December 14, 2008

வெறியர்களின் வெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி எங்கே?

எழுமின்!

விழிமின்!

கருதிய கருமம் கைகூடும் வரை

உழைமின்! உழைமின்!



இது பாரதத் திரு நாட்டின் இளைஞர்களுக்காக விவேகானந்தரின் எழுச்சிக் குரல்। இன்றைய நம் இளைய சமுதாயம் இக்குரல் கேட்டு எழவில்லை என்றாலும் பரவாயில்லை. மழலைகள் பெற்றோரை இழந்து அரற்றும் குரல் கேட்டாவது எழுச்சி கொள்ளலாம்.

மும்பை தாக்குதல் பற்றி தான் இந்தப் பதிவு சந்தனமுல்லை அவர்களின் அழைப்பிற்கிணங்கி [தாமதமாக :( , பொழிலனுடன் நேரம் சரியாக இருக்கிறது :) ]



தீவிரவாதிகளுக்கு எதிராக போர் என்று போராடினால் போர் உண்டாகிவிடுமா. தொலைக்காட்சியில் பார்த்தேன் ஆளாளுக்கு போர் வேண்டும் என கத்தி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். இது என்ன பாராளுமன்றத்தில் விற்கப்படும் பொருளா?



என் கருத்து என்னவென்றால் இந்த முதியோர் அரசியல் முறை மாற வேண்டும். இளைஞர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வர வேண்டும்.

அரசியல் என்பது பொழுது போக்கோ அல்லது பணம் ஈட்டும் தொழிலோ அல்ல. நம் தாய்நாட்டின் வாழ்க்கை. சிறுக சிறுக தீவிரவாதிகளின் வெறியாட்டத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கும் நம் இந்தியாவின், இந்திய மக்களின் வாழ்க்கை. இன்று கத்தும் இளைஞர்கள் அரசியல் முறையை மாற்ற முன் வரவேண்டும். என்னையும் உங்களையும் சேர்த்துதான்....



இன்று நாட்டின் எந்த ஒரு முடிவும் ஆட்சியாளர்களாலேயே எடுக்கப் படுகிறது எனும் போது போர் என்னும் முடிவும் நம் அரசியல் தலைவர்களே எடுக்க வேண்டும். அந்த இடத்தில் இளைஞர்கள் வந்தால் இந்த விவகாரத்திற்கு சரியான பதிலடியாக பல ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.



இல்லையென்றால் இப்படி முன்பே தாக்குதல் பற்றிய அறிவிப்பு கிடைத்தும் கோட்டைவிட்டிருப்பார்களா?



தாக்குதல் நடந்து முடிந்த பின்பு அவ்விடத்திற்குத் தீவிர பாதுகாப்பு போடுவதற்கு பதிலாக முன்பே கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா?



ஒவ்வொரு முறையும் இப்படி தாக்குதல் நிகழும் போது மட்டும் நாம் உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுவதில் பயனில்லை. தேர்தலின் போது சிந்திக்க வேண்டும் , படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது அவர்களை ஊக்குவிக்க வேண்டும், இளைஞர்களால் மட்டுமே நம் தாய்நாட்டின் தலையெழுத்தை மாற்ற இயலும்.



இழப்பின் வலி இன்னமும் இரணமாகவே உள்ளது. அந்த வடு ஆறும் முன்பே வெறியர்களுக்கு எதிராக நாம் திரள வேண்டும். இன்னும் எதற்காக போர் தொடுக்காமல் காத்துக்கொண்டிருக்கிறோம்? மிச்சம் மீதம் இருக்கும் காஷ்மீரையும் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்றா? அல்லது பாவம் மடையர்கள் ஏதோ சண்டையிடுகறார்கள் மன்னித்துவிடலாம் என்றா?



"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்"



என்ற குறள் இங்கு பொருந்தாது....



"குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்"



என்ற குறளே தற்சமயம் நமக்குப் பொருத்தமானது.



நம் கைகள் கோர்க்கட்டும்.

நம் இதயங்கள் சில இழப்புகளைத் தாங்கும் பக்குவம் உடையதாகட்டும்...

அப்போது தான் பெரும் இழப்புகளைத் தவிர்க்க இயலும்.



நம்மிடம் படை பலமில்லையா அப்படியானால் பல திறமையான இளைஞர்கள் எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் உதவுவார்கள்.



பண பலமில்லை என்று மட்டும் கூறவே கூடாது; நம் நாட்டுப் பெண்களின் ஒட்டுமொத்த நகைகளையும் சேர்த்தால் உலகிலேயே நாம் தான் பணக்கார நாடு! ஆச்சரியமாக உள்ளதா? இது தான் உண்மை!



