May 13, 2009

பெண் எப்போது அழகாகிறாள்? தெய்வமாகிறாள்?

இப்போது தான் அன்னையர் தினம் முடிந்திருக்கிறது... அதாவது அந்த ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமே... மற்றபடி என்றென்றும் அன்னையருக்கு அன்னையர் தினமே... :)

சரி மேட்டருக்கு வருவோம்। ஒரு பெண் இந்த உலக நாடக மேடையில் எந்த கதாப்பாத்திரத்தில் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்? மகள், சகோதரி, மனைவி, மருமகள், அண்ணி, அத்தை,அம்மா, சித்தி, பெரியம்மா, பாட்டிம்மா என்று விதவிதமான பாத்திரங்களை ஏற்றாலும் தாயும், தாரமுமே பொதுவாக அதிகம் பேசப்படுகிறது.

அதிகம் பேசப்படாத உறவுப் பாத்திரங்களிலும் ஒரு பெண் அழகாகவே ஜொலிக்கிறாள்! நம் அம்மாக்கள் வலைப்பூவில் அண்ணன் குழந்தையை தன் குழந்தைப் போல் பேணும் பாசமிகு அம்மாவான அத்தையைப் பார்த்தோம்.

இப்படி நமக்குள்ளே நம்மிடையே நாமே பல பாத்திரங்களிலும் பலவிதமாக பெண் என்பவள் அதிசயப் பிறவி என்றே நிரூபித்து வருகிறோம்... இது பல ஆண்களுக்கு தற்பெருமை பதிவாக, பெண்ணியப் பதிவாகக் கூடத் தோன்றலாம்! :) ஆனால் அதற்காக அல்ல... இது பெண்களைப் பற்றிய அலசல், பெண்ணின் பெருமையை பெண்ணே உணர வழி செய்யும் பதிவு; அவ்வளவுதான்! :)

தாயாக:

இந்த பாத்திரம் உலகிலேயே சிறந்த பெண்ணுக்கு பிறவியின் பயன்
அடைய வைத்த பாத்திரம்.

இதில் ஒரு ஆணின் உதவி இருந்தாலும் முழுக்க முழுக்க கர்ப்பகால வேதனை, வலி, பிரசவ வலி, அதன் பிறகு வரும் உபாதைகள் என அனைத்துமே ஒரு பெண்தான் ஏற்கிறாள்.

அதைவிட ஒரு தாயின் வாழ்வும், செயல்களும் வருணிக்க வார்த்தைகளற்றது! குழந்தை உண்டானதிலிருந்து உணவு, உறக்கம் தொலைத்து பின் எங்கே மீள்வது இந்த குழந்தை என்னும் இன்பக் கடலில் மூழ்கி உருகி உருகி குழந்தை மீது பாசமழை பொழியும் ஒரு தாய் என்பவள் எப்படிப்பட்ட கதாப்பாத்திரம் என்பதை சொல்லி விளக்க வரிகளே இல்லை!

வாய் வழி கூறாமலே உணர்வுகளைப் புரிதல் என்பது தாய்மையிலும் உண்மையான காதலிலும் மட்டுமே சாத்தியம்!

ஆனாலும் தாய் என்பவள் தன்னுள் உருவாகிய தன் இரத்தம் கொண்டு உருவான குழந்தையிடம் பாசம் வைத்தல் என்பது ஒரு பெரிய அதிசயமோ அல்லது அந்தக் குழந்தைக்காக விட்டுக்கொடுக்கும் விஷயங்கள் ஒரு தியாகமோ அல்ல!

தாய்மையை தியாகம் என்று சொல்லி தாய்மையின் மதிப்பைக் குறைக்க விரும்பவில்லை! இது அவள் கடமை, உரிமை! அவள் இரத்தம் அவள் கொடுத்த உயிர் அவள் அதைப் பேணுகிறாள்! பாசம் காட்டி, பரிவுடன் வளர்க்கிறாள்!

அது ஒரு தவம்! ஒரு ஆனந்தப் பரவச நிலை! தன் குழந்தையே தன் உலகம் என்று வாழும் தாய் அந்தக் குழந்தையின் வாழ்வில் ஒரு அழகான தெய்வமாகவே இருக்கிறாள்!

