December 31, 2008

புத்தாண்டு வாழ்த்தும் பூசணிக்காய் அல்வாவும் :)

அனைவருக்கும் எங்கள் சார்பாகவும் பொழில்குட்டி சார்பாகவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

உங்களுக்காக இந்த பூசணிக்காய் அல்வா எனது புத்தாண்டு இனிப்பு :)
பின்குறிப்பு:
செய்முறை விளக்கம் தேவையெனில் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

December 30, 2008

என் இனிய 2008 ஆண்டிற்கு நன்றி பல கோடி

இந்த ஆண்டிற்கு நன்றி சொல்லும் விதத்தில் ஒரு பதிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் "சந்தனமுல்லை" அவர்களின் பதிவினைப் படிக்க நேர்ந்ததும் நானும் எழுதிவிட்டேன் :) நன்றி சந்தனமுல்லை :)

இந்த ஆண்டு என் வாழ்வில் மறக்க இயலாத ஆண்டு என்று கூட கூறலாம் :)
என் பொழில்குட்டி பிறந்த ஆண்டு :)

பிரசவத்தினால் நான் நடக்க இயலாத போது பொழிலனின் அதிர்ஷ்டமோ என்னவோ நான் இரண்டு மாதங்களில் நடக்கத் துவங்கிவிட்டேன்!
அவருடைய வருகை எங்கள் வாழ்விற்கான பொருளை எங்களுக்கு உணர்த்தியது! இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது!

முதன் முதலாக ஆபரேஷன் தியேட்டரில் வைத்து எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி அவனை என்னிடம் காட்டிய அந்த தருணம், அவனை மெதுவாகத் தொட்டு "ரோஜா போல அழகா இருக்கு தம்பிப் பாப்பா!" என்று நான் கூறிய தருணம் இவையெல்லாம் என் வாழ்வின் அதிகப்படியான மகிழ்ச்சியினை அளித்த தருணங்கள் :) அந்த வகையில் இந்த ஆண்டு என் வாழ்வின் பொன்னான ஆண்டு! :)

என் கணவர் மூலமாக எங்கள் திருமணத்திற்கு முன்பே வலையுலகைப் படிக்கத் துவங்கிய நான் இந்த ஆண்டில் தான் எழுதவும் துவங்கினேன் என் பொழில்குட்டியால்!

என்னை தொடர்ந்து எழுத உற்சாகப் படுத்தும் என் கணவருக்கும்,
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும் படிக்கும் ரொம்ப நல்லவர்களான உங்களுக்கும் நன்றி! :) அதோடு நில்லாமல் பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்தும் அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

என்னை முதன் முதலாக டேக் செய்த சந்தனமுல்லை அவர்களுக்கு என் சிறப்பு நன்றி!

என் மொக்கையையும் தாங்கிக் கொண்டு என்னைப் பின் தொடரும் நண்பர்களுக்கு என் நன்றிகள் பல!

ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வு மட்டுமின்றி நம் நாட்டின் வாழ்வில் நமது சந்திராயன் விண்ணோக்கி சென்று இந்த உலகமே நம்மைப் பார்த்து நமக்குப் பெருமை சேர்த்ததும் இந்த ஆண்டில் தான்!

இத்துணை மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியே இதே ஆண்டில் ஏற்பட்ட மும்பை நிகழ்வு போன்ற சில கசப்பான நிகழ்வுகள் மேலும் தொடராமல் வரும் ஆண்டு உலக மக்கள் அனவருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வோம்!

எங்களுக்கான மகிழ்ச்சிகளையும், வளங்களையும்
ஏந்தி வரும் புத்தாண்டே வருக!
நம் நாட்டில் கலவரம், வேற்றுமை, பசி, பஞ்சம், பிணி நீங்கி
அமைதி நிலவி நீங்கி மகிழ்ச்சி பொங்க
பொங்கலை உடனழைத்து வரும் புத்தாண்டே வருக!

December 23, 2008

****கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்****

மகிழ்ச்சியான இந்த கிறிஸ்துமஸ் திருநாள்
உங்களுக்கு எல்லா வித நலன்களையும்,
மகிழ்ச்சிகளையும் என்றென்றும் வழங்கட்டும்...!!

எங்கள் பொழிலன் சார்பாக அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் :)

December 22, 2008

புதுப் பாட்டு பொழிலனுக்குப் பிடித்த பாட்டு :)

காகா காகா காகம் கரையும்
கிகி கிகி கிளி கத்தும்
கீச் கீச் கீச் கீச் எலி கத்தும்
கூ..கூ..... கூ..கூ..... குயில் கூவும்
கொகொகொகொ... கோழி கொக்கரிக்கும்
கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் கூவும்
ம்மா....ம்மா....மாடு கத்தும்
ம்மே....ம்மே....ஆடு கத்தும்
மியாவ்...மியாவ்....பூனை கத்தும்
லொள் லொள் லொள் லொள் நாய் குரைக்கும்
பக் பக் பக் பக் வாத்து கத்தும்


இது தான் இப்போதெல்லாம் நான் அடிக்கடி பொழில் செல்லக்குட்டிக்குப் பாடும் பாட்டு. செல்லக்குட்டி கண்ணு அம்மாடி மற்றும் இப்பாடல் இரண்டும் அவனுடைய விருப்பப் பாடல்கள். வேறு ஏதாவது ரைம்ஸ் பாடினால் அழுகையை நிறுத்தி சிரிப்பதில்லை. இந்த பாடலுக்கு உடனே சிரிப்பு வந்து விடுகிறது. ஒருவேளை நான் பாடுவதே அவருக்கு சிரிப்பாக உள்ளதோ என்னவோ? :) எப்படியே அழுகை நின்று சிரித்தால் சரி :)

ஆனால் அப்படியே அந்தந்த விலங்குகள் போல் ஓரளவிற்கு குரல் எழுப்ப வேண்டும். ரைம்ஸ் ராகத்திலேயே பாடலாம் :)

இது எளிதில் அவன் விலங்குகளை அடையாளம் கண்டறிய உதவும் என்று நம்புகிறேன். இப்படி விளையாட்டு மற்றும் இசை மூலமே முதல் இரண்டு வயது வரை வாழ்க்கைக் கல்வி, பொதுக் கல்வி போன்றவற்றை அவனுக்குக் கற்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். இந்த முறை சரியானதா என்று பின்னூட்டமிடுங்கள் அனுபவசாலி தாய்மார்கள் மற்றும் தந்தைமார்கள் :)

வளருகிறார் குறும்புக்கார பொழில்குட்டி :)

பொழில்குட்டிக்கு தற்போது ஆறாவது மாதம் துவங்கியுள்ளது :) ஏற்கனவே தெளிவாக "அம்மா" என்றழைக்கும் என் தங்கத்திற்கு இப்போது "அப்பா" என்று அரைகுறையாக ஆனால் "அழகாக" சொல்ல வருகிறது :) இதைக் கேட்டதும் அவர் அப்பாவைக் கையில் பிடிக்க முடியவில்லை.

இப்போதெல்லாம் சேட்டைகள் சற்றே வலு பெற்றுள்ளன :) குப்புறப் படுத்துக் கொண்டு கண்களுக்கு எட்டும் பொம்மைகள் கைக்கு எட்டவில்லையென அடம் பிடிக்கிறார். "அம்மா... ம்மா" என்று என்னை அழைப்பார்; நான் திரும்பிப் பார்த்ததும் சிணுங்கிக் கொண்டே பொம்மையைப் பார்த்தால் அது அவருக்கு வேண்டும் என்று அர்த்தம்... நான் சென்று எடுத்துக் கொடுப்பேன் :)

அதைவிட சிரிப்பு என்னவென்றால் தவழ முயற்சிப்பது ஆனால் முடியாமல் போனதும் அழுவது. அவனிடம் விடாமுயற்சி என்னும் சிறந்த பழக்கம் இருப்பதை நாங்கள் பல முறை அவன் விளையாடும் போதும், தவழ முயற்சிக்கும்ப் போதும் கவனித்துள்ளோம் :) இது எனக்குப் பெருமையாக இருக்கிறது :) :)

அவரிடம் ஒரு பாடிக்கொண்டே நகரும் சேவல் இருக்கிறது... நான் அதைப் போட்டுவிட்டு தான் சமையலறைக் கடமைகளையாற்றிக் கொண்டிருப்பேன்.... ஆனால் இப்போது அந்த பொம்மை உதவுவதில்லை. ஏனென்றால் , அது நகருகிறது ஆனால் அதன் பின்னே நம் ஐயாவால் நகர முடியவிலை என்று கோவப்படுகிறார்.... அழுகிறார் :) சரி என்று நகரும் சைக்கிள் மாமா பொம்மையைப் போட்டுவிட்டால் அது சிறிது நேரத்திலேயே பாடுவதை நிறுத்திவிட்டு ஊர்ந்துக் கொண்டிருப்பதை மட்டுமே தொடரும், பாடல் சத்தம் நின்றதும் ஐயாவிற்கு அழுகை வந்துவிடும் :) சரியென்று யானை மாமாவைக் கொட்டு அடிக்கவிட்டால் ஒரே ஆர்வக்கோளாரில் அதைக் கையில் எடுத்துவிடுவார். ஏனென்றால் அந்த இரு பொம்மைகளையும் கையில் பிடிக்க முடியவில்லை ஆனால் இதைப் பிடிக்க முடிகிறதே. அந்த மகிழ்ச்சி தான் :)

ஆனால் அவன் என் வயிற்றில் இருந்த போதிருந்தே பேசிப் பழகியதால் தானோ என்னவோ யாராவது ஒருவர் அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நான் காலையில் என் கணவருக்கு காலை மற்றும் மதிய உணவு சமைத்து எடுத்து வைத்துக் கொடுப்பதில் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் தான் அவருக்குப் பேச்சுத் துணை தேவைப்ப்டும். பசிக்கும் போது நான் செல்வதும் பேசுவதற்கு என் கணவர் செல்வதும் மாறி மாறி நிகழ்ந்துக் கொண்டிருக்கும் :) தந்தையும் மகனும் பேசுவதே தனி ஒரு அழகு :)

ஆனால் எவ்வளவு வேலை இருந்தாலும் நான் அடிக்கடி அவருடன் பேசியாக வேண்டும் இல்லையென்றால் அன்று அதிகமாக அழுவார். ஆனால் எளிதில் சரி செய்து விடலாம். மிகவும் சிறிய குழந்தை தானே! :) எனக்கும் பகல் நேரத்தில் அதிக வேலை இருக்காது; அவர் தான் என் உலகம் நான் பகலில் என் உலகத்தை சுற்றிக் கொண்டு பல செய்திகளை அவனிடம் பேசிக்கொண்டிருப்பேன் :) அப்போது தானே அவர் விரைவில் வெளி உலகத்தை புத்திசாலித் தனமாக எதிர்கொள்ள முடியும்... :)

December 21, 2008

விளம்பரங்களுக்கு தேவை சென்சார்

இப்போதெல்லாம் தொலைகாட்சியில் விளம்பரங்கள் பார்க்க சகிக்கவில்லை
பெண்களைக் காட்சிப் பொருளாக்கிய விளம்பரங்கள் அதையும் தாண்டி தற்போது பெண்களின் குணத்தை இழிவு படுத்தும் அளவிற்குக் கேவலமாக சித்தரிக்கின்றனர்.

பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தும் அத்தகைய விளம்பரங்கள்:

ஏக்ஸ் ஆண்களுக்கான வாசனை திரவியம். அதை ஒரு ஆண் உபயோகப்படுத்தியதும் அவன் அந்த சாக்லேட் வாசனையினால் பெண்கள் அனைவரையும் கவருகிறான்; இதில் உச்சகட்டக் கொடுமை என்னவெனில் அதில் பெண்கள் அனைவரும் அவனைக் கண்டபடி கடித்து.... சே... சே.... என்ன ஒரு அசிங்கமான விளம்பரம்।

இப்படியாக வைகிங், பெப்ஸிகோ போன்ற பல விளம்பரங்களும் அதில் அடங்கும்.

இப்படிப் பெண்களை இழிவு படுத்தும் விளம்பரங்களினால் அவர்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

குழந்தைகளும் இத்தகைய விளம்பரங்களைப் பார்க்கின்றனர். இது அவர்கள் மன நிலையைக் கெடுத்துவிடாதா?

பெண்களை தெய்வம் என்று போற்றிய அதே மண் இன்று பெண்களை வியாபார நோக்கில் பார்க்கிறது. இந்த நிலை எதில் சென்று முடியும் என்று தெரியவில்லை.

இது போன்ற விளம்பரங்களில் நடிக்கும் பெண்களுக்காவது தங்களை கேவலமாக சித்தரிக்கும் இது போன்ற காட்சிகளில் நடிக்கிறோமே என்று தோன்ற வேண்டாம்?

என்ன சொல்வது? ஏற்கனவே ஒரு பதிவர் இது போன்று ஒரு பதிவிட்டுள்ளார். இப்போது நானும். இன்னும் சமூக அக்கறையுள்ள பெண்கள் என்னுடன் கைக்கோர்க்கலாம்... ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது... நம் அனைவரின் கூக்குரல் கேட்டாவது மாறட்டும் மீடியா!

December 17, 2008

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்....கொசுவர்த்தி சுருள்

இதோ மார்கழி பிறந்துவிட்டது....
என் வாழ்வில் இம்மாதம் மறக்கமுடியாத மாதம் :)
நான் சிறுபெண்ணாய் இருக்கும்போதிருந்தே நன்றாக கோலம் போடுவதாக எல்லாரும் பாராட்டுவார்கள் (சத்தியமாங்க வேணுமானா என் கோலம் போட்டோக்களை போடவா?) அதனால் இன்னும் ஆர்வம் அதிகமாகி நாள்தோறும் காலையிலேயே எழுந்து சாணி தேடி எடுத்து குச்சியால் நீரில் கரைத்து விட்டு ஆனால் கையால் தான் வாசல் தெளிப்பேன் :) (சாணம் ஒரு கிருமி நாசினி என்பதை அதிகம் நம்புவதால்)

பிறகு சிறிது நேரம் அதைக் உலர விட்டுப் பின்பு அதில் கோலம் போட ஆரம்பிப்பேன்.... இருப்பதிலேயே எங்கள் வீட்டுக் கோலம் தான் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில் தளராத உறுதி எனக்கு :) அதை பெரும்பாலும் நிறைவெற்றி விடுவேன் தேர்வு நேரங்கள் தவிர்த்து :)

ரங்கோலி, பூத்தொட்டி, யானை, மயில், தேர், கோயில், முருகன், புள்ளிக் கோலம், சிக்கல் கோலம் எனப் பல வகைக் கோலங்கள் போடுவோம் :) என் தங்கை தான் உதவியாள் வர்ணங்கள் எடுத்துக் கொடுக்க.... ஆனால் அப்போது நடக்குமே போட்டி... யார் வீட்டுக் கோலம் அழகாக உள்ளது என்று.... ஏகப்பட்ட பாராட்டு மழைதான்.... நான் போடும் கோலமே அழகுதான் என்று எல்லாரும் சொல்லும் போது பெருமையாக இருக்கும் :)

பூசணிப்பூ கிடைக்காது என்பதால் செம்பருத்தி, செவ்வந்தி, ரோஜா என்று பல விதப் பூக்களை கோலத்தின் மேல் வைப்போம்.

இது மட்டுமில்லை... கோயிலில் பாடல் பாடும் சிறார் கூட்டத்திலும் இருந்தோம்... கோலம் போட்டதும் குளித்து கோயிலுக்குச் செல்வோம்... பாடி பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மிதிவண்டியில் வேக வேகமாக வருவேன்... அது எனக்கு மிகவும் பிடிக்கும் :) அந்த பணிப் புகையைக் கிழித்துக் கொண்டு வண்டி ஓட்டுவதாக எனக்கு ஒரு எண்ணம் :)

சில நாட்களில் வீதியில் பாடிக்கொண்டு வரும் எங்கள் நண்பர்களுக்கு காலை மிதமான சூடாக பால் கலக்கித் தருவோம் எப்படியும் ஐம்பது பேருக்குக் குறையாமல் வருவார்கள் :)

இது போதாதென்று பள்ளியில் எங்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை விருப்ப வகுப்பு உண்டு. அதையும் கற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடம் செய்வதற்கு முன் அப்பா, அம்மாவிற்குப் பாடிக் காட்டுவேன் (பாவம் தான் அவர்கள் :) )

இப்படியாகச் சென்ற மார்கழி மாதங்களில் வருங்காலத்தில் நல்ல கணவன் அமைய வேண்டும் என்று அதிகாலை வாசல் தெளித்த பின் இறைவனை வேண்டிக் கொண்டு விளக்கேற்றுவேன் :-) ( வெவரந்தான் அப்பவே அப்படீனு நீங்கள் சொல்வது கேட்கிறது :-))

அப்போதெல்லாம் நான் ஒரு பூசாரி எங்கள் வீட்டிலும், பள்ளியிலும் :) நெற்றியில் நீண்ட கோடாகத்தான் திருநீறு இடுவேன்.

ம்ம்ம்.... இதெல்லாம் நான் பட்டமேற்படிப்பிற்காக சென்னைக்கு வருவரை தொடர்ந்து செய்தது..... இங்கு வந்த பின் மார்கழி மாதங்கள் தேர்வு, தூக்கம், அரட்டை, மாலை நேரத்தில் கோயில் என்று இரு வருடங்கள் கல்லூரி விடுதியில் கழிந்தது.

பிறகு திருமண வாழ்க்கை மற்றும் அலுவலகம் இரண்டிலும் கவனம் சென்றதால் என் கணவர், என் வயிற்றில் பொழிலன், அலுவலகம், வீடு என்று கடந்த வருட மார்கழி கடந்து சென்றது :) காலையிலேயே சமையல், சிற்றுண்டி எல்லாம் முடித்து வைத்து ஏழு மணிக்கு அலுவலகப் பேருந்தை பிடித்தாக வேண்டும்; கர்ப்ப கால சிரமங்கள் வேறு :)

ஆனால் அலுவலகத்தில் கடந்த வருடம் கோலப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற போது எங்கள் டீம் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகிவிட்டனர் :) அப்புறம் பொங்கலுக்கு அலுவலகத்தில் பூக்களால் கோலம் வரைந்தோம்.

இப்படியாக இன்னமும் மார்கழி என்றால் கொண்டாட்டமாகத்தான் உள்ளது :) இப்போது மார்கழி மாதம் அதிகாலை பொழில்குட்டியோடு தான் :) வெகு நேரம் குனிந்து பெரிய கோலம் போடு அளவிற்கு என் உடல் நிலை இன்னும் தேறாததால் அடுத்த வருடம் தான் அதைச் செய்ய வெண்டும் :) பொழில்குட்டி தான் உதவியாள் :)

அப்பாடா மொக்கை முடிந்தது....
பொறுமையாக கடைசிவரை வந்துவிட்டீர்களா? மிக்க நன்றி :-)

நீங்கள் யாராவது இந்த மார்கழி மாத அனுபவத்தைத் தொடரலாம் :)

December 16, 2008

"சனி நீராடு" - பொழிலன் செல்லக்குட்டி


அவ்வையார் "சனி நீராடு" என்று சொல்லிவிட்டார்களாம்... அதனால் என் அம்மா இப்படி என்னை எண்ணெய் தேய்த்து நீராட்டுகிறார்கள் :)
நான் எப்படி சமத்து தானே? :)

December 14, 2008

வெறியர்களின் வெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி எங்கே?

