February 3, 2009

குழந்தை வளர்ப்பும்... பெற்றோர் பொறுப்பும்...!

இந்த பதிவினை குழந்தைகளின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் செயல்கள் பற்றிய பதிவாகவும்,
அவர்கள் எதிர்காலம் பற்றிய பதிவாகவும் நினைத்துக் கொண்டு நான் துவங்குகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரே பையன், ஒரே பெண் என்று செல்லம் அதிகமாகக் கொடுத்தே வளர்க்கிறார்கள். செல்லம் கொடுப்பது தவறல்ல; ஆனால் அதோடு பொறுப்பு, தன்னிச்சையாக தன் காரியங்களை செய்து கொள்ளுதல், பிறருக்குக் கேட்காமலேயே சென்று உதவுதல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுத்தருவதோடு சிறு சிறு வீட்டு வேலை முதல் சமையல், துணி துவத்தல் என அனைத்து வேலைகளையும் செய்யப் பழக்குதல் அவசியம்.

இந்த காலத்தில் ஆண்(அ)பெண் எந்த குழந்தையானாலும் எல்லா வேலைகளையும் செய்யப் பழகியிருத்தல் மிகவும் அவசியம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

நான் என் வயதையொத்த, என்னுடன் பழகிய, என்னுடன் படித்த என்று பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இன்னமும் அம்மா தான் தலை வாரி விட்டு உணவு ஊட்டிவிட்டு என அனைத்துமே அம்மா தான் செய்ய வேண்டும். தன் பெண்ணிற்கு பொறுப்பினை ஊட்டாமல் உணவு ஊட்டும் தாய் அங்கு அவரை அறியாமலேயே அவர் பெண்ணின் எதிர்காலத்தினை பாதிக்கும்படி செய்கிறார்.

இவ்வளவு ஏன் திருமணம் ஆன பிறகும் கூட பல பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்!
பெண்கள் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தினையே தாங்கி நிற்கும் தூண்கள்; குடும்பத்தினர் அனவருக்கும் தாயாக இருந்து தேவையானதை செய்யும் மிகப் பெரிய பொறுப்பு பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உள்ளது. ஆனால் தன் காரியங்களை செய்யவே தாயை எதிர்பார்க்கும் பெண் எப்படி வெளி உலகையும் சமாளித்து ஒரு குடும்பத்தினை தாங்கி நிற்கும் தூணாவள்.


ஆணுக்கும் இதே தான். தன் காரியங்களை தானே செய்து கொள்ள பெற்றோர் குழந்தை பருவம் முதலே பழக்கி விட வேண்டும். குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அம்மாவை எதிர்பார்க்காமல் பள்ளி செல்லும் பருவம் முதல் சிறிது சிறிதாக தன்னிச்சையாக தன் வேலைகளை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து செல்ல மகன் என்று ஷூ பாலிஷ் செய்வது, டை அணிவிப்பதில் இருந்து தலை வாரி ஷூ மாட்டிவிடுவது வரை அம்மாவே எல்லாம் செய்தால் அந்த மகனுக்கு பொறுப்பு என்பது வராமலே போய்விடும்.

குழந்தைகளை இளம் வயது முதலே பொறுப்புள்ளவர்களாக இருக்கப் பழக்கிவிடுவது பெற்றோர்களின் முதற்கடமை. இன்றும் 2வயது மகனுக்கு வெளியில் வைத்து இடுப்பில் தூக்கிக் கொண்டே சாப்பாடு ஊட்டும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு.


குழந்தைப் பருவத்திலேயே தன் விளையாட்டு சாமான்களைப் பொறுப்புடன் அதன் இடத்தில் அடுக்கி வைப்பது, தன் துணிகளை தானே மடிக்கக் கற்றுத் தருவது, முக்கியமாக 1வயது முதலே குழந்தைகள் தானே தன் கையால் உணவு உண்ணப் பழக்கிவிடுவது, தானே குளிப்பது, உடையணிந்து கொள்வது முதல் , ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பாக பழகுதல், மரியாதை என அனைத்தையும் சிறு வயதிலேயே பழக்கிவிடுவது நல்லது. வீட்டுப்பாடங்கள் மற்றும் வரைபடங்கள் கூட அவர்கள் தன்னிச்சையாக செய்ய வேண்டும்.

பேரண்ஸ் கிளப் வலைப்பூவில் எப்படி குழந்தைகளை மாண்டிசோரி கல்வி மூலம் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று எண்ணுகிறேன் :)

அதுமட்டுமல்லாமல் நடைமுறையிலும் இதனை சந்தனமுல்லை+பப்பு கூட்டணி நிகழ்த்திக் காட்டுகின்றனர்.


" ஓடி விளையாடு பாப்பா!...." என்னும் பாடல் வரிகள் சிறந்த குழந்தைகளை உருவாக்க உருவானவை என்றே எண்ணுகிறேன்!
குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டார்களானால் சிறந்த வீடும், ஊரும், நாடும் உருவாகும்.:)

No comments: