் முதலில் உன்னை நம் வீட்டைப் பிரிந்து விடுதிக்கு செல்கையில் விட்டேனே கண்ணீர்... அதில் நீ இருக்கக் கண்டேனம்மா!

தொட்டதற்கெல்லாம் உன்னை கடவுளிடம் வேண்ட சொல்லி கூறுவேனே... நீயும் எப்போதும் எனக்கான வேண்டுதல்களுடன் இருப்பாய்!

மணமுடிக்க நிச்சயித்த போதிருந்தே பம்பரம் போல் சுழன்றாயே! திருமணத்தன்று பாதபூஜை செய்கையில் உன் காலின் பருத்த வீக்கம் கண்டு அதிர்ந்தே போனேன்!

மாங்கல்யம் ஏற்கும் அந்த நொடியில் கூட சந்தோஷம் ஒரு புறம், இப்படியெல்லாம் எனக்காக உழைத்த உன்னைவிட்டு பிரிந்துசெல்கிறேனே என்ற துயரம் ஒரு புறம் என கண்ணீர் சிந்தினேனே!

இரு சிசேரியன் கண்ட நீ... உடல் வலுவே இல்லாத போதும் எங்களைப் பெற்றாய்! ஆனால் இன்று எனக்கு சிசேரியன் என்றதும் தேம்பி தேம்பி அழுதாயே! ஏனம்மா?

உன்னை விட தெம்பான நான் நீ கண்ட வலியைக் காண மாட்டேனா? ஆனால் உன் தாயன்பு.. என் வலி பொறுக்காமல் புலம்பியதே!

உன் விடாத முதுகு வலியிலும் என்னைத் தூக்கிப் பணிவிடை செய்தாயே நான் கால் பிரச்சனையில் சுருண்ட போது!

இன்றும் கூட உன் முதுகு வலியையும் பாராது என் மகனையும் சுமக்கிறாயே! சுமந்து நடந்து சோறூட்டுகிறாயே! நீ வாழ்க!

உன் பேரனுடன் கொஞ்சுகையில் என் குழந்தையாய் நீ!

உன்னுடன் சண்டையிடுகையில் உன் தோழியாய் நான்!

எனக்கு எத்துணை கதைகள் சொல்லியிருக்கிறாய்! அந்த அளவுக்கதைகளை எந்தத் தாயும் இதுவரை கூறியிருக்கமாட்டாள்!

நீ பாடும் குழந்தை பாடல்கள் யாவும் இன்னும் என் காதில் ஒலிக்கிறது!

"கை வீசம்மா கை வீசு" எனக்கு பலூன் சட்டை போட்டுவிட்டு பாடினாய்!

உனக்கான கனவுகளை எங்களோடு இணைத்துவிட்டு... எங்கள் வாழ்வில் உன் கனவினைக் காண்கிறாய்!

நீ தாயாகிய தெய்வம்... மிகவும் உடல் நிலை தளர்ந்த நீ விரைவில் ஊட்டம் பெற இறைவனை வேண்டுகிறேன்!

இந்த அன்னையர் தினத்திற்கு உன்னை வாழ்த்த வயதில்லை ஆதலின் வணங்குகிறேன்!

உனக்காக வேண்டுதல்களுடன் எப்போதும் நான்!

உனக்காக மட்டுமன்றி உலகில் அன்னையாய் பிறந்த அனைவருக்காகவுமே வேண்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! தாய்மைக்குத் தலை வணங்குகிறேன்!

May 5, 2009

ஏன் இந்த கொலவெறி? அப்படிதானே கேக்கபோறீங்க :)


நீ கொடுத்த உயிரைக் கூட
பிரசவித்து விடுவேன்
மடியில்!
உன்னை மனதினின்று
பிரசவித்தால்மரணித்து விடுவேன்
நொடியில்!

நீ கொடுத்த உயிரோ
என் உள் துடிக்க...
என் உயிரோ
உன் உள் துடிக்கிறது!

நீ நானாக
நான் நீயாக
உனக்கான என் காதல்
நம் குழந்தை!


நீ தானோ
என்னுள்ளே நகலாய்??
உன் வாசம்
என் மூச்சில் தெரிகையில்!