எழுமின்!

விழிமின்!

கருதிய கருமம் கைகூடும் வரை

உழைமின்! உழைமின்!இது பாரதத் திரு நாட்டின் இளைஞர்களுக்காக விவேகானந்தரின் எழுச்சிக் குரல்। இன்றைய நம் இளைய சமுதாயம் இக்குரல் கேட்டு எழவில்லை என்றாலும் பரவாயில்லை. மழலைகள் பெற்றோரை இழந்து அரற்றும் குரல் கேட்டாவது எழுச்சி கொள்ளலாம்.

மும்பை தாக்குதல் பற்றி தான் இந்தப் பதிவு சந்தனமுல்லை அவர்களின் அழைப்பிற்கிணங்கி [தாமதமாக :( , பொழிலனுடன் நேரம் சரியாக இருக்கிறது :) ]தீவிரவாதிகளுக்கு எதிராக போர் என்று போராடினால் போர் உண்டாகிவிடுமா. தொலைக்காட்சியில் பார்த்தேன் ஆளாளுக்கு போர் வேண்டும் என கத்தி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். இது என்ன பாராளுமன்றத்தில் விற்கப்படும் பொருளா?என் கருத்து என்னவென்றால் இந்த முதியோர் அரசியல் முறை மாற வேண்டும். இளைஞர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வர வேண்டும்.

அரசியல் என்பது பொழுது போக்கோ அல்லது பணம் ஈட்டும் தொழிலோ அல்ல. நம் தாய்நாட்டின் வாழ்க்கை. சிறுக சிறுக தீவிரவாதிகளின் வெறியாட்டத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கும் நம் இந்தியாவின், இந்திய மக்களின் வாழ்க்கை. இன்று கத்தும் இளைஞர்கள் அரசியல் முறையை மாற்ற முன் வரவேண்டும். என்னையும் உங்களையும் சேர்த்துதான்....இன்று நாட்டின் எந்த ஒரு முடிவும் ஆட்சியாளர்களாலேயே எடுக்கப் படுகிறது எனும் போது போர் என்னும் முடிவும் நம் அரசியல் தலைவர்களே எடுக்க வேண்டும். அந்த இடத்தில் இளைஞர்கள் வந்தால் இந்த விவகாரத்திற்கு சரியான பதிலடியாக பல ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.இல்லையென்றால் இப்படி முன்பே தாக்குதல் பற்றிய அறிவிப்பு கிடைத்தும் கோட்டைவிட்டிருப்பார்களா?தாக்குதல் நடந்து முடிந்த பின்பு அவ்விடத்திற்குத் தீவிர பாதுகாப்பு போடுவதற்கு பதிலாக முன்பே கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா?ஒவ்வொரு முறையும் இப்படி தாக்குதல் நிகழும் போது மட்டும் நாம் உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுவதில் பயனில்லை. தேர்தலின் போது சிந்திக்க வேண்டும் , படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது அவர்களை ஊக்குவிக்க வேண்டும், இளைஞர்களால் மட்டுமே நம் தாய்நாட்டின் தலையெழுத்தை மாற்ற இயலும்.இழப்பின் வலி இன்னமும் இரணமாகவே உள்ளது. அந்த வடு ஆறும் முன்பே வெறியர்களுக்கு எதிராக நாம் திரள வேண்டும். இன்னும் எதற்காக போர் தொடுக்காமல் காத்துக்கொண்டிருக்கிறோம்? மிச்சம் மீதம் இருக்கும் காஷ்மீரையும் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்றா? அல்லது பாவம் மடையர்கள் ஏதோ சண்டையிடுகறார்கள் மன்னித்துவிடலாம் என்றா?"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்"என்ற குறள் இங்கு பொருந்தாது...."குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்"என்ற குறளே தற்சமயம் நமக்குப் பொருத்தமானது.நம் கைகள் கோர்க்கட்டும்.

நம் இதயங்கள் சில இழப்புகளைத் தாங்கும் பக்குவம் உடையதாகட்டும்...

அப்போது தான் பெரும் இழப்புகளைத் தவிர்க்க இயலும்.நம்மிடம் படை பலமில்லையா அப்படியானால் பல திறமையான இளைஞர்கள் எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் உதவுவார்கள்.பண பலமில்லை என்று மட்டும் கூறவே கூடாது; நம் நாட்டுப் பெண்களின் ஒட்டுமொத்த நகைகளையும் சேர்த்தால் உலகிலேயே நாம் தான் பணக்கார நாடு! ஆச்சரியமாக உள்ளதா? இது தான் உண்மை!போருக்குத் திட்டமிடுவதற்குத் தேவையான அதிக புத்திசாலிகளும் நம் நாட்டில் தான் உள்ளனர்; இதுவும் ஆதாரப்பூர்வமான உண்மை :)பின் எதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்? தலைவர்களின் சம்மதத்திற்கா? அது எளிதில் கிடைக்காது :( இளைஞர்கள் கைக்கு ஆட்சி வரும்வரை....பொறுத்திருந்தது போதும் புறப்படுவோம் புதியதோர் பாரதம் செய்ய...
அதில் தீவிரவாதமற்ற அமைதியை ஏற்படுத்த !!!

காஷ்மீரைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதற்காகவும்,
இந்தியாவின் அமைதியைக் குலைத்து வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் ஆடும் வெறியாட்டத்தை தடுத்து அவ்ர்களுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்; வெறியர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்..............


பின்குறிப்பு :
அக்காலத்தில் வீரத்தமிழ்த்தாய் ஒருத்தி தன் இரண்டு வயது மகன் கையில் வாளினைக் கொடுத்துப் போர்முனைக்கு அனுப்பி வைத்தாளாம். அத்தகைய தாய்மார்கள் வாழ்ந்த இந்நாட்டிலே தான் நாமும் வாழ்கிறோம். நமக்கும் அதில் பாதி எண்ணமாவது வர வேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றினையும் வீரத்தையும் சேர்த்து ஊட்டிவிட வேண்டும். நம் பிள்ளைகள் இராணுவத்தை எதிர்காலமாக தேர்ந்தெடுத்தால் பாசத்தில் தடுக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்.

என்னைத் தொடர்ந்து யார் வேண்டுமானலும் கைகோர்க்கலாம் இந்த அணியில் :)

December 6, 2008

ஒரு தாயின் புலம்பல்... எனக்கு ஒரு வழி கூறுங்களேன்.

எனக்கு பிரசவ விடுமுறை முடியப் போகிறது... எங்கள் வீட்டில் நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் எங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை... என் அம்மா மற்றும் மாமியார் இருவருமே தனியாக இங்கு வந்து அதிக நாட்கள் இருக்க முடியாது ஏனென்றால் என் அப்பா மற்றும் மாமனாருக்கு சர்க்கரை நோய் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.... எங்கள் உறவினர்களில் வேறு யாரும் இங்கு வந்து இருக்கும் நிலையில் இல்லை... குழந்தைகள் காப்பகமும் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை... அதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.... அதனால் இப்போது பொழிலனை எப்படிப் பார்த்துக் கொள்வது என்றே புரியவிலை....

என்னுடைய அத்தை(மாமியார்) பொழிலனை அவர்களுடன் புதுச்சேரியில் விடுமாறு கேட்கிறார் ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளன.... வார விடுமுறையில் மட்டுமே நாங்கள் பெற்ற பிள்ளையை பார்க்க முடியும்.... அதிலும் எல்லா வாரமும் அலைவது சற்று சிரமம் எங்கள் குழந்தைக்காக என்றாலும் அதிகப் படியான அலைச்சல் விரைவில் உடல் நிலையை பாதிக்கும்... அவனுக்காகத்தானே உழைக்கிறோம் ஆனால் அவனை தினமும் பார்த்து அவன் செய்யும் குறும்புத் தனங்களை ரசிக்க முடியாமல் அவனுக்கு கதைகளை சொல்லி மகிழ முடியாமல் அவனை ஊரில் விட்டுவிட்டு பின் எங்கள் வீடே வெறித்துப் போய்விடும் :( அவனை ஒரு நாள் பிரிவதும் எனக்கு மிகவும் சங்கடமான ஒன்று..... குழந்தைகள் மனதில் அது எவ்வளவு பேரிய ஏக்கத்தை ஏற்படுத்தும்... பாவம் வாய் விட்டுக் கூறக் கூடத் தெரியாது...

என் கணவர் என் வேலையை விடுவதே சரியான தீர்வு என்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.... ஏனென்றால் நான் மிகவும் விரும்பும் பணி அதில் இன்னும் நான் எந்த சாதனையும் செய்யவில்லை.... நன்கு படித்து கேம்பஸ் தேர்வினால் பெற்ற பணி அதுவுமில்லாமல் நான் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது.... அதற்குள் அதனை எப்படி விடுவது என்றே புரியவில்லை...

நான் கர்ப்பமாக இருக்கும் போது என் அலுவலகம் HCL எனக்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்து என்னை நன்கு பார்த்துக் கொண்டது... வேலையை விட்டுவிட்டால் அப்படிப் பட்ட நிறுவனத்திற்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன் என உறுத்துகிறது.... உங்களுக்கு ஏதேனும் தீர்வு தோன்றினால் கூறுங்களேன்.... என் குழந்தை எனக்கு அதை விட முக்கியம்.... என்ன செய்வது?

