December 17, 2008

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்....கொசுவர்த்தி சுருள்

இதோ மார்கழி பிறந்துவிட்டது....
என் வாழ்வில் இம்மாதம் மறக்கமுடியாத மாதம் :)
நான் சிறுபெண்ணாய் இருக்கும்போதிருந்தே நன்றாக கோலம் போடுவதாக எல்லாரும் பாராட்டுவார்கள் (சத்தியமாங்க வேணுமானா என் கோலம் போட்டோக்களை போடவா?) அதனால் இன்னும் ஆர்வம் அதிகமாகி நாள்தோறும் காலையிலேயே எழுந்து சாணி தேடி எடுத்து குச்சியால் நீரில் கரைத்து விட்டு ஆனால் கையால் தான் வாசல் தெளிப்பேன் :) (சாணம் ஒரு கிருமி நாசினி என்பதை அதிகம் நம்புவதால்)

பிறகு சிறிது நேரம் அதைக் உலர விட்டுப் பின்பு அதில் கோலம் போட ஆரம்பிப்பேன்.... இருப்பதிலேயே எங்கள் வீட்டுக் கோலம் தான் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில் தளராத உறுதி எனக்கு :) அதை பெரும்பாலும் நிறைவெற்றி விடுவேன் தேர்வு நேரங்கள் தவிர்த்து :)

ரங்கோலி, பூத்தொட்டி, யானை, மயில், தேர், கோயில், முருகன், புள்ளிக் கோலம், சிக்கல் கோலம் எனப் பல வகைக் கோலங்கள் போடுவோம் :) என் தங்கை தான் உதவியாள் வர்ணங்கள் எடுத்துக் கொடுக்க.... ஆனால் அப்போது நடக்குமே போட்டி... யார் வீட்டுக் கோலம் அழகாக உள்ளது என்று.... ஏகப்பட்ட பாராட்டு மழைதான்.... நான் போடும் கோலமே அழகுதான் என்று எல்லாரும் சொல்லும் போது பெருமையாக இருக்கும் :)

பூசணிப்பூ கிடைக்காது என்பதால் செம்பருத்தி, செவ்வந்தி, ரோஜா என்று பல விதப் பூக்களை கோலத்தின் மேல் வைப்போம்.

இது மட்டுமில்லை... கோயிலில் பாடல் பாடும் சிறார் கூட்டத்திலும் இருந்தோம்... கோலம் போட்டதும் குளித்து கோயிலுக்குச் செல்வோம்... பாடி பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மிதிவண்டியில் வேக வேகமாக வருவேன்... அது எனக்கு மிகவும் பிடிக்கும் :) அந்த பணிப் புகையைக் கிழித்துக் கொண்டு வண்டி ஓட்டுவதாக எனக்கு ஒரு எண்ணம் :)

சில நாட்களில் வீதியில் பாடிக்கொண்டு வரும் எங்கள் நண்பர்களுக்கு காலை மிதமான சூடாக பால் கலக்கித் தருவோம் எப்படியும் ஐம்பது பேருக்குக் குறையாமல் வருவார்கள் :)

இது போதாதென்று பள்ளியில் எங்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை விருப்ப வகுப்பு உண்டு. அதையும் கற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடம் செய்வதற்கு முன் அப்பா, அம்மாவிற்குப் பாடிக் காட்டுவேன் (பாவம் தான் அவர்கள் :) )

இப்படியாகச் சென்ற மார்கழி மாதங்களில் வருங்காலத்தில் நல்ல கணவன் அமைய வேண்டும் என்று அதிகாலை வாசல் தெளித்த பின் இறைவனை வேண்டிக் கொண்டு விளக்கேற்றுவேன் :-) ( வெவரந்தான் அப்பவே அப்படீனு நீங்கள் சொல்வது கேட்கிறது :-))

அப்போதெல்லாம் நான் ஒரு பூசாரி எங்கள் வீட்டிலும், பள்ளியிலும் :) நெற்றியில் நீண்ட கோடாகத்தான் திருநீறு இடுவேன்.