போருக்குத் திட்டமிடுவதற்குத் தேவையான அதிக புத்திசாலிகளும் நம் நாட்டில் தான் உள்ளனர்; இதுவும் ஆதாரப்பூர்வமான உண்மை :)



பின் எதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்? தலைவர்களின் சம்மதத்திற்கா? அது எளிதில் கிடைக்காது :( இளைஞர்கள் கைக்கு ஆட்சி வரும்வரை....



பொறுத்திருந்தது போதும் புறப்படுவோம் புதியதோர் பாரதம் செய்ய...
அதில் தீவிரவாதமற்ற அமைதியை ஏற்படுத்த !!!

காஷ்மீரைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதற்காகவும்,
இந்தியாவின் அமைதியைக் குலைத்து வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் ஆடும் வெறியாட்டத்தை தடுத்து அவ்ர்களுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்; வெறியர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்..............


பின்குறிப்பு :
அக்காலத்தில் வீரத்தமிழ்த்தாய் ஒருத்தி தன் இரண்டு வயது மகன் கையில் வாளினைக் கொடுத்துப் போர்முனைக்கு அனுப்பி வைத்தாளாம். அத்தகைய தாய்மார்கள் வாழ்ந்த இந்நாட்டிலே தான் நாமும் வாழ்கிறோம். நமக்கும் அதில் பாதி எண்ணமாவது வர வேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றினையும் வீரத்தையும் சேர்த்து ஊட்டிவிட வேண்டும். நம் பிள்ளைகள் இராணுவத்தை எதிர்காலமாக தேர்ந்தெடுத்தால் பாசத்தில் தடுக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்.

என்னைத் தொடர்ந்து யார் வேண்டுமானலும் கைகோர்க்கலாம் இந்த அணியில் :)

December 6, 2008

ஒரு தாயின் புலம்பல்... எனக்கு ஒரு வழி கூறுங்களேன்.

எனக்கு பிரசவ விடுமுறை முடியப் போகிறது... எங்கள் வீட்டில் நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் எங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை... என் அம்மா மற்றும் மாமியார் இருவருமே தனியாக இங்கு வந்து அதிக நாட்கள் இருக்க முடியாது ஏனென்றால் என் அப்பா மற்றும் மாமனாருக்கு சர்க்கரை நோய் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.... எங்கள் உறவினர்களில் வேறு யாரும் இங்கு வந்து இருக்கும் நிலையில் இல்லை... குழந்தைகள் காப்பகமும் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை... அதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.... அதனால் இப்போது பொழிலனை எப்படிப் பார்த்துக் கொள்வது என்றே புரியவிலை....

என்னுடைய அத்தை(மாமியார்) பொழிலனை அவர்களுடன் புதுச்சேரியில் விடுமாறு கேட்கிறார் ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளன.... வார விடுமுறையில் மட்டுமே நாங்கள் பெற்ற பிள்ளையை பார்க்க முடியும்.... அதிலும் எல்லா வாரமும் அலைவது சற்று சிரமம் எங்கள் குழந்தைக்காக என்றாலும் அதிகப் படியான அலைச்சல் விரைவில் உடல் நிலையை பாதிக்கும்... அவனுக்காகத்தானே உழைக்கிறோம் ஆனால் அவனை தினமும் பார்த்து அவன் செய்யும் குறும்புத் தனங்களை ரசிக்க முடியாமல் அவனுக்கு கதைகளை சொல்லி மகிழ முடியாமல் அவனை ஊரில் விட்டுவிட்டு பின் எங்கள் வீடே வெறித்துப் போய்விடும் :( அவனை ஒரு நாள் பிரிவதும் எனக்கு மிகவும் சங்கடமான ஒன்று..... குழந்தைகள் மனதில் அது எவ்வளவு பேரிய ஏக்கத்தை ஏற்படுத்தும்... பாவம் வாய் விட்டுக் கூறக் கூடத் தெரியாது...

என் கணவர் என் வேலையை விடுவதே சரியான தீர்வு என்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.... ஏனென்றால் நான் மிகவும் விரும்பும் பணி அதில் இன்னும் நான் எந்த சாதனையும் செய்யவில்லை.... நன்கு படித்து கேம்பஸ் தேர்வினால் பெற்ற பணி அதுவுமில்லாமல் நான் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது.... அதற்குள் அதனை எப்படி விடுவது என்றே புரியவில்லை...

நான் கர்ப்பமாக இருக்கும் போது என் அலுவலகம் HCL எனக்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்து என்னை நன்கு பார்த்துக் கொண்டது... வேலையை விட்டுவிட்டால் அப்படிப் பட்ட நிறுவனத்திற்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன் என உறுத்துகிறது.... உங்களுக்கு ஏதேனும் தீர்வு தோன்றினால் கூறுங்களேன்.... என் குழந்தை எனக்கு அதை விட முக்கியம்.... என்ன செய்வது?