November 28, 2008

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி பாட்டு :) அது எங்க பாட்டு :)

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி....
கண்ணுக்குட்டிப் பட்டு அம்மாடி....
பட்டுக்குட்டி சிட்டு அம்மாடி.....
சிட்டுக்குட்டி தங்க அம்மாடி...
தங்கக்குட்டி வைர அம்மாடி.....
வைரக்குட்டி பவள அம்மாடி....
பவளக்குட்டி கண்ணு அம்மாடி....
இப்படியாக நீளும் இப்பாடல் பொழிலனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்....
இப்பாடலின் ஆசிரியர்..... வேற யாரு நாமதான்.... :)
என் வாய்க்கு வந்த கொஞ்சும் வார்த்தைகள் அத்தணையும் போட்டு சிரிச்சிட்டே பாடினா நான் பேசினாலே வாய் விட்டு சிரிக்கும் பொழில் குட்டி இதுக்கு சத்தம் பொட்டு ஒரே மகிழ்ச்சியா சிரிப்பாரு....:)
அதைவிட கண்கொள்ளாக் காட்சி வேறு என்ன? அதனால் நான் அடிக்கடி இதை பாடிட்டே இருப்பேன் :)

November 27, 2008

சிரி... சிரி சிரி சிரி சிரி....சிரி.....
என்ன தலைப்புனு படங்கள பார்த்ததும் உங்களுக்கு புரிந்திருக்குமே!!!!
எங்க பொழிலன் எப்பவுமே சிரிச்ச முகமாதான் இருப்பான்...
அதுவும் யாராவது அவனிடம் பேசினால் போதும் அவர்களை ந‌ன்கு கவனிப்பான்.... இது மிகவும் ந‌ல்லப் பழக்கம் என்றே எனக்குத் தோன்றுகிறது
"குறைவாகப் பேசு அதிகம் கேள்" என்ற பொன்மொழியை ந‌ன்கு புரிந்து வைத்துள்ளான்
************************************************************************************
அவனுக்குத் தெரிந்த முகம் என்றால் பார்த்ததுமே வருமே ஒரு சிரிப்பு... அப்பப்பா.... இப்போதெல்லாம் சத்தம் போட்டு சிரிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்
************************************************************************************
நாங்கள் கதை கூறும்போது காட்சிக்குத் தகுந்த ந‌ம் முக பாவனையை ஓரளவிற்குப் பின்பற்றி அவனும் செய்வதைப் பார்க்கும் போது என் செல்லக்குட்டி வளருகிறான் என்று மகிழ்ச்சியாக உள்ளது
************************************************************************************
அவனிடம் நான் பேசினாலே போதும் கொஞ்சம் இடைவெளி விட்டாலும் "ம்ம்" என்று பதில் கூறிக் கொண்டே வருபவன் "ம்ம்ம்" என்று வேகமாகக் கூறுவது அடுத்து என்ன என்று கேட்பது போல் இருக்கும்.
************************************************************************************
வயிற்றினுள் அவன் இருந்த போது நான் எப்போதெல்லாம் சிரிப்பேனோ அப்போதெல்லாம் அவனும் குதித்து அவனுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான் இப்போது அவனே தன்னிச்சையாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு அம்மாவாக எனக்கு அளவிலா மகிழ்ச்சி :)
இது எல்லா அம்மாக்களுக்குமே உள்ள உணர்வல்லவா!!!!
************************************************************************************

November 12, 2008

கொலைகாரன்கள் தப்ப உதவும் விஜய் டிவிக்கு கண்டனம்

இந்த வாரம் செவ்வாய் கிழமை இரவு விஜய் டிவியின் "குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் ஒரு கொலையை செய்து விட்டு தடயவியல் துறையின் புலனாய்விலிருந்து தப்பிப்பது எப்படி என்று வகுப்பெடுத்தார்கள்...
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்... ஜூகுனு என்னும் கோர மிருகம் பணத்துக்காக 2வயது ஆண் குழந்தையை அடித்தேக் கொன்று இரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறான்.
அந்த மிருகம் எப்படியெல்லாம் தப்பித்தான் என்று விளக்கினார் கோபி அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை அந்த கொலைகாரனின் கைப்பேசி எண்ணைக் கொண்டு அவனை காவல்துறை பின் தொடர்ந்ததையும் அவன் அதை அறிந்து வேறு எண் மாற்றினாலும் அவன் எப்படி காவல்துறையினரால் பின் தொடரப்பட்டு பிடிபட்டான் என்பதையும் "தெளிவாக" விளக்கினார்கள்.
அதாவது... " அவன் கொலை செய்ததும் தன்னை காவலர்கள் அடையாளம் காணாதபடி மொட்டையடித்து, சவரம் செய்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளான் பின் அவன் கேரளாவிற்குத் தப்பிச் சென்றுள்ளான் அங்கிருந்து தனது பாசமிகு தந்தைக்கும், தோழனுக்கும் கைப்பேசி மூலம் தினமும் பேசவேண்டியது இதை மோப்பம் பிடித்த காவல்துறை அவனது கைப்பேசி எண்ணைக் கொண்டு அவன் இருக்கும் இடத்தை தெளிவாகக் கண்டுபிடித்தனர் ஆனால் இங்கு காவல்துறையின் செயல்பாடுகளை அவனது தோழன் அவனுக்கு அறிவித்து வர அந்த மிருகம் கேரளாவிலிருந்து வேறு கைப்பேசி எண் மாற்றிக் கொண்டு தப்பித்துவிட்டான் ஆனால் அவனது கைப்பேசியில் உள்ள அந்த கைப்பேசி சாதனத்தின் உருவாக்கத்தின் போது அதற்கு அளிக்கப்படும் எண்ணைக் கொண்டு அந்த கைப்பேசி இருக்குமிடத்தைத் தெளிவகக் கண்டுபிடிக்கும் உத்தியைக் கொண்டு அவன் இருக்குமிடத்தை அறிந்து காவலர்கள் அங்கு மாறுவேடத்தில் சென்றுள்ளனர் இதற்கிடையே இங்கு அவனது தந்தையையும் தோழனையும் பிடித்துவிட்டனர் அவர்கள் மூலம் அவனை ஓரிடத்திற்கு வரவழைத்து காவலர்கள் கையும் களவுமாக சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதில் இந்த விளக்கம் போதாதென்று கைப்பேசி எண்ணைக் கொண்டு எவ்வாறு ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும் என்று புலனாய்வு துறையினர் மற்றும் கைப்பேசி சேவைத் து்றையினரின் அறிவியல் ரீதியான விளக்கம் வேறு அது தான் பிரச்சினையே

இப்படி எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினால் அதனைப் பார்க்கும் குற்றவாளிகள் இனி இந்த யுத்திகளை தவிர்த்து வேறு விதமாகத் தப்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவார்கள் இது மேலும் குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் ஒரு விளக்கமே....


இதனால் ஏற்படும் குற்றங்களுக்கும், இழப்புகளுக்கும் சேனல்
பொறுப்பேற்குமா?

இந்த குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் கொடூர செயலும்
சட்டப்படிக் குற்றமே!

இதற்கு அந்த சேனல் என்ன பதில் கூறும்?
மக்களுக்கு உதவி செய்வதாக எண்ணி அறிந்தோ அறியாமலோ தீய
செயல்களுக்கு துணை போகும் இந்தச் செயலுக்கு மக்களின் பதில்
என்ன?

இதில் விளக்கம் தருகிறோம் என்று குற்றவாளிகளைக்
கண்டறியும் யுத்திகளை விளக்கி இரகசியம் காக்கத்தவறிய காவல்
துறையினரை என்ன சொல்வது?

இந்தக் கேள்விகளை எல்லா மக்கள் முன்னிலையிலும் கேட்க
இயலாததால் இப்படி பதிவின் மூலமாவது மக்களுக்கு போய் சேரட்டும்
என்று என் ஆத்திரத்தைப் பதிவிடுகிறேன்।

November 5, 2008

ங்கா...ங்கா....ம்ம்மா...அம்மா...

இது என்ன தலைப்புனு யோசிக்கிறீங்களா? (இல்லைனாலும் பரவால)
இப்படி தான் எங்க பொழில் குட்டி அழுகிறார்..... :)
சீக்கிரமே அவரும் பதிவு எழுத வருவாருனு என் கணவர் சொல்லிருக்காங்க.... :) அவருக்கு இப்போ 4மாதங்கள் ஆகிறது , ஆனால் பிறந்த இருவாரங்களிலேயே "அம்மா"னு சொல்லி அழுதாறே பாக்கனும் எங்க எல்லாருக்குமே ஆச்சரியம்।
என் பிறவியே அவருக்காகதானு தோணிச்சு...
அப்பப்பா அவரோட தெளிவான "அம்மா" உச்சரிப்பும், அழகான பொக்கை வாய் சிரிப்பும் என்ன மயக்கிடும்...:)

பொழிலன் பிறந்தாச்சு!!! டும்..டும்..டும்..டும்!!!

எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழ்ந்தை பிறந்த சேதி உங்களுக்கு அருட்பெருங்கோ அண்ணா மூலமா தெரியும்தானே??!!

அவருக்கு "பொழிலன்" அப்படினு பெயர் வேச்சிட்டோம் :)
எப்படி பெயர்? உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்....

