பல நேரங்களில் பொழிலனும் நானும் இருக்கும் தருணங்கள் எனக்கு நானும் குழந்தையாகவே இருப்பதாகத் தோன்றும். நான் அவன் தாயாகவும், சில நேரங்களில் அவன் சேயாகவும் மாறிவிடுகிறேன் என்று கூட கூறலாம்! :) சில நேரங்களில் அவனிடம் என்னையும், என் கணவரையும் காண்கிறேன்! :)
அவனுடைய சேட்டைகள் எல்லாமே அர்த்தமுள்ளதாகவும், அறிவுத் தாகத்திற்கானதாகவுமே எனக்குத் தோன்றுகிறது. அந்த பிடிவாத குணம் கூட சரியாகிவிட்டது :) ஆனால் அவனுக்கு உணவூட்டும் தருணங்கள் தான் பலவிதங்களில் நடைபெறும்.
************
அவனை ஊஞ்சலில் அமர வைத்து தான் முதன் முதலில் உணவூட்ட ஆரம்பித்தேன்.
அதிலும் நான் ஏதாவது பாட வேண்டும். அதிகம் "விநாயகனே வினை தீர்ப்பவனே" தான் பாடுவேன். பாவம் குழந்தை மனசு நான் பாடுறதையும் கேக்கும்.
***********
அடுத்ததாக கீழே ஓரிடத்தில் சமத்தாக அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்!அப்போது "தோசை அம்மா தோசை" பாடல் உதவியது! சில நாட்களுக்குப் பிறகு "ஜானி ஜானி யெஸ் பாப்பா" உதவியது!
***********
பிறகு அங்கும் இங்கும் தவழ்ந்து கொண்டே உண்ண ஆரம்பித்தார்! அப்போது அவருடைய விளையாட்டு சாமான்கள் அவரை உண்ண வைக்க உதவின. அவற்றை சுற்றிலும் போட்டுவிட்டால் சார் அந்த சாமான்களின் வட்டத்திற்குள்ளேயே இடுப்பார். ஆனால் அதுவும் சில நாட்களுக்கு தான் உதவியது.
**********
அடுத்து அவர் விளையாட்டு சாமான்களின் உலகம் கிச்சன் பாத்திரங்கள் வரை நீண்டது!
அதனால் எப்போதும் தட்டு (அ) டம்ளர் ஒன்றை அவர் கையில் கொடுத்துவிட்டு ஊட்டிவிடுவேன்! அதை போட்டு தட்டிக் கொண்டே அந்த ஒலியின் மகிழ்ச்சியில் சாப்பாடு இறங்கிவிடும்!
**********
அடுத்து அவருக்குத் தனியாக உண்ணப் பிடிக்கவில்லை... அதனால் நான் உண்ணும் போது "அம்மா ஆ!" என்று குழந்தை வரும். நானும் அப்படியே அவருக்காக கேரட் சாதம், பருப்பு சாதம் என்று உண்ண ஆரம்பித்தேன் :) ஆனால் இதில் என்ன கலாட்டா என்றால் நான் சட்னி தொட்டு இட்லி உண்ணுவதைப் பார்த்துவிட்டார். அதிலிருந்து அவருக்கு சட்னி தொடாமல் கொடுத்தால் வாங்கமாட்டார். இட்லியில் சட்னி உள்ளதா என்று பார்க்கத் தெரியாததால் நான் சட்னி தொடுவது போல பாவ்லா செய்து ஊட்டிவிடுவேன்.
**********
போகப் போக நான் பாவ்லா செய்வதைக் கண்டுபிடித்துவிட்டார். அதனால் நான் சட்னியை தனியே கிண்ணத்தில் எடுத்து அவர் கண்ணுக்குப் படாமல் என் பின்னே ஒளித்து வைத்துக் கொண்டு அவருக்கு இட்லி/தோசை ஊட்டி விடுவேன். அவர் வேறு பக்கம் கவனிக்கும் சமயம் ஒரு பெரிய இட்லி பீசை எடுத்து எனக்கு பின்னால் இருக்கும் சட்னியில் பரபரப்பாகத் தொட்டு லபக்னு முழுங்கிடுவேன்! :)
**********
இப்போது புதிய முறையை செய்கிறேன்! இட்லி/தோசையை சிறு துண்டுகளாக பிய்த்து ஒரு குட்டித் தட்டில் தனியாக போட்டு அவருக்குக் கொடுத்துவிட்டு எனக்கு தனியாக வைத்துக் கொள்கிறேன். இது அவனே தனியாக உண்ண பழக்கம் வருவதுடன், அவன் கைகளுக்கு நல்ல பயிற்சி! :) இதனால் அவன் கவனம் சட்னியின் மீது போவதில்லை. இரு கைகளாலும் உணவினை எடுத்து பிய்த்து, பிசைந்து அவன் வாயில் சிறிதும் கீழே அதிகமும் போட்டு விளையாடுவதைக் காண இன்பமாக உள்ளது! :)
இதைத்தான் வள்ளுவர்
"அமிழ்தினும் இனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"
அப்படினு சொல்லிருக்காரு :) அவன் தட்டுல இருக்க மீதி இட்லிய நான் தானே சாப்பிடுறேன்! :)
***************************************************
வணக்கம்
1 week ago
1 comment:
இப்போ பொழில்குட்டி எனக்கு ஊட்டி விட ஆரம்பிச்சுடுச்சு! :)
Post a Comment