ஒரு தாயாக பெண் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்! வாழும் தெய்வமாகிறாள்!
******************************
ஆனால் மனைவி, மருமகள், மாமியார், அண்ணி போன்ற உறவு ஏற்கும் பெண்???????

மனையாளாக:

இந்த உறவு ஏற்றதுமே மருமகள், அண்ணி, அத்தை, சித்தி போன்ற உறவுகளையும் அதாவது தன் இரத்த சம்பந்தம் இல்லாத உறவுகளையும் சேர்த்து மனதில் சுமக்க ஆரம்பிக்கிறாள்.

அன்பு என்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டு புதிய வாழ்க்கையை புதிய இடத்தில் புதியவர்களுடன் துவங்கும் போது இருக்கும் மனநிலை வெகு விரைவில் மாறி அவள் புகுந்தவீட்டிற்காக எதையும் செய்யும் மனநிலைக்கு வந்துவிடுகிறாள்! அப்பெண்ணை என்னவென்று சொல்வது?

தனக்கு மாங்கல்யம் சூட்டியதால் மட்டுமே அந்த கணவனுடன் வாழ வேண்டும் என்று எண்ணாமல் அவனோடு மனதளவில் ஒன்றி, அன்பு காட்டி, மாமன் மாமியையும் தன் பெற்றோர் போல எண்ணி, அங்குள்ள அத்துணை உறவுகளையும் தன் உறவாக எண்ணி எப்படியெல்லாம் அன்போடும் பாசத்தோடும் கவனிக்கிறாள்!

அந்தக் குடும்பத்தின் உணவு, உடை, நடைமுறைப் பழக்கவழக்கங்களுக்கு அவள் தன்னையே மாற்றிக்கொள்கிறாள்! தன் கணவன் விருப்பத்திற்கேற்பவே முடிந்தவரை அனைத்தையும் செய்கிறாள்!

இப்படி எல்லா விதத்திலும் பிறருக்காகவே வாழும் அவள் அங்கு தான் தாய்மையும் அடைகிறாள்! அவள் தாய்மை அடைந்து கணவனிடம் குழந்தையைக் கொடுக்கும் போது இருக்கும் பெருமிதம் ஒரு மனைவியாக முழுமையாக சாதித்துவிட்டதையேக் காட்டுகிறது! "அவள் அந்தக் குடும்பத்திற்கு வாரிசை சுமந்து பெற்றுத் தரும் கருவறை கொண்ட கோயில்! வம்ச விளக்கைச் சுடர் விடச் செய்யும் தீபம்! ஆதலால்..." என்னும் வரிகளை ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

ஒரு மனைவியே தாயாகவும் மாறிக் கணவனைப் பார்த்துக்கொள்கிறாள்; ஒரு மருமகள் மாமனார் மாமியரின் இறுதிக் காலங்களில் ஒரு தாய் குழ்ந்தைகளைப் பார்ப்பது போல அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள்; அண்ணி என்பவள் தாய்க்கு அடுத்த தாயுறவு! அண்ணியும் ஒரு தாய் போலவே நடந்துகொள்கிறாள்!

குழ்ந்தைக்காக தன் கேரியரைத் தியாகம் செய்யும் தாய் சிறந்தவள் என்றால் மாமனார், மாமியாரைக் கவனிப்பதற்காகவே கேரியரைத் தியாகம் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள்! அவர்களை எப்படிப் புகழ்வது? மனைவி என்னும் உறவு ஏற்றதற்காக இத்துணை செய்யும் பெண்ணும் அழகானவள் தானே! :)

இந்த மனைவி என்னும் உறவு கூட தாயைப்போல ஈடு இணையில்லாத உறவு! ஒரு மனைவியால் ஒரு தாயாகவும் அன்புகாட்ட முடியும்! மனைவியும் ஒரு வாழும் தெய்வமே!

என்னைப் பொறுத்த வரை இந்த இரு உறவுகளில்தான் பெண் மிகவும் அழகாக, பரிபூரண அம்சங்களுடன் ஜொலிக்கிறாள்!

தாய், தாரம் என்னும் இரு வேறு தலைசிறந்த உறவுகளுக்கு ஈடு இணை இல்லை என்றே கூறலாம்! பெண் சிறந்தவளாக மூலதனம் அன்பு! அதை இவர்கள் இருவரும் அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்!