பின்குறிப்பு:

சும்மா கவிதை எழுத முயற்சி பண்ணினப்போ கிறுக்கினது... இப்போ இங்க... பாவம் தான் நீங்க... பிளீஸ் யாரும் கல்லலால அடிச்சிடாதீங்க... கவிஞர்கள் நோ நோ இது நீங்க படிக்க வேண்டிய பக்கம் இல்ல! :)

May 3, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 3
ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்( ஆபரேஷன் தியேட்டரில்) - 2


என் குழந்தை இந்த உலகத்தைக் காணும் பொன்னேரத்திற்காக நான் கடவுளை வேண்டத் துவங்கினேன். "கடவுளே அது பிறக்கும் இந்த நேரம் நல்ல நேரமாக, என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும்... எந்த குறையும் இன்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறந்து இறுதி வரை அப்படியே ஆரோக்கியத்துடன் இருக்க அருள் பண்ணிடேன்!" இப்படியெல்லாம் என்னன்னவோ தத்துபித்துனு சாமிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

ஆஹா! வயிற்று மேலே சில கைகள்! இங்க தான் சிஸ்டர்... நல்லா பிடிச்சிக்கோங்க... அப்படி இப்படினு ஏதோ பேசிக்கிட்டாங்க... நான் தலையை அப்படி இப்படி அசைத்து கண் துணி ஓரளவு விலகி எனக்கு தெரியும் படி செய்தேன். :) என் வயிறு தான் தெரிந்தது. அப்புறம் ஒரு கோடுதாங்க போட்டாங்க வயித்துல.... குபுக் குபுக்னு தண்ணீர் கொட்டுச்சு! அடக் கடவுளே இவ்வளவு தண்ணீர் இருக்கேனு நினைச்சேன்... பின்ன ஏன் தண்ணீ இல்லனு சொன்னாங்கனு யோசிக்கும் போதே... டாக்டர் ஃபுல் கட்டிங் முடிச்சாச்சு போல... :) நல்லா இழுங்க.. பார்த்து ஜாக்கிரதைனு சொல்ல இரு கைகள் என் மேல் வயிற்றை மார்பு நோக்கி இழுத்தது பார்க்க முடிந்தது.. சரியா உணர முடியல...

ஆஹா! ஆஹா1 ஆஹா! என்ன சொல்ல எப்படி சொல்ல... அந்த ச்ங்கீதம்... வாழ்க்கையில மறக்க முடியாத இனிமையான சங்கீதம்.... "ங்கா ங்கா ங்கா"னு என் தங்கம், செல்லம், குட்டிமா சத்ததோட வந்துச்சு! :) :) :)

இதை எழுதும் போதே கண்ணுல கண்ணீர் கன்னத்துல ஓடுதுங்க! அவ்வளவு சந்தோஷம்... :) ஆனந்த கண்ணீர் இப்போ. அப்பனா அப்போ எப்படி இருந்திருக்கும் எனக்கு... என் உலகமே என் கைக்கு வரப் போகுது!

ஆனால் அந்த இரு கைகள் என் வயிற்றை இழுத்துபிடித்த படியே இருந்ததால அப்போ குட்டிமாவ பார்க்க முடியல.:(

நான் இந்த உலகத்துக்கு வந்த காரணம் புரிஞ்சாச்சு! என் பிறப்பின் அர்த்தம்... எங்கள் காதலின் கல்யாண பரிசு... குட்டியான அழகான பூ... இப்படி என்னனமோ நினைச்சு எப்படா பார்ப்போம்னு இருக்கையில, குழந்தையை சுத்தம் பண்ணி திரும்ப கொண்டு வந்தாங்க... அப்போ குழந்தை அழுகை இல்ல... எனக்கு என் வயிற்றில் தையல் போடுவது தெரிந்தது! பிறகு சில நிமிடங்கள் கண் அயர்ந்தது போல இருந்தேன்... அதற்குள் ஐயோ குழந்தையை நான் தான் முதலில் பார்க்கனும்னு கண் திறந்தா என் வயிற்றை துடைச்சிக்கிட்டு இருந்தாங்க... எல்லாம் முடிந்தாச்சு போல :)

கண் கட்டை கழட்டினாங்க... இப்போ எல்லா பக்கமும் பார்க்க முடிந்தது... நான் என் குழந்தையை தேடினேன்... :( காணோம்... பிறகு அந்த மயக்க மருந்து டாக்டர் வந்து இவங்க கிட்ட குழந்தைய காட்டலாம இல்லனா இவங்கள தூங்க வைக்கலாமானு என் டாக்டர் கிட்ட கேட்டாரு :( அடப்பாவி என்ன குழந்தைனும் சொல்லாம, கண்ணுலயும் காட்டாம... என்னயா கேள்வி இதுனு நினைச்சுக்கிட்டு " குழந்தை எங்கே?" கேட்டேவிட்டேன். :) அங்க தான் ஒரு குட்டி அறைல இருந்தது பாப்பா...

தூக்கிட்டு வந்தாங்க.... உங்களுக்கு பையன் அப்படினு சொன்னாரு.. ஆஹா! ஆஹா! எனக்கு குழந்தையா? இதுவா என் வயிற்றுல இவ்வளவு நாள இருந்தது? thank god... எப்படி அழகு... மொத்த அழகும் இங்க இல்ல இருக்கு... கடவுளே நேரில் வந்துட்டாரோ? ஆனால் இது ரோஜாப் பூ மாதிரியே இருக்கே... அதே இளஞ்சிவப்பு ரோஜா நிறம்... கண்ணை இருக்க மூடி கைகள மூடி... அழகா! எவ்வளவு அழகு? எப்படி தூங்குது... எனக்கு பேச்சே வரல... அவ்வளவு சந்தோஷம்... கண்களில் கண்ணீர் பொங்கி வழியுது அப்ப... கண்ணாலயேவும் கை ஆட்டியும் கிட்ட வர சொல்லி சைகை காண்பிச்சேன் :)

என் பக்கத்துல வந்து குழந்தையைக் காண்பிச்சாங்க...:) தொட்டேன் மெதுவா... ஆஹா! எவ்வளவு மிருதுவா... என்னால முடியல... "thank god" னு மட்டும் வாயிலிருந்து தானா வந்தது. அப்புறம் ரோஜாப்பூ மாதிரியே இருக்குலனு சொன்னேன். அந்த டாக்டர் சிரித்தார். :) அப்புறம் டாக்டர் என்னிடம் உங்க வீட்டுல எல்லார்கிட்டயும் காட்டனும் அதுனால குழந்தையை தூக்கிட்டுபோறோம்னு சொல்லிட்டு கொண்டு போயிட்டாரு!

அப்பாடா ஒரு வழியா குட்டிமா வந்தாச்சு! ஆனால் அவனைப் பார்க்கும் போது என் அப்பா, அம்மா, கணவர், மாமா, அத்தை இவங்க முகம் விரிந்து சிரிக்கும் அந்த காட்சியை பார்க்கமுடியல!

எனக்கு என் கணவரை உடனே பார்க்கனும் போல இருந்தது. ஆனால் அதற்குள் அந்த தியேட்டர் குரூப் எந்த அறிவிப்பும் இல்லாம என்ன தனி அறைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அதற்குள் ஆண்கள் அனுமதி இல்லயாம். :( அம்மா, சித்தி, அத்தை எல்லாம் வந்து பார்த்தாங்க.

குட்டிமா உள்ள மஞ்சள் லைட் கீழே விளையாடிட்டு இருந்ததது! இளம் வயது சிஸ்டர்கள் பார்த்து " எவ்வளவு அழகு! சேட்டை! உன்னை நானே கட்டிக்கிறேன்... " அப்படி இப்படினு அப்பவே ஒரே போட்டி! பெண்கள் பட்டாளம் புடை சூழ என் தங்கம் தங்க நிற வெளிச்சத்துக்குக் கீழே ஜொலிச்சது! :)

கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தேன்... இன்னமும் சொல்லிக்கிட்டே இருக்கேன்! :)
இப்படி ஒரு சந்தோஷம் என் வாழ்க்கையில வேறு எந்த சந்தோஷத்துலயும் அனுபவித்ததே இல்லை... :)

தாய்மையை உணர்ந்தேன்! அனுபவித்தேன்! மெதுவா என் கை தூக்கி குழந்தையை லேசா தொட்டேன். குழந்தைக்கு பால் கொடுக்க என் அத்தை உதவினார். அம்மா! அப்போ பொங்கின தாய்மை உணர்ச்சிய எப்படி சொல்ல... வார்த்தையே கிடையாதுங்க! எனக்கு ஒரே ஆச்சரியம்... " இப்போதானே கண்ணு வந்த... அதுக்குள்ள உனக்கு சாமி பால் குடிக்க கத்துக்கொடுத்தாட்டாரானு " கேட்டேன்... :) குழந்தையோட ஸ்பரிசம், கூடான அதோட கை... அப்பப்பா என்ன ஒரு சந்தோஷம்... இப்ப நினைச்சாலும் என் குழந்தை பிறந்த அந்த தருணம் புல்லரிக்குது! கண்ணீர் பொங்குது! தாய்மை எப்படிப்பட்ட உணர்வு! புனிதமானது!

