May 23, 2009

கர்ப்பிணிகளே.. பேசுங்க! பேசுங்க! பேசிக்கிட்டே இருங்க!கர்ப்பிணி தாய்மார்களே இது முழுக்க முழுக்க உங்களுக்கான வேண்டுகோள்!
என் அனுபவம் பற்றிய பதிவும் கூட! :)

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும் திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல் அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்।

பிறர் குரலும், மற்ற சத்தங்களும் ஓரளவு கேட்டாலும் தாயின் குரல் நன்றாகக் கேட்கும், விரைவில் தாயின் குரல் குழந்தைக்குப் பரிச்சயமாகிவிடும்!
அதனால் நீங்கள் 5வது மாதம் முதலே உங்கள் குழந்தையிடம் கொஞ்சிப் பேசுவது, சிரிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது, பாடல் கேட்பது, குழந்தையை அழைப்பது போன்றவற்றை செய்து பாருங்கள்! பலன் தெரியும்!

அதோடு நிறைய நல்ல கதை புத்தகங்கள் படிக்கலாம்; ஆனால் சில பெண்கள் குழந்தையைப் பெரிய புத்திசாலி ஆக்கவேண்டும் என்று கர்ப்பம் தரித்தது முதலே பாடங்கள் வகை பிரித்து படிக்கின்றனர்; குறள், தமிழ் ஆங்கில எழுத்துகள், எண்கள், வாய்பாடு, பொது அறிவு போன்றவற்றை மனப்பாடம் செய்கின்றனர்; இது மிக மிக மிகக் கொடுமையான குற்றம்!

வயிற்றிலேயே குழந்தைக்கு ஏட்டுக்கல்வி தேவையா? :( அதன் மன நிலை பாதிக்கப்படாதா? நான் இப்படிப்பட்ட தாய்மார்களை பார்த்து தான் இதைக் கூறுகிறேன்

இரவும் கூட கண்விழித்து கால அட்டவணை போட்டு அதன் படி படிக்கிறார்களாம்; என்ன கொடுமை இது! :(

இப்படி வளரும் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் புத்திசாலியாக இருந்தாலும் வளரும் போது மன நிலை பாதிக்கப்பட்டு, தன் சுய வேலைகளைச் செய்யத் தெரியாமல் படிப்பு மட்டுமே உலகம் என்று வாழ்ந்து இறுதியில் அதிலும் அடையாளம் இன்றி போகின்றனர்!

நமக்கு இது தேவை இல்லை; நான் கூறுவது ஆரோக்கியமான புத்தகங்கள் சில உங்களை வருத்தாமல் மன அமைதியுடன் படிக்கலாம்; நகைச்சுவை கேட்டு சிரிக்கலாம், தியானம் செய்யலாம், கதைகள் படித்து வாய்வழியே சத்தமாகக் குழந்தைக்குக் கூறலாம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் தற்போது என்று விளக்கிக் கொண்டே உங்கள் வேலைகளைச் செய்யலாம்;

நிச்சயம் உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதைக் கேட்கும், பிறந்த பின் உங்களை எளிதில் மிக விரைவில் அடையாளம் காணும், வயிற்றில் இருக்கும் போது நீங்கள் கூறிய விஷயங்களை நேரில் காணும் போது அதற்கு அந்த நினைவு நிச்சயம் வரும் அதானால் எளிதில் புரிந்து கொள்ளும்!

உதாரணமாக வானம் எப்படி இருக்கும் என்று கருவில் இருக்கும் போது தாய் விளக்கியிருந்தால் வானத்தை குழந்தை விரைவில் அடையாளம் காணும்!

இத்தனை விஷயங்களையும் என் அனுபவத்தை வைத்து தான் கூறுகிறேன்! என் அனுபவங்களைக் கேளுங்களேன்.....