அன்பு செய் வாழும் வரை!
அன்பு செய் பிறர் வாழுவதற்கும்!
அன்பு செய் தன்னலம் இன்றி!
அன்பு செய் எதிர்ப்பார்ப்பின்றி!

இப்படி அன்பினை அள்ளி அள்ளி வழங்கும் அன்பு சுரபி பெண் என்பதை பெண்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! அன்பினால் ஒரு சிறந்த சமுதாயத்தையே உருவாக்கும் ஆற்றல் படைத்த சக்தி பெண்!

"அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
என்பதற்கு சிறந்த உதாரணம் பெண்!

பெண்மையைப் போற்றுவோம்!
பெண்மையை வணங்குவோம்!
பெண்மையை வாழ்த்துவோம்!

மக்கள்ஸ் இது வரைக்கும் பொறுமையோடு படித்துவந்த உங்கள் நல்ல மனசுக்கு நன்றி! உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் கூறலாம்! :)

டிஸ்கி:
இந்த இரு உறவுகளிலும் சரி வர தன்னை ஈடுபடுத்தாதப் பெண்களும் இருக்கிறார்கள்! அவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை :(

23 comments:

ஆயில்யன் said...

//தாய்மையை தியாகம் என்று சொல்லி தாய்மையின் மதிப்பைக் குறைக்க விரும்பவில்லை! இது அவள் கடமை, உரிமை! அவள் இரத்தம் அவள் கொடுத்த உயிர் அவள் அதைப் பேணுகிறாள்! பாசம் காட்டி, பரிவுடன் வளர்க்கிறாள்!///


அருமை !

Thamizhmaangani said...

//இந்த இரு உறவுகளிலும் சரி வர தன்னை ஈடுபடுத்தாதப் பெண்களும் இருக்கிறார்கள்! அவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை :(//

புரியல்ல... நீங்க என்ன சொல்லவறீங்க?

அன்னை திரேசா இவ்விரண்டையும் செய்யாமல் நம் மனங்களில் இருக்கிறாரே!

//ஒரு பெண் இந்த உலக நாடக மேடையில் எந்த கதாப்பாத்திரத்தில் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்?//

அவங்க அவங்களாகவே இருக்கும்போது தான்...

Thamizhmaangani said...

//அங்குள்ள அத்துணை உறவுகளையும் தன் உறவாக எண்ணி எப்படியெல்லாம் அன்போடும் பாசத்தோடும் கவனிக்கிறாள்!//

இந்த காலத்துல இப்படிலாம் நடக்குது என்ன? :)

Thamizhmaangani said...

//அந்தக் குடும்பத்தின் உணவு, உடை, நடைமுறைப் பழக்கவழக்கங்களுக்கு அவள் தன்னையே மாற்றிக்கொள்கிறாள்! தன் கணவன் விருப்பத்திற்கேற்பவே முடிந்தவரை அனைத்தையும் செய்கிறாள்!//

தன்னையே மாற்றிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொஞ்சம் முட்டாள்தனமா தெரியுது.

ஆகாய நதி said...

நன்றி ஆயில்யன்! :)

ஆகாய நதி said...

வாங்க தமிழ்மாங்கனி...

அன்னை தெரேசா போன்று இவ்விரு உறவுகளையும் பாத்தரமாக ஏற்காமலே வாழ்ந்து சரித்திரம் படைத்த பெண்களைப் பற்றி இங்கு கூறவில்லை...

உறவுகள் என்னும் காதாப்பாத்திரம் ஏற்று வாழ்ந்த வாழும் பெண்களைப் பற்றிய பதிவு!

ஆகாய நதி said...

//

//ஒரு பெண் இந்த உலக நாடக மேடையில் எந்த கதாப்பாத்திரத்தில் மிகவும் அழகாக ஜொலிக்கிறாள்?//

அவங்க அவங்களாகவே இருக்கும்போது தான்...

//

உண்மையைச் சொல்லுங்கள் இந்த சமூகத்தில் எல்லாப் பெண்களாலயும் அவங்க அவங்களாகவே வாழ முடிகிறதா?

பெரும்பான்மையான பெண்கள் மாற்றத்தை ஏற்கின்றனர் அவர்களை புகுந்தவீட்டார் மாறச்சொல்லாத போதும் கூட, அலுவலகம் மாறச் சொல்லாத போதும் கூட, கல்லூரி, பள்ளி, நட்பு வட்டாரம் என எதுவுமே மாறச்சொல்லவில்லையானாலும் கூட பெண் அந்த அந்த சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறாள்!