ம்ம்ம்.... இதெல்லாம் நான் பட்டமேற்படிப்பிற்காக சென்னைக்கு வருவரை தொடர்ந்து செய்தது..... இங்கு வந்த பின் மார்கழி மாதங்கள் தேர்வு, தூக்கம், அரட்டை, மாலை நேரத்தில் கோயில் என்று இரு வருடங்கள் கல்லூரி விடுதியில் கழிந்தது.

பிறகு திருமண வாழ்க்கை மற்றும் அலுவலகம் இரண்டிலும் கவனம் சென்றதால் என் கணவர், என் வயிற்றில் பொழிலன், அலுவலகம், வீடு என்று கடந்த வருட மார்கழி கடந்து சென்றது :) காலையிலேயே சமையல், சிற்றுண்டி எல்லாம் முடித்து வைத்து ஏழு மணிக்கு அலுவலகப் பேருந்தை பிடித்தாக வேண்டும்; கர்ப்ப கால சிரமங்கள் வேறு :)

ஆனால் அலுவலகத்தில் கடந்த வருடம் கோலப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற போது எங்கள் டீம் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகிவிட்டனர் :) அப்புறம் பொங்கலுக்கு அலுவலகத்தில் பூக்களால் கோலம் வரைந்தோம்.

இப்படியாக இன்னமும் மார்கழி என்றால் கொண்டாட்டமாகத்தான் உள்ளது :) இப்போது மார்கழி மாதம் அதிகாலை பொழில்குட்டியோடு தான் :) வெகு நேரம் குனிந்து பெரிய கோலம் போடு அளவிற்கு என் உடல் நிலை இன்னும் தேறாததால் அடுத்த வருடம் தான் அதைச் செய்ய வெண்டும் :) பொழில்குட்டி தான் உதவியாள் :)

அப்பாடா மொக்கை முடிந்தது....
பொறுமையாக கடைசிவரை வந்துவிட்டீர்களா? மிக்க நன்றி :-)

நீங்கள் யாராவது இந்த மார்கழி மாத அனுபவத்தைத் தொடரலாம் :)

8 comments:

சந்தனமுல்லை said...

சுவாரசியம்...ஆகாயநதி!! கோலத்தை பார்க்க ஆசையாயிருக்கேன்..9 மணிக்கு சன் டீவி பாருங்கன்னு சொல்லிடாதீங்க!! lol

Karthik said...

//அப்பாடா மொக்கை முடிந்தது....

மொக்கையா???

உண்மையிலேயே செம கலக்கலா இருந்துச்சுங்க.
:)

Anonymous said...

உங்க கோலங்கள் போட்டோவும் போடலாமே.

ஆகாய நதி said...

//
கோலத்தை பார்க்க ஆசையாயிருக்கேன்..
//

//
உங்க கோலங்கள் போட்டோவும் போடலாமே.
//

கண்டிப்பா என்னுடைய கோலங்களை வேறொரு பதிவில் அளிக்கிறேன் :)

ஆகாய நதி said...

//
உண்மையிலேயே செம கலக்கலா இருந்துச்சுங்க.
:)
//

//
சுவாரசியம்...ஆகாயநதி!!
//

ரொம்ப நன்றி கார்த்திக், பப்பு அம்மா மற்றும் சின்ன அம்மிணி... :)

ஆகாய நதி said...

//
கோலத்தை பார்க்க ஆசையாயிருக்கேன்..9 மணிக்கு சன் டீவி பாருங்கன்னு சொல்லிடாதீங்க!! lol
//

அய்யயோ.... உங்கள நெடு.......................................... தொடர் பார்க்க சொல்லும் அளவிற்கு நான் அவ்வளவு பெரிய கொடுமைகாரி இல்லை :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோலங்கள்

கோலங்கள்

அழகான கோலங்கள்
அசத்தலான கொசுவர்த்தி
கலக்குங்க அம்மணி

ஆகாய நதி said...

நன்றி அமித்து அம்மா :)

என்ன நீங்க என்னை அம்மணி அப்படீனு கவுத்திட்டீங்க :(
நான் குட்டி அம்மா தானுங்க :)