* பொழிலன் வயிற்றில் இருக்கும் போது கரு ஆணா பெண்ணா என்று தெரியாது ஆகையால் பொதுவாக "செல்லக்குட்டி" என்று அழைப்பேன்
அவன் பிறந்து மருத்துவமனையில் இருந்து கூட வரவில்லை, அதற்குள் நான் படுக்கையிலிருந்து செல்லக்குட்டி என்று அழைத்தால் கண்ணைக் கூட திறக்காத என் பொழிலன் நான் இருக்கும் திசையில் என் குரல் கேட்ட பக்கம் நோக்கி தலையைத் திருப்புவான்! :)

*நான் அவனுக்கு காகம் தண்ணீர் அருந்திய கதையும், முயல்/ஆமை கதையும் அடிக்கடி கூறுவேன் கர்ப்பகாலத்தில்... அதனால் அந்த இரு கதைகளும் எப்போதும் தனி விருப்பக் கதைகளாகவே இருக்கின்றன அவனுக்கு!

*நான் பாடல், ஆடல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டு அவற்றை ரசிப்பதோடு "பாப்பா நீயும் பிறந்து வளர்ந்து இப்படி அழகா பாடனும், ஆடனும்"னு சொல்லுவேன்... அதுவும் இப்போதே செய்யத் துவங்கிவிட்டான்!
நின்று கொண்டு ஒரு கையால் யாரையாவது பிடித்துக்கொண்டு இன்னொரு கை, தலை, உடல், இடுப்பு என ஒவ்வொன்றையும் தனியே அசைத்து அழகாக ஆடுவான்; நான் முதலில் ஆடிக்காட்டுவேன் அதைப் பார்த்து அவனே செய்யத் துவங்கிவிட்டான்!

*பாடல்களும் அவனுக்கு எப்போதும் பிடித்தமானவை, ஏதாவது பாடல் பாடினாலே அழுகை நின்று சமத்தாகிவிடுவான்... இது பற்றி என்னுடைய பழைய பதிவுகளில் காணலாம்!

*நான் அவன் அம்மா என்று வயிற்றில் இருக்கும் போது பல முறை கூறியிருக்கிறேன் அதனால் தானோ என்னவோ அவன் முதல் மாதத்திலேயே அம்மா என்று அழுவான்! இதையும் பதிவிட்டிருக்கிறேன்!

*அவன் வயிற்றில் இருக்கும் போது வெகுநேரம் அசையாமல் இருந்தால் "பாப்பா செல்லகுட்டி என்ன பண்றே எழுந்துக்கோ அம்மா கூட பேசுடா" என்று கூறிக்கொண்டே இருந்தால் போதும் விரைவில் அசைய ஆரம்பித்துவிடுவான்!

*அதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களிலும், அதிகம் சிரிக்கும் தருணங்களிலும் பாப்பா உள்ளே செம குதியாட்டம் போடும்! :))))

இவை என்னுடைய அனுபவங்கள்!

பொதுவாக குழந்தை பிறக்கும் போது எல்லாவற்றையும் மறந்துவிடும், ஆனால் மீண்டும் அதே குரல், அதே பேச்சு, செய்திகளைக் கேட்கும் போது அனைத்தும் நினைவிற்கு வந்துவிடும்!

வளைகாப்பு கூட வளையல் சத்தம் குழந்தையை மகிழ்விக்கும் என்பதற்காகவே செய்யப்படுகிறது! :)))

அதனால் நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்! விபரீதமான முயற்சிகளில் இறங்காமல் நல்ல முறையில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!

கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையைப் பொறுத்தே குழந்தையின் மன வளர்ச்சி அமையும்!

அதனால் உங்கள் கர்ப்பகாலம் நல்ல முறையில் அமைய இறைவனை வேண்டிக்கொண்டு பயனுள்ள மொக்கையை முடிகிறேன்! :)13 comments:

Kanna said...

நல்ல உபயோகமான தகவலுக்கு நன்றி..

ஆகாய நதி said...

மிக்க நன்றி கண்ணா அவர்களே! :)

Naresh Kumar said...

நல்ல தகவல்கள்!!!

ஆகாய நதி said...

நன்றி ந்ரேஷ் குமார்! :)

jothi said...

//கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும் திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல் அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்//

ரொம்ப சரி. நான் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் என் மகன் என் குரலைக் கேட்டு மிக வேகமாக இங்கும் அங்கும் ஓடுவதாக (???) என் மனைவி சொல்லுவாள்

//ஏதாவது பாடல் பாடினாலே அழுகை நின்று சமத்தாகிவிடுவான்...//

அழுகின்ற குழந்தையை மிரட்ட இப்படி பாடி பயமுறுத்தக் கூடாது. (JFF)

// கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையைப் பொறுத்தே குழந்தையின் மன வளர்ச்சி அமையும்! //

மிக மிக முக்கியமான வரிகள் ஆகாய நதி. நீங்கள் அப்போது எல்லாவற்றிற்கும் பயந்து இருந்தால் குழந்தையும் பயந்து சுபாவமாக இருக்கும். நீங்கள் தைரியமாக இருந்தால் குழந்தையும் அப்படியே. அழகாய் சொன்னீர்கள்.

ஆகாய நதி said...

//
ரொம்ப சரி. நான் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் என் மகன் என் குரலைக் கேட்டு மிக வேகமாக இங்கும் அங்கும் ஓடுவதாக (???) என் மனைவி சொல்லுவாள்
//

இப்படியா வீட்டுக்கு போனதும் குழந்தையை பயமுறுத்தி ஓட வைப்பது! ஹி ஹி ஹி! சும்மா உல்லாங்காட்டிக்கு சொன்னேன் :)

//
அழுகின்ற குழந்தையை மிரட்ட இப்படி பாடி பயமுறுத்தக் கூடாது. (JFF)
//

என்ன செய்ய அப்போதானே அழுகை நிறுத்துவான் அய்யோ இந்த அம்மா பாடியே கொல்லுதேனு...! :)

ஆகாய நதி said...

//
மிக மிக முக்கியமான வரிகள் ஆகாய நதி. நீங்கள் அப்போது எல்லாவற்றிற்கும் பயந்து இருந்தால் குழந்தையும் பயந்து சுபாவமாக இருக்கும். நீங்கள் தைரியமாக இருந்தால் குழந்தையும் அப்படியே. அழகாய் சொன்னீர்கள்.
//

அய்யோ அதை ஏன் கேட்குறீங்க... நான் எப்பவுமே தவளைக்கு ரொம்ப பயப்படுவேன்... அப்போதும் அப்படித்தான்... அழுதே விடுவேன்... பிறகு தான் யோசித்து குழந்தை என்னைப் போல பயப்படக் கூடாது என்று தவளை பற்றி நிறைய செய்திகள் படிக்கத் தொடங்கினேன் அது மேலிருந்த பயம் நீங்க :)

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

ஆகாய நதி said...

நன்றி தமிழர்ஸ்... நிச்சயம் வந்து இணைக்கிறேன் என் வலைப்பூவை :)

நல்ல வாய்ப்பிற்கு நன்றி!:)

புதுகைத் தென்றல் said...

அருமையா சொல்லியிருக்கீங்க.

இது என் அனுபவம் கூட. கர்ப்ப காலத்தில் பேசியதால்தான் என் பிள்ளைகள் நான் சொல்வதைக் கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

//கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையைப் பொறுத்தே குழந்தையின் மன வளர்ச்சி அமையும்!//

பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்படவேண்டிய வரி.

ஆகாய நதி said...

நன்றி புதுகை தென்றல் :)

சிறகுகள் said...

பொழில் குட்டி எவ்வாறு உள்ளார்? தங்களின் பதிவு என்க்கு மிகவும் உதவியாக உள்ளது.கர்பகாலத்தில் செய்ய வேண்டிய அணைத்தையும் கூறிப்பிட்டுள்ளீர்கள்..அருமை..நானும் என் செல்லத்தின் வருகைக்காக காத்துகொண்டிருக்கிறேன்..குங்கும பூ எடுத்து கொள்ள வேண்டிய மாதங்கள் பற்றி கூறியது போல மாதத்தில் எத்தனை நாட்கள் உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தெளிவுபடுத்துங்களேன்...

ஆகாய நதி said...

வாங்க சிறகுகள்... நன்றி!

உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள்...

குங்குமப் பூ பற்றிய உங்கள் கேள்விக்கு பதில் அடுத்த பதிவில்...