இருப்பினும் மாற்றங்களையும் ஏற்று மாறி வாழ்ந்துகாட்டுகிறாளே அது தான் மேட்டர்! :)

ஆகாய நதி said...
This comment has been removed by the author.
ஆகாய நதி said...

//

//அங்குள்ள அத்துணை உறவுகளையும் தன் உறவாக எண்ணி எப்படியெல்லாம் அன்போடும் பாசத்தோடும் கவனிக்கிறாள்!//

இந்த காலத்துல இப்படிலாம் நடக்குது என்ன? :)

//

நிச்சயமா நடக்குது... என் உறவுகளை நான் நேசிக்கிறேன்... ஆண்களும் சரி பெண்களும் சரி திருமணம் மூலம் வரும் புதிய உறவுகளை நேசிக்கின்றனர்!

இப்படிப் பலரும் புதிய உறவுகளை ஏற்று நேசித்துப் பழகுவதால் தான் நம் நாட்டில் இன்னும் திருமணம், குடும்ப முறை போன்றவை சிறப்பாக இருக்கிறது...

இல்லையென்றால் மேல் நாட்டு பாணியில் இன்று திருமணம் நாளை விவாகரத்து என்ற பாணியில் செல்லும் குடும்ப முறை :(

ஆகாய நதி said...

//
தன்னையே மாற்றிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொஞ்சம் முட்டாள்தனமா தெரியுது.
//

இதில் முட்டாள்தனமாக கருதுவதற்கு ஒன்றுமில்லை... தன்னுடன் இறுதி வரை வரப் போகும் கணவனுக்காக ஒரு பெண் தன்னை மாற்றிக்கொள்வதில் தவறில்லை...
அங்கு உண்மையான அன்பும் காதலும் இருப்பின் தன் கணவனுக்காக மாறலாம்...

இங்கு விஷயத்தில் பெண்ணியம் பேசி பெண்ணின் பெருமையைக் குலைப்பதை விட பெண்ணியம் என்றால் என்ன என்று தெளிவாகப் புரிந்து கொள்வது நன்று! :)

ஆகாய நதி said...

சகோதரி ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்... இங்கு நான் பெண்கள் அடிமையாக தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்று கூறவில்லை... அப்படி செய்வதும் கூடாது..

ஆனால் சில இடங்களில் அப்படி நடக்கத்தான் செய்கிறது... அது மாற வேண்டிய ஒன்று... அப்படிப்பட்ட ஆண்கள் திருந்த வேண்டும்...

இங்கு ஆணாதிக்கம் இன்றியே பிறர் வற்புறுத்தலும் இன்றியே பிறர் மன மகிழ்ச்சிக்காக தன்னை மாற்றிக் கொள்கிறாள் அவர்கள் விருப்பத்திற்கு...

இங்கு அன்பு மட்டுமே மூலதனம்... மகனுக்காக தாய் மாறுகிறாள்; கணவனுக்காக மனைவி மாறுகிறாள்; அப்பாவுக்காக மகள் மாறுகிறாள்...

இது உங்களுக்கு முட்டாள்தனமாக தெரிகிறதா?

வெளியூரில் இருந்து வரும் மகனுக்கு/கணவனுக்கு பிடித்தமானவற்றை சமைத்து காத்திருப்பது கூட ஒரு மாற்றம் தானே! தனக்குப் பிடித்தது என்று செய்யாமல் அவர்களுக்கு பிடித்தது என்று செய்கிறாளே!:)

Karthik said...

உண்மையை சொல்றதுன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. நீங்க சொல்ற மாதிரி இருப்பவர்களால்தான் பூமி இன்னும் வாழத்தகுந்ததாய் இருக்கிறது..

ஆனால் என்னால் இப்படி, என் அப்பா மாதிரி, இருக்க முடியுமான்னு தெரியலை!

ஆகாய நதி said...

உண்மைதான் கார்த்திக்!

ஆண்களின் தியாகமும் பேசப்பட வேண்டிய ஒன்றுதான்!

