January 25, 2009

குழந்தைகளை கவனிக்க இந்தியாவில் யாருமே இல்லையா?

முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டு பொருட்கள் கிடைத்தன. மரப்பொம்மைகள் வாயில் வைத்தால் தீங்கு விளைவிக்காது. கூர்நுனிகள் இல்லாததால் குழந்தைகளை காயப்படுத்தாது. ஆனால் அந்த பட்டியல் மிகவும் சிறியது தான். நடைவண்டி, மரப்பாச்சி பொம்மைகள், சொப்பு போன்றவை தான் குழந்தைகளுக்கு விளையாட கிடைத்திருக்கும்.

மரத்திற்கும் காகிதத்திற்கும் மாற்றாக வந்த ப்ளாஸ்டிக் குழந்தைகளுக்கான பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் யாவும் ப்ளாஸ்டிக்கில் வர ஆரம்பித்தன. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு?

இப்போது பெரும்பாலான பொம்மைகள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. 3 வயதுக்கு மேல் என்று அட்டைப்பெட்டியில் குறிப்பு இருந்தாலும், எல்லா வயது குழந்தைகளும் தான் அதை வைத்து விளையாடுகின்றனர். மிகச் சிறிய குழந்தைகள் எதையும் வாயில் வைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் இவ்வகை பொம்மைகள் அவர்களுக்கு கட்டாயம் தீங்கு விளைவிக்கும். அதில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் கெடு விளைவிக்கலாம் என்பது ஒரு புறம், அதில் இருக்கும் சின்ன சின்ன பாகங்களும் குழந்தைகளுக்கு கட்டாயம் கேடு விளைவிக்கலாம்.

பொழிலனுக்கு இப்போது எல்லாவற்றையும் வாயில் வைக்க வேண்டும். அவன் சட்டையில் தொங்கும் நாடா, அவன் ஊஞ்சலின் கயிறு, ரிமோட், பொம்மைகள், என் கை என எதுவும் விதிவிலக்கல்ல. சரி, அவன் கடித்து விளையாட ஏதேனும் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைக்கு சென்றேன்

*** முதலில் கிடைத்தது 'தேன் நிப்பிள்'. வாயில் வைக்கும் ரப்பர். இது மிகச்சிறிதாக இருப்பதால் ஏனோ அவனை கவரவில்லை

*** அடுத்து Johnson & Johnson Baby Kit உடன் வரும் Teether Set. இவை கடிப்பதற்கு ஏதுவாகவும், நச்சுத்தன்மை இல்லாதவையாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

*** அப்புறம் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட Water Teethers. ஏதோ ஒரு திரவம் அடைக்கப்பட்ட காய்கறி/பழம் வகைகளை போல வடிவமைக்கப்பட்ட பொம்மைகள். அவை மிருதுவாகவும் கடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் போல. ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம். வாங்கவில்லை.

*** வேறு Brand தயாரிப்புகள் இருக்கிறதா என்றால் FunSkool தயாரிப்புகளை காட்டினார்கள். FunSkool நிறுவணம் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட பொம்மைகளை தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திற்கேற்ப வெவ்வேறு பொம்மைகள். விளையாட்டு வழி கல்விக்கு பயன்படும் அழகழகான பொம்மைகள். இந்திய பொம்மைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், குழந்தைகளுக்குக்கான பொம்மைகள் என்றால் கட்டாயம் எனது வாக்கு FunSkool நிறுவணத்திற்கு தான்.

*** FunSkool பொம்மைகள் அருமையானவை என்றாலும் அவை எல்லோராலும் வாங்கப்படுவதில்லை. ஏனென்றால் விலை அதிகம். கடைக்காரரிடம் கேட்டபோதும் அவர் இதே காரணத்தை தான் சொன்னார். நான் சீனப்பொம்மைகளில் இருக்கும் நச்சுத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அதெல்லாம் சொன்னாலும் இந்த பொம்மைகள் விற்பனையாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அந்த செய்திகள் எல்லாம் சீன வியாபாரத்தை குறைப்பதற்காக சொல்லப்படுவது என்றும் சொன்னார்.

***விலை மலிவு என்பதால் சீன பொம்மைகளை வாங்கிறோம். ஆனால் அந்த நச்சுத்தன்மை குறித்த கருத்துகள் உண்மையா இல்லையா என்று ஏன் ஆராய்வதில்லை. குறைந்தபட்சம் FunSkool பொம்மைகளில் இது Non-Toxic என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சீன பொம்மைகளில் அது கூட இல்லையே.


ஒரு வருத்தம், எத்தனை கடைகளில் தேடினாலும் குழந்தைகளுக்கான பொருட்களிலோ, பொம்மைகளிலோ இந்திய தயாரிப்புகள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. (அல்லது எனக்கு தெரியவில்லை). Wipro BabySoft பால் குடிக்கும் சீசாக்கள், டயாப்பர்கள் தயாரிக்கிறார்கள். ஆனால் அவை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. மேலும் மற்றவைகளை விட சற்று விலையும் அதிகம்.

மற்றபடி குழந்தைகளுக்கான தயாரிப்புகளை தரும் இந்திய நிறுவணம் ஏதேனும் உள்ளதா??? தெரிந்தால் சொல்லுங்களேன்

14 comments:

நானானி said...