அவர் இப்போ 4மாத குழந்தை:)
பின் குறிப்பு: எனக்கும் சிசேரியன் :(

July 1, 2008

சிசேரியனுக்கான காரணங்கள், மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாதல் மற்றும் பிரசவ காலத்தில் கணவரின் கடமைகள்:

பிரசவ வலியின் போது பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற ஆரம்பிக்கும். "ஷோ" என்னும் திரவமும் வெளியேறும் .அப்புறமென்ன "குவா..குவா" தான் :)
சிசேரியனுக்கான காரணங்கள் :
* சிலருக்கு வலி குறிப்பிட்டக் காலக் கெடுவுக்குள் வராமலிருக்கும்
* நீர் அளவு குறைந்தோ அதிகமாவோ இருக்கலாம்
* குழந்தை தலை பெரியதாவோ (அ) தலை மேலே கால் கீழே இருக்கலாம்
* தாய் (அ) சேய்க்கு அடிபட்டாலும்
* குழந்தையின் கழுத்து/வயிற்றுப் பகுதிகளை பிளாசென்டா இருக்காமாக(மட்டுமே) சுற்றியிருந்தால்
* பாப்பா குண்டா இருந்தால்
அறுவை சிகிச்சை செய்யனும். மருத்துவர் அறுவைசிகிச்சைனு சொன்னா கணவர் உடனே மனைவியின் உயிரைக்காக்க சரினு சொல்லாம அதுக்கான சரியான காரணத்தைக் கேட்டறிந்த பின்பே அனுமதி மற்றும் பொறுப்புக் கையேழுத்து இட வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாதல் :
நீங்க 9வது மாதம் தொடங்கினதுமே பிரசவத்துக்குச் செல்ல தயாரா கீழ இருக்கும் பொருட்களையெல்லாம் எடுத்து வெச்சிக்கனும்.
* பாலூட்டும் தாய்க்கான பருத்தியிலால் ஆன ஆயத்த உடைகள்.
* தூய பழைய வேட்டிகள்
* பெண்களுக்கான சில பொருட்கள்
* சோப்பு,சீப்பு,கண்ணாடி, 4(அ) 5 துண்டு,
* வருபவர்கள் கை அழுவிட்டு பாப்பாவ தூக்க தனி சோப்பு, துண்டு * தட்டு, டம்ளர்,
* பாப்பாவுக்கான சோப்பு, பவுடர், ஸ்வெட்டர் போன்ற துணி
* கூட தங்குறவங்களுக்கு துணி
பிரசவ காலத்தில் கணவரின் கடமைகள்:
கணவர் பிரசவ‌ நேரத்தில் மனைவிக்கு சிறத்த உறுதுணையாவார். அவர் தான் முதலில் தைரியமா இருக்கனும்.
அவருடைய காதல், நம்பிக்கை நிறைந்த பார்வையும், அவருடைய அருகாமையும் மனைவிக்கு ரொம்ப முக்கியம்.
பிரசவ நேரத்தில் கணவர் மனைவியுடன் இருப்பதும் இல்லாதிருப்பதும் அவருடைய மன வலிமையைப் பொறுத்தது.
பிரசவ அறைக்குச் செல்லும் முன் மனைவியின் கரம் பற்றி உண்மையான அன்பினை உணர்த்த நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி வழியனுப்பினாலே போதும்.
இரத்த வங்கிலருந்து இரத்தம் ரெடி பண்ணி வெச்சிக்கனும்.
மனைவியிடமிருந்து காதல் பரிசாக வரும் "குழந்தை" என்னும் பூங்கொத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.:)

June 30, 2008

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 8,9,10 மாதங்கள் :)

இந்த மாதமும் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். யூரின் பரிசோதனையும் செய்துக்கனும்.கிருமித் தொற்று இருக்கானு பாக்கனும்.
இப்போ உங்க செல்லத்துக்கு 2கிலோக்கு மேல் எடை கூட ஆரம்பிச்சிருக்கும்:)
வாரக் கணக்குப்படி 32வது வாரம் முதல் 8வது மாதம் 36வது வாரம் முதல் 9ஆவது மாதம்.
இப்போ முதலே நீங்க என்ன குழந்தை அதுக்கு என்ன பேர் வைக்கலாம் அப்டினு யோசிச்சுட்டிருப்பீங்க :) இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ஏ,பி,சி,இ,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா தொடர்ந்து எடுத்துக்கனும்.
இனிமே படுக்க ரொம்ப சிரமமா இருக்கும். எப்பவுமே இடது புறமா திரும்பி வயிற்றின் மேலே உங்களோட எடை இல்லாத மாதிரி படுக்கனும். அது தான் குழந்தையின் வளர்ச்சிக்கும், சீரான சுவாசத்துக்கும் நல்லது. கழுத்து வலிக்கும் போது வலது பக்கமா திரும்பிக்கலாம்.
இனிமே நீங்க உங்க அம்மினாய்டிக் திரவ அளவ சீரா வெச்சிக்கனும். பிரசவ காலம் வரை நான் சொன்ன சீரக கசாயம் குடிக்குறது நல்லது.
கேழ்வரகு கூழ், சத்து மாவு கூழ் குடிக்கிறதும் ரொம்ப நல்லது.
இனி நீங்க நல்லா முன்ன விட‌ நல்லா நடங்க. அப்புறம் வெண்ணீர் வெச்சி இடுப்பு, கால் தசைப் பகுதிகள்ல நல்லா ஊற்றி விட மறக்காதீங்க.
நல்லா உதை வாங்குறீங்களா?:) இரவு படுக்கும் முன்னாடி அடி வயிற்றுல விளக்கெண்ணெய் தேய்ச்சிட்டுப் படுங்க. உடல் சூட்டைத் தணிக்கும். இனிமே இளநீர் அதிகம் அடிக்க வேண்டாம் அது அதிகமான சுண்ணாம்பு நிறைந்தது செல்லத்துக்கு ஒத்துக்காது.
அதிகமா குலுங்கி பயணம் செய்றது, தொலை தூர பேருந்து மற்றும் இரு சக்கர வாகனப் பயணம், வேகமான நடை இதெல்லாம் கூடாது.
இப்போ உங்க குழந்தை பிறந்தா நல்லா படியா இருக்க வாய்ப்புகள் அதிகம். நீங்க பிரசவ வலி பற்றி அவசியம் தெரிஞ்சிக்கனும். அதுக்கு பயப்படவே தேவை இல்லை. உங்க செல்லத்தப் பாக்கப் போற அந்த நேரம், கடவுளுடைய படைப்ப இந்த உலகத்துக்குக் கொண்டு வரப் போற அந்த நேரம் நீங்களும் புதுசாப் பிறக்கப் போற அந்த நேரம், பிஞ்சுக் கால் கைகள தொடப்போற அந்த நேரம், உங்கத் திருமணப் பரிசா ஒரு உன்னதப் பூங்கொத்த உங்களவருக்குக் கொடுக்கப் போற அந்த நேரம், உங்க அம்மாவ தெய்வமா நீங்க உணரப் போற அந்த நேரம், ஒரு புனிதமான நேரம்!!! வாழ்க்கைல அதிக அளவு மகிழ்ச்சியான நேரம்!!!உங்கப் பிறப்போட அர்த்தம் உங்களுக்கு புரியிற நேரம்!!!!
அதுக்காக காத்திருக்க ஆரம்பிங்க. அது உங்களுக்கு மட்டும் வலி இல்லை. குட்டி பாப்பாக்கும் வெளிய வரும் போது வலிக்கும்ல. நீங்க இப்போ தைரியமா இருந்தா தான் பாப்பாவும் தைரியமா இருக்கும்.
இடுப்புப் பகுதிகளில் வலி அதிகமா இருக்கும்। அதிகமா மூச்சிறைக்கும். உடலில் சில மாற்றங்கள் தெரியும். கால்கள் வலிக்கும். கடைசியா பிரசவ வலி வரும். அது பல விதமா வரலாம். இடுப்பு, வயிறு முழுதும், அடி வயிறு,இடுப்போடிணைந்து கால்கள்,நடு வயிறு அப்டினு வலி எங்க வேணுனா துவங்கலாம். முடிவு நல்லதா இருக்கும்.

"பிரசவ காலக் குறிப்புகள்"

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 6,7 மாதங்கள் :)

வழக்கம் போல நான் கடந்த முறை சொன்ன உணவு வகைகள் எல்லாம் தொடர்ந்து சாப்பிடுறீங்கனு நம்பறேன்।:)அது கூட குங்குமப் பூவையும் சேர்த்துக்கோங்க தரமான பூ சூடன நீர் அல்லது பாலில் கலந்தா கரைய வெகு நேரமாகும். கரைந்த பின்னாடி நல்லா மஞ்சள் நிறம் கொடுக்கும்.
இந்த மாதம் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். யூரின் பரிசோதனையும் செய்துக்கனும்.
இப்போ உங்க செல்லத்துக்கு நல்லா எடை கூட ஆரம்பிச்சிருக்கும்:)
இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ஏ,பி,சி,இ,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா தொடர்ந்து எடுத்துக்கனும்.
இனிமே படுக்க சிரமமா இருக்கலாம். எப்பவுமே இடது புறமா திரும்பி வயிற்றின் மேலே உங்களோட எடை இல்லாத மாதிரி படுக்கனும். அது தான் குழந்தையின் வளர்ச்சிக்கும், சீரான சுவாசத்துக்கும் நல்லது. கழுத்து வலிக்கும் போது வலது பக்கமா திரும்பிக்கலாம்.
இனிமே நீங்க உங்க அம்மினாய்டிக் திரவ அளவ சீரா வெச்சிக்கனும். சீரகத்த தண்ணிர்ல( முடிந்தா சிறிகீரை வேரையும் சேர்த்து) நல்லா கொதிக்க வெச்சு அதுக்கூட பனை கற்கண்டு சேர்த்து கலந்து வடிகட்டி சிறிது வெண்ணெய் சேர்த்து அப்டியே கண்ண மூடிட்டு குடிச்சிடனும். இத தினமும் மதிய வேளை குடிக்கனும்.
கேழ்வரகு கூழ், சத்து மாவு கூழ் குடிக்கிறதும் ரொம்ப நல்லது.
இனி நீங்க வேலை நல்லா செய்யனும் டிமிக்கி அடிக்கப்படாது।:) இரவு படுக்கப் போகும் முன் நல்லா நடங்க. அப்புறம் வெண்ணீர் வெச்சி இடுப்பு, கால் தசைப் பகுதிகள்ல நல்லா ஊற்றி விட்டா வலியும் குறையும் தசைப் பகுதுகளும் பிரசவத்துக்காக நல்லா விரிந்து கொடுக்க ஆரம்பிக்கும். கால்களுக்கடியில தலயணை வெச்சு தூங்குறது நல்லது. மற்றபடி எல்லாமே கடந்த மாதங்களில் சொன்னதேதான். மீண்டும் அடுத்த மாதம் சந்திக்கலாம்.:)மற்றபடி மருதுவர் ஆலோசனைப் படி நடந்துக்கோங்க. அது வரை நன்றி கூறி விடை பெறுவது உங்கள் ஆகாயநதி!!!!