அப்பாவாக, கணவனாக, மகனாக, சகோதரனாக என்று ஆண்களும் சிறந்தவர்கள் தான்!
:)

அந்த வகையில் நீங்களும் கண்டிப்பாக உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இன்னும் பல சிரந்த பாத்திரங்களையும் ஏற்று வாழ வாழ்த்துகிறேன்! :)

நன்றி கார்த்திக்!

jothi said...

நன்றாக எழுதி இருக்கீர்கள். நீங்கள் எழுதியதில் நிறைய மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. அதை எழுதினால் உங்கள் பதிவை விட பின்னூட்டம் பெரிதாகிவிடும். so over to next mokkai.

ஆகாய நதி said...

வாங்க ஜோதி! பதிவுலகம் ஒரு கருத்துப் பரிமாற்ற விவாதமேடை... இதில் எவ்வளவு பெரிய பின்னூட்டமானாலும் சரி... உங்கள் கருத்து அனைவருக்கும் தேவை..

உங்கள் மாற்றுக்கருத்துகளை கூறுங்களேன்...

ஆகாய நதி said...

இங்கு பெண்ணியம் (அ) ஆணியம் வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து :)

இது அவ்விரண்டு சம்பந்தப்பட்ட பதிவோ(அ) ஆண்களைக் குறைத்து மதிப்பிடும் பதிவோ அல்ல.. :)

பின்னூட்டமிடும் அன்பர்களுக்கான என் தாழ்மையான வேண்டுகோள் இது! :)

jothi said...

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். உங்களின் ஒரு வாதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். தாய் மற்றும் மனைவி இந்த இரு பாத்திரங்களை சிறப்பாகவே செய்கிறார்கள். பொதுவாக மற்ற அனைத்து பாத்திரங்களிலும் தோல்வியே தழுவுகிறார்கள் என்பது என் கருத்து. தாய் என்பதின் மறு உருவமான மாமியார் என்ற பாத்திரத்தில் தோல்வி அடைவது ஏன்? பெற்றால்தான் பிள்ளையா? உண்மையில் தாய் மற்றும் மனைவி குறுகிய வட்டத்தில் தன்னை சுறுக்கி கொள்வது ஏன்? தன் குடும்பம் என்ற சுய நலமே. விட்டு கொடுத்தல் என்ற அற்புதமான கோட்பாட்டை கொண்ட கூட்டுக் குடும்பம் அழிந்து, இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்கள் தனி குடித்தனமே இருப்பதற்கான காரணமாய் நீங்கள் சொல்வது என்ன? நீங்கள் சொல்வது போல பெண்களும் இருக்கிறார்கள். மறுப்பதிற்கில்லை. ஆனால் அவர்கள் மிக மிக சொற்பமே. அதைவைத்து பெண்மையையே போற்றுங்கள் என்றால் எப்படி? ஆண்மையை போலவே பெண்மையும்.அதுவும் ஒரு பாலினமே. வேண்டுமென்றால் தாய்மையை போற்றுங்கள் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் உடனே நினைக்கலாம்,.. தாய்மையும் பெண்மைதானே என்று. பாறையும் செங்கல்லும் கல்தான் என்றாலும், பாறையே சாமியாக முடியும்.

ஆகாய நதி said...

வாங்க ஜோதி!

//
பொதுவாக மற்ற அனைத்து பாத்திரங்களிலும் தோல்வியே தழுவுகிறார்கள் என்பது என் கருத்து.
//

இதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்...
சந்தர்ப்ப சூழ்நிலை ஒரு மகள் மனைவி ஆனதும் மகள் என்னும் பாத்திரத்திற்குரிய முழு கடமையையும் சில இடங்களில் ஆற்ற முடியாமல் போகிறது...

ஏனெனில் ஒரு உதாரணம்..

இன்னும் சில வீடுகளில் மனைவியின் பெற்றோர் மருத்துவமனையில் கடைசி காலத்தில் இருந்தாலும் கூட அவர்களைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள ஒத்துழைக்காத கணவர்களும் இருக்கிறார்கள்! தாங்களே வந்து தன் மனைவியின் பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் கணவர்களும் இருக்கிறார்கள்!

இது மகளுக்கு மட்டும், சகோதரிகள் தங்கள் சகோதரிகளை நன்றாகவே கவனிக்கிறார்கள்! ஆனால் சகோதரர்களை எப்படி நினைக்கிறார்கள் என்பது பல வீடுகளில் வேறுபடுகிறது.