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(ஆபரேஷன் தியேட்டரில்) - 2

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

இந்தப் பதிவின் தொடர்ச்சி...

நான் வலியோடு ஒரு பக்கம், வயிற்றில் குழந்தையின் விளையாட்டினை ரசித்தல் ஒரு பக்கம், குழந்தை பார்க்க எப்படி இருக்கும் குண்டாவா இல்லை நார்மலாவா மல்லிகை/ரோஜாப்பூ நிறம் எவ்வளவு முடி என்றெல்லாம் எண்ணிக்கொண்டே இரவு வரை ஒப்பேற்றிவிட்டேன்.

நான் இரவில் செமயா சாப்பிட்டேன்... பின்னே அடுத்த 3நாட்களுக்கு நோ சாப்பாடு.. :( குழந்தை இருக்கையில் பசி தெரியாது என அப்போ உணரல.. :) ஆப்பிள் ஜூஸ், தோசை, இட்லி, பால் என செமயா தள்ளினேன் உள்ளே! இரவில் மானிட்டர் வைத்து குழந்தையின் அசைவைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். :) எனக்கோ தூக்கமே வரல... கணவரை எதிர்பார்த்து டைம் பார்த்துக்கிட்டே இருந்தேன்! :)

ஸ்ஸ்ஸ்... அப்பாடா! விடிந்தாச்சு... :) இன்று முதல் இனி வருடம் தோறும் இன்னாள் தான் பொன்னாளே எந்தன் வாழ்வில் :) இன்று என் குழந்தையின் பிறந்த நாள்! ஆணோ பெண்ணோ... நாங்கள் 'ப' வரிசையில் ஆண்/பெண் பெயர்களை யோசித்துக் கொண்டிருந்தோம் தூய தமிழில் :) நான் குழந்தைக்குத் தேவையானதை தனியே எடுத்து வைத்திருந்தேன் சில நாட்களுக்கு முன்பே... அது இப்போது தயாராக இருந்தது :)

கணவருடன் வெகு நேரம் பேசிப் பேசி மதியம் குளித்து முடித்து ஃபிரெஷாக தயாராகலாம் தியேட்டருக்கு என்று எண்ணிக் கொண்டிருந்தால் மதியமே வந்து என்னை மயக்கமருந்த்து டாக்டரிடம் ஊசி போடலாமா என சோதனை செய்ய அழைத்துச் சென்றனர்.

அவரோ என் கால் வலியினால் ஊசி போட ஒத்துழைக்க முடியாது அதனால் மயக்கம் அளித்துவிடலாம் என்றார். அய்யோ என் பல நாள் கனவு என் குழந்தை பிறக்கும் போதே குரலைக் கேட்கனும்; நான் தான் முதலில் குழந்தையைப் பார்க்கனும்! அதுக்கே ஆப்படிச்சா எப்படி? வலி என்னங்க வலி என் குட்டித் தங்கத்துக்கு முன்னாடி... அதுனால டாக்டர் கிட்ட நான் தலை கால் எல்லாம் மடக்கி ஒத்துழைக்க முயற்சிக்கிறேன் தயவு செய்து என்னை தூங்க வெச்சுடாதீங்கனு கெஞ்சினேன்... அவரும் ஒத்துக்கிட்டார்.