எனக்கும் தெரிந்து இந்தியாவில், அதாவது இந்திய தயாரிப்புகள் குழந்தைகளுக்கென்று ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. சொன்னாமாதிரி அக்கரையில்லையோ? பழைய மரத்தாலான் சொப்பு-சட்டி செட் இன்றும் குழந்தைகளைக் கவர்கிறது.
பேரன் அமெரிக்காவில் பிறந்த போது, பேபி ஷாப் போன போது பிரமித்துவிட்டேன். பிறந்த குழந்தையிலிருந்து பத்து வயது வரை
பொருட்கள் குவிந்திருந்தன. ஒவ்வொரு அசைவுக்கும் தேவையான
சாமான்கள்!!!!!சிரிச்சா ஒன்னு, குப்புரவிழுந்தா ஒன்னு, வாயில் வைத்து சப்ப ஒன்னு, கையில் பிடித்து விளையாட ஒன்னு...இப்படி நீண்டுகிட்டே போகுது.

பிரேம்குமார் said...

//சிரிச்சா ஒன்னு, குப்புரவிழுந்தா ஒன்னு, வாயில் வைத்து சப்ப ஒன்னு, கையில் பிடித்து விளையாட ஒன்னு...இப்படி நீண்டுகிட்டே போகுது.//
மிகச்சரியாக சொன்னீர்கள்.... பருவத்திற்கேற்ப நிறைய விளையாட்டு பொருட்கள் இருக்கின்றன இப்போது :)

பிரேம்குமார் said...

//பழைய மரத்தாலான் சொப்பு-சட்டி செட் இன்றும் குழந்தைகளைக் கவர்கிறது//

உண்மை. ஆனால் அதை வைத்து விளையாட குறைந்தது இரண்டு வயதாவது ஆக வேண்டுமே :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நானானி

Karthik said...

//பொழிலனுக்கு இப்போது எல்லாவற்றையும் வாயில் வைக்க வேண்டும்.

How sweet!
:)

ச்சின்னப் பையன் said...

//ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம். வாங்கவில்லை.
//

நல்ல முடிவு. அப்படியே தொடரவும்...

பிரேம்குமார் said...

//ச்சின்னப் பையன் said...
//ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம். வாங்கவில்லை.
//

நல்ல முடிவு. அப்படியே தொடரவும்...
//

ஏற்கனவே சீன மிட்டாய்கள் தின்பதற்கு உகந்தவை அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த பொம்மைகளில் பயன்படும் ப்ளாஸ்டிக்கிற்கும் இந்த உத்திரவாதமும் இல்லை. குறைந்தபட்சம் FunSkool வகை பொம்மைகளில் இதில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் Non-Toxic என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

இந்த சீன பொம்மைகள் குறித்து கடைக்காரர் சொன்னது விடுபட்டுவிட்டது. சேர்த்துவிடுகிறேன்

பிரேம்குமார் said...

//பொழிலனுக்கு இப்போது எல்லாவற்றையும் வாயில் வைக்க வேண்டும்.

How sweet!
:)//

Sweet??! நீங்க வாங்க கார்த்திக் சித்தப்பா, உங்க கையும் பிடிச்சு கடிக்க சொல்றேன் ;-)

சந்தனமுல்லை said...

பிளாஸ்டிக் வகையிலான நான்-டாக்ஸிக் வகைதான் கிடைக்கின்றன,
ஜான்சன் தயாரிப்புகள் எனநினைக்கிறேன்!
ஆனால் குழந்தைகளால், அவை படைக்கப்பட்ட நோக்கத்திற்காக உபயோகப் படுத்தப் படுவதில்லை. பெரும்பாலும் பேப்பர், அல்லது கீழே இருக்கும் எந்தப் பொருளும்..டோர் மாட், அல்லது கண்களுக்குத் தெரியாத சிறு துணுக்கைகள்தான் அவர்கள் வாய்க்குள் செல்லும்..(பப்புவிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் படி!!)

சந்தனமுல்லை said...

பொழில் மற்றும் ஆகாயநதி எபப்டி இருக்கிறார்கள்? நெடுநாட்களானது போல இருக்கிறது!

பிரேம்குமார் said...

//அல்லது கீழே இருக்கும் எந்தப் பொருளும்..டோர் மாட், அல்லது கண்களுக்குத் தெரியாத சிறு துணுக்கைகள்தான் அவர்கள் வாய்க்குள் செல்லும்//

அதென்னவோ உண்மை தாங்க... எங்க வீட்டு வாலு சரியான் 'பாய் பிறாண்டி'யா மாறிடுச்சு. பாய பிச்சு பிச்சு வாயில வச்சிக்கிட்டிருக்காரு :)

பிரேம்குமார் said...

//பொழில் மற்றும் ஆகாயநதி எபப்டி இருக்கிறார்கள்? நெடுநாட்களானது போல இருக்கிறது!//

மிக்க நலம். என்ன ஆகாயநதிக்கு தான் பொழிலன் பின்னேயும் வீட்டுப்பணிகளுக்குமாய் ஓடிக்கொண்டே இருக்க நேரம் போதமானதாகயிருக்கிறது. அதனால் தான் வலைப்பூ பக்கம் வர முடியவில்லை :(

ராம்.CM said...

இந்தியாவில், அதாவது இந்திய தயாரிப்புகள் குழந்தைகளுக்கென்று ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. சொன்னாமாதிரி அக்கரையில்லையோ? பழைய மரத்தாலான் சொப்பு-சட்டி செட் இன்றும் குழந்தைகளைக் கவர்கிறது.

இதுதான் உண்மை.!

அருமை..ப்ரேம்.

MayVee said...

nalla post

புதுகைத் தென்றல் said...

உண்மையான ஆதங்கத்தை அழகாக பதிவிட்டிருக்கீறீர்கள். ஃபன்ஸ்கூல் போன்றவகைகளில் அதிக செலவு வைக்கக்கூடிய வகைகள் தான் இருக்கிறது.

எனக்கு என் அம்மாவே களிமண்ணால் செப்பு சாமான்கள் செய்து தருவார். அது ஞாபகம் வருகிறது.