"கர்ப்ப காலம்( எட்டு, ஒன்பது, பத்தாவது மாதம்)"

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 4,5வ‌து மாதங்கள் :)

இப்போ உங்கள் வயிறு நல்லாவே வெளியே தெரிய ஆரம்பிக்கும் :)
கடுமையான வாந்தி, தலை சுற்றல் பெரும்பாலானோருக்குக் குறையும். சிலருக்கு குறையாது :(
பசியோட அளவு இன்னும் அதிகரிக்கும். வழக்கம் போல நான் கடந்த முறை சொன்ன உணவு வகைகள் எல்லாம் தொடர்ந்து சாப்பிடுங்க.
இந்த மாதம் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். அதுக்குக் தகுந்த மாதிரி உணவு முறையை அமைச்சுக்கலாம்.
இப்போ உங்க செல்லத்துக்கு நல்லா காது கேக்க ஆரம்பிச்சுடும். அதுனால நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். மனசை மகிழ்ச்சியா வெச்சிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதுக்கூட பேச ஆரம்பிங்க. ஆனா இப்பவே பாடம் சொல்லிக்குடுக்காதீங்க பாவம்.
இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ஏ,பி,சி,இ,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா எடுத்துக்கனும்.
மற்றபடி மருதுவர் ஆலோசனைப் படி நடந்துக்கோங்க.
சோனோகிராம் ஸ்கேன் செய்றது நல்லது। அது குழத்தையோட உடல முழுவதுமா பார்த்து ஏதேனும் ஊனம் இருக்கானும், பிளாசென்டா வளர்ச்சி எப்படி இருக்குனும் சொல்லிடும். மற்றபடி எல்லாமே கடந்த மாதங்களில் சொன்னதேதான். மீண்டும் அடுத்த மாதம் சந்திக்கலாம்.:) அது வரை நன்றி கூறி விடை பெறுவது உங்கள் ஆகாயநதி!!!!

'கர்ப்பகாலம் (ஆறு மற்றும் ஏழு மாதங்கள்)'

June 11, 2008

கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள் :3ஆவது மாதம் :)

இது ஒரு முக்கியமான காலகட்டம் உங்கக் குட்டிச்செல்லத்துக்கு।இவ்வ‌ள‌வு நாள் இணைக‌ருவா இருந்த அவ‌ங்க‌ இப்போ க‌ருவா உரு வ‌ள‌ர்ச்சி அடையுறாங்க. உட‌ல் ப‌குதியும் தலை‌யும் பிரிந்து க‌ழுத்துப் ப‌குதி உண்டாகுது.கைக‌ள் ம‌ற்றும் கால்க‌ள் சிறிய அள‌வுள வ‌ள‌ர‌த் துவ‌ங்குது.
உட‌லோட ப‌ல முக்கிய‌ பாக‌ங்க‌ள் எல்லாம் வ‌ள‌ர‌த் துவ‌ங்குது.
உங்க‌ளில் உண்டாகும் மாற்ற‌ங்க‌ள்:
1 :வ‌யிறு சிறிய‌ அள‌வில் பெருக்க‌த் தொட‌ங்கும்
2 :வாந்தி, த‌லை சுற்ற‌ல் ச‌ற்றே அதிக‌ரிக்கும் (சில‌ருக்கு)
3 :அள‌வுக்கு அதிக‌மாக ப‌சிக்க‌த் துவ‌ங்கும்
இது 10வ‌து மாத‌ம் வ‌ரை தொட‌ரும்
4 :சில வாச‌னைங்க இப்போ புடிக்காது
5 :தூக்க‌ம் ரொம்ப வ‌ரும்
6 :சில‌ருக்கு ச‌ரும‌ம் வ‌ர‌ட்சியா இருக்கும்

நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌வை:
1. அதிக‌ அள‌வு த‌ண்ணீர் குடிக்க‌னும். அது தான் உங்க க‌ர்ப்ப‌ப் பையில் அமினாய்டிக் ஃப்லுயிட் என்னும் திர‌வ‌த்தை சரியான அள‌வு வெச்சிக்க உத‌வும்.உங்க கு‌ழந்தை அதில‌தான் நீந்திக்கிட்டிருக்கும் அது மூல‌மாதான் சுவாசிக்கும்
2.ஃபாலிக் அமில மாத்திரைகள், கால்சியம், இரும்புச்சத்து, பி'வைட்டமின் மாத்திரைகள் எல்லாம் உங்க மருத்துவருடைய ஆலோசனைப்படி எடுத்துக்கனும். நீங்களா எந்த மாத்திரைகளையும் எடுத்துக்கக் கூடவே கூடாது.
3.கீரை, பழங்கள், காய்கள் எல்லாம் போன தடவ சொன்ன மாறியே சாப்பிடனும்.
4.காலி ஃப்லவர், முள்ளங்கி, முட்டை,ஈரல், வெண்ணெய், நல்லெண்ணெய், தயிர், அதிக அளவு பால், பாதம் பருப்பு, உலர்ந்த திராட்சை,குங்குமப் பூ, உளுந்து, கொண்டைக் கடலை, துவரை இதெல்லாம் உங்க தினசரி உணவுல இருக்கனும்.
5.உப்பு, காரம் குறைக்கனும்.
6.உடல் சூடு அடையாம பாத்துக்கனும்.
7.பழக்கமில்லாதவங்க அதிக எடை சுமக்கக் கூடாது.
8.உயர்ந்த காலணி, இறுக்கமான ஆடைகள், ஜங்க் ஃபுட் எல்லாத்துக்கும் டாடா சொல்லிடுங்க.
9.அரை ம‌ணி நேர‌த்துக்கு மேல பேருந்து ப‌ய‌ண‌ம் கூட‌வே கூடாது.
10. ந‌ல்லாத் தூங்க‌னும்.
11. 2மணி நேர‌த்துக்கு ஒரு த‌ர‌ம் சாப்பிட‌னும் இடையிடையே பழ‌ங்க‌ள அப்டியே இல்ல‌னா ஜூஸா குடிக்க‌லாம்.
இனி அடுத்த‌ மாத‌ம் பார்ப்போம்।

"கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள் ( நான்கு, ஐந்து மாதங்கள்)"

June 9, 2008

குட்டி இளவரசிக்கு என்ன ஆச்சு १ : 1(கற்பனைக் கதை குழந்தைகளுக்காக...)

ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி நம்ப இந்திய நாட்டுல நல்லபுரம் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு... அந்த ஊர ராஜா ஒருத்தர் ஆண்டுக்கிட்டு இருந்தாரு. அந்த ராஜாவுக்கு யாரும் பொய் சொன்னா புடிக்கவே புடிக்காது.அவருக்கு ரெண்டு இளவரசிகள். ரெண்டு பேரையும் அவருக்கு ரொம்ப புடிக்கும். அவங்களுக்கும் அப்பானா உயிரு. ஆனா... பெரிய இளவரசிக்கு எப்பவுமே சின்ன இளவரசி மேல பொறாமை. ஏனா சின்னவ பெரியவள விட ரொம்ப அறிவாளி, அழாகானவ, எல்லா கலைகளிலும் திறமைசாலி. ஒரு நாள் அந்த ராஜாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போகவும் அவரு தன்னோட ரெண்டு மகள்களில் ஒருத்திய இந்த நாட்டுக்கு ராணியாக்கனும்னு முடிவு செஞ்சாரு.ஆனா அவங்கள்ல யாரு ராணியாகுற அளவுக்கு திறமைசாலினு நிரூபிக்கிராங்களோ அவங்க தான் ராணியக முடுயும்னு சொன்னாரு.
சின்னவளோ அக்காவே ராணியா இருக்கட்டும் அப்டினு சொன்னா. ஆனா ராஜா திறமசாலிக்கான போட்டி நடந்தே ஆகனும்னுட்டாரு.
அவரு மூன்று போட்டிகள அறிவிச்சாரு. ஓவியப் போட்டி தான் முதல் போட்டி. ரெண்டு பேரும் ஊருக்குள்லள போயி அவங்க பாத்தத பத்தி படமா வரையனும்.
ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு குதிரைல புறப்பட்டாங்க. ரெண்டு பேரும் வேற வேற திசைகள்ல போனங்க.
பெரியவ சந்தைக்கடை வேதிக்கு போனா. ஏனா அவளுக்கு புதிய நகைகங்க, துணிக, அழகு படுத்திக்கும் பொருள்கள்னா ரொம்ப ஆசை. அவ அதையெல்லாம் பாத்து வரையலாம்னு அங்க போனா.அதிலுள்ள நுணுக்கமான வேலைபாடுகள நம்ம படத்துல வரயலாம்கிறது அவளோட திட்டம். அப்டி வரைந்தா தான் ரொம்ப திறமையா வரையுறதா அப்பா நினைப்பாருனு அவ அப்டி செஞ்சா.‌
ஆனா சின்னவ எங்க போனா தெரியுமா??!!! அங்க அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியுமா?