ஆனால் பிறகு என் அறைக்கு என்னை கொண்டு செல்லவில்லை... :( நேரே லேபர் ரூம் தான்! அங்கு எனக்கு மேக்கப் நடந்தது... அதாங்க தலை பின்னி குல்லாய் போட்டு, ரொம்ப காத்தோட்டமா ஆவிங்க போடுற மாதிரி ஒரு டிரஸ்... இது இப்போ வேண்டாம் நான் தியேட்டர்கிட்ட போயி இதை போட்டுக்கிறேனு சொன்னா கேக்குறாங்களா? ம்கும்... நான் குளிக்கவே இல்ல பிளீஸ் குளிக்கவிடுங்களேனு சொன்னா ம்கும்... 4.45கு கட்டிங் டைம்(வயிற்ற அப்போதான் ஒபன் பண்ண சொல்லி அப்பா ஆர்டர்) அது தான் நல்ல நேரம் மாலைல... ஆனால் நான் 3மணிக்கே ரெடி...

இப்போ மாட்டு ஊசி, யூரின் பேக்னு பல ஆயுதங்களோட அந்த சிஸ்டர் பத்ரகாளி மாதிரி வந்து நின்னுச்சு! முதுகில ஊசி போட்டதுக்கு அப்புறம் இந்த யூரின் பேக் வைங்களேனு சொன்னேன் கேக்கலயே :( அய்யோ......... அம்மாஆஆஆஆஆஆஆஆ... இப்படி தான் அலறினேன் அதை வைக்க :( அடுத்து கையில மாட்டு ஊசி டிரிப்ஸ் போட... மறுபடியும் ரிப்பீட்டே... அய்யோ......... அம்மாஆஆஆஆஆஆஆஆ... ஸ்ஸ்ஸ்ஸ்... இப்போ அம்மா, கணவர்னு மாறி மாறி வந்து என்னை பாத்துக்கிட்டாங்க. என் காமெடி கோலத்தைப் பார்த்து என் கணவருக்கு கொஞ்சம் பீதி, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் பயம்... ஆனால் குட்டிமா வரப் போற நேரம் நெருங்குதுனு நிறைய சந்தோஷம் எங்களுக்கு.. :)

அப்பாடா ஒரு வழியா என்னைத் தூக்கி ஸ்டெட்சர்ல போட்டாச்சு... எனக்கு வலியும் தாங்க முடியல.. சிரிப்பையும் அடக்க முடியல... எல்லாரும் இப்ப என்னைய சீரியஸா லுக் விடுவாங்களே.. அதை நினைச்சு தான் சிரிப்பு.. :) அதே மாதிரி எல்லாரும் கியூல நின்னு பை சொல்லிட்டு பின்னாடியே வந்தாங்க. அதுக்குள்ள இந்த லிஃட்ல வேற செம கும்பல் :( நாங்க தான் கியூல முதல் வண்டி ஆனால் ஒரு தள்ளுவண்டியோட ஒரு சிஸ்டர் முந்த பாத்தாங்க என்னோட சிஸ்டர் சொல்லியும் கேக்காம... நானே சொல்லிட்டேன்.." என் அவசரம் புரியாம முந்தாதீங்க நாங்க பாப்பாவ பார்க்க போறோம்னு" :)

ஒரு வழியா தியேட்டர் முதல் வாயில் தாண்டி போயாச்சு... உள்ளயும் போயாச்சு.. ஆஹா! என்ன அழகு... எல்லாமே வெள்ளை... :) ஒரே சுத்தம் :)அங்க போயி மெதுவா தியேட்டர் பெட்டில் என்னைப் போட்டாங்க... அது அவ்வளவு மிருதுவா இல்ல... :( அப்புறம் சுய புராணம் கேட்டாங்க! இப்போ முதுகுல ஊசி போடுற டர்ன்...

ஒரு வழியா பாடுபட்டு திரும்பி ஊசிப் போட்டா... இந்த மம்மி படத்துல வண்டு உடம்புக்குள்ள ஊறுமே அப்படி ஒரு ஊறல் உடம்பெல்லாம்... உடம்பெல்லாம் கூசுது... :) ஊசி போட்ட இடம் மட்டும் வலிக்குது :(
அப்புறம் ஒன்னுமே தெரியல... தொட்டுப் பார்த்துக் கேட்டாங்க... தொடு உணர்ச்சி இருக்குனு சொன்னேன் கில்லி வலிக்குதானு கேட்டாங்க.." நோ பட் கில்லுறது தெரியுது லேசா"னு சொன்னேன். இடுப்பை மெதுவா தூக்கி அந்த சிசேரியன் பேட் போட்டு அது மேல படுக்க வைச்சாங்க :)