November 28, 2008

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி பாட்டு :) அது எங்க பாட்டு :)

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி....
கண்ணுக்குட்டிப் பட்டு அம்மாடி....
பட்டுக்குட்டி சிட்டு அம்மாடி.....
சிட்டுக்குட்டி தங்க அம்மாடி...
தங்கக்குட்டி வைர அம்மாடி.....
வைரக்குட்டி பவள அம்மாடி....
பவளக்குட்டி கண்ணு அம்மாடி....
இப்படியாக நீளும் இப்பாடல் பொழிலனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்....
இப்பாடலின் ஆசிரியர்..... வேற யாரு நாமதான்.... :)
என் வாய்க்கு வந்த கொஞ்சும் வார்த்தைகள் அத்தணையும் போட்டு சிரிச்சிட்டே பாடினா நான் பேசினாலே வாய் விட்டு சிரிக்கும் பொழில் குட்டி இதுக்கு சத்தம் பொட்டு ஒரே மகிழ்ச்சியா சிரிப்பாரு....:)
அதைவிட கண்கொள்ளாக் காட்சி வேறு என்ன? அதனால் நான் அடிக்கடி இதை பாடிட்டே இருப்பேன் :)

November 27, 2008

சிரி... சிரி சிரி சிரி சிரி....சிரி.....




என்ன தலைப்புனு படங்கள பார்த்ததும் உங்களுக்கு புரிந்திருக்குமே!!!!
எங்க பொழிலன் எப்பவுமே சிரிச்ச முகமாதான் இருப்பான்...
அதுவும் யாராவது அவனிடம் பேசினால் போதும் அவர்களை ந‌ன்கு கவனிப்பான்.... இது மிகவும் ந‌ல்லப் பழக்கம் என்றே எனக்குத் தோன்றுகிறது
"குறைவாகப் பேசு அதிகம் கேள்" என்ற பொன்மொழியை ந‌ன்கு புரிந்து வைத்துள்ளான்
************************************************************************************
அவனுக்குத் தெரிந்த முகம் என்றால் பார்த்ததுமே வருமே ஒரு சிரிப்பு... அப்பப்பா.... இப்போதெல்லாம் சத்தம் போட்டு சிரிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்
************************************************************************************
நாங்கள் கதை கூறும்போது காட்சிக்குத் தகுந்த ந‌ம் முக பாவனையை ஓரளவிற்குப் பின்பற்றி அவனும் செய்வதைப் பார்க்கும் போது என் செல்லக்குட்டி வளருகிறான் என்று மகிழ்ச்சியாக உள்ளது
************************************************************************************
அவனிடம் நான் பேசினாலே போதும் கொஞ்சம் இடைவெளி விட்டாலும் "ம்ம்" என்று பதில் கூறிக் கொண்டே வருபவன் "ம்ம்ம்" என்று வேகமாகக் கூறுவது அடுத்து என்ன என்று கேட்பது போல் இருக்கும்.
************************************************************************************
வயிற்றினுள் அவன் இருந்த போது நான் எப்போதெல்லாம் சிரிப்பேனோ அப்போதெல்லாம் அவனும் குதித்து அவனுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான் இப்போது அவனே தன்னிச்சையாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு அம்மாவாக எனக்கு அளவிலா மகிழ்ச்சி :)
இது எல்லா அம்மாக்களுக்குமே உள்ள உணர்வல்லவா!!!!
************************************************************************************