June 6, 2008

கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்:(30தாவது நாள் முதல் 60ஆம் நாள் வரை)

முத‌லில் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்!:)

நீங்கள் தாய்மை அடந்துள்ளீர்கள் என்பதை அறிய 5முதல் 7 வாரங்கள் வரை ஆகலாம்.இது தங்களுடைய மாத்விலக்கு சுழற்சியினைப் பொறுத்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியினை அரிந்ததும் நீங்க முதல்ல செய்ய வேண்டியது உங்களுக்கான நம்பிக்கை.
ஆமாங்க தன்னம்பிக்கையும் எதையும் தாங்கும் இதயமும் இல்லாம ஆரோக்கியமான தாய்மை அப்டிங்கிறது இல்லை.
மருத்துவ ரீதியா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் சரியா முறைப்படி செய்ய ஆரம்பிச்சுருப்பீங்க. மன ரீதியா நீங்க செய்ய வேண்டியது இதுதாங்க...
1.மனச மகிழ்ச்சியா வெச்சிக்கனும்
2।அதிகமா எதுக்கும் ஆசைப் படாதீங்க எதிர்பாக்காதீங்க ஒருவேளை உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு அதை நிறைவேற்றி வைக்க நேரம் சூழ்நிலை இல்லாம போகலாம். அது உங்களுக்கு ஏமாற்றத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் கொடுத்து உங்க எல்லாருடைய மன நிம்மதியையும் கெடுத்துடும்.
3.45வது நாள் குழந்தையை ஸ்கேன் செய்யும் போது உங்க கணவரையும் கூட்டிட்டுப் போங்க. இது அவங்களுக்கும் மகிழ்ச்சியத் தரும். மேலும் உங்கள‌வர் உங்கள நல்லா பாத்துக்க உதவும். அவங்க இல்லாம தாய்மை இல்ல.
4. ம‌ருத்துவ ஆலோச‌னைக்கும் முடிந்த‌வ‌ரை உங்க‌ள‌வ‌ரோட‌ போங்க‌. அவ‌ரோட சூழ்நிலை கார‌ண‌மா வ‌ர‌ல‌னாலும் கோவ‌ப்படாதீங்க.
5.ம‌ற்ற‌ப‌டி ம‌ருத்துவ‌ரோர்ட ஆலோச‌னைக‌ளை த‌வ‌றாம பின்ப‌ற்ற‌னும்.
6.க‌டின‌மான‌ வேலைக‌ளையும் பேருந்து, ஆட்டோ,இரு சக்கர வாகனப் ப‌ய‌ண‌த்தையும் த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. இத‌ உங்க‌ ம‌ருத்துவ‌ரே சொல்லிருப்பாங்க.
7. ந‌ல்லா தியான‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து. இந்த‌ டிவி சீரிய‌லுக்கும் ஒரு முழுக்கு போட்டுடுங்க‌ உங்க‌ பாப்பாக்காக‌....
8.ப‌ப்பாளி, நாவ‌ல், அன்னாசி போன்ற‌ ப‌ழ‌ங்க‌ள த‌விர்த்து மாதுளை, த‌ர்ப்பூச‌ணி, சாத்துக்குடி, ஆர‌ஞ்சு, செவ்வாழை போன்ற‌ ப‌ழ‌ங்க‌ளையும் கீரை, முட்டை, முட்டை கோசு, வெங்காய‌ம், பூண்டு, கேர‌ட், மாங்காய் போன்ற காய்க‌ளையும் நிறைய‌ சாப்பிடுங்க‌.
9.மாங்காய் வாந்தி, த‌லை சுற்ற‌லுக்கு அரும‌ருந்து.
இந்த‌ மாத‌த்துக்கு இது போதும்। அடுத்த‌ மாதம் சந்திப்போம்.

"கர்ப்பிணிகளுக்கன குறிப்புகள்(3வாது மாதம்)"

June 5, 2008

கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்:முன்னுரை

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்பதன் பொருளே நமது பொறுமை , அளவு கடந்த தன்னலமற்ற அன்பு, தியாக உள்ளம் என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்।

ஆனால் இவை எல்லாவற்றினையும் விட முக்கியமான காரணம் "மக்கட் பேறு".இறைவனுடைய படைப்பினை நமது வயிற்றில் ஏற்று சுகமான வலியுடன் இவ்வுலகிற்கு பரிசாய் தருவதே ஆகும்.
சரி, நாம் விசயத்திற்கு வருவோம்। நான் இப்பகுதியில் தரவிருக்கும் குறிப்புகள் அனைத்தும் மருத்துவர் ஆலோசனைகள், என் சொந்த அனுபவங்கள் மற்றும் நான் படித்தும் பிறரது அனுபவங்களிலிருந்தும் கேட்டறிந்தவை. பாதகமான எதனையும் நான் கூற மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

"கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்(30வது நாள் முதல்)"

June 3, 2008

ஐந்து தலை யானை முட்டைக் கதை (பாகம் 3):முடிவு

பார்த்தா உள்ள யானையோட யானையோட உவ்வே சாணி இருந்துச்சு :):)க‌டைக்கார‌ருக்கு ஒரே கோவ‌ம் இந்த யானைக்கார‌ன் மேல‌. உட‌னே அவர் அவ‌னை ஆன‌யூர் காவ‌லாளிக‌ள் கிட்ட ஏமாத்திக்கார‌ன் அப்டினு க‌ம்ப்ளெயின்ட் ப‌ண்ணி புடிச்சு குடுத்துட்டார் அவ்ளோத‌ன் அந்த யானைக்கார‌ன் ந‌ல்லா மாட்டிக்கிட்டான்.
வ‌ழ‌க்கு ராஜா கிட்ட விசார‌ணைக்கு போச்சு. அந்த‌ ராஜா அவ‌ன்கிட்ட அந்த முட்டை ஏதுனு கேக்க அவ‌ன் அது வ‌ந்த க‌தை ப‌த்தி சொன்னான். ஆனால் ராஜா ரொம்ப புத்திசாலியா அதுனால‌ அவ‌ன் சொன்ன‌த‌ ந‌ம்பல . "ஐந்து த‌லை யானை சாமி கிட்ட‌ ம‌ட்டும் தான் இருக்கும் உன‌க்காக எல்லாம் அது வ‌ராது... நீ பொய் சொல்ற யானை சாணிய உருட்டி வெச்சு ஏமாத்துற " அப்டினு அந்த ராஜா சொன்னார். சாணிய‌ உருட்டி பொய் சொன்ன அவ‌ன் த‌லைய ம‌ண்னுல உருட்டி ம‌ர‌ண‌ தண்ட‌னை குடுக்குறேனு ராஜா சொல்லிட்டார்.
அவ‌னுக்கு என்ன‌ பண்ற‌துனு புரிய‌ல‌... இப்போதான் அவன் ம‌ன‌சுக்கு அவ‌ன் ப‌ண்ணின‌ பாவம் எல்லாம் உரைச்ச‌து. அவ‌ன் சாகப் போற நேர‌த்துல சாமிகிட்ட எப்படியாவ‌து த‌ன்னை காப்பாத்தும்ப‌டியும் தான் இனிமே யானைக‌ளை கொடுமை ப‌டுத்த‌ மாட்டேனும் பேராசைப் ப‌டாம ஒழுங்கா உழைச்சு சாப்டுவேனும் அழுது புர‌ண்டு வேண்டினான்.
சாமி தான் ரொம்ப ந‌ல்ல‌வ‌ராச்சே அவ‌ன் அழுவுற‌த பாத்து சாமி ரொம்ப‌ ஃபீல் பண்ணி அங்க எல்லார் முன்னாடியும் வ‌ந்து அவ‌னை ம‌ன்னிச்சு ந‌ட‌ந்த எல்லாத்தையும் சொன்னாரு. அவ‌னுக்கு ரொம்ப ஜாலியா போச்சு ஏனா எல்லாத்தையும் கேட்ட‌ ராஜா அவ‌னை விடுத‌லை ப‌ண்ணிட்டாரு.
அவ‌ன் சாமிக்கிட்ட த‌ன்னோட‌ 4யானைக‌ள‌யும் த‌ன‌க்கு கொடுக்க‌னும்னும் தான் இனிமே அதுங்க‌ள ந‌ல்ல‌ ப‌டியா பாத்துக்குவேனும் ச‌த்திய‌ம் ப‌ண்ணிக்குடுத்தான்.
உட‌னே சாமி அவ‌னோட யானைக‌ளை அவ‌னிக்கு குடுத்துட்டு போயிட்டாரு. அவ‌னும் தானே உழைச்சி யானைக‌ளுக்கு சாப்பாடு போட்டு யானைகளோட‌ பாசமா ஹேப்பியா வாழ் ஆர‌ம்பிச்சான்.:)

June 2, 2008

என் கண்கள்.......(கவிதை இல்லை கவித மாதிரி)

என் கண்கள்.......

உன்னை சிறை பிடிக்க‌
நான் பெற்ற மாளிகை !!!

உன்னை படம் பிடிக்க‌
நான் பெற்ற கருவி !!!

உன்னை பிரதிபலிக்க
நான் பெற்ற ஆடி !!!

என்னில் உன்னைக் காண
எனக்கான கண்கள் !!!

அவை
நம்
காதல் கதை பேசும்
அசையும் சிற்பங்கள் !!!