"எல்லாம் ஓகே டாக்டர் நீங்க ஓகேயா?" இது ஒரு நர்ஸ். திரும்பி பார்த்தா டாக்டர் கிரீன் கவுன்ல... அவங்க தோடு சூப்பர். நான் அதையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.. கண்ணை கட்டிவிட்டுட்டாங்க... நீங்க வயிற்றை பார்க்கக் கூடாதுனு டயலாக் வேறு! :( அப்புறம் மூச்சுவிட ஆக்ஸிஜன், ஆடோமேடிக் பல்ஸ் செக்கிங்னு என்னை டெர்ரர் மாதிரி படுக்கவெச்சாச்சு!
ஆபரேஷன் அப்போ பாதியில எழுந்து நானே பண்றேனு சொல்லுறதுக்கு இது என்ன சமையலா? ஆனாலும் கை இரண்டையும் கட்டிபோட்டாங்க ஒரு கிளிப் மாதிரி இருந்தது உணர்வுக்கு!

ஆஹா! பதிவு ரொம்ம்ம்ப பெருசா ஆயிடுச்சே... ஓகே குட்டிமாவ நாளைக்குப் பார்க்கலாம்! :):)

May 2, 2009

என்னுடைய பதிவுகள் - யூத் புல் விகடனில்! :)

என்னுடைய விதம் விதமா இட்லி சுடலாம் வாங்க என்ற பதிவு முதன் முதலாக யூத் புல் விகடனில் வந்தது!அது எனக்கு தாமதமாக தெரிந்தது.

இன்று கிரேட் என்னும் தலைப்பின் கீழ் என்னுடைய "காதலில் உளறல்" கவுஜயும் மற்றும் குட் பிளாக்ஸ் என்னும் தலைப்பின் கீழ் " ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 1" பதிவும் வெளியாகியுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விகடனுக்கு என்னுடைய நன்றிகள் பல! :) அதன் தொடுப்பையும் கீழே இணைத்துள்ளேன்.

http://youthful.vikatan.com/youth/gayathripoem02052009.asp
- இதில் கவுஜ உள்ளது :) பதிவுலகில் சிலருக்கு மட்டுமே தெரிந்த என்னுடைய நிஜ பெயரோடு!(சுப்புலக்ஷ்மி @ சுபா) :)

இந்த கவுஜ என்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டு அதற்கு வந்த கருத்துகளைப் பார்த்த பிறகு தான் இதனை விகடனுக்கு அனுப்பலாம் என்று தோன்றியது :) அதனால் என் கவுஜைக்குப் பின்னூட்டம் இட்டு ஊக்கப் படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி! :)


என்னுடைய வலைப்பக்கத்தின் தொடுப்பும் உள்ளது குட் பிளாக்ஸ் தலைப்பின் கீழ்! :)

மிக்க மகிழ்ச்சி! :)

May 1, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

இந்த உலகத்தில் பெண் பிறவி எடுத்துவிட்டாலே அப்பிறவி முழுமையடைவது தாய்மையில் தான்!
தாய்மை என்பது ஒரு உணர்வு. அது வார்த்தைகளில் முழுமையாக அடங்காது. மனதிற்குள் பொங்கும் பாச வெள்ளம், உயிர் துடிப்பு, பிறவிப் பயன் இப்படி எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத ஒரு உணர்வு!

அம்மா நான் தாயான போதுதான் உன்னை அதிகம் உணர்ந்தேன்!

எந்த தாய்க்குமே தான் தாயான அந்த நிமிடங்களை வாழ்க்கையில மறக்கவே முடியாது. வாழ்க்கையில அப்படி ஒரு வலியை வேறு எதிலும் அனுபவிக்க முடியாது; அப்படி ஒரு மகிழ்ச்சியையும் வேறு எதிலும் அனுபவிக்க முடியாது! தாய்மை அடையுற அந்த நிமிடம் ஒரு ஆழ்நிலை தியானம் மாதிரி பரவசம் தரும்.

என்னுடைய அந்த பரவச நிலையை தான் நான் உங்களோட பகிர்ந்துக்கவும் அதை இங்கு பதிவு செய்யவும் போறேன்.