மேலும் இங்கு தாய் மனைவி மட்டுமே கூறியிருக்கிறேன்... மற்ற பாத்திரங்களைஒ விட இவை சிறப்பாக இருப்பதால் தான் இவ்விரண்டையும் கூறினேன்... அதையே தாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக கூறியிருக்கிறீர்கள்!

ஆகாய நதி said...

//
தாய் என்பதின் மறு உருவமான மாமியார் என்ற பாத்திரத்தில் தோல்வி அடைவது ஏன்? பெற்றால்தான் பிள்ளையா?
//

தாய் மற்றும் மனைவி தானே இங்கே கூறினேன்! :) சரி தாயின் மறு உருவம் மாமியார்... ஆனால் அவர் அதில் தோற்பதற்கு காரணம் அவர் மட்டுமல்ல... மருமகளும், மகனும் கூட காரணம்..

ஆகாய நதி said...

//
பெண்மையையே போற்றுங்கள் என்றால் எப்படி?
//

எல்லாப் பெண்களுமே தாய்தான்... மனைவி கூட ஒரு கட்டத்தில் கணவனுக்கு தாயாகிறாள்... திருமணமே ஆகாத பெண்களும் தாய்மையில் திளைத்துள்ளனர்... மதர் தெரெசா, நைடிங்கேல் அம்மை போன்றோர் நமக்குத் தாய்தானே... அவர்கள் பெண்கள் தானே...

பல பாத்திரங்களில் தோற்றாலும் குறைந்தபட்சம் ஏதோ ஒரு பாத்திரத்திலாவது ஜெயிக்கிறாள் பெண்..

ஆகாய நதி said...

//
தாய்மையும் பெண்மைதானே என்று. பாறையும் செங்கல்லும் கல்தான் என்றாலும், பாறையே சாமியாக முடியும்.
//

எல்லா பொருட்களிலும் அணுவிலும் கடவுளைக் காண்கிறோமே! அப்படித்தான் பெண்ணும்... ஒரு குழந்தையை சுமக்கும் கருவறையும் பலரையும் குழந்தையாய் சுமக்கும் மன அறையும் கொண்ட பெண்மையைத் தானே போற்ற வேண்டினேன்... :)

உங்களுக்கு ஏங்க இந்த கொலவெறி? ஹி ஹி ஹி... இப்படி ஏன் கோவம் பெண்கள் மேல...

jothi said...

நீங்கள் என் கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். தாய்மையே வணங்க வேண்டியது, போற்ற வேண்டியது, மற்றபடி பெண்கள் அனைவரையும் போற்றி துதித்து வணங்க தேவையில்லை என்பது என் கருத்து. பெண்களும் ஆணைப்போல் ஒரு இனமே. அனைவருக்கும் தரும் மரியாதை போதும் என்பது என் வாதம். (மரியாதைக்கும் போற்றுதலுக்கும் நிறைய தூரம் உள்ளது). அணுவன்றி அமையாது உலகு என்பது உண்மைதான். அணு மின்சாரமாகவும் வரும், கதிர்வீச்சாகவும் வரும். அது இருக்கிற இடத்தைப் பொறுத்தது. பெண்மையும் அப்படியே.

மற்றபடி நீங்கள் நினைப்பது போல் பெண்களுக்கு எதிரானவன் அல்ல. இதை என் கட்டுரை சொல்லும். பொதுவாக என் கட்டுரையை படியுங்கள் என அடுத்தவர் பின்னுட்டத்தில் போடுவதை அநாகரிகமாக கருதுகிறேன். ஆனால் நீங்கள் நான் ஏதோ பெண் இனத்திற்கே எதிரானவன் என்பது போல் நீங்கள் எழுதிவிட்டபடியால் என் தரப்பை விளக்க, சொல்ல வேண்டியதாகி விட்டது.

http://jothi-kannan.blogspot.com/2009/04/blog-post_30.html

ஆகாய நதி said...

உங்கள் கருத்திற்கு மதிப்பளிக்கிறேன்... ஏற்பதற்கில்லை... மன்னிக்கவும் ஜோதி! :)

உங்கள் பக்கத்தை வந்து படிக்கிறேன் நிச்சயமாக :)