ஐந்து தலை யானை முட்டை கதை‍(பாகம் 2 )

இப்ப‌டியே தொடர்ந்து ரொம்ப நாட்களா அந்த யானை நிறைய சாப்பாடு சாப்பிட்டுகிட்டு ஜாலியா அவன் வீட்டுல ராணி மாதிரி இருந்துச்சு.......ஆனால் அந்த யானைக்காரன் யோசிக்க ஆரம்பிச்சான் "என்ன இந்த யானை தங்க முட்டை போடவே மாட்டேங்குதுனு" அவனுக்கு கோவம் வந்துருச்சு.
இது அந்த யானைக்கு தெரிய வந்ததும் அது இதுதான் அவனுக்கு தண்டனை கொடுக்க சரியான சமயம் அப்டினு திட்டம் போட்டுது. அதோட திட்டப் படி அன்னைக்கு மற்ற யானைகளையும் வேலைக்கு போகாம வீட்டுலயே இருக்க சொன்னிச்சு. எல்லா யானைகளும் அந்த கெட்டவனுக்கு பயந்துகிட்டே ஆனால் வீட்டுலயே இருந்துச்சுங்க.
அவன் வந்து பாத்துட்டு எல்லா யானைகளையும் அடிக்க ஆரம்பிச்சான்... அத பாத்து இந்த 5 தலை யானை பயங்கரமா கத்த ஆர்ம்பிச்சுது..... எல்லாரும் பயந்தே போயிட்டாங்க :( அவன் கோவமா வந்து அந்த யானையையும் அடிக்க ஆரம்பிச்சான். அந்த யானை அவன வேகமா தூக்கி வெச்சிக்கிட்டு அவன் கிட்ட பள பளனு ஜொலிக்கிற ஒரு தங்க முட்டைய காண்பிச்சுது. அவன் பேராசை கண்கள அகலமா விரிச்சு அந்த தங்க முட்டையையே பாத்துக்கிட்டுருந்தான்......
அப்போ அந்த யானை சொன்னுச்சு "டேய் நீ எவ்ளோ பெரிய கொடுமைக் காரன் அப்டினு எனக்கு தெரியும் நீ இனிமே ஒழுங்கா இந்த யானைகளை விடுதலை செய்யனும் அப்பதான் உனக்கு இந்த முட்டை " .
அவனும் தங்க முட்டை மேல இருந்த பேராசைல இந்த 4 யானைகளையும் விடுதலை செய்ய ஒத்துக்கிட்டான். சரியான முட்டாள் :)
எல்லா யானைகளும் ரொம்ப ஹேப்பியா அவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு சாமி யானை கூட வந்துருச்சுங்க. அவன் அந்த முட்டைய கடைத்தெருவுக்கு விற்பதற்காக எடுத்துக்கிட்டு போனான். கடைக்காரன்கிட்ட அதிக விலை பேசி அதை விக்க குடுத்தான். கடைக் காரன் அந்த முட்டைய எடை போட்டா அது ரொம்ப குறைவா காண்பிச்சுது... கடைக்காரனுக்கு சந்தேகம் வந்துருச்சு... உடனே அவர் அந்த முட்டைய உடைச்சு பார்த்தார்...... பார்தா....!!!!!!!

May 30, 2008

ஐந்து தலை யானை முட்டைக் கதை‍(பாகம்1)

ஒரு காலத்துல (இப்டிதானே கதை சொல்ல ஆரம்பிக்கனும்) ஆனையூர் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு. அங்க ஒரு யானைக்காரன் வாழ்ந்துட்டு இருந்தான் அவன் நான்கு யானைகள வளத்துட்டு இருந்தான். அவன் ரொம்ப பேராசை புடிச்சவனா இருந்தானா...அதனால அவனோட யானைகள ரொம்ப கொடுமை படுத்தினான்.
தினமும் நாலு யானைகளும் அந்த ஊர்ல உள்ள எல்லா வீதிகளுக்கும் வித்தை காட்டி காசு சம்பாதிக்க போகனும். அந்த நாலு யானைகளில் ஒன்னு குட்டி யானை , ஒன்னு அம்மா யானை।அந்த குட்டி யானையும் வித்தைக்கு போயாகனும்।பாவம்...:(
அந்த அம்மா யானை தினமும் குட்டி யானை வித்தை காட்ட வெயிலில் அலயுறத பாத்து ரொம்ப கவலைப்படும்।(ஏனா அப்றம் குட்டி கருத்துப் போயிடும்ல !!!:)
அந்த யானைக்காரன் பேராசை புடுச்சவன்றதால அதுங்க சம்பாதிச்சுக் கொண்டுவர எல்லாக் காசையும் புடுங்கிக்கிட்டு அதுகளுக்கு சரியா சாப்பாடு போட கூட மாட்டான். நிறையா காசு கொண்டு வரலைனா ரொம்ப அடிப்பான். பாவம் அந்த யானைங்க தினமும் அரை வயிறு சாப்டுட்டு வெயிலுல வித்தைக் காட்ட போகுங்க:(
ஒரு நாள் அம்மா யானை வித்தைக் காட்ட போற வழியில ஒரு பிள்ளையார் கோயில பாத்துச்சா... உடனே உள்ள போயி சாமிகிட்ட கண்ணீர் விட்டு அழுதுட்டே யானைக்காரன் பண்ணுற கொடுமையெல்லாம் சொல்லுச்சாம்। அதையெல்லாம் கேட்ட சாமி உடனே கோவமா எழுந்துரிச்சு சாமியோட 5 தலை யானைய வானத்துல இருந்து கூப்டு அது காதுல நெறைய சொன்னாராம்
இப்போ 5 தலை யானையும் அம்மா யானை கூட யானைக்காரன் வீட்டுக்கு வந்துச்சாம் அத பார்த்த யானைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம்!!! 5 தலை வெச்ச யானை கூட இருக்குமானு ஆச்சரியம் உடனே அவனோட பேராசை புத்தி இந்த யானைய மக்கள்கிட்ட காண்பிச்சே நெறைய காசு வாங்களாம்னு யோசனை பண்ணுச்சாம். இத தெரிஞ்சிகிட்ட 5 தலை யானை அவன்கிட்ட தான் ஒரு தங்க முட்டை போட போறதாகவும் அத பாதுகாப்பா வைக்கவே அவன் வீட்டுக்கு வந்துருக்கதாவும் சொன்னுச்சு. உடனே அவனுக்கு சந்தோசம் தாங்க முடியல. எப்டியாவது அந்த தங்க முட்டைய தான் எடுத்துக்கனும்னு நெனைச்சான்.
அந்த யானையும் அவன் வீட்டுல ஓ।சி। ல தங்க ஆரம்பிச்சுது। நிறய சாப்டும் , தூங்கும் ஆனா வேலை எதுவுனம் செய்யாது.அவனும் அது இன்னைக்கு முட்டை போடும் நாளைக்கு முட்டை போடும்னு அதை ரொம்ப செல்லமா பாத்துக்கிட்டான்.

May 7, 2008

அறிமுகப் ப‌திவு த‌மிழ்ம‌ண‌த்துக்காக!(அபாய எச்ச‌ரிக்கை!!!)

இத‌னால ம‌க்கள் எல்லாருக்கும் அறிவிக்கிற‌து என்ன‌னா.........கடந்த 2வ‌ருட‌ங்க‌ளாக அனைவ‌ருடைய ப‌திவுகளையும் படித்து ம‌ட்டுமே வந்த‌ நான் இப்போ " நானும் ப‌திவு போடுறேன் " அப்டினுட்டு உங்க எல்லாரையும் கொடுமை ப‌டுத்த வ‌ந்துட்டேன்!!!
நீங்க எல்லாரும் என்னை வாழ்த்தி வ‌ர‌வேற்பீங்க அப்டினு நம்புறேன்!!!
ந‌ன்றி.... வ‌ண‌க்க‌ம்!!!!!!!

பிஞ்சுக்கு நஞ்சை ஏற்றும் தடுப்பூசி:(

சொல்ல முடியாத அளவுக்கு துக்கம் தரும் செய்தி இது.தமிழக மருத்துவமனைகள் தூங்குதா இல்ல மருத்துவ ஊழியர்கள் தூங்குறாங்களாஇல்ல இந்த நன்றி கெட்ட அரசாங்கம் தூங்குதானு தெரியல:(
குழந்தைங்க பெரியவங்களா ஆனதும் கடைசி வரை வாழ்க்கைல எந்த நோய் தாக்குதலும் வராம இருக்கதானே இந்தத் தடுப்பூசியெல்லாம் போடுறோம் அதை கூட விஷமாக்கி கொலை பண்ற இந்த கொலைகார கூட்டத்தை ஈவு இரக்கம் இல்லாத கல் நெஞ்சக் கும்பலை என்ன பண்றதுனு பொது மக்களான நாம தான் முடிவு பண்ணனும்.
ஏறக்குறைய 10 மொட்டுக்கள் இந்த உலகத்துக்கு வந்த வேகத்துலயே திரும்பப் போயிட்டாங்க:( இது அவங்க குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு? இவனுங்க தர நிவாரண நிதி அந்த பிஞ்சு முகங்களுக்கு முன்னாடி தூ... பிச்சை காசு! பத்து மாசம் பல கஷ்டத்தையும் தாங்கி அந்த உயிர சுமந்த தாய்க்கு தான் அந்த இழப்போட வலி தெரியும்.
ஆனால் அரசாங்கம் இது வரை இந்த விஷயத்துல எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்குறது எதுக்குனு புரியலை:( மருந்து காலாவதியானதுனா அத தூக்கியெறியாம மேலும் மேலும் குழந்தைங்கள தூக்கியெறியுறது ஏன்?
நோய் தடுக்கும் ஊசியே உயிரக் குடிக்குறது எவ்வளவு கொடுமை?