ஜூலை மாதம் 8ம் தேதி காலை எழுந்திருக்கும் போதே காலை கீழே ஊன முடியாத அளவுக்கு காலும் இடுப்பும் பயங்கர வலி. இது என்னுடைய 7வது மாதத்திலிருந்தே வருவதானாலும் அன்னைக்கு கொஞ்சம் கடுமையாவே இருந்தது. ஆனாலும் அந்த வலியோட சமாளிச்சு 13ம் தேதி வரை ஓட்டிட்டேன். ஆனால் 13ம் தேதி இரவு என்னால மறக்கவே முடியாது. அன்னைக்கு தூங்கபோகலாம்னு கட்டிலுக்கு போனேன் ஆனால் என்னால் கட்டிலில் சாயக் கூட முடியவில்லை. என்ன செய்தா எப்படி அட்ஜஸ்ட் பண்ணினா படுக்கலாம்னு எவ்வளவோ முயன்றேன். வயிறு வேறு மிகப் பெரிதா இருந்தது. நான் சிரமப் படுவதைப் பார்த்துட்டு என் அப்பாவும் அம்மாவும் என்னை கைத்தாங்காலாகப் பிடித்துப் படுக்கவைத்தனர்.

ஆனால் என்னால் வலியைப் பொறுத்துக்கவே முடியலை. என் அம்மாவிற்கும் நாங்கள் இருவரும் சிசேரியன் என்பதால் இந்த வலி பற்றி அவருக்கு தெரியவில்லை. நான் படித்தவரை எனக்கு வலி வந்த இடம் மட்டும் பிரசவ வலி வரும் இடங்களில் ஒன்றாக இருக்கவில்லை. என் அம்மா உடனே என் அத்தைக்கு போன் பண்ணி இது பற்றி கேட்டா அவங்களுக்கும் இது புரியல. ஒரு வழியா ஆஸ்பிடல் போலாம்னு கார்ல ஏறப்போனா என்னால தான் ஒரு அடி கூட வைக்கமுடியலையே. கடவுளே குழந்தைக்காகவாவது நான் கீழே விழாமல் கார்ல ஏறிடனும்னு வேண்டிக்கிட்டே 30னிமிடங்கள் போராடி 5அடி எடுத்து வைத்து கார் கிட்ட போயி எப்படியோ பாடுபட்டு என்னை அப்பா, அம்மா, தங்கை, சித்தி எல்லாரும் காருக்குள் உட்கார வைச்சாங்க. அந்த நேரத்துல என் கணவரை ரொம்ப மிஸ் பண்ணினேன்.
நான் வளைகாப்பு முடிந்து திருச்சி வந்திருந்தேன். அவங்க சென்னைல.

ஆஸ்பிடல் போனப்போ நள்ளிரவு 12ஐ தாண்டியாச்சு. அங்க லேபர் வார்டுல ஒரே டெர்ரர்... எல்லா சிஸ்டர்களும் இரத்த கறை படிந்த கவுன் மாட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்காங்க; உள் அறைல ஒரு பெண் ஐயோ அம்மானு அலறும் குரல் வேறு... அடிவயிற்றப் போட்டுப் பிசையிது; பயம் கவ்விக்கிச்சு :(
வலியோட துவக்கத்தையே தாங்கிக்க முடியலையே கிளைமேக்ஸை எப்படி தாங்கிக்கிறதுனு என் பாப்பாகிட்ட பேச ஆரம்பிச்சுட்டேன்... "பாப்பா எப்படியாவது சீக்கிரம் வந்துடுடா என்னால ரொம்ப நேரம் வலி பொறுக்க முடியாது உன்னைப் பார்த்துட்டேன அப்புறம் எந்த வலினாலும் தாங்கிக்குவேன்" அப்படினு பேசிக்கிட்டு இருந்தேன். இப்பவும் கணவர் நியாபகம் வேறு. நல்ல வேளை அவங்க இங்க இல்லைனு. பின்ன, பயந்துருப்பாங்கல.