November 12, 2008

கொலைகாரன்கள் தப்ப உதவும் விஜய் டிவிக்கு கண்டனம்

இந்த வாரம் செவ்வாய் கிழமை இரவு விஜய் டிவியின் "குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் ஒரு கொலையை செய்து விட்டு தடயவியல் துறையின் புலனாய்விலிருந்து தப்பிப்பது எப்படி என்று வகுப்பெடுத்தார்கள்...
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்... ஜூகுனு என்னும் கோர மிருகம் பணத்துக்காக 2வயது ஆண் குழந்தையை அடித்தேக் கொன்று இரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறான்.
அந்த மிருகம் எப்படியெல்லாம் தப்பித்தான் என்று விளக்கினார் கோபி அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை அந்த கொலைகாரனின் கைப்பேசி எண்ணைக் கொண்டு அவனை காவல்துறை பின் தொடர்ந்ததையும் அவன் அதை அறிந்து வேறு எண் மாற்றினாலும் அவன் எப்படி காவல்துறையினரால் பின் தொடரப்பட்டு பிடிபட்டான் என்பதையும் "தெளிவாக" விளக்கினார்கள்.
அதாவது... " அவன் கொலை செய்ததும் தன்னை காவலர்கள் அடையாளம் காணாதபடி மொட்டையடித்து, சவரம் செய்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளான் பின் அவன் கேரளாவிற்குத் தப்பிச் சென்றுள்ளான் அங்கிருந்து தனது பாசமிகு தந்தைக்கும், தோழனுக்கும் கைப்பேசி மூலம் தினமும் பேசவேண்டியது இதை மோப்பம் பிடித்த காவல்துறை அவனது கைப்பேசி எண்ணைக் கொண்டு அவன் இருக்கும் இடத்தை தெளிவாகக் கண்டுபிடித்தனர் ஆனால் இங்கு காவல்துறையின் செயல்பாடுகளை அவனது தோழன் அவனுக்கு அறிவித்து வர அந்த மிருகம் கேரளாவிலிருந்து வேறு கைப்பேசி எண் மாற்றிக் கொண்டு தப்பித்துவிட்டான் ஆனால் அவனது கைப்பேசியில் உள்ள அந்த கைப்பேசி சாதனத்தின் உருவாக்கத்தின் போது அதற்கு அளிக்கப்படும் எண்ணைக் கொண்டு அந்த கைப்பேசி இருக்குமிடத்தைத் தெளிவகக் கண்டுபிடிக்கும் உத்தியைக் கொண்டு அவன் இருக்குமிடத்தை அறிந்து காவலர்கள் அங்கு மாறுவேடத்தில் சென்றுள்ளனர் இதற்கிடையே இங்கு அவனது தந்தையையும் தோழனையும் பிடித்துவிட்டனர் அவர்கள் மூலம் அவனை ஓரிடத்திற்கு வரவழைத்து காவலர்கள் கையும் களவுமாக சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதில் இந்த விளக்கம் போதாதென்று கைப்பேசி எண்ணைக் கொண்டு எவ்வாறு ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும் என்று புலனாய்வு துறையினர் மற்றும் கைப்பேசி சேவைத் து்றையினரின் அறிவியல் ரீதியான விளக்கம் வேறு அது தான் பிரச்சினையே

இப்படி எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினால் அதனைப் பார்க்கும் குற்றவாளிகள் இனி இந்த யுத்திகளை தவிர்த்து வேறு விதமாகத் தப்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவார்கள் இது மேலும் குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் ஒரு விளக்கமே....


இதனால் ஏற்படும் குற்றங்களுக்கும், இழப்புகளுக்கும் சேனல்
பொறுப்பேற்குமா?

இந்த குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் கொடூர செயலும்
சட்டப்படிக் குற்றமே!

இதற்கு அந்த சேனல் என்ன பதில் கூறும்?
மக்களுக்கு உதவி செய்வதாக எண்ணி அறிந்தோ அறியாமலோ தீய
செயல்களுக்கு துணை போகும் இந்தச் செயலுக்கு மக்களின் பதில்
என்ன?

இதில் விளக்கம் தருகிறோம் என்று குற்றவாளிகளைக்
கண்டறியும் யுத்திகளை விளக்கி இரகசியம் காக்கத்தவறிய காவல்
துறையினரை என்ன சொல்வது?

இந்தக் கேள்விகளை எல்லா மக்கள் முன்னிலையிலும் கேட்க
இயலாததால் இப்படி பதிவின் மூலமாவது மக்களுக்கு போய் சேரட்டும்
என்று என் ஆத்திரத்தைப் பதிவிடுகிறேன்।

November 5, 2008

ங்கா...ங்கா....ம்ம்மா...அம்மா...

இது என்ன தலைப்புனு யோசிக்கிறீங்களா? (இல்லைனாலும் பரவால)
இப்படி தான் எங்க பொழில் குட்டி அழுகிறார்..... :)
சீக்கிரமே அவரும் பதிவு எழுத வருவாருனு என் கணவர் சொல்லிருக்காங்க.... :) அவருக்கு இப்போ 4மாதங்கள் ஆகிறது , ஆனால் பிறந்த இருவாரங்களிலேயே "அம்மா"னு சொல்லி அழுதாறே பாக்கனும் எங்க எல்லாருக்குமே ஆச்சரியம்।
என் பிறவியே அவருக்காகதானு தோணிச்சு...
அப்பப்பா அவரோட தெளிவான "அம்மா" உச்சரிப்பும், அழகான பொக்கை வாய் சிரிப்பும் என்ன மயக்கிடும்...:)

பொழிலன் பிறந்தாச்சு!!! டும்..டும்..டும்..டும்!!!

எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழ்ந்தை பிறந்த சேதி உங்களுக்கு அருட்பெருங்கோ அண்ணா மூலமா தெரியும்தானே??!!

அவருக்கு "பொழிலன்" அப்படினு பெயர் வேச்சிட்டோம் :)
எப்படி பெயர்? உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்....

அவர் இப்போ 4மாத குழந்தை:)
பின் குறிப்பு: எனக்கும் சிசேரியன் :(