அதுக்குள்ள உள்ள இருந்த பெண் " ஐயோ டாக்டர் இப்படி இழுத்து இழுத்து குத்துறீங்களேனு " கத்தி இன்னும் டெர்ரர் ஆக்குச்சு :( ஒரு வழியா குட்டிபாப்பா வந்துருச்சு... எனக்கு இல்லைங்க அவங்களுக்கு :)

அப்புறம் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து என்னை பரிசோதனை பண்ணிட்டு குழந்தை வர இன்னும் நிறைய டைம் இருக்கே தலை இப்போ செட் ஆகிருச்சு பட் குழந்தை இன்னும் கொஞ்ச நாள் உள்ளயே இருக்கட்டும்; உங்க வலி என்னனு நாளைக்கு ஆர்த்தோகிட்ட கேப்போம்" அப்படினு சொல்லிட்டு போயிட்டாங்க. :( எனக்கோ ஆகா இப்போ பாப்பாவ பார்க்க முடியாதா என்றாகிவிட்டது.

ஒரு வழியா ஆர்த்தோ வந்து என்னை பரிசோதனை பண்ணிட்டு "இது ஆர்த்தோ ப்ராப்ளம் இல்ல; இவங்களுக்கு கொஞ்சம் கிரிடிகலா லேபர் பெயின் வந்துருக்கு; இது கொஞ்சம் ரேரா சிலருக்கு தான் இப்படி வரும்... பெயின் கில்லர் கொடுத்து வலிய குறைக்கலாம் ஆனால் அது குழந்தைக்கு நல்லதல்ல அதுனால நீங்க முடிவு பண்ணிக்கோங்க" அப்படினு பிரசவ டாக்டர்கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு.

ஒரு ஸ்கேன் எடுத்து குழந்தை வளர்ச்சி முழுமையாகிடுச்சானு பார்த்துட்டு டெலிவரி பத்தி முடிவு பண்ணலாம்னு சொன்னாங்க. அதோட விட்டா பரவாலங்க; ஆனால் இந்த வலி எதுனாலனு பார்க்கனும்னு ஒரு எக்ஸ்-ரே வேறு எடுக்க சொன்னாங்க.

நானோ ஸ்கேன் ரூம் போறப்போ ஜாலியா போனேன். எல்லாம் ஸ்டெட்சர்ல வைத்துதான் கொண்டு போனாங்க.... ஆனாலும் குட்டிமாவ பார்க்கபோறோம் ஸ்கேன்லனு எனக்கு ஒரே கொண்டாட்டம். ஸ்கேன் ரிப்போர்ட்ல குட்டிமாவுக்கு தண்ணீர் போதது அதுனால குட்டிமா சீக்கிரம் உலகத்தைப் பார்த்தாகனும்னு வந்துருச்சு. அடுத்து இந்த எக்ஸ்-ரே... ஐயோ நான் அழுத அழுகை... எனக்கு என்னனாலும் பரவால நடக்கமுடியாமலே போனாலும் பரவால தயவுசெய்து இந்த எக்ஸ்-ரே மட்டும் வேண்டாம் அது என் பாப்பாவுக்கு பிரச்சனை ஆகிடக் கூடாதுனு அழுதுகிட்டே போனேன்... ஆனால் டாக்டர் 9மாதத்தில் இது குழந்தையை பாதிக்காது பயப்படவேண்டாம்னு சொன்னாலும் பெத்துக்க போற மனசு கேக்குதா. :(

ஒரு வழியா அதையும் முடிச்சு பார்த்தா இது லேபர் பெயின் தான் இடுப்பு எலும்புகள் பிளவுபட்டு இருக்கு... காலோட சேரும் இடத்துல :( இதுக்கு சிகிச்சையும் இல்லை... தானாகவே சேர்ந்தா தான் உண்டு... சில பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் அது தாய்மைக்கு நல்லதல்லவாம். ஆர்த்தோ வந்து இவுங்களால நார்மல் டெலிவெரிக்கு சப்போர்ட் பண்ண முடியாது அப்படியே பண்ணினாலும் அதுக்குப் பிறகு நடக்கவே முடியாதுனு சொல்லிட்டாரு :( அப்புறம் என்ன சிசேரியன் தான். முதலில் வயிற்றைத் தடவிப் பார்த்து அழுதேன். அப்புறம் ஓகே ஆகிட்டேன். பின்ன பாப்பா வந்துடும்ல; அந்த சந்தோஷம் தான். :) :) :)

அப்பாடா இன்னைக்கு இந்த மொக்கை போதும்... நாளைக்கு நோ மொக்கை ஏனா பொழில்குட்டி வெளிய வந்துடுவாரு :) :) :)

ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதா??? நாளைக்கு ஃபிரெஷ் ஆகிடும் :)